விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஆஹிராஃ பிறை 03
SUNDAY June 09, 2013

Print

 
தாயைப் போல் நாம் பிறந்த நாட்டையும் நேசிக்க வேண்டும்

தாயைப் போல் நாம் பிறந்த நாட்டையும் நேசிக்க வேண்டும்

மட்டக்களப்பு தொகுதியின் முடி சூடா மன்னன் என போற்றப்பட்டவரும் நீண்ட காலம் அத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்தவருமான கலாநிதி செல்லையா இராசதுரை 1954 ஆம் ஆண்டு மட்டக்களப்பு வின்சென்ற் மகளிர் கல்லூரியில் ஆற்றிய உரையின் தொகுப்பு நூல் வடிவாக ‘பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்’ எனும் தலைப்பில் கடந்த 16.06.2013 அன்று மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் வெளியிடப்பட்டது.

அன்று கலாநிதி இராசதுரை அவர்களுக்கு பாராட்டுவிழாவும் நடத்தப்பட்டது. இரா தவராசா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வு காலம் கடந்ததாக அமைந்திருந்தாலும் இன்றைய இளம் சந்ததியினருக்கு மிகவும் பொருத்தமான அம்சங்களை உள்ளடக்கிய மறுபதிப்பு நூலாக, இராசதுரை நற்பணி மன்றம் இந் நூலை வெளியீடு செய்திருந்தது. 60 வருடங்களைக் கடந்த நிலையில் இராசதுரை அன்றைய கால கட்டத்தில் சொல்லின் செல்வராகவும் இலக்கிய வளம் மிக்கவராகவும் திகழ்ந்தார் என்பதற்கு சான்றாக இந்நூல் அமைந்துள்ளது.

1950 ஆம் ஆண்டு தொடங்கி 1989 ஆம் ஆண்டு வரை மட்டக்களப்பு தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக 33 வருடங்கள் தொடர்ச்சியாக பாராளுமன்றம் சென்றவர் இராசதுரை. அவருடைய சாதனையை யாரும் இதுவரை முறியடிக்கவில்லை. பாராளுமன்ற பிரதிநிதியாக வருவதற்கு முன்பே 1954 ஆம் ஆண்டில் அவர் பேசிய பேச்சே “பெற்றதாயும் பிறந்த பொன்னாடும்” ஆகும்.

தாயின் சிறப்பும் இளம் பராயத்தினர் தாயை எவ்வளவு தூரம் நேசிக்கவேண்டும். அதே போல் நமது பிறந்த நாடான இலங்கையை மதிக்க வேண்டும் என்னும் கருப்பொருளை உள்ளடக்கி வள்ளுவரின் குறள்களை பொருத்தமான இடங்களில் எடுத்துக்காட்டி ஒரு குறிக்கோளுடைய சமூதாயத்தினை உருவாக்க வேண்டும் என்னும் நோக்கில் இராசதுரை அவர்கள் பேசியுள்ளமை அன்றைய கால இளம் சமுதாயத்தினரின் விழிப்புக்கு வித்திட்டது என்றே கூறலாம்.

அன்று தந்தை செல்வா அவர்கள் தமிழ்க் காங்கிரஸில் இருந்து பிரிந்து இலங்கை தமிழரசுக் கட்சியை உருவாக்கிய போது அதற்கு பலம் பொருந்திய தூண்களில் ஒன்றாக விளங்கியவர் இராசதுரை.

அவரது பேச்சாற்றலும் அடுக்கு மொழியும், வசீகரமும், இலங்கை தமிழரசுக் கட்சியின் பால் மக்களை இணையச் செய்தது. மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம் என்ற பேதமில்லாமல் தமிழ் மக்கள் இராசதுரை அவர்களின் பேச்சைக் கேட்க நடுநிசி வரை காத்திருந்த காலமது. இவரது சொல்லாற்றலால் இலங்கை தமிழரசுக் கட்சி வளர்ந்தது.

இப்போது வாழ்ந்து வருகின்றது என்பதை யாரும் மறந்துவிட முடியாது. அன்று தந்தை செல்வாவின் இதயக்கனியாக திகழ்ந்தவர் இராசதுரை, இன்றும் தந்தை செல்வாவை மறந்திடாத மனிதராக வாழ்த்து வருவது அவரது நன்றியுணர்வுள்ள மனிதப்பண்பு என்றே கூறலாம்.

இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி காலூன்றி மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கும் தமிழரசுக் கட்சியின் பால் வெற்றியீட்டுவதற்கும் களம் அமைத்து கொடுத்தவர் இராசதுரை. அன்று தந்தை செல்வாவுடன் சேர்ந்து இந்த பணியை செய்திருக்காவிட்டால் இன்று அக்கட்சியின் சார்பில் மட்டக்களப்பில் யாரும் போட்டியிடவே முன்வந்திருக்க மாட்டார்கள்,

தமிழரசுக் கட்சியின் சார்பில் மட்டக்களப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள், இராசதுரைக்கு நன்றிக்கடன் உடையவர்களாகவே இருக்கவேண்டும்.

