விஜய வருடம் கார்த்திகை மாதம் 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஸபர் பிறை 04
SUNDAY DECEMBER 08 2013

Print

 
பல்வகைச் சமூகத்தையும் கலையாற்றலையும் முதன்மைப்படுத்திய பாரம்பரியக் கலைகளின் திருவிழா

பல்வகைச் சமூகத்தையும் கலையாற்றலையும் முதன்மைப்படுத்திய பாரம்பரியக் கலைகளின் திருவிழா

உலகமயமாக்கம் என்ற எண்ணக்கரு உதயமானாலும் இன்று பண்பாட்டுத் தனித்துவமானது எல்லா நாடுகளிலும் எல்லா இனத்தவர்களிடையேயும் பரவலாகப் பேணப்பட்டு வருவதை காணக்கூடியதாகவுள்ளது. இன்று சினிமா, தொலைக்காட்சி நாடகம் என்பன வீட்டுக்குள் உள் நுழைந்திருந்தாலும் பாரம்பரியக் கலையை நுகர்வதற்காக இன்று மக்கள் வீட்டைவீட்டு நிகழிடத்திற்கு வந்து தம் மனதை ஆற்றுப்படுத்திக் கொள்கின்றனர். இன்றைய சூழலில் இணையத்தின் வளர்ச்சியிருந்தாலும் சமூக ஒருங்கிணைவை பாரம்பரியக் கலைகளே ஒருங்கிணைக்கின்றன.

பாரம்பரியக் கலைகளாவன மக்களினின்றே வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இன்றைய சமூகத்தினர் பாரம்பரியக் கலை மீது அதீத ஈடுபாட்டுடன் ஈடுபடுவதுடன் அதை ஆற்றுபவராகவு முள்ளனர். இன்றைய இளஞ்சந்ததியினரை ஈர்த்தெடுக்கும் தன்மையிலேயே பாரம்பரியக் கலைகள் உள்ளன என்றால் மிகையாகாது. அண்மையில் “இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமானது” திருகோணமலை சிவானந்த தபோவனத்தில் (உப்புவெளி வீதி) “மடை” எனும் கருப்பொருளில் பாரம்பரியக் கலைவிழா எனும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. “இன்று உலகம் முழுவதும் பரவலாக பன்மைத்துவம் பற்றி காத்திரமான உரையாடல்கள் நடைபெற்றுக் கொண்டு வரும் வேளையில், வேர்களதும் மனங்களதும் கலைகளினதும் கொண்டாட்டங்கள் மனித சமூகத்தை ஆற்றுப்படுத்து வனவாக அமைந்தன என்றால் மிகையாகாது”

பாரம்பரியக் கலைகள் தொழிலாகவன்றி, பெருமிதத்துடன் பழம் பெருமைகளை பேணுவதாகவன்றியும், தமிழர்களின் வரலாற்றுச் சுவடாக அன்றியும் சமூகத்தோடு பின்னிப் பிணைந்த நிலையிலேயே ஊடறுத்துச் செல்வதாக அமைகின்றது. எந்தவொரு கலைஞனும் தன் கலையை வியாபார நோக்கமாகக் கொள்வதில்லை என்பதோடு தான், தன் கலையை நன்கு பேணுகின்றேன் என்று ஏனையவர்களைப் போல (கற்றவர்) கூறுவதில்லை. பாரம்பரியக் கலைஞனானவன் தன்னுயிரைப் போலவே தன் கலையையும் தூர நோக்கோடு பார்க்கின்றான்.

கலைஞர்களுக்கும் கலைகளுக்கும் மரணமில்லை என்றே கூறலாம். மனிதனைப் போன்று கலைகள் குலம், கோத்திரம், மதம், இனம், வர்க்கம் பார்ப்பது கிடையாது. இத்தன்மையினை பாரம்பரியக் கலைகளின் திருவிழாவான “மடை” உறுதிப்படுத்திக் காட்டியது. இந்நிகழ்வில் தமிழ், முஸ்லிம், பறங்கியர் சமூக கலைஞர்கள் தங்கள் ஆற்றுகைகளை ஆற்றியதோடு ஏனைய ஆற்றுகைக் கலைஞருடனும் இணைந்து செயற்பட்டனர். பன்மைத்தன்மையை இங்குதான் காண முடிந்தது எனலாம். சுய சிந்தனைகளுக்கும் சுய தீர்மானங்களுக்கும் இடம் மறுக்கப்பட்ட அதி நவீன வாழ்க்கைப் போக்கின் கட்டறுத்த வேகமே அபிவிருத்தி என மயக்கம் கொண்டிருக்கும். சூழலின் மயக்க நீக்கிகளாக பாரம்பரியக் கலைகளின் பயில்வுகள் காணப்படுகின்றமை விளங்கிக் கொள்ளப்பட வேண்டியது. இத்தகைய நிலைமைகளையும் நிலைப்பாடுகளையும் அறிவு பூர்வமாகவும் ஆக்கபூர்வமாகவும் முன்னெடுக்கப்படுவதன் முக்கியத்துவம் மிக்க நிகழ்ச்சியாக “மடை” பாரம்பரியக் கலைகளின் திருவிழாவும் பாரம்பரிய கலைகளின் கொண்டாட்டமும் அமைந்திருந்தது. மடை எனும் பாரம்பரியக் கலைகளின் திருவிழாவில் ஆற்றுகைகள், காட்சிப்படுத்தல்கள், கலந்து ரையாடல்கள் என யாவும் வெகு விமர்சையாக நடைபெற்றன. முதலாம் நாள் மாலை நிகழ்வானது திருகோணமலை உட்துறைமுக வீதியிலுள்ள இந்து கலாசார மண்டப வளாகத்தில் மட்டக்களப்பு சந்திவெளி கலைஞர்களின் மகிடிக் கூத்து ஆற்றுகையும், மலையகக் கலைஞர்களின் காமன் கூத்து ஆற்றுகையும் பெரும் திரளான மக்கள் முன்னிலையில் நடந்தேறியது.

