விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஆஹிராஃ பிறை 03
SUNDAY APRIL 14, 2013

Print

 
வரலாற்று நாயகனின் கதை

வரலாற்று நாயகனின் கதை

இந்தக் காலகட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் அவரது குடும்பத்திற்கும் கொலை அச்சுறுத்தல்கள் எழுந்த வண்ணம் இருந்தன. தங்களுக்கு உயிராபத்து ஏற்படும் என்று அஞ்சி மக்கள் பிரதிநிதிகள் பலர் தங்கள் தொகுதிகளை விட்டு வெளியேறி, கொழும்பிலும் ஏனைய நகரங்களிலும் இரகசியமான இருப்பிடங்களில் வாழவேண்டிய நிர்ப்பந்த நிலை அன்று தோன்றியது.

இவ்விதம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக தங்கள் சொந்த இடங்களை விட்டு இரகசிய இருப்பிடங்களில் வாழ ஆரம்பித்திருந்த போதிலும், மஹிந்த ராஜபக்ஷ தன்னுடைய மக்களை அன்று அநாதைகளாக கைவிட்டு ஓடிவிடவில்லை. அவர் தனது சொந்த மாவட்டத்திலேயே தங்கியிருந்து, மக்கள் சேவையைத் தொடர்ந்து.

தென்மாகாணத்திலுள்ள பெலியத்த தொகுதியில், ஜே.வி.பி.தீவிரவாதிகள் அன்று அட்டகாசம் புரிந்து வந்ததனால், அப்பகுதி மக்கள் பீதியில் வாழ்ந்து கொண்டிருந்தனர்.

ஜே.வி.பி உறுப்பினர்களை கடத்திச் சென்ற அரசாங்கத்தின் ஆயுத கும்பல்கள், இந்த சிங்கள இளைஞர்களை படுகொலை செய்யும் சம்பவங்கள் அன்று உச்ச கட்டத்தை அடைந்த வண்ணம் இருந்தன.

இதனால், செய்வதறியாது வேதனையில் ஆழ்ந்திருந்த அத்தொகுதியைச் சேர்ந்த பெற்றோர் மஹிந்தவிடம் வந்து, எங்கள் மகன்மாரை உயிராபத்தில் இருந்து காப்பாற்றுங்கள் என்று அழுது புலம்பினார்கள். ஜே.வி.பியினர் முடுக்கிவிட்ட இந்த வன்முறைகளினால், ஜே.வி.பியினர் கையிலும் ஆயுதப்படை வீரர்களின் கையிலும் அல்லல்பட்டு தங்கள் உயிர்களை போக்கிக்கொண்ட இளைஞர்களில் பெரும்பாலானோர் அப்பாவிகளாகவே இருந்தார்கள்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக உறுதிப் பிரமாணம் செய்த பின்னர் அவரது குடும்பத்தினருடன் காணப்படுகின்றனர்.

அஞ்சா நெஞ்சத்துடன் ஜே.வி.பி. பயங்கரவாதத்திற்கும் அரசாங்க பயங்கரவாதத்திற்கும் எதிராக, மஹிந்த குரல் கொடுக்க ஆரம்பித்ததனால், அவரது தன்னலமற்ற சேவை, அவரை அரசியலில் பிரபலப்படுவதற்கு ஏதுவாக அமைந்தது.

1988ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் நடைபெறவிருந்த இடைக்கால மாகாண சபை தேர்தல் பிரச்சாரங்களில் மும்முரமாக ஈடுபட்ட காலகட்டத்தில், மஹிந்தவின் துணைவியார் ஷிரந்தி, தனது இரண்டாவது மகன், “யோஹித்த” வை பெற்றெடுத்தார்.

அந்த காலகட்டத்தில் மஹிந்த தேர்தல் பிரச்சாரங்களில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, ஷிரந்தி தனது மகன்மார்களுடன் தனியாகவே வீட்டில் மிகவும் பாதுகாப்பாக இருந்தார்.

ஒருநாள் இரவு திருமதி ராஜபக்ஷ தனித்திருந்த வேளையில், அவர்களது வீட்டை நோக்கி துப்பாக்கி பிரயோகமும், திடீரென ஒரு குண்டுத் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டது. இதனால் அஞ்சிய ஷிரந்தி, வீட்டின் பின்புறத்தில் உள்ள ஒரு பாதுகாப்பான அறைக்கு தனது சிறு பிள்ளைகளை அழைத்துக் கொண்டு சென்று கதவை அடைத்துக் கொண்டார். அதிகாலை வரை ஷிரந்தி அந்த அறையை விட்டு வரவேயில்லை.

இத்தகைய உயிராபத்துக்களையும் அச்சுறுத்தல்களையும் தானும் தன்னுடைய மனைவியும் இரு பிள்ளைகளும் எதிர்நோக்கிக் கொண்டிருந்த போதிலும், மஹிந்த சளைக்காமல் தனது தொகுதி மக்களின் வேதனைகளை துடைப்பதற்காக இரவு பகலாக உழைத்தார்.

