விஜய வருடம் மாசி மாதம் 04ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. ஆகிர் பிறை 15
SUNDAY February 16 2014

Print

 
கிழக்கில் அமோக விளைச்சல் தரும் பப்பாசி செய்கை

கிழக்கில் அமோக விளைச்சல் தரும் பப்பாசி செய்கை

இன்று தொழில்வாய்ப்பு இல்லை என எத்தனையோ இளைஞர் யுவதிகள் தங்கள் எதிர்காலத்தை கழிக்கின்றனர். அரச வேலை செய்தால் மட்டும்தான் உயர்வானது, கெளரவமானது எனப் பலர் நினைப்பதினாலேதான் தொழில் இன்றி கஷ்டப்படுகின்றனர்.

அரசாங்கம் திவிநெகும வாழ்வின் எழுச்சித்திட்டத்தின் கீழ் மக்களின் வறுமையை விரட்டியடிக்கக் கூடிய வகையில் பல்வேறு சுயதொழில் முயற்சிகளுக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பினை வழங்கி வருகின்றது. அரசின் வழிகாட்டல்கள் மற்றும் வாய்ப்புக்களை சிக்கெனப் பற்றிப் பிடிப்பவர்கள் மட்டுமே வாழ்க்கையில் உயர் நிலையை நோக்கி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கின்றனர். சில சோம்பேறிகள் இன்னும் சோம்பேறிகளாகவே காலத்தைக் கழிப்பதையும் காண்கின்றோம்.

இங்கே அரசு வழங்கிய ஒரு சிறிய வாய்ப்பை பெற்றுக்கொண்ட ஒருவர். மட்டக்களப்பு மாவட்டத்தில் பப்பாசிச் செய்கையில் கொடிகட்டிப் பறக்கின்றார். இன்று மட்டக்களப்பு மாவட்ட மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள புதுக்குடியிருப்புக் கிராமத்தில் உற்பத்தி செய்யப்படும் பப்பாசிப் பழங்களுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது. பப்பாசி செய்கையை வெற்றிகரமாக முன்னெடுத்துவரும் இராசேந்திரன், வடிவேல் ஆகிய இருவரும் கடும் உழைப்பாளிகள்.

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள புதுக்குடியிருப்பு கிராமத்தின் பிரதான வீதியில் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் இப் பப்பாசி மரங்கள் செய்கை பண்ணப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு அழகும், நேர்த்தியுமாகவுள்ள இப் பப்பாசித் தோட்டத்திலுள்ள மரங்கள் யாவும் மூன்று அடி, நான்கு அடி உயரத்திலேயே பூத்துக் காய்த்துக் குலுங்குகின்றது. 2010ஆம் ஆண்டு விவசாயத்திணைக்களத்தின் ஊடாக மானிய அடிப்படையில் கிடைத்த 100 பப்பாசிக் கன்றுகளை 50 ரூபா படி வாங்கிவந்து முதற்கட்டமாக நாட்டி பப்பாசிச் செய்கையை மேற்கொண்டதன் மூலம். வெற்றிகண்டதாக இராசேந்திரன் கூறினார். மூன்று வருடங்களுக்கு முன்பு பரீட்சாத்தமாக செய்து பார்க்கப்பட்ட பப்பாசிச் செய்கை இன்று மூன்று ஏக்கர் விஸ்தீரணத்தில் இரசாயணக் கலவையற்ற அருஞ்சுவைப் பழங்களை பப்பாசிப் பழங்கள் உற்பத்தி செய்கின்றது.

இங்கு நாட்டப்பட்டுள்ள பப்பாசி மரங்கள் தாய்லாந்தின் ரெட்லேடி இனத்தைச் சேர்ந்தவையாகும் இப் பப்பாசி விதைகளை தற்போது கொழும்பில் இருந்தே கொள்வனவு செய்கின்றனர். 100 கிராம் விதை பருப்பு 8500 ரூபாவிற்கு வாங்குகின்றனர். அவற்றில் இருந்து 500 பப்பாசிக் கன்றுகளே கிடைக்கின்றன. இங்கு (எட்டு) 8 அடிக்கு ஒரு பப்பாசிக் கன்று நாட்டப்பட்டுள்ளது. ஒரு ஏக்கரில் 750 பப்பாசி மரங்களை நட முடியும். இங்கு மூன்று ஏக்கரில் 2000 வரையான மரங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பப்பாசி விதைகளை நட்டு மூன்று மாத காலத்திற்குள் அவை பூத்துக் காய்க்கத் தொடங்கிவிடுகின்றன. பின்னர் ஆறு மாதத்தில் இருந்து பப்பாசி பழம் கிடைக்கத் தொடங்குகின்றது. சிறந்த முறையில் பப்பாசித் தோட்டத்தை பராமரித்தால் மூன்று வருடங்கள் வரை பயன் பெறலாம் எனச் செய்கையாளர்கள் கூறுகின்றனர்.

பெரும்பாலும் மருந்து வகைகளைத் தவிர்த்து முற்றிலும் இயற்கை சேதனைப் பசளைகளைக் கொண்டு வளர்க்கப்படும். இப்பப்பாசி மரங்களில் இருந்து கிடைக்கும் பழங்கள் மிகவும் சுவையானதாகவுள்ளது. ஒரு சிறிய பப்பாசி மரத்தில் 30 தொடக்கம் 46 வரையான பழங்கள் கிடைக்கின்றன. ஒவ்வொரு பழமும் 1 1/2 கிலோ தொடக்கம் 3 1/2 கிலோகிராம் வரை எடை கொண்டதாக உள்ளது.

இத்தொழிலினை விருத்தி செய்வதற்கு வங்கிகளில் மானிய அடிப்படையில் அல்லது குறைந்த வட்டி வீதத்தில் தமக்கு கடன் வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படும் பட்சத்தில் இது இவ்வாறு புது முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு மேலும் உற்சாகத்தை தரக் கூடும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

அரசாங்கம் மக்களுக்கு பல்வேறு பயனுள்ள திட்டங்களை அறிமுகப்படுத்தினாலும் ஒரு சில அதிகாரிகளின் அசமந்தப் போக்கினால் அத்திட்டங்கள் மக்களைச் சென்றடைவதில்லை என்பது கடந்த கால வரலாறு ஆகும். ஆனால் தற்போது மகிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் விவசாயிகள் உட்பட பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களும் அபிவிருத்தியின் பயனை நேரடியாக அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மிகுந்த கஷ்டங்களுக்கு மத்தியில் வெற்றிகரமாக செய்கை பண்ணப்பட்டுள்ள பப்பாசித் தோட்டச் செய்கையினை மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏனைய இடங்களில் விஸ்தரிப்பதற்கும், புதுக்குடியிருப்பு கிராமத்தில் இத்தொழிலில் ஈடுபடுவோருக்குத் தேவையான வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]