விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஆஹிராஃ பிறை 03
SUNDAY APRIL 14, 2013

Print

 
நவபாரத சிற்பி நேரு

நவபாரத சிற்பி நேரு

நமது அரசியல் சட்டத்தில் இந்தியா மதச்சார்பற்ற அரசு என்று வரையறுத்துள்ளோம். இதன் பொருள் மத எதிர்ப்பு அல்ல. இதன் அர்த்தம் எல்லாம் மதங்களுக்கும், சமயங்களுக்கும் சம வாய்ப்புகள் என்பதேயாகும்.

எனவே நாம் நமது கலாச்சாரத்தின் ஜீவாதார அம்சத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இது இந்தியாவுக்கு மிக முக்கியமாகும்.

ஓர் இந்தியனுக்கும் இன்னொரு இந்தியனுக்கும் இடையே தடைவேலிகள் போட்டு பிளவு வாதப் போக்குகளைத் தூண்டுவோர் இந்தியாவுக்கோ அதன் கலாசாரத்துக்கோ ஆக்கம் செய்தவராகார். அத்தகையோர் நம்மை உள்நாட்டில் பலவீனப்படுத்துகிறார்கள். வெளிநாடுகளில் மதிப்பிழக்கச் செய்கிறார்கள். எனவே இந்தியாவை உணர்வுபூர்வமாக ஒருமைப்படுத்தும் பணிக்கு தலைசிறந்த முக்கியத்துவம் தந்து பாடுபட வேண்டியது இன்றியமையாததாகும்.

நாம் எந்த அளவுக்கு ஒன்றுசேர்ந்து முன் செல்கிறோமோ, அந்த அளவுக்கு இந்தியாவின் வளமை அதிகரிக்கும். வகுப்பு வாதம் என்பது பின்தங்கியிருக்கும் ஒரு நாட்டின் அடையாளமாகும். அது நவீன யுகத்தின் சின்னமல்ல, மக்களுக்குப் பல சமயங்கள் உள்ளன. அவற்றை பின்பற்றும் உரிமையும் உள்ளது.

ஆனால் அரசியலில் மதத்தை இறக்குமதி செய்து நாட்டைத் துண்டாடுவது என்று முன்னூறு நானூறு ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பாவில் செய்த வேலை இங்கு நடக்காது. இந்தியா அத்தகைய முயற்சியை ஒழித்துக்கட்டிவிடும். மதசார்பற்ற அரசு குறித்து நேருஜி சொன்னவை.

வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் நேருவின் மனம் பொதுவாழ்விலும் தேச விடுதலையிலும் அக்கறை செலுத்த ஆரம்பித்தது. ஆங்கிலேயர்களை எதிர்த்துத் தீவிரமாகப் பிரச்சாரம் நடந்துகொண்டிருந்தது. ஒருமுறை மகாத்மா காந்தியின் மேடைப் பேச்சைக் கேட்ட நேரு அன்றே காந்தியடிகளை நேரில் சந்தித்து காங்கிரஸ் கட்சி உறுப்பினரானார்.

மகனின் தேச பக்தி கண்டு மோதிலால் நேரு மகிழ்ச்சியுற்றாலும் பொதுவாழ்வில் ஈடுபடுவதால் மகனுக்கு என்ன ஆபத்து வருமோ என்று நினைத்து வருத்தமுற்றார்.

நேரு ஆங்கிலேயர்களை எதிர்ப்பதில் தீவிரமாக ஈடுபட்டார். ஒருமுறை அன்னியப் பொருள்கள் விற்பனை செய்யும் ஒரு கடையின்முன் மறியல் செய்ததால் அவர் கைது செய்யப்பட்டார்.

இதை அறிந்து துடித்தார் மோதிலால் நேரு.

மகனுக்கு 15 நாள் சிறைவாசம் அளிக்கப்பட்டதும், நொந்துபோன தந்தை கஞ்சியைக் குடித்து இரவில் தரையில் படுத்துக் கொண்டார்.