ஒருநாள் இரவு ஒரு மனிதன் பதற்றத்துடன் மஹிந்தவின் வீட்டுக்கு வந்தபோது, அவனை சிலர் தடுத்து நிறுத்த முயற்சித்தனர். அப்போது அந்த மனிதன் “தயவு செய்து மஹிந்த மாத்தயாவை பார்க்க விடுங்கள், எனது மகன்மார்களை ஆயுதம் தாங்கியோர் வந்து துப்பாக்கியால் சுட்ட பின்னர், அவர்களை ஜீப் வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டனர்” என்று மஹிந்தவின் கைகளை பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம நீதியரசர் சரத் என் சில்வா முன்னிலையில் நாட்டின் ஜனாதிபதியாக உறுதிப் பிரமாணம் செய்துகொள்கின்றார்.

“என்னுடைய மகன்மார் இருவரும் பாடசாலை மாணவர்கள், மஹிந்த மாத்தயா. அவர்கள் இராணுவத்தினரை கண்டவுடன் பயந்து ஓட ஆரம்பித்தார்கள். அப்போது இராணுவத்தினர் அவர்களை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்துவிட்டு, இருவரையும் ஜீப் வண்டியில் இழுத்து போட்டு கொண்டு சென்று விட்டனர்” என்று அந்த தந்தை கதறி அழுதார். அவர்கள் பற்றி தகவல் அறியச் சென்ற மஹிந்த, வெற்றியடையாத நிலையில் மனவேதனையுடன் வீடு திரும்பினார். அடுத்து அவர், வேறு வழியில்லாத நிலையில் அன்றைய நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவுடன் தொலைபேசியில் பேச முயற்சி செய்தார்.

தொலைபேசி இணைப்பை பெற்றுத்தரும் உத்தியோகத்தரிடம் மிகவும் கஷ்டப்பட்டு மன்றாடி, ஜனாதிபதியுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொண்ட மஹிந்தவுக்கு மறுமுனையில் இருந்து, “என்ன மஹிந்த, இந்த இராத்திரி நேரத்தில் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிaர்கள்” என்று ஜே.ஆர்.ஜயவர்தனவின் குரல் கேட்டது. அதற்கு, மஹிந்த “ஜனாதிபதி அவர்களே, எனது கிராமத்தைச் சேர்ந்த வசந்த, பிரசன்ன என்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பாடசாலை சிறுவர்கள் சுடப்பட்டுள்ளார்கள்” என்று கூறினார்.

யார் இந்த கொடுமையை செய்தார்கள், என்று ஜனாதிபதி கேட்டார். அதற்கு மஹிந்த பொலிஸ் விசேட படையினர் என்று பதிலளித்தார். சரி, தொலைபேசி இணைப்பை துண்டித்துவிடுங்கள். இன்னும் சில விநாடிகளில் என்னுடைய மகன் ரவி, (ஜயவர்தன) உங்களுடன் தொலைபேசியில் பேசுவார் என்று ஜனாதிபதி ஜயவர்தன கூறினார்.

ஒரு சில விநாடிகளில் மஹிந்தவுடன் தொலைபேசி இணைப்பை ஏற்படுத்திக் கொண்ட ரவி ஜயவர்தன, பொலிஸ் விசேட படையினர் இவர்களை சுடவில்லை என்று ஊர்ஜிதப்படுத்தி, நாளை காலை 6.00 மணியளவில் கருணாரட்ன என்ற பொலிஸ் விசேட படையின் பொறுப்பதிகாரி உங்களை வந்து சந்திப்பார் என்று ரவி ஜயவர்தன கூறி தொலைபேசி இணைப்பை துண்டித்துவிட்டார்.

ராஜபக்ஷ தம்பதியினர் தங்கள் மூன்று புதல்வர்களுடன்.

அந்த அதிகாரியும் காலையில் மஹிந்தவை சந்தித்து, நாங்கள் இந்த மாணவர்களை கொல்லவில்லை என்று கைவிரித்துவிட்டார். தென்னிலங்கையில், அரசாங்கப் படையினரால் அன்று கொல்லப்பட்ட முதலாவது இரண்டு மாணவர்கள் இவர்கள் தான்.

கொல்லப்பட்டவர்கள் யார்? என்ற அடையாளம் காண முடியாதளவிற்கு அவர்களின் தலையும், முகமும் சிதைத்து சீர்குலைக்கப்பட்டிருக்கும். அல்லது தலையை துண்டித்து அதனை வேறெங்காவது இனங்காணாத இடத்தில் வீசி எறிந்திருப்பார்கள். சடலங்களை எரித்து அடையாளம் காணாத அளவிற்கு அவற்றை சீர்குலைக்கும் செயற்பாடுகளிலும் அன்று ஆயுதப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்கள்.

இவ்விதம் அப்பாவி இளைஞர்கள் ஆயுதப்படையினரால் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்துவதற்காக மஹிந்த ராஜபக்ஷ, இத்தகைய கொலைகளுக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நாடெங்கிலும் மேற்கொண்டார். மஹிந்தவின் ஆதரவாளர்கள் எரிந்து சீர்குலைந்துள்ள நிலையில் உள்ள இந்த இரு மாணவர்களின் சடலங்களை வீரகெட்டிய வரையில் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

அன்று மஹிந்தவிற்கு ஊடகவியலாளர்களுடன் நெருக்கமான நல்லுறவு இருந்து வந்ததனால், இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு ஊடகங்களின் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் காரணமாக தென்னிலங்கையில் இருந்து பொலிஸ் விசேட படையினரின் முகாம் அரசாங்கத்தினால் அகற்றப்பட்டது.

