விஜய வருடம் மாசி மாதம் 04ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. ஆகிர் பிறை 15
SUNDAY February 16 2014

Print

 
மத்துகம சென் மேரிஸ் மகாவித்தியாலயம்

மத்துகம சென் மேரிஸ் மகாவித்தியாலயம்

தனியான தமிழ்ப்பாடசாலை வேண்டுமென அமைச்சர் ஆறுமுகனிடம் மக்கள் கோரிக்கை

த்துகம சென்.மேரிஸ் மகா வித்தியாலயம் ஆங்கிலேயர் காலத்தில் 1934ம் ஆண்டு நமவம்பர் மாதம் 11ந் திகதி வண.பிதா ஜோசப்பர்னாந்து அவர்களால் ஆங்கில மொழி பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டு தமிழ், சிங்கள மாணவர்களைக் கொண்டு இயங்கி வந்துள்ளது.

1956ம் ஆண்டில் சிங்கள மொழி அரச கரும மொழியாக பிரகடனப்படுத்தப்பட்டதன் பின்னர் தமிழ், சிங்களம் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சிங்களப் பிரிவின் கீழேயே அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. காலை நேர ஒரு மொழிப்பாடசாலையாக இயங்கி வந்த இப் பாடசாலையில் மாணவர் தொகையில் அதிகரிப்பு ஏற்பட்டதன் காரணமாக சிங்களப் பிரிவு காலை வேளையிலும், தமிழ் பிரிவு மாலை வேளையிலும் நடத்தப்பட்டன. மாலை நேரப் பாடசாலையின் போது தமிழ் மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையேற்பட்டது. இது குறித்து கவனம் செலுத்திய பெற்றோர் மற்றும் நலன் விரும்பிகள் தமிழ்ப்பிரிவை மீண்டும் காலைநேரப் பாடசாலையாக மாற்றியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் அப்போது மத்துகம தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகவும், சபாநாயகராகவும் இருந்த அமரர் அனில் முனசிங்க முன் வந்து தமிழ் மாணவர்களுக்கென இரு மாடிக் கட்டடம் ஒன்றை அமைத்துக் கொடுத்தார். தமிழ் மாணவர்களுக்குகென கட்டடம் அமைத்துக் கொடுக்கப்பட்ட போதிலும் காரியாலயம், கேட்போர்கூட வசதி இல்லை என பல்வேறு காரணங்களைக் காட்டி பாடசாலை நிர்வாகம் கட்டடத்தை தர மறுத்துவிட்டது. இதனால் தமிழ் மாணவர்களினதும், பெற்றோரினதும் எதிர்பார்ப்பு ஏமாற்றத்துக்குள்ளாகி தமிழ் மாணவர்கள் தொடர்ந்து மாலை வேளை பாடசாலையிலேயே கல்வியைத் தொடரும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

பிற்பகல் 1.30 க்குப் பின் பாடசாலைக்கு வரும் மாணவர்கள் வகுப்பறைகளைக் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து 2.00 மணியளவில் கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பித்து மாலை 5.30 மணிவரையில் சுமார் 3 1/2 மணித்தியாலயம் மட்டுமே கல்விகற்கும் வாய்ப்பைப் பெற்றனர்.

மாலை நேர பாடசாலைக்கு வரும் மாணவர்கள் தோட்டப் பகுதிகளிலிருந்து பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலேயே வீடு திரும்பிச் செல்ல வேண்டியிருந்தனர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் எனக் கருதிய பெற்றோர் மற்றும் நலன் விரும்பிகள் மீண்டும் ஒரு முயற்சியில் இறங்கி 2007ம் ஆண்டில் அப்போதைய மேல் மாகாண முதலமைச்சராக இருந்த ரெஜினோல்ட் குரேவிடம் விடுத்த வேண்டுகோளின் பயனாக சுமார் 2 1/2 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட செலவில் 130x25 அளவிலான மூன்று மாடிக்கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டு 2009ம் ஆண்டு முதல் மாலை நேரப்பாடசாலைக்கு முடிவு கட்டி காலை நேரப்பாடசாலையாக இயங்க ஆரம்பித்து இன்று வரையில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தமிழ்ப் பிரிவுக்கென உள்ள ஒரே ஒருவளம் இது மட்டுமேயாகும்.

