விஜய வருடம் வைகாசி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் பிறை 25
SUNDAY MAY 25 2014

Print

 
‘KAVITHAIMANJAREY’

தீ அவள்!

பனைமரக் காற்றும் பொய்யே
பனிவளர் ஊற்றும் பொய்யே!
உனைநினைந் தோதும் நானே
உலகினில் பேறாம் என்பேன்
நினைவெலாம் நீயே என்றால்
நிஜமதை பொய்யே என்பாய்
எனையுனை ஏற்றிப் பாடும்
எழுத்தெலாம் மண்ணில் வாழும்!
-*-
கண்வளர் கின்ற போதும்
கல்மனக் காரி நீயோ
புண்வளர் என்பாய் நெஞ்சில்
புள்ளினம் கூடத் தம்போல்
மண்மலை மேட்டில் எல்லாம்
மங்கள கீதம் பாடும்
எண்பினை வாட்டும் தீயே
என்னவள் என்றால் மெய்யே!


கிணற்றுத் தவளைகளின் பாடல்

பகுத்தறிவு வாதிகளுடன்
முரண்பட்டு நிற்கும்
வாழ்க்கைத் தத்துவங்களால்,
பிற்போக்குவாதிகளின் பின்னடைவும்
புரியாமலிருக்கும் அறியாமை ஆசனமும்
பூர்வீகத்தின் எல்லையைத் தாண்டாத
உரிமை புலத்திலே, ஒதுங்கி வாழும் பிரகிருதிகள்!
அறைந்து வீசும் நாகரிகக் காற்றுக்குள்,
அகப்படாமல், இருட்டின் இசைவுகளுடன்
இருவிழிமூடி....
அறிவியல் உலகம் அங்குலம் அங்குலமாக பரிசோதித்தாலும்
குறைமதியினராகவே விளக்கவுரை பகரும் என்றும்!
மரபு வழி மரக்கலத்திலே நகரும் பொழுதுகள்!
கரங்கள் கட்டப்பட்டு, பார்வைகள் குருடாக்கப்பட்டு!
அடிமைத்தனத்தின் உரிமை மனுக்களை
கிழித்தெறிவதற்கு தயாரில்லாத கோழைகள்!
புதுவெள்ளப் பிரவாகத்தில் அள்ளுண்டு போகாமல்
காவல் மதிலுக்குள், மெய்யடங்கி
வாழ்வதன் தனித்துவம் தொடர்கிறது
எம்மை ஏளனப்படுத்தும் மானிடர்,
மன ஏமாற்றம் துயரங்களால்
எம்மண்ணிலே சங்கமமாகி
சமாதியாகும் சங்கதிகளும் ஏராளம் !!


புகழ் படம்

என் கூட்டுக்குள் வந்து
என்னைக் கலைக்கும்
அகம்பாவக் கழுகுகள்...
அனைத்தையும்
துறந்தவனாய் நானிருந்தும்
புதிதாய்ப் பிறந்தவனாய்
கழுகுகளுடனேயே வாழ்கிறேன்!

தூபமிடும் கோஷ்டிக்குள்
தீபமாய்
சுடர் விடப்போகிறேன்!

துரத்திவரும்
பேனாக்களுக்கும்
தீயதை எழுதாதிருக்கும்படி
வேண்டுகிறேன்!

விளம்பரக் கழுகுகள் - என்னை
விட்ட பாடில்லை//
என்னால் விளம்பரப்பட்ட முகங்கள்
என்னை
விளம்பரம் செய்ய விரும்பவில்லை.

தூய எழுத்துக்கு
தூர இடம்தான் மிச்சம்
சாயம் போன மனிதர்கள்
பொன்னாடைச் சால்வைகளுடன்
போலிச் சிரிப்புடன்
பத்திரிகையின்
புகைப்படத்தில் மின்ன...

எழுத்தே
எல்லாம் என வாழ்ந்த நானோ
எங்கோ ஒரு தூரத்தில்
என் முகம் தெரியாமலே மறைந்திருக்க...
என்னை ஆதிக்கம் செலுத்தும்
கழுகுகளாய்...
இன்னும் சிலரும்
வலமிருந்து இடமாக
என்னை மறைத்தபடி நிற்க,
அகப்பட்ட ஆன்மாவாய் நானும்
அகம்பாவக் கழுகுகளாய் அவர்களும்...


காவலன்

வீட்டின் முன் நின்று
வியப்புடனே பார்க்கின்றேன்
வெள்ளிமீன் நடுவே
வீரநடை போடுகின்றான்

காரினில் ஏறி
கனதூரம் போனாலும்
நன்றி உள்ள நாய் போல
என் பின்னால் வருகின்றான்
மறைந்து விட்டான் என்று
மயங்கி நான் நிற்கையிலே
மரங்களுக்கு நடுவே வந்து
மகிழ்வுடனே சிரிக்கின்றான்

காரியங்கள் முடிந்து நான்
களைப்புடனே திரும்புகையில்
களைப்பென்ற வார்த்தையின்றி
காவலனாய் வருகின்றான்

படுக்கைக்கு போகவென்று
படியேறி நான் சென்று
சாளரத்தின் வழியே
தற்செயலாய் பார்க்கின்றேன்

இரவு வணக்கத்தை
இன்முகமாய் அவன் கூறி
மேலெழுந்து சென்றான்
மிகக்கவலை நானடைந்தேன்


நட்புக்காக...