எல்லா வசதியும் இருந்தும் ஏன் இப்படி செய்கிaர்கள்? என்று அவர் மனைவி சொரூபராணி கேட்டார். “சிறையில் என் அருமை மகன் இருக்கிறான். அவனுக்கு அங்கு கஞ்சிதானே தருவார்கள். இரவில் சிறையில் தரையில்தானே படுத்துக்கொள்வான்” என்று கலங்கினார் மோதிலால், அந்த அளவுக்கு மகன் மீது பாசம் வைத்திருந்தார் அவர்.

தங்கள் பிள்ளைக்குத் திருமணம் செய்துவைக்க ஒவ்வொரு வரும் ஒரு காரணம் வைத்திருப்பார்கள், நேருவுக்கு திருமணம் செய்து வைக்கவும் ஒரு காரணம் இருந்தது.

அதாவது மகனுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டால் கட்சி, நாடு என்று அலையாமல் மனைவி குடும்பம் என்று மகன் ஒரு வட்டத்துக்குள் இருந்துவிடுவான் என்று நம்பி மோதிலால் தம் மகனுக்கு தகுந்த பெண்ணைத் தேடத் தொடங்கினார்.

ஆனால் பெண்ணைப் பெற்றவர்கள் நேருவுக்குப் பெண் தரத் தயங்கினார்கள். ஆங்கிலேயர்களை எதிர்ந்து நிற்கும் நேருஜியின் எதிர்காலம் எப்படி இருக்குமோ? என பயந்தனர். ஆனால் மோதிலால் மனம் தளர்ந்துவிடவில்லை. ஒரு நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த கமலா என்னும் பெண்ணைத் தேர்ந்தெடுத்தார்.

பதினைந்து நாள் தண்டனை முடிந்தது. வீடு திரும்பிய நேரு முதலில் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டார், ஆனால் தாய், தந்தையின் அன்புக்கட்டளையை எதிர்த்து நிற்க முடியாமல் அவர்கள் விருப்பம் போல் அலகாபாத்தில் ஆனந்த பவனில் நேரு - கமலா திருமணம் சிறப்பாக நடைபெற்றது.

மணவாழ்க்கை ஓராண்டு மகிழ்ச்சியாக சென்றது. ஆனால் அவர் நாட்டை மறக்கவில்லை. கமலா நேருவும் கணவருக்கு துணை நின்றார் அடுத்த ஆண்டே ஒரு பெண் சிங்ககுட்டியாய் இந்திரா பிறந்தார்.

சோதனை மேல் சோதனை என்பது நேருவின் வாழ்விலும் தொடர்ந்தன. பாசத்திற்கும் தோழைமைக்கும் உரிய அன்புத்தந்தை மோதிலால் இறந்த சில தினங்களில் அந்தியப் பொருள்களை புறக்கணிக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டதால் நேருஜி கைது செய்யப்பட்டு நீண்ட நாள் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் சிறையில் பொழுதை வீணே கழிக்கவில்லை. பிரியமகள் பிரியதர்ஷினிக்கு வாரம் ஒரு கடிதம் என்று உலக வரலாற்றைக் கடிதம் மூலம் வரைய ஆரம்பித்தார்.

அப்போது நேருவை விடுதலை செய்யும்படி பெரிய கிளர்ச்சி நடந்தது. அதனால் நேரு விடுதலை செய்யப்பட்டார். சிறை மீண்ட அவருக்கு வீட்டில் ஒரு வருத்தம் தரும் செய்தி காத்திருந்தது. மனைவி கமலாவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. அப்போது காந்தியடிகளின் வற்புறுத்தலின் பேரில் நேரு தம் மனைவி மற்றும் மகளுடன் ஐரோப்பாவுக்குப் புறப்பட்டார்.

ஐரோப்பாவின் புகழ்பெற்ற டாக்டர்கள் கமலா நேருவுக்கு சிறந்த சிகிச்சை அளித்தனர். ஆனாலும் அது பயனளிக்கவில்லை. 1936 பெப்ரவரி 28-இல் கமலா என்ற துணை மயிலை இழந்தார் மனிதருள் மாணிக்கம் நேரு.

