புத் 65 இல. 01

நந்தன வருடம் மார்கழி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 சபர் பிறை 23

SUNDAY JANUARY 06 2013

 

 
அதிகாரப் பகிர்வுக்கான அடிப்படையும்

அதிகாரப் பகிர்வுக்கான அடிப்படையும் அளவுகோலும் மாகாணசபைகளா?

,லங்கையின் அரசியல் சுதந்திர வரலாற்றில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் இறுதி அளவு கோலாக கண்டுபிடிக்கப்பட்டவையே மாகாணசபை முறைமையாகும். அந்த அளவு கோள் குறைகள் - நிறைகள் இருப்பதாக அல்லது விமோசனம் தராத விமர்சனம் என்றாகியிருக்கலாம். அதிகாரம் அற்று விடும் என்றடிப்படையில் அதனை ஒழித்துக்கட்டவேண்டும் என்ற கோஷமிருக்கலாம். ஆனால் அளவு கோல் பரிமாணம் அழிந்துபோக முயற்சிக்காதிருத்தல் சிறந்ததாகும். 13ஆவது திருத்தத்தை ஒழித்துக்கட்டவேண்டும் என்பதற்காக மாகாண சபை முறைமைகளை மறைமுகமாக இல்லாமல் செய்துவிடுவதற்கான முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

கண்டுபிடிப்பும் தந்திரோபாயமும்

ஜனநாயக சிந்தனைகளை விபரிக்கின்ற எந்த நாட்டிலும் குறித்த காலப் பகுதியில் நிலைகொண்டுள்ள அரசாங்கம் மற்றும் செயல்படு நிறுவனங்களின் உருவாக்கம் ஊடாக பிரஜைகள் தங்களது தேவைகளை சமாளித்துக்கொள்ளவும், பூர்த்தி செய்து கொள்ளவும் இடமளிக்கப்படுகின்றனர். அந்தடிப்படையில் மத்திய அரசாங்கத்துடன் அதிகாரப் பகிர்வு செய்து கொள்வதற்காகவும், சிறுபான்மை மக்களின் கோரிக்கையை திருப்திப்படுத்துவதற்குமான கருத்திற்கொள்ளத்தக்க ஒரு கண்டுபிடிப்பே 13ஆவது திருத்தத்தின் கீழ் 1988இல் தாபிக்கப்பட்ட மாகாண சபை முறைமையாகும்.

பங்காற்றுகையும் நம்பிக்கையும்

மாகாணசபை முறைமை மத்தியுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள சிறுபான்மை மக்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இந்திய இலங்கை உடன்படிக்கையின் கீழான வேலைத்திட்டம் என்பதை அறிவோம். அதிகாரப் பகிர்வு என்பது அடிப்படையில் இனக்குழுமங்களுக்கு அதிகாரத்தைப் பகிர்வதை நோக்காகக் கொண்டுள்ளபோதிலும் குறித்த பிரதேசம் சமூகம் போன்றவற்றின் முன்னுரிமைகளை முகாமைப்படுத்துவதில் ஒரு பங்குதாரராக செயல்பட்டு கிராமியத்துறையை முன்னுக்குக் கொண்டுவருவதில் முக்கிய பங்காற்றக்கூடிய ஒரு நிறுவனமாகவும் மாகாணசபைகள் பார்க்கப்பட வேண்டும். கிராமியப் பகுதிகளில் அபிவிருத்தியில் இருந்ததும் தொடர்வதுமான இளைஞர் ஈடுபாட்டுக்கான இடைவெளியை சந்தேகத்துக்கு இடமின்றி மாகாண சபைகளுக்கான முழு அளவிலான அதிகாரப் பகிர்வு நிரப்பும் என்பது நம்பிக்கையாகும்.

1971-1987

மாகாண சபை என்ற நிறுவனம் - அதன் ஆணைக்கு அமையவும், ஆணையின் கீழும் சுதந்திரமாக செயலாற்ற வாய்ப்பளிக்கப்படுமானால் மாகாணங்கள் மத்தியில் அபிவிருத்தி இலக்குகளை எட்டுவதில் பெரும் ஒருமைப்பாட்டினையும், சீர்பாட்டினையும் கொண்டுவரக்கூடிய முடுக்கியாக செயல்படலாம் என கூறப்படுகிறது.

சமூக மட்டத்தில் நடவடிக்கைகளை முன்னெடுத்து சமூகப் பங்காற்றுகை ஈடுபாடு ஐயமின்றி மக்களுக்கு திருப்தியைக் கொடுத்து மக்களை எதிரும் புதிருமான அரசியலில் இருந்து தள்ளிவைக்கும். 1971/1987 காலப்பகுதிகளில் நாட்டின் தென்பகுதிக் கலவரங்களால் தோன்றியது போன்ற சமூகத்தகராறுகள் அமைதியின்மை தூர விலகிச் செல்லும். இது இனப்பிரச்சினை தொடர்பான தகராறுகளையும் தகர்த்தெறியலாம்.

வடக்குத்தேர்தலும் நெறிப்படுத்துகையும்

இந்தக் கட்டமைப்பில் வடமாகாணத்துக்கான தேர்தல் பற்றி பிரஸ்தாபிக்கப்படுகிறது. 13ஆவது திருத்தம் - சிறுபான்மைக் கோரிக்கையை திருப்தி செய்யவும், அதிகாரப் பகிர்வுக்கு அடிப்படையாக இருந்தும், யுத்தத்துக்கு பின்னரான சூழலில் ஏனைய விவகாரங்களையும் முகாமை செய்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பளிக்கப்படுவது கடினம் மிக்கது என்ற வாதமுண்டு. என்றாலும் தெரிவு செய்யப்படக்கூடிய உறுப்பினர்கள் அதிகம் விடயங்களை அறிந்தவர்களாகவும், சமூகத்தின் தேவைகளுக்கு செவிசாய்க்கக்கூடியவர்களாகவும் இருக்கலாம்.

