விஜய வருடம் தை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. அவ்வல் பிறை 24
SUNDAY JANUARY 26 2014

Print

 
மருத்துவ பரிசோதனைக்காக கர்ப்பிணித்தாய்மாரை லொறியில் ஏற்றிச்செல்ல முயற்சி

மருத்துவ பரிசோதனைக்காக கர்ப்பிணித்தாய்மாரை லொறியில் ஏற்றிச்செல்ல முயற்சி

உடரதல்ல தோட்ட மக்கள் அதிருப்தி

உடரதல்ல தோட்டத்திலிருந்து சுமார் 8 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள நானுஓயா நகரத்திற்கு 28 கர்ப்பிணித் தாய்மாரை மருத்துவ பரிசோதனைக் காக லொறியில் ஏற்றிச்செல்ல முற்பட்ட வேளையில் அதற்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டது.

கடந்த செவ்வாயன்று (21) நடைபெற்ற சம்பவத்தால் கர்ப்பிணித்தாய்மார் மருத்துவ பரிசோதனைக்கு செல்லமுடியாத நிலையேற்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நானுஓயா உடரதல்ல தோட்டத்தைச் சேர்ந்த 28 கர்ப்பிணித்தாய்மாருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரியை அன்றைய தினம் உடரதல்ல தோட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் அந்த தோட்டப்பாதை குண்டும் குழியுமாக இருப்பதால் அப்பாதையில் பயணிக்க முடியாது என அவர் வரமறுத்து விட்டதாகவும் மாற்று ஏற்பாடாக தோட்ட லொறியில் அனுப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப் படுகிறது.

இச் சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த நுவ ரெலியா மாவட்ட சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் கமகே, பத்தாயிரம் பேர் சனத்தொகையை உள்ளடக்கிய ஒரு பகுதிக்கு மருத்துவ நிலையமொன்று அமைக்கப்படுகிறது. உடரதல்ல பகுதியைப் பொறுத்தவரையில் இரண்டாயிரம் பேர் வரை இருக்கின்றனர். எனவே இவர்களுக்கென தனியான மருத்துவ நிலையமொன்றை அமைக்க முடியாது.

மேலும் குறித்த தினத்தன்று காலையில்தான் தோட்ட நிர்வாகம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தம்மிடம் வாகன வசதி இல்லையெனக்கூறி அங்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். திடீரென வருமாறு அழைப்பு விடுத்தால் எம்மால் உடனடியாக அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது. இது தோட்ட நிர்வாகத்தின் தவறாகும். அவர்கள் எவ் விதமான திட்டமிடல் இன்றி செயற்படுகின்றனர். வாகனம் பழுதடைந்தால் வேறு ஒரு வாகனத்தை வாடகைக்கு அமர்த்தியிருக்கலாம். அல்லது உடரதல்ல தோட்டத்திற்கு அருகிலுள்ள ரதல்ல தோட்ட சுகாதார பிரிவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்திருக்கலாம்.

தோட்ட நிர்வாகம் கூறுவதுபோல் 28 கர்ப்பிணித் தாய்மார் இருக்கவில்லை. சனத்தொகையின்படி ஜனவரி மாதம் வரை 1545 பேர் வரை பதிவு செய்துள்ளனர். இவர்களில் கர்ப்பிணித்தாய்மார் 6 பேர் என பதிவு செய்யப்பட்டுள்ளது. 19 பேர் ஊசி மருந்தை ஏற்றிக்கொள்வதற்காக பதிவு செய்துள்ளனர். இவர்களை அருகிலுள்ள ரதல்ல அல்லது கிளாசோ தோட்டங்களில் நடைபெறும் மருத்துவ முகாம்களுக்கு அனுப்பி வைக்க முடியும். இவர்கள் நுவரெலியா வைத்திய சாலைக்கே வர வேண்டும் என்ற அவசியமில்லை என்றார் வைத்தியர் கமகே.

இது தொடர்பாக தோட்ட நிர்வாகத்திடம் கேட்டபோது உடரதல்ல தோட்டத்திலிருந்து நானுஓயா நகருக்குச் செல்லும் சுமார் 8 கிலோ மீற்றர் தூரமான பாதை மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றது. இதனை சீரமைத்து தருமாறு பல தடவைகள் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் உரிய நடவடிக் கைகளை எடுக்க எவரும் முன்வரவில்லை. தோட்ட நிர்வாகத்திடம் வாகன வசதிகள் இல்லை. நாம் தனியார் வாகனங்களை வாடகைக்கு அமர்த்தியே கர்ப்பிணித் தாய்மாரை வைத்திய பரிசோதனைக்கு அழைத்துச் செல்கிறோம். அன்றைய தினம் குறித்த வாகனம் பழுதடைந்திருந்ததால் லொறியில் அழைத்துச்செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தோம்.

குறித்த வாகனத்தை தவிர வேறு வாகன சாரதிகள் அவ்வீதியில் தமது வாகனத்தை செலுத்த மறுக் கிறார்கள்.

எனவே உடனடியாக பாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமானால் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என தோட்ட நிர்வாகம் தெரிவித்தது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]