“நான் கமலாவை இழக்கவில்லை, மனைவி எனும் பெயரில் என்னை வளர்த்த - எனக்கு விடுதலை போராட்டங்களில் ஊக்கம் கொடுத்த வீரமிக்க மற்றொரு தாயை இழந்துவிட்டேன்” என்று மனைவியின் இழப்பை குறிப்பிடுகிறார் நேரு.

அன்பே வடிவான தந்தை இறந்துவிட்டார். நேசமே வடிவான மனைவி இறந்துவிட்டார். பாசமே உருவான தாய் இயற்கை எய்திவிட்டார். அடுத்த அவரது ஒரே நெருக்கமான உறவு இந்திரா பிரியதர்ஷினி மட்டும்தான்.

போராட்ட வாழ்வில் ஈடுபட்டிருந்த போதிலும் சிறையில் இருந்தபோதும் நேரு தம் மகளின் எதிர்காலத்தை செப்பனிட்டு கொண்டே இருந்தார்.

1941ஆம் ஆண்டு நேரு சிறையில் இருந்த நேரம், அவரை சந்தித்த மகள் இந்திரா தாம் பெரோஸ்காந்தியை மணக்க விரும்புவதாக கூறினார். முதலில் மகளின் விருப்பத்திற்கு உடன்பட மறுத்தார். ஆனால் இந்திரா தமது முடிவில் மாறாமல் உறுதியாக இருக்கவே அந்தத் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டார்.

ஒரு பார்சிக்காரரை இந்திரா மணக்க இருப்பதை நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் எதிர்த்தனர். ஆனால் காந்தியடிகள் தலையிட்டு இந்திராவின் விருப்பத்திற்கு பச்சை கொடி காட்டினார்.

சிறையிலிருந்து வெளிவந்த நேரு:

“திருமணம் என்பது வாழப்போகும் இருவரின் மனநிலையைப் பொறுத்த விஷயம், இதில் ஜாதியோ, மதமோ குறுக்கிடக் கூடாது. தனிப்பட்ட இருவரின் சுதந்திரத்தில் மற்ற எவரும் தலையிடக் கூடாது” என்று அறிக்கை விடுத்தார்.

அருமை மகளின் விருப்பப்படியே இந்திரா பிரியதர்ஷினி, பெரோஸ்காந்தி திருமணத்தை 1942இல் நடத்திவைத்தார்.

அவருக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் ஜவகர்லால் நேரு. மனைவி பாபு என்றார், மகள் பாப்பு என்பார். தொண்டர்கள், தலைவர்கள், நேருவுக்கு பல பட்டங்கள் சூட்டினார்கள், அதில் குறிப்பிடத்தக்கது சில ஆசிய ஜோதி, மனிதருள் மாணிக்கம், சமாதானப்புறா, ரோஜாவின் ராஜா. குழந்தைகள் அவரை நேருமாமா என்றனர் அன்பால்.

இந்தியாவுக்கு விடுதலை 1947 இல் கிடைத்தபோது இந்தியாவின் முதல் பிரதமராக தேர்ந்தெடுக்க காங்கிரஸ் கட்சியினர் காந்தியடிகளின் தலைமையில் கூடினர்.

தனது வாரிசு என்று சொன்னவரையே இந்தியாவின் முதல் பிரதமராக காந்தியடிகளின் அனுமதியுடன் நேரு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காங்கிரஸ் ஆட்சி அமைத்ததும் முதன் முதலாக செய்யப்பட்ட சாதனைகள் சமஸ்தான மன்னர்கள் ஒழிப்பு. இந்து, முஸ்லிம் கலவரம் அடங்கியது. இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மற்றும் சில தொழில் துறைகள் ஆகியவற்றை தேசிய மயமாக்கியது. சீனாவின் தாக்குதலை சமாளித்தது.

