விஜய வருடம் மாசி மாதம் 04ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. ஆகிர் பிறை 15
SUNDAY February 16 2014

Print

 
சுந்தரம்பாள் குரலில் பாடுங்கள் என வற்புறுத்துவார்கள்

சுந்தரம்பாள் குரலில் பாடுங்கள் என வற்புறுத்துவார்கள்

கலாபூஷணம் வயலற் சரோஜா சந்திரசேகரத்தின் நினைவலைகள்...

பல்துறை ஆளுமைமிக்க கலைஞராகிய இவர் சிறு வயது முதல் இலக்கியத்துறையில் மிகுந்த ஆர்வங்கொண்டிருந்தவர், கவிதை, கட்டுரை, சிறுகதை, சிறுவர் இலக்கியம், நாடகம் என்பவற்றை எழுதுவதில் வல்லவர். சிறந்த நடிகராகவும், ஓவியராகவும், ஒப்பனையாளராகவும், அறிவிப்பாளராகவும் திகழ்ந்தவர், சிங்களமொழியிலும் தேர்ச்சிபெற்ற இவர் பலநூல்களையும் வெளியிட்டுள்ளார், “சாணக்கியன்” சஞ்சிகையை தானே ஆசிரியராக இருந்து வெளியிட்டு வருகிறார். இவர் சோதிடக்கலையிலும் துறைபோனவர்.

1983இல் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் போது “எண் சோதிட ஜோதி” என்ற நூலையும் வெளியிட்டவர். அவரை நான் அண்மையில் சந்தித்தபோது தன் நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டார்.

இவரிடம் பிறந்தகத்தைப் பற்றி கேட்டபோது...

மட்டக்களப்பை பிறப்பிடமாகக் கொண்ட நான் அங்கே புனித சிசிலியாக் கல்லூரியில் அகரத்திற் சேர்க்கப்பட்டேன். அந்த வகுப்பில் அதிகூடிய மீத்திறன் உள்ள மாணவியாக எனக்குக் கல்வி புகட்டிய ஆசிரியை ஆன “இருதய மேரி” என்னை இனங்கண்டு அதிபர் முன்னிலையில் ஆஜர்படுத்தினார். அதிபரும் என்னை 3ஆம் வகுப்பிற்கு அனுப்பிவிட்டார்.

3ஆம் வகுப்பிற் சித்திபெற்றதும், எனது தந்தையாரின் ஊரான திருகோணமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு திருகோணமலை புனித மரியாள் கல்லூரியிற் சேர்க்கப்பட்டேன். அங்கே 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 1ஆம் பிரிவில் சித்திபெற்றேன். அப்போது, 1ஆம், 2ஆம், 3ஆம் பிரிவு என தரம் பிரித்திருந்தார்கள்.

கல்லூரியில் கல்வி பயிலும் போது அனேகமான கன்னியாஸ்திரிகளே எமக்கு கல்வி புகட்டி வந்தார்கள். அவர்களது பிறந்த தினங்களை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் நான் அன்றையகால சினிமாப் பாடல் மெட்டுக்களில் அந்த கன்னியாஸ்திரிகளின் சிறப்புக்களையும், வாழ்த்துக்களையும் பாடலாக இயற்றி, பாடக்கூடிய மாணவிகளுடன் இணைத்து பிறந்த தினத்தன்று வகுப்பிற்கு வரும்போது பாடலைப் பாடி மகிழ்வித்து, பரிசில்களையும் வழங்குவோம்.