இந்த கட்டடம் ஒன்றே முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரேவை நினைவூட்டுவதுடன் அவர் தந்த கொடையென்றே கூறவேண்டும்.

தமிழ்ப் பிரிவுக்கென தனியானதொரு கட்டடம் அமைத்துக் கொடுக்கப்பட்ட போதிலும் வெகுவிரைவில்லேயே கட்டடத்தின் கீழ் மாடியின் அரைவாசிப்பகுதியை சிங்கள பிரிவுக்குப் பெற்றுக் கொண்டனர். இதனால் இடவசதி போதாமையினால் கடந்த ஐந்து வருடகாலமாக பெரும் நெருக்கடி மத்தியிலேயே தமிழ் மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இக்காலப் பகுதியில் பாடசாலை நிலைமை தொடர்பாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து அமைச்சர் பாடசாலைக்கு விஜயம் செய்து பார்வையிட்டு சுமார் மூன்று கோடி ரூபா செலவில் சகல வசதிகளுடனும் கூடிய கட்டடம் அமைத்துக் கொடுக்க தீர்மானிக்கப்பட்ட போதிலும் தமிழ்க் கல்விக்கு வசதிகள் கிடைப்பதை விரும்பாத சிலர் முட்டுக்கட்டை போட்டு அதனைத் தடுத்துவிட்டனர். இதனையடுத்து பெற்றோரும், நலன் விரும்பிகளும் 2010 ஆண்டில் மீண்டும் அமைச்சர் தொண்டமானை நேரில் சந்தித்து மத்துகம தோட்டத்தில் காணி ஒதுக்கீடு செய்து ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு தமிழ்ப்பிரிவுக்கான தனியான பாடசாலையொன்றை அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்தனர்

தமிழ்ப்பிரிவு இன்று வரையில் பல்வேறு சிரமங்களுக்கு மூலம் கொடுத்த நிலையில் இயங்கி வருவது குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் பலரும் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் இவ்வாண்டின் ஆரம்பத்திலேயே இங்கு ஏற்பட்ட மற்றுமொரு சம்பவம் அனைவரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி பெரும் பதட்ட நிலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்ப்பிரிவின் வகுப்பறையொன்றை பல வந்தமாக சிங்களப் பிரிவுக்கு கைப்பற்றிக் கொள்ள முயற்சி மேற் கொள்ளப்பட்டுள்ளது. தமிழ் பிரிவின் புதிய அதிபர், ஆசிரியர்கள் மற்றும் அரசியல்வாதிகள் சிலரின் தலையீட்டினால் தமிழ்ப்பிரிவு வகுப்பு மாணவர்களை வெளியேற்றி விட்டு வகுப்பறையைக் கைப்பற்றிக்கொள்ளும் முயற்சி தடுக்கப்பட்டது.

இவ்வாறு ஆரம்பம் முதல் பல்வேறு பிரச்சினைகளுக்கும், இடையூறுகளுக்கும் முகம் கொடுத்துவரும் தமிழ்ப்பிரிவு படிப்படியாக கைப்பற்றப்பட்டு தமிழ்ப்பிரிவு முற்றாக இல்லாமற் போய்விடுமோ என்ற அச்சமும், சந்தேகமும் பெற்றோர் மத்தியில் வலுப்பெற்றுள்ளது.

