விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஆஹிராஃ பிறை 03
SUNDAY APRIL 21, 2013

Print

 
நாரதர் வரலாறு

நாரதர் வரலாறு

நாரதரின் வரலாற்றைப் பற்றியும், நோக்கத்தைப் பற்றியும், செயல்களைப் பற்றியும் கொஞ்சமாவது தெரிந்து கொள்வது அவசியம். நாரதர் கலகத்தின் எல்லைக்குள் ஒடுங்காதுள்ள சில கதைகளிலும் அவர் பங்கெடுத்ததாகக் காண்கிறோம். அக் கதைகளின் சுருக்கமும் இவ்வரலாற்றுடன் இணைக்கப் பெற்றுள்ளது. சுக்கில்லாத கஷாயம் (ஔஷதம்) இல்லை என்கின்றனர் ஆயுர்வேத பண்டிதர்கள், அதைப்போல் நாரதர் இல்லாமல் எண்ணத்தக்க நிகழ்ச்சிகளும் புராணங்களில் இல்லை.

நாரதரைப் பற்றி ஒன்றுமே தெரியாதவர் எவருமே இல்லை என்று கூறலாம். மூவுலகிலும் புகழ்பெற்றவர் அவர். மக்களிடையே ஆதரவும் செல்வாக்கும் படைத்தவர் தேவரிஷி நாரதர். அம்மட்டுமா? அவர் தெய்வ தூதுவர், குழந்தைகள், முதியோர், அரசர்கள், அரசாங்கத்தினர், இலக்கிய மேதைகள், தனவந்தர், ஏழைகள், கனவான்கள், பொதுமக்கள், புலவர்கள், பக்தர்கள், தேவர்கள், அசுரர்கள், யVகின்னராதிகள் அனைவரும் விரும்பி அழைக்கும் சமாதான தூதுவர் ஆவார் நாரதர். கலகத்தை உண்டு பண்ணும் குறும்புக்காரர் நாரதர். என்னும் வதந்தியும் உலகிற் பரவியுள்ளது. ஆதலால், நாரதர் கலகப் பிரியர் என்கின்றனர் சிலர். இது தப்பான கருத்து. சாந்தியை எடுத்துவழங்கும் தொண்டர் அவர். கடவுள் நாமத்தை ஓயாது ஓதும் பக்தர். மூவுலக மக்களுக்கும் நலனைக்கோரும் உத்தமத் துறவி, கடவுள் அருளை நாடும் பக்தர்களுக்குத் தோழர். ஆனால், உலக நலனை முன்னிட்டுக் கெட்டவர்களை அழிக்க நாரதர் ஒரு சில சமயம் சூழ்ச்சி செய்ததும் உண்டு.

ஏனென்றால், பொது நலனே அவரது நோக்கம். சிலரை சீர்திருத்த, அவர் கலகத்தை உண்டு பண்ணியதும் உண்டு. கலகப்பிரியர் என்ற பெயர் அவருக்கு அவ்வாறு வந்து சேர்ந்திருக்கலாம். கலகம் அவர் நோக்கமன்று. சில நெருக்கடிகளில் மட்டும் அவர் கையால் கலகம் விளைந்துள்ளது. கலகத்திற்கு அஞ்சி அவர் தம் திருப்பணியை ஒதுக்கி வைக்கமாட்டார் என்பது உண்மை. நாரதரது செயலால் அடியுண்டு சீர்திருத்தம் பெற்ற அசுரர்களும், தேவர்களும், அரசர்களும், மாந்தர்களும் ஒருக்காலும் நாரதரை வெறுத்தது கிடையாது. அத்தகையவரும் கூட விரும்பி அழைக்கும் விருந்தினர் நாரதர் என்றால் அவர் பெருமை வியப்புக்குரியதல்லவா? தவ ஒளி திகழும் முகம், வசீகரப் புன்னகை, அடக்கம், கூர்மையான புத்தியைப் பிரதிபலிக்கும் ஒளிவீசும் கண்கள், விட்டுப் பிரியாத வீணை, ஜபமாலை, ஜடாமகுடம், விபுதி பூசிய உடல் இதுவே நாரதரது தோற்றம். வீணையை வாசித்து ஹரிநாமம் பாடி மக்கள் மீது அருள் புரிய ஊக்கம் கொண்டவராக இளம் தென்றல் போல் ஆடியாடிப் பார்ப்போருக்கு உவகை ஊட்டிக் கொண்டு விண்ணுலகிலிருந்து இறங்கி வரும் நாரதரைப் பாவனை செய்வோமாக.

