விஜய வருடம் வைகாசி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் பிறை 25
SUNDAY MAY 25 2014

Print

 
இலங்கைத் தமிழ் வரலாற்றில் சிறுவர் கூத்தரங்கம்

இலங்கைத் தமிழ் வரலாற்றில் சிறுவர் கூத்தரங்கம்

 இலங்கைத் தமிழர்களின் பாரம்பரியக் கலையான கூத்து அன்று தொடக்கம் இற்றை வரைக்கும் தமிழர்கள் வாழ்ந்து வருகின்ற இடங்களில் (மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், மலையகம், அம்பாறை) பல சவால்களுக்கு மத்தியில் ஆடப்பட்டு வருகின்றது. இவற்றில் பல வெளித்தெரிய வராது போயினும் ஊர் மக்களின் முனைப்பாலும் முயற்சியாலும் தொடர்ச்சியாக கோவில் திருவிழாக் காலங்களின் இசை நிகழ்ச்சிகளுக்குப் பதிலாக நான்கைந்து நாட்கள் கூத்தாற்றுகைகள் (கூத்துக்கள்) இடம்பெறுவதை காணக் கூடியதாகவுள்ளது. இன்றைய கோவிற் திருவிழாக் காலங்களில் அன்று நிகழ்ந்ததைப் போலவே கோவிற் சடங்கின் இறுதி நான்கு, ஐந்து நாட்கள் கூத்தாற்றுகைகளைக் காண மக்கள் திரள்வதைக் காணக் கூடியதாகவுள்ளது. இப்படி இருக்கும் போது கூத்துக் கலையானது அருகி விட்டது, அழிந்து விட்டது, மருவி விட்டது, கூத்தாற்றுகைகள் நிகழ்ந்தப்படுவதில்லை என்ற ஒரு சாராரின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்திலுள்ள அனைத்து கோயிற் திருவிழாக் காலங்களிலும் கடந்த பத்து வருட காலத்துக்கு மேலாக கூத்தாற்றுகைகள் நிகழ்த்தப்பட்டு வருவதோடு, மட்டக்களப்பு எழுவான்கரைப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் அமிர்தகழி மாமங்கேஸ்வரர் ஆலயம் உட்பட பல கோயிற் திருவிழாவில் மூன்று நாட்களுக்கு மேலாக கூத்தாற்றுகைகள் இடம்பெறுவதை யாவருமறிவர். எமது மண்ணின் கலைகளை எம் மூதாதையரின் மரபணுவோடு, உயிரணுவோடு பிறந்த மரபு வழிக்கலைகளை. புராண, இதிகாச ஜதகக் கதைகளை வருங்கால இளஞ்சந்ததிக்கும் பயிற்று விப்பது நம் எல்லோரது கடமையுமாக அமைகின்றது.

பாரம்பரியக் கலையாகிய கூத்தானது சமூக வளர்ச்சிக்குரிய கலைச் சாதனமாகவும் கல்வி ஊடகமாகவும் முன்னெடுக்கப்படுவதாக கூத்து மீளுருவாக்கச் செயற்பாடு அமைகின்றது. பாரம்பரியக் கலையான கூத்து இயல்பிலேயே மக்கள் பங்குபற்றல் தன்மையும் செயல் மையமும் கொண்டதாகவுள்ளது. பாரம்பரியச் சமூகங்கள் மீது செல்வாக்குச் செலுத்திக் கொண்டிருக்கின்ற, செல்வாக்கு செலுத்த வேண்டிய விழுமியங்களை மக்கள் மயப்படுத்தும் கலைத் தொடர்பு சாதகமாகக் கூத்து தொழிற்பட்டு இருக்கிறது.

