விஜய வருடம் கார்த்திகை மாதம் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஸபர் பிறை 11
SUNDAY DECEMBER 15 2013

Print

 
தமிழ் மக்களுக்கு கடந்த காலத்தில் இழைத்த துன்புறுத்தல்களை மறந்துவிட்டு பிரிட்டி~; பிரதமர் இன்று தமிழர்களுக்காக முதலைக்கண்ணீர் வடிக்கிறார்

தமிழ் மக்களுக்கு கடந்த காலத்தில் இழைத்த துன்புறுத்தல்களை மறந்துவிட்டு பிரிட்டி~; பிரதமர் இன்று தமிழர்களுக்காக முதலைக்கண்ணீர் வடிக்கிறார்

இந்தியத் தமிழர்களை 1827ல் அடிமைகளாக இலங்கைக்கு கொண்டு வந்து அவர்களின் மனித உரிமைகளை மீறி, எங்கள் நாட்டின் செல்வத்தை சூறையாடிய பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு இப்போது இலங்கை மனித உரிமை மீறிவிட்டது என்று குற்றம் காண்பதற்கு என்ன உரிமை இருக்கிறது?

பிரிட்டிஷார் இலங்கையை ஆட்சி செய்த காலகட்டத்தில் இந்தியாவில் இருந்து பிரிட்டிஷ் அரசாங்கத்தினால் பலவந்தமாக தற்போது மலையகத் தமிழர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு பலவந்தமாக கொண்டுவரப்பட்டதாக சரித்திர நூலாசிரியரான பேராசிரியர் பேற்றன் பஸ்தியான்பிள்ளை கூறுகிறார்.

தமிழ்நாட்டு நகரங்களான திருநெல்வேலி, திருச்சி, மதுரை மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இருந்து அன்றைய பிரிட்டிஷ் ஆளுநர் சேர் எட்வட் பான்ஸ் இந்த அப்பாவி இந்தியர்களை 1827ல் அடிமைகளைப் போன்று கப்பல் மூலம் கொண்டு வந்து மன்னார் துறைமுகத்தில் இறக்கிவிட்டதாக பேராசிரியர் பேற்றன் பஸ்தியான்பிள்ளை கூறுகிறார். இலங்கையில் இருந்த பிரபல தோட்ட துரையான ஜோர்ஜ் பேர்ட் இலங்கையின் தோட்டத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு ஆட்கள் பற்றாக்குறை தடையாக இருக்கிறது. தென்னிந்தியாவில் உள்ள ஏழைத் தமிழர்களை அடிமைகளைப் போன்று, அவர்களின் உரிமைகளை மறுத்து இங்கு அழைத்து வாருங்கள் என்று விடுத்த வேண்டுகோளின் அடிப்படையிலேயே ஆளுநர் சேர் எட்வட் பான்ஸ் இந்த தமிழர்களை கால்நடைகளைப் போன்று எவ்வித வசதிகளையும் செய்து கொடுக்காமல் மாற்று உடையின்றி, கைக்குழந்தைகளுடன் இலங்கைக்கு அழைத்து வந்தார்.

மன்னார் துறைமுகத்தில் இறக்கிவிடப்பட்ட இவர்கள் கால்நடையாகவே குருநாகலைக்கும் மாத்தளை நகரில் உள்ள முகாம்களுக்கும் அழைத்து வரப்பட்டனர். அன்று இந்தப் பிரதேசங்கள் பின்தங்கிய யானைக்காடுகளாகவும், கொடிய மிருகங்கள் உள்ள காடுகளாகவும் இருந்தன. இந்த காட்டுப் பாதையிலேயே உண்ண உணவின்றி, குடிக்க நீரின்றி அழைத்து வரப்பட்டனர். முகாம்களில் அப்பாவி இந்தியத் தமிழர்களுக்கு சின்னம்மை, கொலரா, நெருப்புக் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டது. அவர்கள் வேறு ஏதாவது தொற்று நோய் இருக்கின்றதா என்பதை முகாம்களில் ஒருவார காலம் வைத்து அவதானித்த பின்னரே இந்த மக்களை வேலைத்தளங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

முதலில் கண்டி மாநகரத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் தங்களுக்கு முன்னர் அங்கு பணியாற்றிய கூலித் தொழிலாளர்களைப் போன்று பெருந்தோட்டங்களில் அட்டைகள் மற்றும் விசப்பாம்புகளுக்கு மத்தியில் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த கடும் குளிரில் சுமார் 10 மணித்தியாலங்கள் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

இவ்விதம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சுகாதார வசதிகள், உண்ண உணவின்றி, மற்றும் குடிக்க நீரின்றி முதல் மூன்று மாதங்களில் மரணித்தார்கள். இந்த மக்களே இலங்கையில் தேயிலை, இறப்பர் தோட்டங்களையும் கோப்பி, தென்னந் தோட்டங்களையும் அமைத்தனர். இதன் மூலமே மலையகத்தில் இந்திய வம்சாவளி தமிழர் என்ற மாபெரும் மனித சக்தி காலப்போக்கில் உருவாகியது.

