விஜய வருடம் ஆவணி மாதம் 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் பிறை 17
SUNDAY AUGUST 25, 2013

Print

 
ரூஸோவின் தத்துவக் கருத்துக்களும் தற்காலக் கல்வி முறையும்

எண்ணங்கள்

ரூஸோவின் தத்துவக் கருத்துக்களும் தற்காலக் கல்வி முறையும்

தலைசிறந்த இயற்கை வாதியாகவும் சிந்தனைப் புரட்சியாளராகவும் போற்றப்படுகின்ற ஜீன் ஜாக்ஸ் ரூஸோ (1712-1778) ஜெனீவாவில் பிறந்தார். மேலைத்தேய தத்துவவாதிகளில் மிக முக்கியமான ஒருவராகக் கருதப்படும் இவர், தனது தத்துவக் கருத்துக்களை அவருடைய சமூக ஒப்பந்தம், எமிலி ஆகிய நூல்களினூடாக முன்வைத்தார். ரூஸோவின் இயற்பண்புவாதக் கல்விக் கோட்பாடுகளின் சிறப்பியல்புகளை பின்வருமாறு தொகுத்து நோக்கலாம்.

பிள்ளைகள் இயற்கையின் போக்கில் வளர அனுமதிக்கப்பட வேண்டும், அவர்கள் இயற்கையோடு இணைந்து இயற்கையின் நியதிகளின் படி வாழ அனுமதிக்கப்பட வேண்டும் என்றார் ரூஸோ. இதுவே அவரின் நோக்காகவுமிருந்தது. இவர் மனித வாழ்க்கைக்கு பிரதானமானது கல்வியே என்றதோடு வாழ்க்கைக்கு தயாரித்தல் கல்வியன்று வாழ்க்கையே கல்வியாகுமென வலியுறுத்தினார்.

குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதை விட கல்வி பெறுவதற்கான நிலைக்கு அவர்களை ஆயத்தப்படுத்த வேண்டும். அதற்காக பிள்ளைகளிடம் பிரச்சினைகளைக் கூறுங்கள் அவர்களே அதற்கான தீர்வுகளைக் காணட்டும் என்றார். இதற்காக ரூஸோ பிரச்சினையை தீர்க்கும் முறை, விளையாட்டு முறை, அவதானிப்பு ஆராய்ச்சி முறை போன்ற கற்பித்தல் முறைகளைச் சமர்ப்பித்தார்.

நினைவாற்றலை விட சீர்தூக்கிப் பார்த்ததினாலும், ஆராய்ச்சி செய்தலினாலும் கல்வியைப் பெற முடியும் என்பதை அழுத்திக் கூறியதோடு இதற்கான சந்தர்ப்பங்கள் பிள்ளைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவர் மையக் கல்வியின் அவசியத்தை தெளிவுபடுத்தினார். மேலும் கற்பித்தலின்போது கற்றல் சாதனங்களின் பயன்பாட்டின் இன்றியமையாத தன்மையை வலியுறுத்தியதோடு பிள்ளைகளின் விருப்பு வெறுப்பு மற்றும் திறமைக்கு ஏற்றவாறு கல்வி திட்டமிடப்பட வேண்டும் என்றார் ரூசோ.

கற்றலில் புலன்களின் தொழிற்பாட்டை முதன்மைப்படுத்திய ரூசோவின் தத்துவக் கருத்தில் கல்விச் செயற்பாடுகள் அனைத்தும் உளவியல் மயப்படுத்தப்பட்டுள்ளதை காணமுடிகின்றது. இயற்கையே எனது இருதயத்தினதும் ஆன்மாவினதும் வழிகாட்டி என்று கூறிய ரூஸோ பிள்ளைகளின் வயது வளர்ச்சிப் பருவங்களுக்கு ஏற்ப கல்வித்திட்ட மொன்றை வகுத்து கற்பிக்கப்பட வேண்டிய (தயார்படுத்த வேண்டிய) துறைகள் பற்றி விளக்கியுள்ளார். அவை,

01. குழந்தைப் பருவம் (பிறப்பு முதல் 2வயது வரை)

இப்பருவத்தில் புதிய அனுபவங்களைப் பெற பெற்றோர் சந்தர்ப்பம் வழங்க வேண்டும். பெற்றோரின் மிகையான கட்டுப்பாடு பொருத்தமற்றது. இப்பருவத்தில் பின்பற்றல் பிரதான கற்கை ஊடகம் என்பதால் நற் பழக்கங்களுக்காக புலன்கள் விருத்தி செய்யப்படவேண்டும். குழந்தைப் பருவத்தில் சங்கீதம், நடனம் கற்பிக்கப்படலாமா போன்ற கருத்துக்களை ரூஸோ முன்வைத்தார்.

02. பிள்ளைப் பருவம் (02-12 வயது வரை)

இப்பருவத்தில் கண், கால், கை போன்ற புலன்களின் நேரடி அனுபவத்தைப் பெற சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். இதற்கு விளையாட்டும் செயற்பாடும் அதிகம் தேவை என்றார் ரூசோ.

03. முன் கட்டிளமைப்பருவம் (12-15 வயது வரை)

இது அறிவு துரிதமாக விருத்தியடையும் பருவமாகையால் புவியியல், வானசாஸ்திரம் போன்வற்றை கற்க சந்தர்ப்பம் அளிக்க வேண்டும். இப்பருவத்தில் கல்வியை வழங்கக் கூடாது. கல்வியைப் பெற சக்தியை வழங்குதல் அதற்காக தொழிற்பயிற்சி, நூல்களின் ஆராய்ச்சிக்கு சந்தர்ப்பம் வழங்குதல் வேண்டும் என்றார்.

04. கட்டிளமைப் பருவம் (15 - 19 வயது வரை)

சமூக உணர்வையும், சமூகத் தொடர்பையும் விருத்தி செய்தல் மற்றும் சுய எண்ணக்கருக்களை விருத்தி செய்தல் இவற்றுக்காக வரலாறு, இலக்கியம், சமூக விஞ்ஞானம் போன்றன கற்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்றார்.

05. வளர்ந்த பருவம் (20 வயதுக்கு மேல்)

இப்பருவத்தை அடைந்த பின் இலக்கியம், நாடகங்கள் மூலம் கல்வி கற்று சமூக ஜீவியத்துக்கு பழக்கப்படுவர். உலகை உரியவாறு விளங்கிக் கொள்ள சுற்றுப் பயணத்தில் ஈடுபட வேண்டும். அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்றார்.

பிள்ளைவேறு, வளந்தோர் வேறு என்று விளக்கிய ரூஸோ இயற்கை சூழல், மனிதர்கள், பொருட்கள் போன்ற மூன்று ஊடகங்களினூடாகவும் பிள்ளைகள் கல்வியைப் பெறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ரூஸோ பிள்ளைகள் அறிவு பெறும் ஊடகங்களில் ஒன்றாக சூழலினைக் கருது கின்றார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]