பேராசிரியர் சுப்பிரமணியம் வித்தியானந்தன் அவர்கள் 1960 காலப் பகுதியில் பாரம்பரியக் கூத்து மரபை செம்மைப்படுத்த (கர்ணன் போர், நொண்டி), சின்னையா மெளனகுரு அவர்கள் கூத்தை அடிப்படையாகக் கொண்டு நவீன நாடகங்களை நெறிப்படுத்த அதாவது மட்டக்களப்பு மரபு வழிக்கூத்தின் அடிப்படையில் இராவணேசன் எனும் நாடகத்தை எழுதி நெறிப்படுத்த, குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்கள் கல்வியியல் அரங்கு (1980), சிறுவர் அரங்கு எனும் எண்ணக்கருவை உலகுக்கு வெளிப்படுத்த, கலாநிதி க. சிதம்பரநாதன் அவர்கள் சமூகக்குழும அரங்கு, கட்டவிழ் அரங்கு கலந்துரையாடல் அரங்கு எனும் தொனிப் பொருளை 1990 இல் உலக மக்களுக்கு வெளிப்படுத்த கலாநிதி சி. ஜெயசங்கர் அவர்கள் “கூத்து சமூகங்களது வரவேற்புக்கு இணங்க கூத்து மீளுருவாக்கம் எனும் சிந்தனையை முதன்மைப்படுத்தி பல மீளுருவாக்கக் கூத்துக்களை தயாரித்தவராக மிளிர்கின்றார்” மட்டக்களப்பில் சீலாமுனைப் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கூத்து மீளுருவாக்கச் (ஞிரிபிலிஞிணிஸிழிதிஹியிலினி) செயற்பாடுகளில் சிறுவர்களும் பெண்களும் முதன்மையாகின்றனர்.

குழந்தை ம. சண்முகலிங்கத்தின் கல்வியியல் அரங்கினைப் போன்று. சிறுவர் அரங்கினைப் போன்று (சிறுவர் நாடகம்) இன்றைய கால கட்டத்தில் “மூன்றாவது கண் உள்ளூர் அறிவுத் திறன் செயற்பாட்டுக்குழுவின் இயக்குனரும், தற்போதைய கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறைத் தலைவருமான சி. ஜெயசங்கர் அவர்களின் சிறுவர்களுக்கு உரியதான சிறுவர் கூத்தரங்கு காத்திரமானதாகவுள்ளது.”

சிறுவர் கூத்தரங்கில் சிறுவர், சிறுவர்களது உலகம் பற்றிய அக்கறையும் ஆர்வமும் கொண்ட சிறுவர்களது கூத்தரங்க அனுபவமும் அறிவும் கொண்ட சிறுவர் அரங்கக் கல்வியியல் அரங்கக் கலைஞர்களது இணைவும் மிக மிக முக்கியமாகிறது. ஈழத்தமிழர் மரபு வழிக்கூத்தரங்கில் சிறுவர்களை கட்டியக்காரன் பாத்திரத்துக்கும் தோழி பாத்திரத்துக்கும் ஆடவைப்பதையும் தவிர மிகப் பெரும்பாலும் கூத்துக்களரியில் சிறுசிறு வேலைகளுக்குப் பயன்படுத்தினார். ஆனால் இன்றைய மீளுருவாக்கக் கூத்துக்களில் சிறுவர்களதும், பெண்களதும் பங்கும் கணிசமானதாகவுள்ளது.

கூத்து பயிலும் சுற்றுச் சூழல் திறந்ததாகவும், சிறுவர்களுக்கு உரியதாகவும் இருப்பதன் காரணமாக கூத்தர்களது கூத்துப் பழக்கங்கள் (மத்தள மடித்தல், பாடுதல், ஆடுதல், பங்குபற்றல்), ஆற்றுகைகளை தொடர்ந்து பார்ப்பதன் மூலமாகவும், கேட்பதன் மூலமாகவும், பார்த்ததையும் கேட்டதையும் வைத்து விளையாடுவதன் மூலமும் தம்முள் (சிறுவர்கள்) பல விடயங்களையும் திறன்களையும் உட்பதித்துக் கொள்கின்றனர்.

ஈழத்துத் தமிழ்க் கூத்தரங்க வரலாற்றில் முதன் முதலில் சிறுவர், சிறுமிகளை குறிப்பாக பல்கலைக்கழக மட்டத்திலல்லாது சமூக மட்டத்திலுள்ள சிறுவர், சிறுமிகளுக்கு கூத்தாட்டங்களைப் பயிற்றுவித்து தயாரித்த பெருமை மூன்றாவது கண் உள்ளூர் அறிவுத் திறன் செயற்பாட்டுக் குழுவின் இயக்குநரான சி. ஜெயசங்கர் அவர்களை சாரும்.

சிறுவர்களுக்கு கூத்தரங்கு தேவைதானா, அதன் மத்துவம் யாது என்பதை சித்திப்பின், அதாவது தாம் வாழும் சுற்றுச் சூழல் மற்றும் சமூகங்கள் பற்றியும் அதன் தேவைப்பாடுகள், பிரச்சினைகள் மற்றும் சாதக பாதகங்களை உணர்த்தும் விளங்கியும் கொண்ட எதிர்காலத் தலைமுறைகளை உருவாக்குவதில் மிகுந்த பங்கு வகிப்பதாகவுள்ளது.

