விஜய வருடம் மாசி மாதம் 04ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. ஆகிர் பிறை 15
SUNDAY February 16 2014

Print

 
 ஹனீபா சஹீலா

ஹனீபா சஹீலா

உடுப்பு வாங்குவதற்கு கணவர் சாதிக்குடன் சந்தோசமாக கடைக்குச் சென்ற பரீதா வழமைபோல் கண்ணீரோடுதான் வீடு திரும்பினாள். சாதிக் அவளின் தலையைத் தடவினான். அவளது கண்கள் அளவில்லாமல் கண்ணீரை சொரிந்தன.

வாழ்வில் எவ்வளவு துன்பங்கள் வந்தபோதும் அவள் அதையெல்லாம் இறைவன் ஒருவனிடமே முறையிட்டாள். நான்கு வருடமாக அவள் இரவு, பகலாக எந்நேரமும் வேண்டுவது, தனக்கு ஒரு மலழைச் செல்வம் வேண்டுமென்பதே.

‘மலடி’ என்ற பட்டம் மட்டுமே அவளுக்கு எஞ்சியது. எத்தனையோ முயற்சிகள் செய்தும் இதுவரை எந்தப்பலனும் கிட்டவில்லை. இந்தக் குறைபற்றி ஒரு நாளேனும் சாதிக் பரீதாவிடம் பேசியதில்லை. “எல்லாம் அல்லாஹ்வின் நாட்டம் நீ எதையும் நினைத்து வருந்தாதே” என்ற ஆறுதல் வார்த்தைகளையே மொழிந்தான்.

ஊர்வாயை மூட முடியாது என்பதைப் போல பரீதாவைக் காண்போரின் வாய்கள் எல்லாம் “கல்யாணமாகி இத்தனை வருடமாகியும் இவளுக்கு ஒரு பிள்ளை இல்லையே” என்ற வார்த்தையையே அசைபோட்டன. ஊராரின் இந்த வார்த்தைகளால் தினமும் சித்திரவதைபட்டாள்.

இவளின் அந்த மனநிலையை எப்படியாவது மாற்ற வேண்டும் என்பதற்காக சாதிக் தன் தொழிலையே இடமாற்றம் செய்து கொண்டான். அங்கு சென்று சுமார் இரண்டு வருடங்கள் கடந்தபோது அவ்வூராரும் அதே புராணம் பாடத்தொடங்கினர்.

பரீதாவுக்கு அவ்வூரிலிருந்த நிம்மதியும் பறிபோனது. இவளது நிம்மதிக்காக சாதிக் தன்னால் இயன்றமட்டும் முயற்சி செய்தான். அவனது முயற்சி சிறிது காலம்தான் நிலைத்தது.

சாதிக்கின் விடயத்தில் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்த பரீதா அவனோடு காட்டும் அன்பை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துவந்தாள். அவளது மாற்றத்தை உணர்ந்தவன் அவளிடம் இதுபற்றி எதுவும் கேட்பதில்லை. ஆனால் உள்ளுக்குள் மிகவும் வேதனைபட்டான்.

ஒரு நாள் பரீதா பக்கத்து வீட்டு சுலைஹாவுடன் பேசிய விடயங்கள் எதேச்சையாக சாதிக்கின் செவிகளில் விழுந்தன. ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது. சுலைஹா அவ்விடத்திலிருந்ததால் பொறுமையாக இருந்தான்.

சாதிக்கை கண்ட பரீதா “எப்போ வந்தீங்க?” எனக் கேட்டவாறு அவனுக்கு அருகில் சென்றாள். அருகில் வந்த பரீதாவின் கன்னத்தில் அனல் பறக்க ஓர் அறை விட்டான். பரீதாவுக்கு தலையே சுற்றியது. எதுவும் பேசாதவன் அவ்விடத்திலிருந்து சென்றான். விம்மி விம்மி அழவேண்டும் போலிருந்தது, என்றாலும் அவள் வந்த அழுகையை அடக்கிக் கொண்டாள்.