ஓசி மைதானத்தில் மாலை நேர ஆற்றுகைகளாக, மட்டக்களப்பு சமூகத்தின் வரலாற்றினை, மக்களின் அறிவியல் மரபினை வெளிப்படுத்தும் நிகழ்வாக மகிடிக்கூத்து அமைந்திருந்ததோடு மலையக மக்களின் பாரம்பரியக் கலையான காமன் கூத்தும் மட்டக்களப்பு பறங்கியர் சமூகத்தின் மத்தியிலுள்ள கபறிஞ்சா இசை நடன நிகழ்வும் மாலை நேர ஆற்றுகையாக அமைந்திருந்தது. அதாவது ஒல்லாந்தர் காலத்திற்குப் பின்னர் மட்டக்களப்பு பறங்கியர் சமூகத்தின் அனைத்து மகிழ்வான நிகழ்வுகளிலும் கபறிஞ்சா நடன இசை நிகழ்வானது நடைபெறுவது வழக்கமாகவுள்ளது. முஸ்லிம்களின் பாரம்பரிய கலாசார நிகழ்வுகளாக பக்கீர்பைத், வாள்வீச்சு, களிகம்பு என்பனவும் அமைந்ததோடு இவ்விரு நாட்களும் மட்டக்களப்பு, வன்னி, யாழ்ப்பாணக் கலைஞர்களின் கறைமேளக்கூத்து ஆற்றுகையும் நடந்தேறியது.

வன்னிப் பிரதேசக் கலைஞர்களின் கோவலன் கூத்து ஆற்றுகையும் யாழ்ப்பாணக் கலைஞர்களின் பப்பிரவாகன் வடமோடிக் கூத்தும் வெகு விமர்சையாக நடந்தேறி மக்களை ஆற்றுப்ப டுத்துவதாக அமைந்தது.

தபோவன மைதானத்தில் கூத்து ஆற்றுகைகள் நிகழ தபோவனம் சடங்குப் பந்தல் அருகில் உடப்புக் கலைஞர்களின் நிகழ்வுகளும் மன்னார் மாலை என்பனவும் நடந்தேறின. இதேபோன்று துரோணர் யுத்தம், காத்தவராயன் கூத்து எனும் பாரம்பரிய ஆற்றுகைகளும் நடந்ததோடு தபோவன சடங்குப் பந்தல் அருகில் மன்னார் கலைஞர்களின் கலை நிகழ்வுகளும் முல்லைத்தீவுக் கலைஞர்களின் சிலம்புப் பாடல்களும் ஆற்றுகை செய்யப்பட்டன.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மடை எனும் பாரம்பரியக் கலைவிழாவானது பாரம்பரியக் கலைகளினதும், கலைஞர்களினதும் கொண்டாட்டமாகவும் அமைந்து பன்மைத்தன்மையை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.

சுருங்கக் கூறின் “மடை” எனும் எண்ணக்கருவானது இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் கலாசாரச் சங்கமமாக அமைந்து அதாவது வேடர் சமூகம், அருந்ததியர் சமூகம், இஸ்லாமியர் சமூகம், குறவர் சமூகம், பறங்கியர் சமூகம் என பன்மைத்தன்மையான நம் பண்பாட்டினை உணரவும் ஒருவரையொருவர் கெளரவிக்கவும் தங்கள் அனுபவங்களை பரிமாறவும் சேர்ந்து மகிழும் வெளியாகவும் அமைந்துள்ளது. உலகின் பன்மைப் பண்பாட்டுச் சூழலையும் பன்னாட்டு நிறுவன மைய உலகமயமாக்கம் விழுங்கி வருகின்றது. இத்தகைய சூழலின் எதிர்ப்பு சக்திகளாக மக்கள் மத்தியில் இருந்து வருபவை பாரம்பரியக் கலைகளையேயாகும்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]