தங்குதடையின்றி எங்கும் விருப்பப்படி செல்லக் கூடிய சுதந்திரம் பெற்றவர் நாரத மகரிஷி. மன்னர் மன்றத்திலும், மக்கள் கூட்டத்திலும், மங்கையரது அரண்மனையிலும், பக்தர் குழுவிலும், படைநடுவிலும், அசுரர் கோட்டையிலும், தேவர் அவையிலும், கடவுள் சன்னதியிலும் அவர் தன் விருப்பம் போல் நடமாடுவார். அவர் உபதேசத்துக்கு எல்லாரும் செவிமடுப்பர்.

ஓயாது தொண்டாற்றும் நாரதர் சமயத்தின் பொருட்டு செய்துள்ள சேவைகள் ஒப்புயர்வற்றவை. பெரிய பக்தர்களைப்பேணி வளர்த்தவர் அவர். அரும் பெரும் நூல்கள் தோன்றக் காரணமாக நின்றவர் நாரதர். பக்தர்கள் அதிகாலையில் மனத்தால் தொழும்மகான்கள் வரிசையில் இடம் பெற்றுள்ள இரண்டு சான்றோர்களான பிரகலாதனு, துருவனும் நாரதர் கையாலே உரு வானவர் அன்றோ! பிரகலாதனின் தந்தை ஹிரணியாக சிபு, மந்தர பர்வதத்திலே தவம் புரியப் போனான். அத்தருணத்திலே தேவர்கள் அசுரன் மனைவியான கயாதுவைத் தூக்கிக்கொண்டு தேவலோகத்திற்குச் சென்றனர். நாரதரது வேண்டுகோளுக் கிணங்கி தேவர்கள் கயாதுவை ரிஷியின் ஆசிரமத்திலே தங்கவிட்டனர். கயாது கருத்தரித்திருந்தாள். பிரகலாதனே கயாதுவின் வயிற்றிலிருந்தான். நாரதர் என்ன செய்தார் தெரியுமா? கருவிலிருந்த பிரகலாதனுக்கு அவர் விஷ்ணு பக்தியைப் புகட்டினார். பாகவத தருமத்தை உபதேசம் செய்தார். ஹிரண்யகசிபுவுக்கு இதைவிடப் பெரிய விரோதச் செயல் ஒருவராலும் இழைக்க முடியாது. கரு உருவானதும் அதனிடத்துக் கடவுள் அன்பு ஊடுருவி நின்றது. குழந்தை வளர வளர தனது பக்தி மேலும் மேலும் ஓங்கியது. அசுரனை அழிக்க நாரதர் கையாண்ட உபாயம் இதுவே.

துருவனுக்கும் கடவுள் பக்திக்கு வழி வகுத்தவர் நாரதரே. துருவனின் தந்தை உத்தான பாதருக்கு சுருசி, சுநீதி இருவர் மனைவிமார். சுருசியின் மைந்தன் உத்தமன், சுநீதியின் குமாரன் துருவன். மன்னனுக்கு சுருசியின்பால் பற்று அதிகம். அவள் மகன் உத்தமன் ஒரு நாள் அரசன் மடியில் வீற்றிருந்தான். துருவனும் தந்தையின் மடியில் உட்கார முயன்றான். சுருசி துருவனை அதட்டி நீக்கினாள். “என் உதரத்திலே நீ புண்ணியத்தின் விளைவாகத் தோன்றினாலொழிய உனக்கு மன்னன் மடியில் உட்கார உரிமை வாய்க்காது” என்று அவனை கடிந்து கொண்டாள் சுருசி. தாயாரின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு துருவன் காட்டுக்குச் சென்றான். தவம் செய்து கடவுள் அருளைப்பெற விரும்பினால் குழந்தை. நாரதர் குழந்தையின் முன் தோன்றி பக்தி விஷயத்தில் அவனுக்கு வேண்டிய உபதேசம் கொடுத்து மறைந்தார். துருவன் திருமாலின் அருளை விரைவில் பெற்றான். அவனுடைய ஆசைகளெல்லாம் நிறைவேறின. கடைசியாக உலகம் போற்றும் துருவ நக்ஷத்திரமாக அவன் திகழ்ந்தான்.