அதையடுத்து 1989 - 1990 ஆம் ஆண்டில் எம்பிலிபிட்டியவில் 31 பாடசாலை பிள்ளைகள் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொடூரமும் நிகழ்ந்தது. நாட்டின் நாலா பக்கங்களிலும் இளைஞர்களும், மாணவர்களும் கடத்திச் செல்லப்படுதல், தலைமறைவாதல், ஆகியவற்றுடன் அவர்கள் படுகொலை செய்யப்படும் எண்ணிக்கையும் நாளாந்தம் அதிகரித்தது.

இவ்விதம் நாளாந்தம் பொது இடங்களில் ஐம்பது, அறுபது இளைஞர்களின் சடலங்கள் ஆயுதப்படையினரால் வீசி எறியப்படும் கொடுமையை நிறுத்த வேண்டுமாயின், இதனை விட கூடுதலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வது அவசியம், என்பதை மஹிந்த ராஜபக்ஷ உணர்ந்து அதற்கமைய செயற்பட ஆரம்பித்தார்.

ஊடகங்களுடன் தனக்கு இருக்கும் நல்லுறவைப் பயன்படுத்தி மஹிந்த ராஜபக்ஷ, தமது தொகுதியில் காணாமல் போனவர்கள் பற்றிய புள்ளி விபரங்களை சேகரிக்க ஆரம்பித்தார். இவ்விதம் 62 இளைஞர்கள் பற்றிய புள்ளி விபரங்களை அவர் ஆதாரபூர்வமாக சேகரித்தார்.

ஒரு சட்டத்தரணி என்ற முறையில், இந்த இளைஞர்களின் பெற்றோரிடமிருந்து மஹிந்த ராஜபக்ஷ சத்தியக்கடதாசிகளை வாங்கி, இவர்களின் கொலை அல்லது, கடத்திச் சென்றது பற்றிய தகவல்களை சட்டபூர்வமாக உறுதி செய்து கொள்வதற்கும் நடவடிக்கை எடுத்தார். இந்த புள்ளி விபரங்களை மஹிந்த, தன்னுடைய நண்பரும், எதிர்க்கட்சித் தலைவருமான அனுர பண்டாரநாயக்காவுக்கு கொண்டு வந்து கொடுத்தார். இந்த விபரங்கள் 1988ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான காணாமல் போன இளைஞர்கள் பற்றி பாராளுமன்றத்திற்கு தாக்கல் செய்யப்பட்ட முதலாவது உத்தியோகபூர்வமான அறிக்கையாக இது அமைந்தது.

இந்த நிகழ்வுகள் இடம்பெற்ற கால கட்டத்திலேயே நாங்கள் முன்னர் அறிவித்திருந்த, விஜேயகுமாரதுங்கவின் படுகொலையும் இடம்பெற்றது. இதனுடன், விஜேதாஸ லியனாராச்சி என்ற மனித உரிமைகளுக்காக சட்டரீதியில் போராட்டம் செய்து வந்த சட்டத்தரணி, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த போதே படுகொலை செய்யப்பட்டார்.

இவர், ஜே.வி.பியின் அரசியல் குழுவின் கூட்டங்களில் கலந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டை அடிப்படையாக வைத்தே படுகொலை செய்யப்பட்டதாகவும், விஜேயகுமாரதுங்கவை படுகொலை செய்வது என்ற தீர்மானத்தை எடுத்த கூட்டத்தில் இவரும் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

விஜேதாஸ லியனாராச்சி, தங்கல்லையில் கைது செய்யப்பட்டார். அங்கு அவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால் ஏற்பட்ட காயங்களினால் உயிர் துறந்ததாக கூறப்படுகின்றது. இத்தகைய வன்முறைகளை, தொடர்ந்தும் மெளனமாக சகித்துக்கொள்ள முடியாது என்ற தீர்மானத்தை எடுத்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், இவ்விதம் அரசாங்கத் தரப்பினர் மேற்கொள்ளும் படுகொலைகளை கண்டித்து, அடிக்கடி தீர்மானங்களை நிறைவேற்றிக்கொண்டிருந்த போதிலும், இந்த மனித படுகொலைகள் தொடர்ந்து கொண்டே இருந்தன.

லியனாராச்சியின் சடலம் வலஸ்முல்லையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தபோது, இராணுவத்தினர் அவரது வீட்டை சுற்றிவளைத்து, வெளியவர்களை வீட்டிற்குள் செல்ல அனுமதி மறுத்தனர். இதையடுத்து சட்டத்தரணிகள் பல பஸ்களில் வலஸ்முல்லைக்கு சென்று, சட்டத்தரணி லியனாராச்சியின் இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டு, நாட்டில் தற்போது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறை, கொலைகளுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

(தொடரும்)


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]