நட்பே - உன்
கொள்ளும் அறிவாலே
குறைவில்லா பேறு பெற்று
வள்ளல் இறையருளால்
வளமான வாழ்வு பெற
வெள்ளம் பெருக்கெடுத்து
விழி நிறைக்க வாழ்த்துகிறேன்!
கதைக்கையிலே இனிமை
கண்களிலே கருனை
கணக்கான சிரிப்புடன்
கதை கூறும் காரிகையாள்!
பார்ப்போரின் மனதை
பணிவுடன் நோக்கும்
ஆடம்பரமில்லா உடை
ஆர்ப்பாட்டமில்லா நடை
அனைத்திலும் - நீ
அனைவரையும் வென்று
அகிலம் போற்ற
ஆண்டவனை வேண்டுகிறேன்!


மலரும் காலை

காலைக்கதிரவன்
தன் கிரணங்களைப் பரப்பி
கண் கூசும் கதிரொளியாய்
காரிருள் தனை அகற்றுவான்

செக்கச்சிவந்த வானம்
செகத்தை எழிலூட்ட
செழிப்போடு வீசும் தென்றல்
செங்கமலமதன் மொட்டை அவிழ்த்ததென்ன

கூகூ எனக்குயில்கள்
இன்னிசைகீதம் இசைத்தனவோ
இனிய காலை வேளை
இசைச்சமர் முழங்கிய தென்ன
பகலவன் பகல் பயணம் தொடர
தன்மை பரணியை விட்டொழிய
காலை நின்ற நிலை மாறி
இனிதே செகம் பகலை வரவேற்கும்


நிலவே நீதான்!

வட்ட நிலா
வான மேடையில்
ஒய்யாரியவள்
நட்சத்திர பூங்கொத்து
நடுவில் புன்னகைக்கிறாள்!

சோபை அவள் மேனி
சேவையில் தேவி
பாவையவள் விழித்தால்
பார் முழுவதும் பூக்கும்

வட்ட வடிவமான
வண்ண நிலாவே!
நீ
தொட்ட இடமெல்லாம்
சுவர்க்கம்!
பட்ட இடமெல்லாம்
பளபளக்கும்

உன்னில்
எனக்கு பொறமை...
விண்ணில் இருந்து
மனம் தொடுகிறாய்!
மண்ணில் பிறந்திருந்தால்
மணம் முடித்திருப்பேன் அல்லவா?
என்றாலும்
என் கனவுக்கன்னியும்
நீதான்!


முட்டையின் ஓடுகளிலான வாழ்க்கை

இஃது இக்கணமே
உடைந்துநொறுங்கும் சாத்தியங்களால்
நிரப்பப்பட்டிருப்பது தெளிவாகிற்று

இன்றைக்கும் கனவுகள்
எழுந்து விழிப்பதற்கு ஏதுவாக
அழகும், பதுமையும் நிறைந்த
பெரும் தரித்திரங்களை அழைத்துவந்து
நிறுத்திவிடுகிறது வாசலில்

இதிலிருந்தே அறிய முடிகிறது
இவை பாதுகாப்பற்ற மேற்பூச்சு நிறைந்த
படாடோபமென்று

ஒழுங்கு படுத்தல்களோ உறுதிப்பாடோ இன்றி
சிக்கல்களை தோற்றுவிக்கின்றபடி
தயாரிக்கப்பட்டிருக்கிறது இந்த நொடிவரை

எவரையும் பயமுறுத்தி வீழ்த்த பயிற்றப்பட்ட
மிருகத்தைப் போல்
உறுமியபடி துரத்திக் கொண்டிருக்கிறது காலம்
மிக அவதானமாக கையாள வேண்டியிருக்கிறது
முட்டையின் ஓடுகளிலான இந்த ஜீவியத்தை


அன்னை

‘அன்னை’ அறிந்தவர்க்கு அழகி
அறியாதவருக்கு அருமையான கருவி
“அ” என்னும் அகரத்தை தன் கருவாக்கி
அள்ளி வழங்கிடும் அற்புத சஞ்சீவி - என்
அன்னை தமிழிற்கே சிரஞ்சீவி

பத்து மாதமல்ல பல்லாயிரம் ஆண்டுகாலம்
பகை மறந்து பசி மறந்து பரப்பிய புகழ் - என்
தமிழ் அன்னையின் நிழல் - இவ்
அன்னைக்கு நிகர் அகிலத்தில் உண்டோ?
பண்டு தொட்டு இன்று வரை,

கன்னித் தமிழை கனிவாக வழங்கிடும்
களஞ்சியத் தமிழ் என் அன்னை
கவிஞர்களைக் கணப்பொழுதில் - தன்
காலடியில் கனிய வைத்த
கன்னி கழியாத காரிகை அவள்,
கலைமகளின் கைவீணை போல
காரிருள் அகற்றி ஞான ஒளி புகட்டி
அன்பு அமைதி எனும் அலைகளாய்
தவழ்ந்து மடியில் மயங்கி - எமக்கு
மங்களம் மனமுவந்து தரும் மங்கை,

பாரில் படர்ந்து கொடியாகி
பல்லாயிரம் மலரை மரபாக்கி
பாரதி தொடக்கம் பாரதிதாசன் என
பசுந்தமிழ் குழந்தைகளை உருவாக்கி
பரவசமூட்டிய புதுமையின் பாவையிவள்,

சங்கத் தமிழ் தொடக்கம் சகல தமிழ்தனையும்
தானாக முன்வந்து தரணியில்
தரித்திடும் அன்னை
தனித்துவம் என்று என் அன்னைக்கு
தலை நிகராய் தலைவணங்க ஏது உண்டு?
வாழ்க தமிழ் அன்னையே
வளர்க என்றும்...


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]