சாதித்த பெருமையோடு அவள் கண்ணீரைத்துடைத்தாள். நடந்த விடயங்களை கூற பரீதா சுலைஹாவின் வீட்டுக்கு விரைந்தாள். அங்கு நடந்த அனைத்து விடயங்களையும் கொட்டித் தீர்த்தாள். சுலைஹாவின் திட்டம் நிறைவேறுவது கண்டு சுலைஹாவுக்கும் மட்டில்லா மகிழ்ச்சி.

சாதிக் மிகவும் கவலைபட்டான். “எப்படி?” இவள் இப்படியொரு முடிவுக்கு வந்தாள்? எனத் தனக்குள் கேட்டான். சுலைஹாவுடன் பரீதா பேசிய விடயங்கள் சாதிக்கின் உள்ளத்தை குடைந்தன. இதை பரீதாவிடமே கேட்டுவிட வேண்டுமென நினைத்தான்.

வீட்டுக்குச் சென்றபோது அங்கு பரீதா இருக்கவில்லை. சுலைஹாவின் வீட்டிலிருந்தவள் சாதிக்கின் வருகையை அறிந்தும் வீட்டுக்கு வரவில்லை. சுலைஹாவின் வீட்டுக்குச் சென்றவள் அவளை அழைத்து வந்தான். இருவரும் பேசிக் கொள்ளவில்லை. நீண்ட நேர மெளனம்.

மனசுக்குள் குமுறிக் கொண்டிருந்த சாதிக், “பரீதா நாம ரெண்டு பேரும் ஆறு வருஷமா கணவன் மனைவியா வாழ்றோம். இதுவரைக்கும் நீ ஆசைபட்டுக் கேட்ட எதையுமே நான் செய்யாமவிட்டதில்லை. அப்புறம் ஏன் நீ இப்படி திடீர்னு மாறிட்ட? எனக்கு ஒண்ணுமே புரியல. உனக்கு என்னப் பிடிக்கலயா?” என்ற வினா பரீதாவின் மெளனத்தை கலைத்தது. இருந்தும் அவள் ஒன்றும் பேசவில்லை. பரீதாவின் மெளனம் சாதிக்கின் பொறுமையை மேலும் சோதித்தது. “கல்யாணமாகி இந்த ஆறு வருஷத்துல நமக்கு குழந்தை இல்லாததப் பற்றி நான் ஒரு நாள் கூடப் பேசினதில்ல. ஆனா நீ எனக்கிட்ட பல தடவ இதப்பற்றி பேசியிருக்க. உன் மனசு கஷ்டப்படக் கூடாதுண்ணுதான். அப்படியிருந்தும் நீ என்னவிட்டுப் பிரிஞ்சு போகனும்னு உனக்கு எப்படி மனசு வந்தது? சுலைஹாவும் நீயும் சேர்ந்து எனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணிவைக்க திட்டம் போட்டது எனக்கு தெரியும்” என்றான்.

“ஆமாங்க, என்னால உங்க வம்சம் அழியக்கூடாது. அது வளரணும். அதனால என்ன விவாகரத்துப் பண்ணிட்டு இன்னொரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிகிங்க” என்றதும் சாதிகின் கண்கள் சிவந்தன.

“அப்படினா நீ என்ன விவாகரத்துப் பண்ணிட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிக்கப் போறியா?” என ஆத்திரம் பொங்க கேட்டான். அது வரை தனது நெஞ்சைக் கல்லாக்கி வைத்திருந்த பரீதா பனியாக உருகினாள்.

“என்ன வார்த்தை சொன்னீங்க? உங்களைத் தவிர இன்னொருத்தர நான் மனசால கூட நினைக்கமாட்டேன். எப்படி உங்களால இப்படிப்பேச மனசு வந்தது?”