அறம் வளர்ப்பதில் ஆற்றலும் ஊக்கமும் படைத்தவர். நாரதர். அவரது பெயரால் வழங்கப்பெறும் நான்கு நூல்கள் அவரது அறப்பற்றுக்குச் சான்றாக அமைந்துள்ளன. ‘அவையாவன; நாரத பாஞ்சராத்திரம் (வைஷ்ணவ ஆகம நூல்), நாரத பக்தி சூத்திரம் (பக்தி மார்க்கத்தைப் புகட்டுவது), நாரத பரிவிராஜ கோபநிஷத்(வேதாந்த நூல்), நாரத ஸ்மிருதி (ஆசா ரங்களைக் குறித்தது). நூலறிவும், மதி நுட்பமும், பக்குவ புத்தியும் வாய்ந்த நாரதரின் பிறவிகளைப் பற்றி இனி ஆராய்வோம்.

கடவுளைக் குறித்த அறிவைப் புகட்டும் காரணத்தால் நாரதர் என்று பெயர் வந்ததாகவும் கூறுவர். கலகத்தை உண்டுபண்ணி மனிதருள் பிளவு செய்வதாலும் நாரதர் என்ற பெயர் பொருந்தும் என்பர்.

மனிதனுக்கு அறம் புகட்டுவதால் நாரதர் என்ற பெயர் அமைந்ததாகவும் கொள்ளலாம்.

முனிவர் பெயருக்கு இவ்வாறு பல வியாக்கியானங்கள் கற்பிக்கப்பட்டுள்ளன.

பிரஜாபதிகளின் சாபத்தை முன்னிட்டு உபபர் ஹணன் தாழ் குலத்தில் பிறந்தார்.

நாரதருடைய தாயார் ஓர் பிராம்மண இல்லத்தில் வேலை செய்து வாழ்க்கையை நடாத்தி வந்தாள். நாரதரும் தாயாருடன் அந்த இல்லத்திலே தங்கியிருந்தான்.

நாரதருக்கு ஐந்து வயதாயிற்று. சாதுர்மாசியத்திற்கென அந்த ஊரில் சில சாது சன்னியாசிகள் தங்கலாயினர். நாரதன் அந்த சாதுகளுக்கு சேவை செய்ய ஏவப்பட்டான். அவன் சாதுக்களுடன் அளவளாவிப் பழகினான். பையனின் தன்னடக்கமும், நல்லொழுக்கமும் கடவுள் நம்பிக்கையும், நேர்மையான போக்கும் சாதுக்கள் அன்பைக் கவரலாயின. ஒரு நாள் அவர்கள் நாரதனுக்குப் பிரசாதம் வழங்கினர். அதை அருந்தியதும் ஏற்கனவெ தூய்மையுற்றிருந்த அவனது மனம் கடவுள் பால் இழுக்கப்பட்டது. சத்சங்கத்தில் அவன் இன்புற்றான். சாதுக்கள் பையன் மீது அன்பு கொண்டனர். அவர்கள் அவனுக்கு பாகவத தருமத்தை உபதேசித்தனர். ஹரியின் தரிசனத்துக்காக அவன் ஆவல் கொண்டான்.

சாதுர்மாசியம் முடிந்ததும் ரிஷிகள் அந்த ஊரை விட்டு நகர்ந்தனர். அவர்களது வழியைப் பின்பற்றி வனம் சென்று தனிமையில் கடவுளைத் தியானம் பண்ண நாரதன் ஆசைப்பட்டான். ஆனால் அவனோ தாயாருக்கு ஒரேபிள்ளை. அவளுக்கு நாரதனை தவிர வேறு ஆதரவும் இல்லை. தாயாரின் அவல நிலையை நினைத்து நாரதன் தன் ஆசையை ஒதுக்கி வைத்தான். கடவுளின் சித்தத்தை யார் கண்டனர்? திடீரென்று நாரதனுக்கு வழி பிறந்தது. ஒரு நாள் தாயார் இரவு வேளையில் மாட்டைக் கறக்கச் சென்றாள். வழியில் விஷம் தீண்டப்பெற்று அவள் இறந்து விட்டாள். அளவுக்கு மீறி நாரதன் துயரம் கொள்ளவில்லை. ஒரே ஒரு பாசம் தான் அவனைக் கட்டிக் கொண்டிருந்தது. அது அறுக்கப் பெற்றமையால் இந்த விபத்தை அவன் அருளாகப் புரிந்து கொண்டான். இனி அவனுக்கு பந்தபாசங்களில்லை. தன்னுடையது என்றொரு கடமையும் இல்லை. சுதந்திரம் பெற்றான்.

