ஜய வருடம் கார்த்திகை மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ஸபர் பிறை 06
SUNDAY November 30 2014

Print

 
யாழ்ப்பாண பருவ காலங்களும் உணவுப் பழக்கங்களும்

யாழ்ப்பாண பருவ காலங்களும் உணவுப் பழக்கங்களும்

(சென்றவார தொடர்)

பிராமணர்களைப் பொறுத்தவரையில் அவர்களிற் பலர் பூசை முதலிய கடமைகளைச் செய்பவர்களாக இருப்பதாலும், தமது ஆசார அனுட்டானங்களாலும் காலையுணவைத் தவிர்த்து விடுவதால் மதிய உணவாகப் பச்சையரிசிச் சாதத்தைச் சாப்பிடும் போது அது திருப்தியையும் புஷ்டியையும் கொடுக்கக் கூடியதாக அமைந்துள்ளது.

மேலும், பச்சையரிசிச் சாதம் சமைக்கும்போது கஞ்சி வடிக்கப்படுவதில்லையாகையால் ஓரளவு உயிர்ச்சத்து கியும் அவர்களுக்குக் கிடைக்கக் கூடியதாகவுள்ளது. மலச்சிக்கலையும் அது நீக்குகிறது. சாப்பாட்டிற்குக் கைக்குத்தல் அரிசியே சிறந்தது என்பது யாவரும் அறிந்த ஒன்றாகும். இதில் உயிர்ச்சத்துக்கள் முக்கியமாக உயிர்ச்சத்து கி இழக்கப்படுவதில்லை.

பெரும்பாலான இல்லங்களில் மதியவுணவாகச் சோறு சமைக்கப்படுகிறது. ஏழைகளைப் பொறுத்தவரையில் மதியம் சமைத்து எஞ்சிய சோறு இரவு உணவாகவும் பயன்படுகிறது. சோறு ஒரு நல்ல உணவாக அமைந்துள்ள போதிலும் அதனுடன் சேர்த்து உண்ணப்படும் கறிவகைகளாலேயே அதன் சுவையும், தரமும் மேலோங்குகின்றது.

ஏனெனில், சோற்றில் எமக்கு நாளாந்தம் தேவைப்படும் சக்தியும், பெருமளவு புரதமும் இருக்கின்றபோதிலும் இலைசீன் என்ற முக்கியமான அமினோவமிலம் குறைவாகவே உள்ளது. அதனால் சோற்றை முழுமையான ஓர் உணவாகக் கொள்ள முடியாதுள்ளது. ஆனால் சோற்றில் குறைவாக உள்ள இந்த அமினோவமிலம் பருப்பில் நிறைய உண்டு. எனவே, சோற்றையும், பருப்பையும் சேர்த்து உண்டால் அது ஒரு நிறையுணவாக அமையும் (ரிssலீntial aசீino aணீiனீs) எனப்படும் முக்கியமான அமினோ அமிலங்கள் உடலில் தயாரிக்கப்படுவதில்லை. ஆனால் இவை உடல் வளர்ச்சிக்கு அத்தியாவசியமானவை. எனவே, உணவு மூலம் இவற்றை உட்கொள்வது அவசியமாகும். எனவே தான் சோற்றுடன் பருப்புக் கறி ஒன்று சமைத்துண்பது எமது மக்களால் வெகு காலமாகவே பின்பற்றப்பட்டு வருகிறது. விருந்துபசாரங்களில் பந்தியில் பருப்புப் பரிமாறிய பின்னரே சாப்பிடத் தொடங்குவர். திருமணமாகாத ஆண், பெண்களைக் காணும்போது “எப்போது பருப்புஞ் சோறும் தரப்போகிறாய்” என்று வயதானவர்கள் கேட்கும் வழக்கம் தற்போதும் கிராமப் புறங்களில் உள்ளது. இது பருப்புஞ் சோறும் சேர்ந்ததே முழுமையான உணவு என்பதை உணர்த்துவதாகவும் உள்ளது. குழந்தை வளர்ப்பிலும் பருப்பு அல்லது பருப்பு அவித்த நீர் முக்கியத்துவம் பெறுவதை ஏற்கனவே எடுத்துக் காட்டியுள்ளோம். பருப்பில் பல்வேறு புரதங்களுடன் இலைசீன் போன்ற முக்கியமான அமினோவமிலங்களும் இருப்பதால் அவை குழந்தைகளின் புரத வளர்ச்சிக்கும் மூளை வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகின்றன. இதை ஒவ்வொரு பெற்றோரும் நினைவிற் கொள்ள வேண்டும்.

சோறு அல்லது சாதத்தின் சுவை, உணவுத்தரம் என்பவற்றைக் கூட்டுவதற்காகவும், யாவரும் விருமபி உண்பதற்காகவும் அதைப் பல்வேறு விதமாகப் பக்குவஞ் செய்வர். அவற்றுள் முக்கியமான சில முறைகள் வருமாறு:

1. பருப்புப் பொங்கல் (பருப்புச் சாதம்)

பச்சையரிசி (200 கிராம்) பயற்றம் பருப்பு (50 கிராம்) சேர்த்து போதியளவு நீர் விட்டு வேகவைத்து, நன்கு வெந்ததும் இறக்கிக் கொள்ளவும், ஒரு தேக்கரண்டி சீரகம், தேவையான அளவு உப்பு என்பவற்றை இளவறுப்பாக வறுத்து பொடித்து அதனுடன் சிறு துண்டு இஞ்சிக்கிழங்கையும் குறுணலாக வெட்டி மேற்படி பொங்கலில் போட்டு சிறிது நெய்யும் சேர்த்து நன்கு கிளறிப் பின்னர் உணவாகப் பரிமாறப்படும். இதனால் வீரிய விருத்தியும், வாதப் பெருக்கமும் உண்டாகும். பித்தகோபம் விலகும்.

“போகமிகவுண்டாகு பொங்கிய பித்தந்தணியு

தேகமதில் வாதமிகச் சேருங்காண் - வாகார்

பொருப்புப் போல் விம்முலைப் பூங்கொடியே பச்சைப் பருப்புப் பொங்கற் சோற்றைப்பார்”

(தொடரும்...)


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]