கூத்தரங்கப் பயில்களங்களில் பல்வேறு துறைகள் சார்ந்தும் அனுபவங்களையும் ஆற்றல்களையும் அறிவையும் பெற்றுக் கொள்ளவும் ஆற்றல்களை வெளிப்படுத்தவும் சமூகம் சார்ந்து ஆற்றல்கள் மீதான மதிப்பீடுகளைச் செய்து கொள்ளவும் ஆற்றல்களைக் கொண்டாடவும் சாத்தியமாகிறது.

ஆடல், பாடல், வாத்தியக் கருவி மீட்டல் (மத்தளம், சல்லாரி, உடுக்கு, தப்பு) மற்றும் உடை, ஒப்பனை அணிகலன்கள் தலைமுடிகள், களரிப் பொருட்கள், கைப்பொருட்களின் உருவாக்கங்கள், களரிகட்டுதல், களரி அலங்காரம், விளம்பரம், அழைப்புக்கள், அறிவிப்புகள், ஒழுங்குபடுத்தல் என் சிறுவர்கள் தாமாகவும் பெரியவர்களின் ஆற்றுப்படுத்தல் உதவிகளுடனும் சூழலில் இருந்து பெற்றுக் கொள்ளும் வளங்களைப் பயன்படுத்தியும் தங்களது செயற்றிறன்களையும் முகாமைத்துவ ஆற்றல்களையும் வெளிப்படுத்திக் கொண்டாடும் களமாகவும் சிறுவர் கூத்தரங்கு உள்ளது.

கூத்தரங்கின் அடிப்படை இயல்புகளான செய்வதன் ஊடாகக் கற்றல், செவியேறல், மனன முறை என்பன சிறுவர்களது புலன்களை வளப்படுத்தி ஆற்றல்களை விரிவுபடுத்தவும் வலுப்படுத்தவும் செய்கின்ற அம்சங்களாகும். இத்தகைய பின்னணியில் கூத்தரங்கின் அம்சமாகவுள்ள செய்தலின் ஊடாக கற்றல் என்பது முக்கியமான கலை வழிக்கற்கை முறையாகக் காணப்படுகிறது.

சிறுவர்களது உலகம் ஒளிவுமறைவு அற்றது. அது வெளிப்படையானதும் நேரடியானதுமாகும். சிறுவர்களின் இந்த உளவியல் தன்மையை அவர்களை பெரியவர்களின் சூழலில் விலக்குக்கு உரியவர்களாக்கி வைத்திருக்கிறது என்பது கவனத்திற்குரியது. கூத்துச் சூழலில் வாய் பார்த்தல் (கூத்தாற்றுகையை கவனித்தல்) என்பது கூத்தாற்றுகை களங்களில் வித்தியாசமானதும் ஆரோக்கியமானதாகவும் உள்ளது சிறுவர்கள் கூத்துப்பயில் களங்களிலிருந்து மட்டும் கதைகளை காவுவதுமில்லை கதைகளைச் சொல்லுவதுமில்லை. தங்கள் வீடுகளில் இருந்தும் கூத்துச் சார்ந்து கூத்தரது திறன்கள் சார்ந்து கதைகளை காவுகிறார்கள் சொல்லுகிறார்கள்.

மீளுருவாக்கக் கூத்துச் சூழலில் சிறுவர்கள் கதை காவிகளாகவும் கதை சொல்லிகளாகவும் கண்காணிப்பாளர்களாகவும் இயங்குகிறார்கள். கூத்துச் சூழலில் சிறுவர்கள், பெண்கள், ஆண்கள், முதியவர்கள் என பலர் பங்கு கொள்கின்றனர். இவை யாவும் அதாவது கூத்தாற்றுகைக் களங்களில் நடைபெறும் யாவும் எண்ணிக் கருதி பிரக்ஞை பூர்வமான இயக்கமல்லாமல் இயல்பானதாக இயங்கு நிலையில் சமூகத் தளத்தில் தொடர் செயற்பாடாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. கூத்துக் கலையை கூத்துக் கலைசார் சமூக நடைமுறைகளை எதிர்கால தலைமுறை உள்வாங்கிக் கொள்ளும் சமுதாயச் செயற்பாடாக கூத்து மீளுருவாக்கச் செயற்பாடானது அமைகின்றது.