ஒருமுறை எமது தந்தையாரின் குடும்பப் பின்னணியை நன்கு தெரிந்திருந்த சகோ. பெலிசிட்டஸ் எமது பாடலை நன்கு இரசித்துவிட்டு “இப்பாடலை இயற்றியது யார்?” என்று கேட்டார் சகமாணவிகள் “வயலற்” தான் இயற்றி எமக்கும் பழக்கினார்” என்றனர். அதைச் செவிமடுத்த சிஸ்டர், “சட்டம்பியாரின் போத்தி அவர்களுடைய இரத்தம் இவளிலும் ஓடுகிறது. நான் இளம் பிள்ளையாக இருக்கும் போது இவளுடைய தந்தை சக்கரியாஸ் பொன்னுத்துரையின் தந்தையாரான இளையதம்பியார் திருகோணமலையில் முதல் முதலில் மேடை அமைத்து “ஞானசெளந்தரி” என்ற நாடகத்தை மேடையேற்றினார். அந்த நாடகத்தில் தர்மராக கதாப் பாத்திரம் ஏற்று நடித்து ஊராரின் பேராதரவைப் பெற்றவர் இவளது தந்தை சக்கரியாஸ் தான்” என்று விளக்கமளித்தது மட்டுமல்ல அதன் பின்பு என்னைக் காணும் போ தெல்லாம் “சட்டம்பியார்” என அழைக்க ஆரம்பித்தார்.

இவற்றுடன் எனது பல்துறை ஆளுமையை வளர்த்தவர்கள் எமது திருகோணமலை புனித மரியாள் தேவாலயப் பங்கில் கடமையாற்றிய காலம் சென்ற சந்திரா பெர்ணன்டோ, இவர் ‘மரியாயின் சேனை’ என அழைக்கப்படும் சபையின் வழிநடத்தல் போஷகராக இருந்தவர். நான் அதன் செயலாளராக செயற்பட்டு நத்தார், புதுவருட காலங்களில் நிகழ்ச்சிகளை நடத்தினோம்.

அதேபோன்று இளைஞர் இளம் யுவதிகள் கழகத்தின் தலைவியாகச் செயற்பட்டு பல போட்டிகளிலும் வெற்றி பெற்றோம், அதனால் பல பெரியார்களின் ஆசீரும் ஊக்குவிப்பும் கிட்டியது, பின்பு, யாழ். பல்கலைக்கழகத்தில் வணிகமாணிப் பட்டப் படிப்பிற்காக தெரிவு செய்யப்பட்டேன்.

என்னை எப்படியோ இனங்கண்ட சிரேஸ்ட மாணவர்கள், எம்மை வரவேற்கும் வைபவத்தின் போது என்னை மேடைக்கழைத்தார்கள். மேடையை நோக்கி நடக்கிறேன், “முன்னபின்ன என்னை தெரியாத இவர்கள் ஏன் என்னை மேடைக்கழைக்கிறார்கள்? என்ற கேள்வியுடன் மேடையை அடைந்ததும், “நீங்கள் நியூமொறலஜீ எக்ஸ்பேட், இப்போது நீங்கள் எமக்காக சுந்தராம்பாள் போன்று பாடுங்கள்” என்றார்கள், நான் சற்று வியந்துபோனேன்.

மண்டபம் நிறைய இளைஞரும், இளம்யுவதிகளும் சம்பாசனையில் தம்மை மறந்து ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள், அப்போதய காலம் பொப்பிசைக்காலம், சின்னமாமியே, கள்ளுக்கடை பக்கம் போகாதே” இவ்வாறான பாடல்களை ரசிக்கும் காலம், கர்நாடக இசையை இவர்கள் எவ்வளவு தூரம் ரசிப்பார்கள்? என்ற வினாவுடன் கே.பி.சுந்தராம்பாளின் குரலில் பாட ஆரம்பிக்கிறேன்.

