புத் 66 இல. 21

விஜய வருடம் வைகாசி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் பிறை 25

SUNDAY MAY 25 2014

 

 
சரித்திரப் பிரசித்தி பெற்ற பேருவளை புஹாரி தமாம் மஜ் லிஸ்

சரித்திரப் பிரசித்தி பெற்ற பேருவளை புஹாரி தமாம் மஜ் லிஸ்

இறுதித் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் தங்களது வரலாற்றுப் புகழ்மிக்க இறுதி ஹஜ்ஜின் (ஹஜ்ஜதுல் விதாவின்) போது அங்கே குழுமியிருந்த அருமைத் தோழர்கள் மத்தியில் உரையாற்றும் போது இதைச் சொன்னார்கள். ‘உங்களுக்காக நான் இரண்டை விட்டுச் செல்கிறேன். அவற்றைப் பின்பற்றும் காலமெல்லாம் நீங்கள் ஒரு போதும் வழி தவற மாட்டீர்கள். இறை வேதமாம் புனித அல்குர்ஆனும் அண்ணலாரின் நடைமுறைகளாகிய சுன்னாவுமே அவை இரண்டுமாகும்.

நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஹதீஸ் விளக்கங்களைத் தொகுத்துப் பாதுகாக்க வேண்டும் என்ற உண்மை உணரப்படவில்லை. நபி (ஸல்) உயிரோடி இருந்த காரணத்தினால அன்று மக்கள் மத்தியில் எழுந்த பிரச்சினைகளுக்கு அவரே விளக்கமளித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்களின் வபாத்துக்குப் பின்னர் ஹதீஸ்களின் முக்கியத்துவம் உணரப்பட்டன. புனித அல்குர்ஆன் தெளிவாக விளங்கிக் கொள்ளவும், இஸ்லாமிய திட்டங்களை நன்கு அறிந்து கொள்ளவும் ஹதீஸ்கள் தேவைப்பட்டன. இதனால் காலக் கிரமத்தில் நபி (ஸல்) அவர்களின் பொன் மொழித் தொகுப்புகள் வெளிவர ஏதுவாயின. இவற்றுள் தலையாயதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுவது ‘புனித ஸஹீஹுல் புஹாரி’ எனும் ஹதீஸ் பேழையாகும்.

அபூஅப்துல்லாஹ் முஹம்மதிப்னு இஸ்மாயிலுல் புஹாரி (றஹ்) அவர்களால் மேற்படி நூல் தொகுக்கப்பட்டது. இறுதித் தூதர் நபி நபி (ஸல்) அவர்களின் வாய்வந்த இலட்சக்கணக்கான ஹதீஸ்களைத் தொகுத்து, 7275 ஹதீஸ்களை மட்டுமே இமாம் புஹாரி (றஹ்) அவர்கள் தமது ஸஹீஹுல் புஹாரி கிரந்தத்தில் எழுதியுள்ளார். மேற்படி புஹாரிக் கிரந்தம் பராயணம் செய்யப்பட்டு விளங்கப்படுத்தும் மஜ்லிஸ்கள் உலகின் நாலா பகுதிகளிலும் இடம்பெற்று வருகிறது.