ஊகமும் ஐதீகமும்

மாகாண சபைகளை ஒழித்துவிடவேண்டும் என்று கடுந்தொனியிலான கோரிக்கைகளும், கோஷங்களும், பல்வேறுபட்ட அரசியல்வாதிகள், தலைவர்கள், கல்விமான்கள், தொழில்சார் ஸ்தாபனங்கள், தனிநபர்கள் என்றடிப்படையில் எழுந்து நிற்கின்றன. சிறுபான்மையினரின் கோரிக்கையை திருப்திப்படுத்த அதிகாரத்தை பகிர்வது முக்கியமல்ல என்று கூறுவோர்,பொருளாதார அபிவிருத்தி, தேர்ச்சியடைந்த கல்வி, சுகாதார வசதிகள் போன்றவற்றை ஸ்திரப்படுத்தினால் போதுமானதென்கின்றனர். பங்கரவாதமும், பங்கரவாத இயக்கத்தின் தலைவரும் ஒழிக்கப்பட்டுவிட்டதால், அதிகாரப் பகிர்வுக்கான கோரிக்கை ஏற்கனவே இருந்ததுபோன்ற கூர்மையுடன் இல்லை என்று அரசியல் தலைவர்கள் கருதுகின்றனர்.

பன்மைத்தன்மையும் உள்ளக ஒருங்கிணைப்பும்

யுத்தம் முடிவடைந்த மறுகணமே இடைவெளிகளை கட்டியெழுப்புவதற்கான ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளக தொடர்பாடல்களுக்கான நிலமைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கவேண்டியது அவசியம் என உணரப்படுகிறது. இனப்பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கான ஒரு முயற்சியாக ஏற்கனவே திட்டமிடப்பட்டதை தகர்த்தெறியும் பொருட்டு காலம் செலவிடப்படக்கூடாது.

பன்மைத்தன்மை கொண்ட சமூகத்தில் உள்ளக இன உறவுகளுக்கு ஒருங்கிணைப்பாகவே அடையாள அரசியல் கருதப்படுகிறது. இவ்வாறான நிலமை, திட்டமான வடிவம் பெறவில்லை மாகாண சபைகளை ஒழித்தல், அரசியல், நிர்வாக முகாமைக்காக அதிகாரப்பகிர்வு கட்டமைப்புக்கான சிறுபான்மை மக்களின் நீணடகாலக்கோரிக்கையை புறந்தள்ளும் ஆத்திரமூட்டக்கூடியதும் சிராய்க்கக்கூடியதுமான நிலைமையையே தோற்றுவிக்கும்.

பிடுங்கி எறியும் எண்ணமும் நியாயப்படுத்தமுடியாமையும்

காலத்துக்குக்காலம் 13வது திருத்தத்தை ஒழிக்கக்கோரும் எண்ணற்ற அரசியல் அறிக்கைகள் வெளிவந்தும் மாகாண சபைகளுக்கு அவை பெரிதாக தெரிவதில்லை. சமீப காலந்தொட்டே மாகாண சபைகளும் அது தொடர்பில் விழித்துக்கொண்டுள்ளன.

இறைமையுள்ள இரு தேசங்களுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் விளைவாக 13ஆவது திருத்தம் தோன்றியதன் காரணமாக சர்வதேச நியமங்களைக் கொண்டே அதனை நோக்கவேண்டும் என்ற கருத்தும் இருந்தது. இதற்கான முக்கியத்துவம் பேச்சுக்களில் முக்கிய இடத்தை பெறவில்லை. எவ்வாறாயினும் 13ஆவது திருத்தத்தை பிடுங்கி எறியும் வாய்ப்பு அரங்கேற வில்லை.

அதே வேளை இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியான மாகாண சபைகள் பலவந்தமாக நாட்டில் திணிக்கப்பட்டவை என்பது ஒரு வகை சர்ச்சைக்குரிய விஷயமாகும். எவ்வாறாயினும் இந்தியாவின் அரசியல் நலன்களை மையமாகக் கொண்டு ஊக்கப்படுத்தப்பட்டதே இந்தியத்தலையீடு என்பது மறுக்கப்பட முடியாததாகும் என்று அன்றும் இன்றும் கூறப்பட்டது. கூறப்படுகிறது. ஆனால் குறித்த உடன்படிக்கை கைவிடப்படவேண்டும் என்ற காரணமும், போராட்டமும் நியாயப்படுத்த முடியாததாகும் என்று கூறப்படுகிறது.

உடன் படிக்கையும் உடன்பாடின்மையும்

அன்றைய இந்திய - இலங்கை உடன்படிக்கை மூன்று முக்கியமான தீர்மானங்களை எடுக்கச் செய்தது. அவை இலங்கையின் வரலாற்றில் ஏற்கனவே அங்கீகரிக்கப்படாததாக இருந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டது. இலங்கை ஒரு பல்லின மத கலாசார விழுமியங்களைக் கொண்ட பன்மைச் சமூகம் என்பதற்கான உத்தியோகபூர்வமான அங்கீகாரத்தையும் சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை திருப்திப்படுத்துவதற்கு அதிகாரப்பகிர்வு ஊடாக அதிகாரப்பகிர்வு செய்தல் என்பதையும் சிங்களம், தமிழ், ஆங்கிலம் போன்றன நாட்டின் உத்தியோக பூர்வமொழிகளாக அரசியலமைப்புச்சட்ட அங்கீகாரம் (அதற்கு 16வது திருத்தம் உறுதுணையாகியது) என்பதையும் குறிப்பிட்டுக்கூறமுடியும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.