1871ம் ஆண்டிலும் 1881ம் ஆண்டிலும் 1891இலும் 1901இலும் இலங்கையில் சனத்தொகை மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டன. அதுவரையில் இலங்கை வாழ் தமிழர்கள் அனைவரும் ஓரினமாக மதிப்பீடு செய்யப்பட்டனர். ஆயினும் 1911ம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கைத் தமிழர்கள் என்றும் மலையக இந்தியத் தமிழர்கள் என்றும் இரண்டாக இவர்கள் பிரிக்கப்பட்டு தனித்தனியாக அவர்களின் சனத்தொகை மதிப்பீடு செய்யப்பட்டது.

1911ம் ஆண்டில் எடுக்கப்பட்ட சனத்தொகை மதிப்பீட்டின்படி இந்திய மலையகத் தமிழர்கள் மொத்த சனத்தொகையில் 12.9 சதவீதமாகவும் இலங்கைத் தமிழர்கள் 12.8சதவீதமும் இருந்தனர். 1921ல் எடுத்த மதிப்பீட்டில் இது 13.4 சதவீதமாகவும் 11.5 சதவீதமாகவும் உயர்ந்தது.

1931ம் ஆண்டில் எடுக்கப்பட்ட மதிப்பீட்டில் இந்தியத் தமிழர்கள் 15.2 சதவீதமாகவும் இலங்கைத் தமிழர்கள் 11.3 சதவீதமாகவும் இருந்தனர். 1946ல் இந்தியத் தமிழர்கள் 11.7 சதவீதமாகவும் இலங்கைத் தமிழர்கள் 11 சதவீதமாகவும் இருந்தனர். 1953ல் இந்தியத் தமிழர்கள் 12 சதவீதமாகவும் இலங்கைத் தமிழர்கள் 10.9 சதவீதமாகவும் இருந்தனர்.

1963ல் எடுத்த மதிப்பீட்டில் இந்தியத் தமிழர்கள் 10.6 சதவீதமாகவும் இலங்கைத் தமிழர்கள் 11 சதவீதமாகவும் இருந்தனர். 1971ம் ஆண்டில் இடம்பெற்ற மதிப்பீட்டில் இந்தியத் தமிழர்கள் 11.1 சதவீதமாகவும் இலங்கைத் தமிழர்கள் 12.2 சதவீதமாகவும் இருந்தனர்.

இந்தியத் தமிழர்களும், மலாயர்களும் இலங்கைக்கு ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்திலும், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும் இங்கு அழைத்து வரப்பட்டனர். அன்று சிலோன் என்று அழைக்கப்பட்ட இலங்கைக்கு முதலில் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் 1830 முதல் கோப்பித் தோட்டங்களில் உழைத்து அதன் மூலம் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு கோடான கோடி ஸ்ரேலிங் பவுன்ஸ் வருமானமாக ஈட்டிக் கொடுத்தார்கள். அதையடுத்து கோப்பித் தோட்டங்களுக்கு பதிலாக ஏற்படுத்தப்பட்ட தேயிலைத் தோட்டங்களில் அவர்கள் பணியாற்றினார்கள். அவர்கள் 1850ம் ஆண்டளவில் பிரிட்டிஷ் அரசாங்கம் நிர்மாணித்த மலையக பாதைகளையும் ரயில் பாதைகளை அமைப்பதிலும் தங்களின் பெரும் பங்களிப்பை அளித்தார்கள்.

19ம் நூற்றாண்டில் சுமார் 40ஆயிரம் இந்தியத் தமிழ் கூலித் தொழிலாளர்கள் அடிமைகளைப் போல் இலங்கைக்கு பலவந்தமாக அழைத்து வரப்பட்டனர். அதையடுத்து மேலும் பலர் இலங்கைக்கு இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்டனர். 1950ம் ஆண்டளவில் முதல் தடவையாக இந்திய தமிழர்கள் கூலித் தொழிலாளர்களாக மலையகத்திற்கு அழைத்து வரப்படுவதில்லை என்று அறிவிக்கப்பட்டது.

1950ல் இந்திய அரசாங்கம் தங்கள் நாட்டுப் பிரஜைகளை இலங்கைக்கு கூலித் தொழிலாளர்களாக அனுப்ப முடியாது என்று அறிவித்ததை அடுத்து இந்தியத் தமிழர்களின் வருகை இந்தியாவில் சட்டபூர்வமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இலங்கையில் கூலித்தொழில் செய்வதற்கு ஆட்கள் இல்லையா? என்று அன்றைய பிரிட்டிஷ் ஆளுநரிடம் கேட்ட போது அவர் சிங்களத் தொழிலாளர்கள் சோம்பேறிகள். அவர்களை கொண்டு வேலை வாங்க முடியாது. இந்தியத் தமிழர்களை கால்நடைகளைப் போன்று அடித்தும், மிரட்டியும் வேலை வாங்கலாம். அதனால் தான் நாம் இந்திய கூலித் தொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து வருகிறோம் என்று பதிலளித்துள்ளார்.