அந்த நன்றிக்கடன் பிரதியுபகாரமாக அவர்கள் இந்த நூல் வெளியீட்டிலும் பாராட்டு விழாவிலும் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் தமது நன்றியுணர்வை வெளிப்படுத்தியமை பாராட்டத்தக்கது.

சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரியை நிறுவி. இன்று, இசைவளாகமாக அது உயர்ந்து நிற்பதற்கு வழிசமைத்தவரான இராசதுரை அவர்களுக்கு நன்றி கூறும் வகையில் சுவாமி விபுலானந்த இசை நடன வளாகத்தின் பணிப்பாளர் பிறேமகுமார் தலைமையில், விரிவுரையாளர்களும், மாணவர்களும் சேர்ந்து நன்றியுணர்வுடன் இராசதுரை அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர்.

இசைநடன வளாகத்தினரின் நன்றி மேலாண்மையும் இராசதுரை வித்திட்ட இசைநடனக் கல்லூரியினால் நாங்கள் வளர்ந்தோம், வளர்கின்றோம் என்பதை அது வெளிக் காட்டிநின்றது.

அங்கு உரையாற்றிய சாம்பசிவ சிவாசாரியார், பாதிரியார், போன்றவர்களின் பேச்சிலிருந்து இராசதுரை அவர்களின் மேல் எந்தளவு அவர்கள் அன்பு வைத்து இருந்தனர் என்பதை வெளிக்காட்டியது. இன மத வேறுபாடின்றி அனைவரினதும் நன்மதிப்பை பெற்று வந்து கொண்டிருப்பவர் இராசதுரை. சிங்கள முஸ்லிம் மக்களிடையே நல்ல மதிப்பை பெற்று அனைவராலும் நேசிக்கப்பட்ட ஒருவருக்கு எடுக்கும் பாராட்டுவிழா, வர வேற்கக்கூடிய தொன்று.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் பலரில் இராசதுரை யார் என்று தெரியாதவர்களும் உள்ளனர். காரணம் 1980ஆம் ஆண்டிற்கு பின்னர் இராசதுரை அவர்கள் மட்டக்களப்புக்கு வருகை தராமையும் காரணமாகும். அக்கால சூழல் அவர் வருகைக்கு தடையாக இருந்தது.

1956இல் இருந்து 1977ஆம் ஆண்டு காலங்களில் தமிழ் - முஸ்லிம் உறவுப் பாலமாக திகழ்ந்தவர் இராசதுரை, ஏறாவூரில் காத்தான்குடியில் அக்காலங்களில் மீலாத்விழா, நபிகள் நாயகம் பிறந்த தினம் போன்ற நிகழ்வுகளில் தவறாது கலந்து கொண்டு அவர் பேசிய பேச்சுக்களை இன்றும், ஏறாவூர், காத்தான்குடி முஸ்லிம் மக்கள் நினைவு கூருவதுடன் அவரை இன்றும் மதித்தும் நேசிக்கின்றனர்.

“பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்” நூல் வெளியீடு, பாராட்டு விழா மட்டக்களப்பு இராசதுரை நற்பணி மன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட தேவ நாயகம் மண்டபத்தில் நடந்தாலும், இதில் பங்கு கொண்டவர்கள் இராசதுரை அவர்களை நேசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட தொரு விழாவாகவே இது அமைந்தது.

இராசதுரை அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும், மலேசிய நாட்டில் இலங்கைக்கான தூதுவராகவும் இருந்தார். சுமார் 40 வருடங்களுக்கு மேலாக மட்டக்களப்பின் மைந்தன் ஒருவன் முடிசூடா மன்னனாகவே திகழ்ந்தான் என்பதை இன்றைய தலைமுறையினருக்கு இராசதுரையை நேசிக்கும் பெரியவர்கள் எடுத்துரைக்க வேண்டும்.

இராசதுரை மட்டக்களப்பிலே பிறந்து மட்டக்களப்பிலே வளர்ந்து, படித்து திருமணம் செய்து 1952 ஆம் ஆண்டிலிருந்து 1977 ஆம் ஆண்டு வரை இலங்கை தமிழரசுக்கட்சியை வளர்த்து அதை ஆலவிருட்சமாக்கியவர், நிழல் மிதிக்காத உயர்ந்த மனிதராகவும், ஆன்மிகவாதியாகவும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்பதை மட்டக்களப்பு மக்கள் மறந்துவிடாமல் இருந்தால் அதுவே, இராசதுரை அவர்களுக்கு மட்டக்களப்பு மக்கள் செய்யும் கைமாறாக அமையும்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]