“ஒருவனுக்கு ஒருத்தி என்று

உயிர் மூச்சுள்ளடக்கி

உயிர் வாழ்தல் அறன்

எனப் பட்டதே இல்வாழ்க்கை

அதுவும் பிறன் பழிப்பதில்லாயில்

நன்று எனும் திருக்குறளை

மறவாதே திசை தவறிப் போகாதே”

என்ற விருத்தத்தை இழுத்துப் பாடியதும் மண்டபம் நிறைந்த அமைதியைத் தொடர்ந்து பலத்த கரகோசம் என்னை ஊக்குவிக்க

வாழ்க்கை என்னும் ஓடம்

வழங்குகின்ற பாடம் - என்று எனது பாடல் கே.பி சுந்தராம்பாள் குரலில் ஓங்கி ஒலித்தது. அன்றில் இருந்து பல்கலைக்கழக சகல விழாக்களிலும் பாடவைத்தார்கள். சிலவேளைகளில் மீளவும் மேடை ஏற்றிப் பாடச் சொல்வார்கள் அங்கு நான் கல்விக்கான பட்டத்தைப் பெறு முன்பே “ஈழத்து சுந்தராம்பாள்” என்று பட்டமும் சூட்டிவிட்டார்கள்.

கல்வி பயிலும் காலத்திலேயே “தொண்டன்” என்ற சஞ்சிகைக்கு கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வந்துள்ளேன். ஒருநாள் தனது சகோதரியைக் காண யாழ். பல்கலைக்கழகத்திற்கு வண.சகோதரர் கிறேசியன் மட்டக்களப்பில் இருந்து வருகை தந்தபோது அவரது சகோதரி உட்பட பல மாணவர்கள் எனக்கு எண் சோதிடத்திலுள்ள பாண்டித்தியம் பற்றி விமர்சித்தபோது அவர் என்னை நேரடியாகச் சந்தித்து “நீங்கள் விளைவு என்றொரு விடயத்தை ஆய்வுசெய்து மாணவர்களுக்கு கூறும் சோதிடம் மிக மிக சரியாகவுள்ளதாம் அதை நீங்கள் எழுதி எடுத்துக் கொண்டு மட்டக்களப்பில் அமைந்துள்ள எமது அச்சக நிலையத்திற்கு வாருங்கள், நாம் அச்சிட்டுத் தருகிறோம். அதற்கு இங்கு பெரும் வரவேற்புண்டு, புத்தகங்களை விற்க விற்க பணத்தை அனுப்புங்கள் என்றார்” பிறகு சகோ. கிறேசியனுடைய ஊக்குவிப்பால் எனது கன்னி வெளியீடான “எண் சோதிட ஜோதியை” யாழ். பல்கலைக்கழகத்தில் 1983இல் பேராசிரியர் சு. வித்தியானந்தன் தலைமையில் வெளியிட்டேன் முதற் பதிப்பில் 2000 நூல்கள் விற்பனையாயிற்று. பின்பு 1983லேயே “வாழ்க்கையை வளமாக்க வழி என்ன” என்ற நூலையும் வெளியிட்டேன் இது யாழ். மக்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுத் தந்தது. அநேக பெரியார்களின் அறிமுகமும் ஏற்பட்டது. சகோ. கிறேசியனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

பின்பு பல்கலைக்கழகத்தை விட்டு வெளியானதும், ஆசிரியர் தொழில் கிடைத்தது. மாணவர்களை ஊக்குவித்து, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, விவாதப் போட்டி, கவிதைப் போட்டி, இலக்கிய நாடகப் போட்டிகளில் தேசிய மட்டத்தில் பல விருதுகளையும் ஈட்டி கொடுத்துள்ளேன்.

இலங்கையில் முதல் முதலில் எழுதப்பட்ட “அசன்பேயின் சரிதம்” என்ற நாடகத்தை பழக்கி ஒப்பனை செய்து, மேடை ஏற்றி தேசிய மட்டத்தில் 3ஆம் இடம் கிடைத்தது. இது ஒரு இஸ்லாமிய கதை என்பது குறிப்பிடத்தக்கது. சிலாபத்தில் சுதர்சண மண்டபத்தில் “உன்னையே நீ அறிவாய்” என்ற நாடகத்தை பல தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி 45 நிமிட நாடகம் இளைஞர் இளம் யுவதிகளுக்குப் பழக்கப்பட்டது. இது ஒரு ‘டிக்கட்ஷொ’ நல்ல வசூலை ஈட்டியது இப்பணத் தொகையை மீன்பிடிக்கிராமத்தில் வாழும் வசதி அற்ற மக்களுக்கு கூரை வேய்ந்து கொடுக்க இளைஞர்கள் பயன்படுத்தினார்கள்.