இதற்கு மறுப்புத் தெரிவிக்கும் சிங்களவர்கள், நாம் கடும் உழைப்பாளிகள். நாம் தோட்டங்களில் வேலை செய்வதற்கு தயாராக இருக்கிறோம். ஆனால், எங்களுக்கு தோட்டங்களில் வேலை செய்வதற்கான சம்பளம் குறைவாக இருப்பதுடன் வசதிகளும் குறைவாக இருக்கிறது என்று பதில் கொடுத்துள்ளார்கள். இந்தியத் தமிழர்கள் ஏழ்மை நிலையில் இருப்பதுடன் அவர்களுக்கு உண்பதற்கு கூட பணமில்லை. ஆகவே, அவர்களை இலகுவில் இலங்கைக்கு ஏமாற்றி அழைத்து வந்து மிருகங்களைப் போன்று வேலை வாங்கலாம் என்று பிரிட்டிஷ் அரசாங்க அதிகாரிகள் கருதினார்கள். அதனால் தான் தமிழ்நாட்டில் இருந்து அதிகமானோரை இங்கு அழைத்து வந்தார்கள்.

இலங்கைக்கு அழைத்து வருவதற்கு முன்னர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்த தமிழர்களுக்கு சொந்தமான இந்தியாவில் உள்ள நிலத்தை சொற்ப காசைக் கொடுத்து தங்கள் பெயரில் மாற்றியிருக்கிறார்கள்.

இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இவர்களுக்கு ஆரம்பத்தில் சம்பளம் கொடுக்கப்படவில்லை. அவர்களுக்கு இரண்டு அறை, வசதி குறைவான லயன் வீடுகளே கொடுக்கப்பட்டன. வீடுகளுக்கு மின்சார இணைப்பும் கொடுக்கப்படவில்லை. அவர்களுக்கு உணவை காசு கொடுத்து வாங்குவதற்கு கையில் காசு இல்லாத காரணத்தினால் அன்றைய தோட்ட நிர்வாகம் ஒவ்வொரு குடும்பத்திற்கு ஒரு வாரத்திற்கு குறிப்பிட்ட தொகை கோதுமை மாவையும், இரண்டு தேங்காய்களையும் அரை இறாத்தல் சீனியையும், தேயிலையையும் பெற்றுக் கொடுத்தது.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இதுமட்டுமன்றி இந்தியாவின் தமிழ்நாட்டு தமிழர்களை துன்புறுத்துவதில் எல்லை கடந்துள்ளார்கள். இவர்கள் மொரிசியஸ், கிழக்கு ஆபிரிக்கா, தென்னாபிரிக்கா, பீஜீங் போன்ற நாடுகளுக்கும் இந்தியத் தமிழர்களை அடிமைகளாக அனுப்பி வைத்து அவர்கள் மூலம் கொள்ளை இலாபமீட்டினார்கள். இந்த விபரங்களை திரு. டீ. வெசும்பெரும, 1880 முதல் 1910ம் ஆண்டுகளுக்கு இடையிலான இந்திய பெருந் தோட்டத் தொழிலாளர்களின் வருகை என்ற நூலில் விளக்கிக் கூறியிருக்கிறார்.

இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இந்தியத் தமிழர்கள் பெரும்பாலும் கொலரா, பெரியம்மை, எலிக்காய்ச்சல் போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். இவர்களின் வருகையுடன் தான் இலங்கையில் இந்நோய் பரவ ஆரம்பித்தது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வெளித்தோற்றத்திற்கு கனவான்களைப் போன்று இருந்தாலும் அவர்களிடம் கனவான்களுக்குரிய எந்த நற்குணங்களும் இருக்கவில்லை.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இலங்கை, இந்தியா போன்ற தாங்கள் ஆக்கிரமித்த நாடுகளில் வளங்களை சுரண்டி பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை செல்வம்மிக்க நாடாக மாற்றும் எண்ணத்துடன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்து வருவதற்காக இந்த அப்பாவி கூலித் தொழிலாளர்களுக்காக செலவிட்ட போக்குவரத்து செலவையும் அவர்களுக்கு உண்பதற்கு அளித்த உணவுக்கான செலவையும் அவர்கள் தோட்டங்களில் வேலை செய்து பெற்ற வருமானத்தில் இருந்து கழித்த மனிதாபிமானமற்ற கொடுமைக்காரர்களாக இருந்தார்கள். பெருந்தோட்டங்களில் பணிபுரியும் இந்த கூலித் தொழிலாளர்களுக்கு சொற்ப காசு சம்பளமாக கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு வாரா வாரம் குடும்பத்தின் அளவுக்கு ஏற்ப கோதுமை மாவையும், சீனியையும், தேயிலையையும் கொடுத்த தோட்ட நிர்வாகத்தினர் அதற்கான பணத்தை கூலித் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து கழித்துவிடுவார்கள். ஆரம்ப காலத்தில் கூலித் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கென தோட்டங்களில் பாடசாலைகள் அமைக்கப்ப டவில்லை. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் கூலித் தொழிலாளர்கள் பலதரப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். பறையர், பல்லர், கள்ளர் மற்றும் சக்கிலியர், முதலியார்மார், கவுண்டர், முத்துராஜர் போன்றவர்கள் இருந்தார்கள். (வளரும்)


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]