நாரதர் ஊரைவிட்டு வெளியேறினார். அவரை வழியனுப்ப ஒருவரும் இல்லை. எனவே அவருக்குப் பிரிவின் வேதனை இல்லை. ஆனால் வழிகாட்டவோ அவரிடம் ரிஷிகள் தந்த உபதேசம் இருந்தது. கடவுள் நாமம் துணையாக நின்றது. அருளையே குறிக்கோளாகக் கொண்டு மன நிம்மதியுடன் நாரதர் நடந்து சென்றார். ஊரும் தேசமும், நாடும் காடும், மேடும் பள்ளமும், மலையும் மணற்காடும், ஏரியும் வயலும், விளைநிலமும், பால் நிலமும், ஆறும் அருவியும், குன்றும் குட்டையும், கோட்டையும் பட்டணமும், சேரியும் கடை வீதியும், கோயிலும், காவும், நந்தவனமும் கடந்து சென்றார் நாரதர். நடந்து நடந்து கால் குடைந்து உடல் தேய்ந்து களைப் புற்றார். மலைச்சாரலில் ஒரு சிற்றாறு ஓடிக்கொண்டிருந்தது. சோர்வைப் போக்க ஆற்றில் குளித்தார். நீரைப் பருகிவிட்டுப் பக்கத்திலிருந்த அரசமரத்தடியில் உட்கார்ந்தார்.

பொழுது போனதே தெரியவில்லை. நாரதரின் மனம் திருமாலின் பொன்னடிகளை நாடலாயிற்று. சிறிது நேரத்திற்குள் திருமாலின் அருளுருவம் பளிச்சென்று அவர் உள்ளத்தில் பிரகாசித்து மறைந்து விட்டது. அத்திருக்காட்சியை நாரதர் மனம் குளிரும் வண்ணம் நீண்ட நேரம் பார்க்கக் கூடவில்லை. ஹரியின் திரு உருவத்தைத் திரும்பவும் பார்க்க அவர் பேரவாக்கொண்டார். மறுபடியும் தியானத்தில் ஈடுபட்டார். வெகுநேரம் பிரார்த்தித்தும் பயன்படவில்லை. ஹரி தரிசனம் கிடைக்கவில்லை. ஆனால், ஆறுதல் கூறும் மொழி ஒன்று கேட்டது. “குழந்தாய், இப்பிறப்பிலே என் தரிசனம் உனக்கு மறுபடியும் கைகூடாது. மறு பிறப்பில் என் தரிசனம் ஓயாது உனக்குக் கிடைக்கும். இப்போது செய்யும் பக்தி சாதனையின் பயனை அடுத்த பிறவியில் அடைவாய்”.

பின்னர் எஞ்சிய ஆயுட்காலத்தை நாரதர் ஹரியின் தியானத்திலே கழித்தார். பூத உடலை நீத்ததும் அவர் பிரம்ம தேவரிடத்தில் ஐக்கியம் அடைந்தார். அப்போது மகாப் பிரளயம் நெருங்கி விட்டதால் பிரம்மதேவர் விஷ்ணு பகவானில் லயம் அடைந்தார். அடுத்த கல் பத்திலே பிரம்மதேவர் திரும்பவும் தோன்றலானார். அவர் சிருட்டியைத் துவக்கின்போது நாரதர் அவரது தொடையிலிருந்து பிறந்தார். பத்து பிரஜாபதிகளுள் ஒருவராக நாரதர் திகழ்ந்தார். நாரதருக்குத் திருமால் வீணை ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார். இறைவன் நாமத்தைப் பாடி வீணை வாசித்துக்கொண்டே நாரதர் மூன்றுலகிலும் சுற்றலானார். தெய்வீகமான வீணையில் கண் நாதப் பயிற்சி செய்து கொண்டு மக்களுக்கு பக்தியமூதை வழங்கும் திருப்பணியில் ஈடுபட்டு உலகங்களைச் சுற்றிய வண்ணம் உள்ளார் நாரதர்.

