விஜய வருடம் வைகாசி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் பிறை 25
SUNDAY MAY 25 2014

Print

 
நல்லூர்க் கந்தனுக்கு இன்று கற்பு+ரத திருவிழா ஆனந்த கோலாகல அற்புதத் திருவிழா

நல்லூர்க் கந்தனுக்கு இன்று கற்பு+ரத திருவிழா ஆனந்த கோலாகல அற்புதத் திருவிழா

உலகெலாம் நிறைந்து விளங்குகின்ற எல்லாம் வல்ல பரம்பொருளாகிய முருகப்பெருமான் தம்மை வழிபடும் அடியார்களின் துன்பங்களையும் துயரங்களையும் இன்னல்களையும் இடுக்கண்களையும் நீக்கும் பொருட்டு எழுந்தருளி வீற்றிருந்து அருள்பாலிக்கும் இடம் யாழ்ப்பாணத்து நல்லூராகும்.

இந்த நல்லூர்ப்பதியிலே அருளாட்சிபுரியும் கந்தப்பெருமானுக்கு இன்று கற்பூரத் திருவிழா நடைபெறுகின்றது. அழகன் முருகனுக்கு இன்று காலை 1008 சங்குகளால் செய்யப்படும் அபிஷேகம் பரவசமூட்டும் பக்திரசம் ததும்பும் அற்புதக் காட்சியாகும். பெரும் எண்ணிக்கையிலான அடியார்கள் கண்டுகளிக்கும் இந்த மகா சங்காபிஷேகம் ஒவ்வோர் ஆண்டும் மகா கும்பாபிஷேகம் நிகழ்ந்த அந்த இனிய நன்னாளை நினைவு கூரும் ஓர் அற்புத நிகழ்வாகும்.

முருகன் என்றாலே அழகன்தான். அந்த அழகன் முருகன் நல்லூரிலே வருகின்ற அலங்காரக் காட்சி பக்திபூர்வமானது. இந்த நல்லூர் முருகனைப் பணக்காரக் கந்தன் என்றும் அழைப்பார்கள். அழகிய தங்க நகைகள் பளபளவென்று ஒளி வீசி ஜொலிக்க முருகன் எழுந்தருளி வருகின்ற கோலாகலக் காட்சியை காண்பதற்குக் கொடுத்துவைத்திருக்க வேண்டும்.

காலையிலே சங்காபிஷேகம், மாலையிலே மணவாளக் கோலம். அழகே உருவான ஆறுமுகப் பெருமானுக்கு இன்று திருக்கல்யாணமும் நிகழ இருக்கின்றது. அருள் கொழிக்கும் அலங்கார பூஜிதைகளாக அழகி வள்ளியும் அழகி தெய்வானையும் இருபக்கமும் அருகருகே எழுந்தருளி வீற்றிருக்க நிகழும் திருக்கல்யாணம் கண்டுகளிக்கப் பூர்வ ஜென்ம புண்ணியஞ் செய்திருக்க வேண்டும்.

அழகெல்லாம் சேர்ந்து ஓருருவெடுத்தாற் போன்று அழகன் முருகன் ஆறுமுகனாக வீற்றிருக்க, இச்சா சக்தியான வள்ளியம்மை நாச்சியார் வலப்பக்கமும், அருள் மயமான கிரியா சக்தியான தெய்வானையம்மை இடப்பக்கமும் இருக்க இடம்பெறுகின்ற திருக்கல்யாணம் இன்றைய ஒரு முக்கிய நிகழ்வாகும். தங்க நகைகளாலும் மலர் மாலைகளாலும் அலங்கரிக்கப்பெற்ற ஆறுமுகன் அழகுத்திருக்கோலம் பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத இனிய அற்புதக் காட்சியாகும்.

இந்தக் கல்யாணக் காட்சியான தெய்வீகத் திருக்காட்சியைப் பார்த்தால் திருமணம் ஆகாத இளம் கன்னியர்களுக்கும் காளையர்களுக்கும் திருமணம் நடைபெறும் என்ற ஓர் ஐதீகமும் நிலவுகிறது.

முன்னே மங்கள இசை முழங்க கற்பூரத்தின் திவ்ய அருள் ஒளி எல்லோரையும் மயக்க புதுமணத்தம்பதிகளாக ஆறுமுகப் பெருமான் தேவியருடன் அழகிய பல்லக்கிலே திருவீதி வலம் வரும் அற்புத, ஆனந்த கோலாகலக் காட்சியை இன்று நல்லூரிலே காணலாம். உள்ளத்திலே இன்பம் பொங்க, திருக்கல்யாண ஊர்வலத்திலே பக்தர் குழாம் பக்தியோடு பாடிக்கொண்டு வருவார்கள். அழகன் முருகனின் மணவாளக் கோலங்கண்டுகளிக்க அலங்கார முருகன் ஆறுமுகங்களோடு ஷண்முகப் பெருமானாக வீதி வலம் வருவதைக் காண வாருங்கள்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]