விஜய வருடம் ஆவணி மாதம் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 துல்கஃதா பிறை 09
SUNDAY SEPTEMBER 15 2013

Print

 
இறைநேசர் மஹ்தூமி (ரலி)யின் 151வது வருட ஞாபகார்த்த மஜ் லிஸ்

இறைநேசர் மஹ்தூமி (ரலி)யின் 151வது வருட ஞாபகார்த்த மஜ் லிஸ்

பேருவளைக்கு சுமார் இரண்டரை கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்திருப்பது முஸ்லிம்கள் செறிந்து வாழும் தர்கா நகர் ஆகும். பிரசித்தி பெற்ற தர்கா ஒன்று இங்கு அமைந்திருப்பதால் இப்பதி இப் பெயர் பெற்றது. நாடெங்கும் ஆன்மீக ஒளிபரப்பி வாழ்ந்து மறைந்துவிட்ட ஒரு மகான் இப்பதியில் சமாதி கொண்டிருப்பதால் இந்த தர்கா மேலும் மணமும், புகழும் பெற்றது. இற்றைக்கு சுமார் இரண்டே கால் நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து மறைந்த சங்கைக்குரிய அஷ்ஷெய்கு ஹஸனிப்னு உதுமானுல் மஹ்தூமி (றலி) சமாதியுற்றிருக்கும் இந்த தர்காவில் அன்னாரினாலேயே ஆரம்பித்து வைக்கப்பட்ட மசாயிகுமார் பெரிய கந்தூரி இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இறைநேசர் ஆலிம் சாஹிப் அப்பா அவர்கள் கி.பி.1785ஆம் ஆண்டு (ஹிஜ்ரி 1200) அஷ்ஷெய்கு உஸ்மான் அல் மஹ்தூமிய்யி அஸ்ஸெய்யிதா பாத்திமா ஸித்தீக்கிய்யா தம்பதியினருக்கு மகவாகப் பிறந்தார்கள்.

நமது மகான் ஹசன் (றழி) தந்தை வழித் தலைமுறையும், தாய் வழித் தலைமுறையும் இஸ்லாமியப் பேரரசின் இரண்டாம் கலீபா அபூபக்கர் ஸித்தீக் (றழி) அவர்களின் குடும்பத்தைச் சென்றடைகிறது. வாலிபம் வந்தபோது நமது இறைநண்பர் ஹஸன் அவர்கள் கல்வி கற்பதற்காக தென் இந்தியாவில் உள்ள காயல் பட்டணத்துக்குச் செல்கிறார்கள். அங்கு ஆன்மீக அறிவு, சமூக அறிவுடன் தொடர்புடைய சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்து அலி ஆலிம் பட்டம் பெற்றுத் தன் தாயகம் வந்து சேர்ந்தார்கள், காயல்பட்டணத்தில் பேராசிரியர் அல்லாமா அஷ்ஷெய்கு அப்துல் காதிர் நெய்னா லெப்பை ஆலிம் அவர்களின் போதனையும், வழிகாட்டலும் அன்னாரின் உயர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்தது.

தாயகம் திரும்பிய அருட்செல்வர் ஆலிம் சாஹிப் அப்பா ஒரு ஆன்மீக குரு என்ற வகையிலும், சமூகத் தலைவர் என்ற முறையிலும் சமூகத்துக்கு ஆற்ற வேண்டிய பணிகளையும், பொறுப்புக்களையும் உணர்ந்தார்கள். இதனால் காடு, மேடுகளைத் தாண்டி இலங்கையின் பல பாகங்களுக்கும் பயணித்து ஆன்மீகத் தொண்டு புரியலானார்கள். சீரழிந்து கிடந்த சமூகத்தை நெறிப்படுத்துவதில் ஆலிம் சாஹிப் அப்பா அவர்கள் மேற்கொண்ட பணி அளப்பரியது; காலத்தால் அழிவுறாதது.

ஸ¤பியாக்களிடம் காணப்பட வேண்டிய அத்தனை அம்சங்களையும் தன்னகத்தே கொண்டிருந்த நம் இறை நேசச் செல்வர் அவர்கள் இலங்கை சோனகர் சமூகத்தில் தோன்றிய முதல் வலியும் முத்தான வலியும், காமிலான வலியும் முத்தான வலியும், காமிலான வலியும் முகம்மிலான வலியும் ஆகிய குதுபுஸ்ஸமான் அஷ்ஷெ ய்கு ஹஸனிப்னு உஸ்மானில் மஹ்தூமிய்யீ (றலி) அவர்கள் மக்கள் உள்ளங்களில் என்றென்றும் வாழ்வார் என்பது திண்ணம்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]