விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஆஹிராஃ பிறை 03
SUNDAY APRIL 14, 2013

Print

 
மலரும் புத்தாண்டில் இலங்கையில் அமைதியும் அபிவிருத்தியும் நிலைகொள்ளும்

மலரும் புத்தாண்டில் இலங்கையில் அமைதியும் அபிவிருத்தியும் நிலைகொள்ளும்

மிழ் சிங்கள புத்தாண்டு மங்கள பேரிகை முழங்க பட்டாசு வேட்டுக்க ளுடன் மகிழ்ச்சிகரமான முறையில் மலர்ந்தது. மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் மத வழிபாடுகளை கோயில்களுக்கு சென்று முடித்துக் கொண்ட பின்னர் பெரியோர்களிடம் ஆசீர்வாதம் பெற்று, சிற்றுண்டிகளை சுவைத்து, ஆனந்தமாக புத்தாண்டு கொண்டாட்டங்களை காலையில் ஆரம்பித்தார்கள்.

அயலவர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் இருந்த பழைய பகைமைகளையும், கசப்புணர்வுகளையும் மறந்து மீண்டும் நல்லெண்ணத்தையும், நட்புறவையும் ஏற்படுத்திக் கொள்வதற்கு புத்தாண்டு ஒரு அரிய வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இவ்விதம் நாம் பல காலமாக எதிரிகள் என்று நினைத்தவர்களிடம் அதிகாலையிலேயே சென்று, கைகோர்த்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கும் போது, மற்றவர்களும் கடந்த கால கோபதாபங்களை மறந்து நீங்கள் நீட்டும் நேசக்கரத்தை வலுவாக பற்றிக்கொள்வார்கள்.

இது இருவருக்கு மத்தியில் அல்ல. மூன்று சமூகங்களுக்கிடையிலும் நடைபெற வேண்டிய ஒரு நற்பண்பாகும். எனவே, புத்தாண்டு மலர்ந்துள்ளதை அடுத்து இந்நாட்டு மக்கள் பல்லாண்டு காலமாக இனங்களுக்கிடையில் இருந்து வந்த பகைமையுணர்வு, சந்தேகங்களை முற்றாக மறந்து நல்லுறவை ஏற்படுத்திக் கொள்வதற்கு தங்களால் முடிந்தளவிற்கு சகல முயற்சிகளையும் எடுப்பது அவசியம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்நாட்டில் நாட்டுப் பற்றுள்ளவர்கள் நாட்டுப் பற்றற்றவர்கள் என்று இரண்டு இனங்களே இருக்கின்றன என்ற கருத்தை வலியுறுத்தியிருக்கிறார். இதிலிருந்து எங்கள் நாட்டு ஜனாதிபதிக்கு இன, மத பிரதேச பேதங்கள் எதுவுமற்ற ஒரு ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்புவதில் ஆர்வம் இருப்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

நாட்டின் வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு, மலையகம் என்ற சகல பிரதேசங்களிலும் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள், பறங்கியர், மலாயர் என்ற சகல மக்களும் விரும்பியதொரு இடத்தில் எவ்வித தடையுமின்றி கைவசம் பணமிருப்பின் வீடு, வாசல்களை வாங்கி அங்கு நிரந்தரமாக குடியிருப்பதற்கான உரிமையை பெற்றிருக்கிறார்கள் என்ற உண்மையை ஜனாதிபதி அவர்கள் பகிரங்கமாகவே அறிவித்திருப்பது இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் பெரு மகிழ்ச்சியூட்டுவதாக இருக்குமென்பது திண்ணம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சிறந்த ஆளுமையின் மூலம் எங்கள் நாட்டை வளமான நாடாக மறுமலர்ச்சியடையச் செய்து தெற்காசியாவின் இன்னுமொரு சிங்கப்பூராக மாற்ற வேண்டும் என்ற இலட்சியக் கனவை நிறைவேற்றுவதற்கு இந்நாட்டு மக்கள் அனைவரும் பங்காளிகளாக இணைந்து அரசாங்கத்தின் சகல முயற்சிகளுக்கும் பூரண ஒத்துழைப்பை நல்குவோம் என்று திடசங்கற்பம் செய்துகொள்வதற்கு மலர்ந்துள்ள இந்த புத்தாண்டு ஒரு அரிய வாய்ப்பை அளிக்கின்றது.

பொதுவாக தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்திலேயே மது அருந்தி நண்பர்கள், உறவினர்களுடன் கோஷ்டி சண்டையில் ஈடுபட்டு, சில சந்தர்ப்பங்களில் கொலைகள் கூட நடப்பதுண்டு. மது போதையில் வாகனங்களை அளவுக்கு அதிகமான வேகத்தில் ஓட்டுவதிலும் விபத்துக்களும் மரணங்களும் சம்பவிப்பதுண்டு.

பட்டாசுகளை கவனக் குறைவாக வெடிக்கச் செய்வதன் மூலமாக விபத்துக்களும், அயலவர்களிடையே மோதல்களும் ஏற்படுவதுமுண்டு. பலர் தீக் காயங்களுக்கும் இலக்காவதுண்டு.

ஜெனீவாவில் அமெரிக்காவும் அதன் சொற்படி நடக்கும் சில நாடுகளும் இலங்கை மீதான தீர்மானத்தை நிறைவேற்றி எங்களை அச்சுறுத்துவதற்கு எடுத்த முயற்சிகள் புத்தாண்டு பிறப்பதற்கு முன்னரே பிசுபிசுத்துப் போய்விட்டன. அதையடுத்து இலங்கைக்கு எதிரான வெளிநாட்டு நாசகார சக்திகள் நம் நாட்டு மக்களிடையே இன, மத பூசல்களை ஏற்படுத்துவதற்கு மேற்கொண்ட சதித் திட்டமும் மக்கள் ஒன்றுபட்டு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முடிவெடுத்த காரணத்தினால் படுதோல்வியடைந்தது.

இனிமேல் நாம் எதைப்பற்றியும் கவலைப்படாமல் நாட்டை அபிவிருத்திப் பாதையில் முன்னெடுத்துச் செல்வதற்கு ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். இதுவே புத்தாண்டு தினத்தில் நாம் எடுக்கும் திடசங்கற்பமாக அமைய வேண்டும்.

மலர்ந்துள்ள புத்தாண்டு அடுத்து வரும் பல்லாண்டுகளுக்கு சுபீட்சத்தை ஏற்படுத்தி எங்கள் நாட்டை தேனும் பாலும் ஊற்றெடுக்கும் புண்ணிய பூமியாக மாற்றி இலங்கை மாதாவை மனம் குளிரவைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் எல்லோருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]