நானும் நடித்துள்ளேன் “சிரிசிரிசிரி” என்ற நாடகத்தில் முக்கியப் பாத்திரம் ஏற்று நடித்து எல்லோரையும் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்துள்ளேன். இது ஒரு திடீர் நாடகம், ஒரு மணித்தியாலத்தில் தயாரிக்கப்பட்டது.

நான் பழக்கி அரங்கேற்றி புகழ்பெற்ற நாடகங்கள் அவற்றிற் சில அமராவதி அம்பிகாபதி நாடகம்,

தணியாத தாகம்

திரெளபதி சபதம்

அசன்பேயின் சரிதம்

உன்னையே நீ அறிவாய்

திசைமாறிய பயணங்கள்,

போதையே நீ போ

தாளலய நாடகங்களும் பல மேடை ஏற்றியுள்ளேன்

ஆசிரியர் தின விழாவில் தாளலய நாடகத்தில் நானும் பங்குபற்றி நடித்துள்ளேன்.

வில்லுப் பாட்டுக்கள் அநேகம் அரங்கேற்றி மாணவர்களுக்கும் பலபரிசில்களை ஈட்டிக் கொடுத்துள்ளேன்.

நல்லூர் முருகன் கோவிலில் நானே குருவாக இருந்து “பட்டிணத்தடிகளாரின் சரிதம்” என்ற தலைப்பில் வில்லுப் பாட்டினை உயர் வகுப்பு மாணவிகளுடன் அரங்கேற்றி பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டோம்.

விவாதப் போட்டிகளில் மாணவர்களது திறமைகளை வெளிக்கொண்டுவந்து பரிசுகளைப் பெற்றுக் கொடுத்தமை சில நினைவுகளில் நிழலாடுகிறது.

போரா? சமாதானமா?

குடிகுடியை கெடுக்கும் / கெடுக்காது என்ற போட்டியில், “கெடுக்காது” என்ற தலைப்பை நிலைநாட்டி வெற்றி பெற்றமை

பெண்களுக்கு கல்வி அவசியம் / அவசியமில்லை அவசியமில்லை என்பதை நிலைநாட்டியது இவ்வாறு பல விவாதப் போட்டிகள்.

2013 மகளிர் தினத்தில் நான் கலந்து கொண்ட விவாத அரங்கின் தலைப்பு திருகோணமலையில் இடம் பெற்றது. மேலும் கோலங்கள் விதவிதமாகப் போடுவேன். பல்வேறு விதமான நடனங்களை விழாக்களின் போது மாணவர்களுக்குப் பழக்கி அரங்கேற்றியும் உள்ளேன்.

சிறந்த மேடைப் பேச்சாளர், அறிவிப்பாளரும் என்ற பெருமையையும் பெற்றுள்ளேன்.

“கவின்கவி” - “உளி” போன்ற நூல்களை வெளியிட்டுள்ளேன்.

வானொலிகளுக்கும் அதிகம் எழுதி உள்ளேன். பல பாடல் நிகழ்ச்சிகளையும் வழங்கி உள்ளேன். இந்துக் கோவில்களிலும் பாடியுள்ளேன். 100இற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதி உள்ளேன் இவை அனைத்தும் இறைவன் தந்த கொடைகள். பல்வேறு விருதுகளை ஈட்டிய எனக்கு 2013 - 12-15 கலாபூஷணம் விருதும் கிடைத்தது.

எல்லாப் புகழும் இறைவனுக்கே


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]