விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஆஹிராஃ பிறை 03
SUNDAY APRIL 14, 2013

Print

 
பாங்குடனே வாழ்த்திடுவோம்

பாங்குடனே வாழ்த்திடுவோம்

காலாண்டும் கடந்ததுவே
காரிருளும் மறைந்ததுவே
பாரெல்லாம் மகிழ்ந்ததுவே
பாவையவள் வரவு கண்டு.

சித்திரைமூட்டம் என்றால்
சிறுவருக்கும் கொண்டாட்டும்
புத்தாடை பலவுடுத்தி - நல்ல
புதுப்பொலிவு கண்டிடுவர்

வாண வேடிக்கை பல செய்து
வகைவகையாய் பட்சணமுண்டு
வாசலிலும் வண்ணக் கோலமிட்டு
வாழ்த்தியும் வணங்கிடுவர்

தேன் கதலிவாழை ஈன்ற
தெவிட்டாத கனிகள் கொண்டு
தேமதுரப் பொங்கல் செய்து
தேவனையும் துதித்திடுவோம்.

மருத்து நீர் வைப்பதையும் - தமிழ்
மரபாகக் கொண்டு நாமும்
சிரத்தினிலே தேய்த்ததனை
சிறப்புடனே முழுகிடுவோம்.

கிட்டிப்புள், போர்த்தேங்காய்
கிறுகியாடும் கிளித்தட்டு
ஊஞ்சலதும் கட்டியாடி
ஊரெல்லாம் மகிழ்ந்திடுமே

பண்டிகைகள் எமக்குணர்த்தும்
பண்புகளைக் கடைப்பிடித்து
பார்போற்றும் வண்ணம்- நல்ல
பாங்குடனே வாழ்ந்திடுவோம்.


சித்திரைப் பெண்ணே நீயும் இத்தரை மலர்ந்து வாடி!

பொங்கும்
பாலைப்போலே
பொற் கனிப்
பூவைப் போலே
எங்கிலும்
சுகந்தம் வீச
எம்மவர்
புகழ்ந்து பேச(ச்)
சித்திரைப்
பெண்ணே நீயும்
இத்தரை
பிறந்து வாடி!

வறியவர்
வசதியாக
வருஷம் நீ
உதவியாக(க்)
காதலர்
கரங்கள் கோக்க
கணவர்தம்
மனைவியாக(ச்)
சீதனம்
கொடுமை ஒழித்துச்
சீதைகள்
வாழ நல்ல
இராமர்கள்
மண்ணில்
இருத்த(ச்)
சித்திரைப்
பெண்ணே நீயும்
இத்தரை
மலர்ந்து வாடி!


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]