நேருஜியின் பஞ்சசீலக்கொள்கை வெளிநாட்டினரால் பாராட்டப்பட்டது, அவரின் சமாதானக் கொள்கை, உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

எல்லோரும் ஓர் இனம், எம்மதமும் சம்மதம், எல்லோரும் இந்தியர்கள் என்னும் உயரிய நோக்கை உருவாக்கியவர் நேரு. இந்திய நாட்டு மக்களிடம் அவர் கொண்டிருந்த தூய அன்புக்கும் இந்திய மண்ணின்பால் அவர் கொண்டிருந்த நேசத்திற்கும் சான்றாக இருப்பது அவர் எழுதி வைத்த உயில்.

“என் மரணத்திற்குப் பின் எரிக்கப்பட்ட என் உடலின் சாம்பல் எனது தாய்த் திருநாடான இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் தூவப்பட வேண்டும்..

நான் எத்தனை பிறவி எடுப்பதாக இருப்பினும் அத்தனை பிறவிகளிலும் என் தாய் திருநாட்டின் மண்ணிலேயே பிறக்க வேண்டும்” என்றே பேராசைப்படுகிறேன்.

நமது உள்ளங்களைத் தொட்டு உணர்ச்சிகளை ஊடுருவிச் செல்லும் இந்த சொற்களை எழுதிய உத்தமர் நேரு தமது 75ஆவது வயதில் 1964 ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி இம் மண்ணுலகை விட்டு சென்றார்.

நமது லட்சோபலட்சம் குழந்தைகள் வளர்ச்சியடையவும் கல்வி வசதிகள் பெறவும் இந்த நாட்டுக்கும் சேவை புரிவதற்கும் உரிய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று குறிப்பாக நான் விரும்புகிறேன். இந்த வாய்ப்பு வசதிகள் கொண்டதோர் இந்தியாவை நாம் நிர்மாணம் செய்வோம். இந்த லட்சியமே நமது கனவு.

இந்தியாவில் நாம் நமது மக்களின் பிரதானத் தேவைகள் பற்றி கவலை கொண்டுள்ளோம், நமது மக்களுக்கு உணவு, உடை, உறைவிடம், கல்வி, சுகாதாரம், இத்தியாதி வேண்டும் என்பதில் அக்கறை காட்டுகிறோம்.

இந்த முக்கிய தேவைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வாழ்க்கை - மனித நேயம் என்பன பற்றி பேசுவதில் பயன் இல்லை. பட்டினி கிடக்கும் ஒருவனிடம் கடவுளைப் பற்றி கதைக்க முடியாது. அவனுக்கு உணவு தரவேண்டும். இது தாய் நாடு குறித்து நேரு செய்த லட்சியம் முழக்கம்.

ஒரு ஆண் குழந்தைபோல் எல்லாவித ஆற்றல்களையும், உலக அறிவையும் பெறவேண்டும் தன் மகள் இந்திரா என நேரு விரும்பினார். அம் முறையிலேயே அவரை வளர்த்தார். நேரு இந்திராவை தம் அரசியல் வாரிசாக ஆக்க முயல்கிறார் என்று பலர் குற்றம் சாட்டினர். அதற்கு நேரு,

“எனக்கு வாரிசு வேண்டும் என்று கருதியிருந்தால் என் மந்திரி சபையில் ஒரு மந்திரியாக ஆக்கியிருப்பேன். எனக்கு சிறந்த ஒரு செயலாளராக இருக்க வேண்டும் என்பதற்காகவே அவள் அறிவாற்றலை வளர்த்தேன்.

சில பிரச்சினைகள் என் முடிவைவிட என் மகளின் முடிவு பாராட்டும்படியும் ஆச்சரியப்படுத்தும்படியும் இருக்கிறது. அந்த அளவுக்கு அவள் அறிவாற்றல் வளர்ந்திருப்பது கண்டு நான் பெருமைப்படுகிறேன்” என்று ரஷ்ய பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]