பிராசேதசர் தக்ஷன் என்னும் மகவைப் பெற்றெடுத்தார். விஷ்ணுபகவான் பணித்தபடி பாஞ்சஜனனின் மகள் அக்கினியை தக்ஷன் மணந்துகொண்டான். பிரம்ம தேவர் விரும்பியபடி தன் உலகுக்குச் சந்ததியை வழங்கப் பதினாயிரம் புதல்வரைப் பெற்றெடுத்தான். அவர்களின் பெயர் ஹரியசுவர் என்பது. சந்ததியைப் பெற்றெடுக்க ஹரியசுவருக்குத் தக்ஷன் கற்பித்தான். ஹரியசுவர் விஷ்ணு பகவானுடைய அருளைப்பெற நாராயண சரசிலே (சிந்து நதிக் கடலில் சேரும் இடம்) தவம் பண்ணலாயினர். நாரதர் உலகம் சுற்றி வரும் பொழுது ஹரியசுவரைச் சந்தித்தார். உலகப் பற்றழிக்கும் முக்தி நெறியை அவர்களுக்குப் புகட்டினார் நாரதர். ஹரியசுவர் மக்களைப் பெறும் ஆசையைப் புறக்கணித்து விட்டு விஷ்ணுவின் அருளைப் பெறத் தவம் செய்து வைகுண்டம் எய்தினார். தக்ஷன் துக்கம் பீறிட்டுக் கூறினான். “நற்புதல்வர், பெற்றோர்க்குக் கவலைக்கே காரணம்” என்று.

பிரம்மதேவர் தக்ஷனுக்கு ஆறுதல் கூறித்தேற்றினார். மறுபடியும் சபளாசுவர் என்ற புகழ்பெற்ற ஆயிரம் மக்களை தக்ஷன் பெற்றெடுத்தான். மக்களைப் பெற்றெடுக்கச் சபளாசுவரையும் தக்ஷன் ஏவினான். ஹரிய சுவரைப் போல சபளாசுவரும் நாராயண சரசை அடைந்து தவம் பண்ணலாயினர். நாரதர் அவர்களையும் விடவில்லை. அவர்களுக்கும் ஞானோபதேசம் செய்தார். குருவின் அருளால் அவர்கள் எல்லா ஆசைகளையும் வென்று விஷ்ணுலோகம் அடைந்தனர்.

இதனால் தக்ஷனுக்குத் தாங்கவொண்ணாத துக்கம் ஏற்பட்டது. தான் ஆசையுடன் பெற்றெடுத்த மக்களை யெல்லாம் பிரம்மசாரிகளாகச் செய்துவிடும் நாரதர் பிரஜாபதியான தன்னை ஆதரியாதவர் என்று கண்டான் அவன். தக்ஷன் நாரதரைக் கடிந்துகொண்டு சாப மிட்டாள் “என் குலத்தை அழிக்கும் நோக்கமுடைய நீர் ஓய்வின்றித் தங்கு தடை இல்லாமல் இருக்க இடம் இல்லாமல் எந்நாளும் ஊர் சுற்றுவீர்” என்று.

மனக்கலக்கமின்றி நாரதர் சாபத்தை ஏற்றுக்கொண்டார். சாபத்தை அருளாகவும் கூட அவர் பொருட்படுத்தினார். கடவுள் நாமத்தைப் பாடி அறச்செயலிலே கண்ணும் கருத்துமாக ஊர் சுற்றும் நாரதருக்கு ஓய்வு எதற்கு? மூன்று உலகமும் தம் இல்லமெனக் கருதும் முனிவர்க்குத் தனி இடம் வகுக்க வேண்டுமோ? அவரது திருப்பணிக்கு இந்த சாபம் அனுகூலவே அன்றோ?


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]