“உனக்கு எப்படி மனசு வந்தது? இனிமேல் இப்படிப்பேசமாட்டேன்னு சொல்லு” என்றவன், பரீதாவின் முகத்தையே பார்த்தான். “மன்னிச்சிடுங்க இனிமேல் நான் இப்படி பேசமாட்டேன்” என்றவளின் கரங்களைப் பற்றினான். இருவருக்குமிடையிலிருந்த மனப்போராட்டம் நீங்கி இரு மனங்களும் ஒன்றித்தது.

மறுநாள் காலையில் சாதிக் வேலைக்குப் புறப்பட்டான். வீட்டிலிருந்த சுலைஹா பரீதாவோடு பேச்சுக்கொடுக்க அங்கு வந்தாள். நடந்த விடயங்களனைத்தையும் பரீதா கூறினாள். அதற்கிடையில் பரீதாவுக்குத் தலையே சுற்றியது. மயக்கமாகி கீழே விழுந்தாள். உடனே பரீதாவை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றாள்.

அங்கு பரீதாவை சோதித்த வைத்தியர் சொன்ன விடயம் சுலைஹாவின் இதயத்தை மரணிக்கச் செய்தது. “இன்னும் இரண்டு நாட்கள் தள்ளியிருந்தால்” சுலைஹாவின் மனம் நடுங்கியது. “எவ்வளவு பெரிய தவறை செய்ய முற்பட்டேன். இறைவன் அருளால் எதுவும் நடக்கவில்லை” என இறைவனுக்கு நன்றி கூறினாள்.

சுலைஹா, தன் கணவர் ஹுசைனை அவசரமாக சாதிக்கை சந்தித்து நடந்த விடயங்களை கூற அனுப்பினாள். அவனும் சாதிக்கிடம் விடயத்தை கூறினான். சாதிக்கின் கால்கள் நிலத்தில் நிலை கொள்ளவில்லை. இறைவனுக்கு நன்றி கூறினான். அவசரமாக மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு வீடு நோக்கி விரைந்தான்.

ரயில் கடவையை கடக்கும்போது எதிரே வந்த ரெயில் சிக்கி சாதிக்கின் சிதைந்த உடல் மட்டுமே மிச்சமாகியது. ஹுஸைன் மூலம் செய்தி எட்டியது. செய்தியை கேட்ட பரீதா மயக்கமாகி கீழே விழுந்தாள். கரு உருவாகும்போது உருவாக்கியவனின் உயிர் கலைந்தது எல்லோரையும் கவலைப்படுத்தியது. உறவுகளும் ஊராரும் கூடி சாதிக்கை அடக்கம் செய்தனர்.

மயங்கி விழுந்த பரீதாவின் வயிறு அடிப்பட்டதை சாதிக் இறந்த வேதனையில் அவள் கவனிக்கவில்லை. மறுநாள் அவளுக்குத் தாங்க முடியாத வயிற்றுவலி வரவே அன்றும் சுலைஹாதான் அவளை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றாள்.

அன்று பரீதாவை சோதித்த வைத்தியர் கூறிய செய்தி சுலைஹாவின் இதயத்தை சுக்குநூறாக நொறுக்கியது. வயிற்றில் பலமாக அடிபட்டதாலும் காலம் கடந்து கருத்தரித்தாலும் பரீதாவின் கரு கலைந்துவிட்டது. இதைக் கேட்ட பரீதா உயிரற்ற உடல் போல் ஜடமாக நின்றாள்.

ஆறு வருடம் தவமிருந்து அதன் பலனாக கிடைத்த சந்தோஷத்தைப் பகிரமுன் கணவன் பறிபோனதும், தந்தையில்லாத உலகைக்காண விரும்பாத தன் செல்வம் கருவறைக்குள்ளேயே காலமாகிப் போனதும் பரீதாவின் வாழ்க்கையை அர்த்தமிழக்கச் செய்தது. இறைவனிடம் பிரார்த்தித்தாள். கணவனுக்காகவும், குழந்தைக்காகவும் வாழ்க்கையும் வாழ்ந்த சின்னமும் நிலைக்காததை நினைத்து விதியையே நொந்து கொண்டு ஜடமாக வாழ்கிறாள்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]