நந்தன வருடம் மார்கழி மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை

ஹிஜ்ரி வருடம் 1433 சபர் பிறை 02

SUNDAY DECEMBER 30, 2012

Print

 
கொள்கை பரப்புச் செயலாளர் பதவியிலிருந்து சேகு நீக்கம்

மு.கா தலைமை மேற்கொண்ட அதிரடி தீர்மானம்

கொள்கை பரப்புச் செயலாளர் பதவியிலிருந்து சேகு நீக்கம்

காரணம் கூறப்படாததால் அதிர்ச்சியில் உறைந்தார் இஸ்ஸதீன்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளர் பதவியிலிருந்து முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாள ராக செயற்பட்ட சேகு இஸ்ஸதீன் 1998ஆம் ஆண்டு காலப் பகுதியில் அக்கட்சியிலிருந்து விலகினார். பின்னர் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தேசிய ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகளில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் தலைமையிலான தேசிய ஐக்கிய முன்னணி சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பட்டியலில் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதுடன் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டார். இதனையடுத்து கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வவுனியாவில் இடம்பெற்ற முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாட்டின் போது கொள்கை பரப்புச் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார். எனினும் முஸ்லிம் காங்கிரஸின் பல அதியுயர் பீட கூட்டங்களுக்கு எந்தவித காரணங்களுமின்றி தொடர்ந்து கலந்துகொள்ளாமையினால் குறித்த பதவியிலிருந்து சேகு இஸ்ஸதீன் நீக்கப்பட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட முஸ்லிம் காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி வெற்றிடத்திற்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான யூ.எல்.எம்.என்.முபீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தன்னைப் பதவி நீக்கியமைக்கான காரணம் எதுவும் கூறப்படாமையினால் அவர் அதிர்ச்சியிலிருந்து மீளாதவராகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை அவர் தனது பதவிக்குரிய பணியைச் செய்யத் தவறிவிட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் அவரது முதுமைப் பருவமே பதவி விலக்கலுக்கான காரணம் எனவும் கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]