தரம் 1 முதல் 13 வரையில் இயங்கி வரும் தமிழ்ப்பிரிவில் 567 மாணவர்கள் கல்வி கற்றுவருகின்றனர். மத்துகம நகரை அண்டியுள்ள தோட்டங்களைச் சேர்ந்த மாணவர்களே இங்கு கல்விகற்று வருகின்றனர். ஒவ்வொரு வகுப்பிலும் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். வருடந்தோறும் தரம் 1க்கும் தரம் 6க்கும் புதிய மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளும் போது இடவசதியின்மையால் பெரும் சிரமத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளதுடன் இடநெருக்கடிக்கு மத்தியிலேயே மாணவர்களை அனுமதிக்க வேண்டியுள்ளது. மாற்று நடவடிக்கை ஏதுவுமே மேற்கொள்ள முடியாது அனைத்து நடவடிக்கைகளையும் இந்த ஒரே கட்டடத்துக்குள்ளேயே முடக்கிய நிலையில் மேற்கொள்ள வேண்டியுள்ளது. கணனி கூடம், விஞ்ஞான ஆய்வுகூடம், ஆசிரியர்களுக்கான ஓய்வறை, நூலகம் போன்ற வசதிகள் கிடையாது. விளையாட்டுப் போட்டிகளை தனியாக நடாத்த முடியாத நிலை. ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு உடற் பயிற்சி, சாலைக்கூட்டம் நடாத்துவதற்கான இடவசதியின்மை, நடனம், சங்கீதத்துக்கான இடவசதியின்மை பெரும்பாலும் இந்து மாணவர்கள் கல்விகற்கும் இங்கு சமயப் பிரார்த்தனைகள், இலக்கிய மன்றம், கலை, கலா சார நிகழ்வுகளை நடாத்த இடவசதி கிடையாது. தமிழ், சிங்கள பிரிவுகளுக்கென பொதுவாக ஒதுக்கப்படும் கல்விக் குணநலன் உள்Zடு நிதி ஒதுக்கீட்டில் பேருக்கு ஒரு சில பிரிஸ்டல் போட் மற்றும் சில உபகரணங்கள் மட்டுமே வழங்கப்படுவதுடன் வருடந்தோறும் புதிய மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளும்போது அறவிடப்படும் வசதிக் கட்டணமும் சிங்கள அதிபரிடமே போய்ச் சேருகின்றது.

தமிழ்ப்பிரிவுக்கான தரமுள்ள அதிபர் ஒருவர் இருந்த போதிலும் ஆசிரியர்களின் விடுமுறைக்கு விண்ணப்பிக்கத்தானும் அனுமதிக்க முடியாத நிலை. அனைத்து நடவடிக்கைகளும் சிங்கள அதிபரின் கட்டுப்பாட்டிற்குள்ளேயே இருந்து வருகின்றமையால் தமிழ்ப் பிரிவின் அதிபரினால் சுயமாக எந்வொரு முடிவையும் எடுக்க முடியாது சிங்கள அதிபரிடமே நாடிச்செல்ல வேண்டியுள்ளது.

தமிழ்ப் பிரிவின் கல்வி நடவடிக்கைகளை கண்காணித்து வருவது மட்டுமே தமிழ்ப் பிரிவுக்கான அதிபரின் கடமையாக உள்ளது. 2000க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் சகல வசதிகளுடனும் சிங்களப் பிரிவு இயங்கி வருகின்ற போதிலும் தமிழ்ப்பிரிவு மாற்றாந் தாய் பிள்ளை போலவே மதிக்கப்பட்டு வருகின்றது. எனவே தமிழ்ப்பிரிவுக்கென தனியானதொரு இடம் ஒதுக்கப்பட்டு தனித்தமிழ்ப் பாடசாலையொன்று ஏற்படுத்தப்பட வேண்டும். என்பதே பெற்றோர்.

பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளினதும் எதிர்பார்ப்பாகும். ஏற்கனவே மத்துகம தோட்டத்தில் காணி ஒதுக்கப்பட்டு அங்கு தமிழ்ப்பாடசாலை அமைந்த்துக் கொடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானிடம் விடுத்த கோரிக்கையை அமைச்சர் மீண்டும் கவனத்திற்கொண்டு நிறை வேற்றித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தங்களின் வேண்டுதலாகும் என தெரிவித்துள்ளனர்.

கைத்தொழில் பேட்டை, ஆடைத்தொழிற்சாலை, விளையாட்டு மைதானம், குடிநீர்த்திட்டம், கிராமங்கள், அரச கட்டடங்கள் என பல்வேறு தேவைகளுக்குப் பெருந்தோட்டக் காணிகள் பெற்றுக் கொள்ளப்படுகின்றன.

இவ்வாறிருக்கும் போது தோட்டத்தில் பாடுபட்டு உழைத்து வரும் தொழிலாளரின் பிள்ளைகளின், கல்விக்காக குறிப்பிட்ட அளவு தோட்டக் காணியை ஒதுக்கிக் கொடுப்பதில் எவ்வித நட்டமும் ஏற்பட்டு விடப்போவதில்லை. அமை ச்சர் ஆறுமுகன் தொண்டமான இந்த மக்களின் கோரிக்கையை ஏற்று நிறைவேற்றி வைக்க முன்வரவேண்டும்.

இங்கிரிய மூர்த்தி... -


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]