போர், இடப்பெயர்வு சமூகப் பொருளாதார மாற்றங்கள் என கூத்துப் பயில்வின் தொடர்ச்சி அறுபடினும் வருடங்கள் கழித்து கூத்துக்கள் மிளவும் ஆடப்படுவதன் சாத்யப்பாடுகள் இந்தப் பின்புலத்திலேயே நிகழ்ந்து வருகின்றன என்று கலாநிதி சி. ஜெயசங்கர் அவர்கள் குறிப்பிடுகின்றார். சமுதாய மயப்படுத்தப்பட்ட அறிவும் திறனும் இயங்க முடியாத பொழுதுகளில் தூங்கு நிலைக்குப் போய் மீளவும் பொருத்தமான சூழலில் துளிர்விட்டுக் கொள்ளும் இயல்புடையதாக இருப்பது கூத்துக் கலைக்குப் பொருத்தமாகவுள்ளது.

கூத்து மீளுருவாக்கச் செயற்பாடுகளில் அதாவது கதாநாயகர்களாக சிறுவர்களும், பெண்களும் அமைகின்றனர். மீளுருவாக்கக் கூத்தாற்றுகைகளில் பெண்களே பெண் பாத்திரங்களையும் ஆண் பாத்திரங்களையும் ஆடுவதோடு கூத்து மரபில் உள்ளதுபடி கட்டியக்காரன் பாத்திரத்திற்கு சிறுவர்களே ஆடி வருகின்றனர்.

சி. ஜெயசங்கர் அவர்களின் கூத்து மீளுருவாக்கமானது. கூத்து மரபையுள் வாங்கி அதேவேளை கட்டாயம் மாற்ற வேண்டிய கருத்துக்களை மாற்றி மீளுருவாக்கம் செய்கின்றனர். ஈழத்துத் தமிழ் அரங்க வரலாற்றில் கூத்து மீளுருவாக்கமானது புதியதொரு பரிமாணமாக அமைகிறது.

பாரம்பரியக் கூத்துச் சமுதாயமானது கூத்து மீளுருவாக்கம் என்ற நீண்டதும் தொடரானதுமான செயற்பாட்டினூடாக சுயாதீனமான சமூகமாகத் தளிர் விடுவது சாத்தியமாகிறது. இதனை வலுப்படுத்தும் நிலைப்படுத்தும் பொறுப்பு கூத்து மீளுருவாக்கச் சமூகத்திற்குரியதாகவே இருக்கின்றது.

சிறுவர்களுக்கான கூத்தரங்கு என்பது சிறுவர்களது உள்துறை, ஆற்றல், வெளிப்பாடுகளுக்கும், ஆளுமை விருத்திற்கும், சமூகம் சார்ந்த சிந்தனை விருத்திக்கும் சமூகம் சார்ந்த செயற்பாட்டுத் தூண்டலுக்கும் கற்பனை விருத்திக்கும், மிகவும் பொருத்தமான கலைவழி விளையாட்டுக் களமாகவும் கல்விக் களமாகவும் விளங்குகின்றது. இன்னொரு வகையில் கூறுவதானால் மகிழ்வூட்டலுக்கு ஊடான அறிவூட்டலும் திறன் வளர்த்தலுக்குமான சாதனமாகும்.

சிறுவர்களுக்குரியதாக கூத்தை அதாவது மீளுருவாக்கக் கூத்தரங்கை தொடர் செயற்பாடாக அடுத்த சந்ததியினர்க்கும் கொண்டு செல்வதென்பது கூத்துக் கலைஞர்களதும். அண்ணாவிமார்களது சிந்தனையிலுமே தங்கியுள்ளது.

கூத்தாற்றுகை என்ற இலக்கை நோக்கி திறந்தவெளிச் சூழலில் குறிப்பிட்ட காலங்களுக்குள் நிகழும் பல்வேறு நடைமுறைகளும், செயல்முறைகளும் சிறுவர்கள் பார்ப்பதற்கும் விளையாட்டாக செய்து பார்ப்பதற்கும் நடைபெறும் செயற்பாடுகளில் “சேது சாகரத்துக்கு” மண் சுமந்த அணிலாக பங்கெடுப்பதும் அதனால் பூரிப்படைவதும் அது பற்றி பிரலாபிப்பதும் அதனை இரை மீட்டுவதும் என அறிந்தும் அறியாமலும் நிகழும் காரியங்கள் சிறுவர்களை மேற்படி கலைச் செயற்பாட்டிக்குள் இயல்பாகவேயுள் வாங்கும் முறைமையாக அமைந்து விடுகின்றது.

பாக்கியராஜா மோகனதாஸ்


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]