இந்த அடிப்படையில் சரித்திரப் பிரசித்தி பெற்ற பேருவளை மாளிஹாசேனையில் அமைந்துள்ள பைதுல் முபாரக் முஸ்தபவீயா புஹாரி தக்கியாவில் இற்றைக்கு 135 வருடங்களுக்கு முன்னர் (ஹிஜ்ரத் ஆண்டு 1301 ஜமாதுல் ஆகிர் மாதம் பிறை 27ல்) ஆரம்பம் செய்யப்பட்ட புஹாரி மஜ்லிஸ் அல்லாஹ்வின் கிருபையால் ஒரு நூற்றாண்டை தாண்டிச் சென்றாலும், அன்று முதல் இன்று வரை மாற்றங்கள், நூதனங்கள் எதுவுமின்றி அதன் சர்த்துக்களைப் பேணி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மேற்படி மஜ்லிஸின் 135வது வருட மஜ்லிஸ் கடந்த ஏப்ரல் மாதம் 26ம் திகதி அதிகாலை சுபஹ் தொழுகையுடன் ஆரம்பிக்கப்பட்டது. (வெள்ளிக்கிழமை தவிர) 30 நாட்கள் மஜ்லிஸ் நடைபெற்று மே மாதம் 29ம் திகதி பகல் பெரிய கந்தூரியோடு நிறைவு பெறுகிறது. நாட்டின் நாலா திசைகளிலிருந்தும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் இந்த மஜ்லிசில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. கந்தூரியை முன்னிட்டு இலங்கை ரயில்வே பகுதியினர் வழமை போல் மே 28ம் திகதியும், 29ம் திகதியும் காலி - பேருவளை, கொழும்பு - பேருவளை இடையிலான விசேட ரயில் சேவைகளை நடாத்தவுள்ளது. இந்த இரு நாட்களிலும் சகல கடுகதி ரயில் வண்டிகளும் பேருவளை புகையிரத நிலையத்தில் நிறுத்தப்படும். மேலும் விசேட பஸ் சேவைகளும் நடைபெறவுள்ளது.

மாகாண் சேகு முஸ்தபா (றஹ்) அவர்கள்

பேருவளை நகரின் மூத்த குடியில் ஆதம் மரைக்காரின் புதல்வரான சங்கைக்குரிய மாகாண் சேகு முஸ்தபா வலியுல்லாஹ் பிறந்தார். இந்த நாட்டின் சமய வரலாற்றில் அன்னார் ஓர் உயர்ந்த ஸ்தானத்தை பிடித்துக் கொண்டார். அன்னார் இஸ்லாமிய சட்டத்திட்டங்கள் அரபு இலக்கண, இலக்கிய, பிக்ஹு சட்ட திட்டங்கள் போன்ற இஸ்லாமிய மத அறிவியல் துறையில் பாண்டித்தியம் பெற்று திகழ்ந்தார். இந்தியாவில் உள்ள காயல் பட்டணத்தில் இத்துறையில் அறிவு பெற்று நாடு திரும்பி பேருவளை மாளிகாசேனை.

பைதுல் முபாரக் முஸ்தபவியா புஹாரித் தக்கியாவை தனது தலைமை ஸ்தானமாகவும், ஆய்வுக்கூடமாகவும் அமைத்து இஸ்லாமிய பணிபுரியும் காலத்தில் சங்கைக்குரிய முபாரக் மெளலானா என்ற பெரியாரின் சகவாசம் கிடைத்தது.

புனித புஹாரி மஜ்லிசை ஹிஜ்ரி 1301 முதல் 1304 வரை சங்கைக்குரிய சேகு நாயகம் சேகு முஸ்தபா (றஹ்) அவர்கள் நடாத்தினார். பின்னர் அவர் மைந்தர் சங்கைக்குரிய சேகு நாயகம் முஹம்மது ஹாஜியார் ஆலிம் அவர்கள் ஹிஜ்ரி 1304 முதல் 1331 வரை நடத்தினார்கள். அவருக்குப் பின்னர் அவரது மைந்தர் சங்கைக்குரிய சேகு நாயகம் அப்துல் சமீம் ஆலீம் அவர்கள் ஹிஜ்ரி 1331 முதல் 1391 வரை தலைமை தாங்கி நடாத்தினார். அதனைத் தொடர்ந்து அவரது மைந்தர் சங்கைக்குரிய சேகு முஹம்மத் நூர் ஆலிம் அவர்கள் ஹிஜ்ரி 1391 முதல் 1411 வரை நடாத்தினார். அன்னார் இறையடி சேர்ந்த பின்னர் அவரது மைந்தர் சங்கைக்குரிய சேகு அஹமது ஆலிம் அவர்கள் ஹிஜ்ரி 1412 முதல் இன்று வரை மிகச் சிறப்பாக தலைமை தாங்கி நடாத்தி வருகிறார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.