நந்தன வருடம் மார்கழி மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை

ஹிஜ்ரி வருடம் 1433 சபர் பிறை 02

SUNDAY DECEMBER 30, 2012

Print

 
வினாப்பத்திர மோசடியில் ஈடுபட்டோருக்கு எவ்வித மன்னிப்பும் கிடையாது

வினாப்பத்திர மோசடியில் ஈடுபட்டோருக்கு எவ்வித மன்னிப்பும் கிடையாது

பரீட்சையில் அடிக்கடி இடம்பெறும் குளறுபடிகள், க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விஞ்ஞான வினாத்தாள் வெளிவந்தமை மற்றும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன வழங்கிய பேட்டி

- நிஷா ஆப்டீன்...-

கேள்வி: பரீட்சை தொடர்பான பிரச்சினைகளை 1911 என்ற தொலைபேசி இலக்கத்தோடு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு கேட்கப்பட்டிருந்தது. இவ்விலக்கத்துககுக் கிடைக்கும் முறைப்பாடுகள் தொடர்பாக அது எவ்வாறு செயற்படுகின்றது?

பதில்: இத்தொலைபேசி இலக்கமானது 24 மணித்தியாலயமும் செயற்பாட்டிலிருக்கும் ஒன்றாகும். பரீட்சை தொடர்பாக கிடைக்கும் முறைப்பாடுகளை உடனடியாக, அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்விலகத்துக்கு வரும் எல்லா முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டு அது தொடர்பாக பரிசீலனையும் செய்யப்படுகின்றது.

கேள்வி: இம்முறை கல்விப் பொதுத்தராதர (சாதாரண தரம்) பரீட்சையின் விஞ்ஞான வினாப்பத்திரத்தின் 19 வினாக்கள் உள்ளடங்கிய பகுதியொன்று ஏற்கனவே வெளிவந்திருக்கின்றது. இது தேசிய ரீதியிலான குற்றமாகும். இது தொடர்பாக நடக்கும் பிழைகளால் அப்பாவி பிள்ளைகள் தான் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு சலுகை காட்ட ஏதேனும் நடைமுறைகள் இருக்கின்றனவா?

பதில்: அதுபற்றி பேசுவதற்கு முன் ஒரு விளக்கத்தை நான் தர வேண்டும். இப்பிரச்சினை மேலெழுந்த சந்தர்ப்பத்திலேயே அதனோடு தொடர்புடையவர்களது தராதரத்தைப் பார்க்காது ஆகக் கூடிய தண்டனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

நாம் பரீட்சை ஆரம்பமாக முன்னரேயே ஊடகங்கள் மூலமாக பரீட்சை தொடர்பாக முறைகேடுகள் நடந்தால் எமக்கு அறிவிக்குமாறு அறிவித்தல் கொடுத்தோம். ஒரு தொலைபேசி இலக்கமும் கொடுக்கப்பட்டது. அதன்படி கிடைத்த முறைப்பாடுகள். கருத்துக்கள் தொடர்பாக நாம் உடனடியாக பரிசீலனை செய்ய ஆரம்பித்தோம். பொலிசாரின் ஒத்துழைப்பையும் அதற்காகப் பெற்றுக் கொள்வதாகக் கூறினோம். விஞ்ஞான வினாத்தாள் வெளியாகிவிட்டது. அதன்படி விஞ்ஞான வினாப்பத்திரத்தின் 19 வினாக்களுக்கு சிங்களம், தமிழ், ஆங்கிலம் என்ற மொழி வேறுபாடுகள் இல்லை. விடையளித்த அனைவருக்கும் 19 புள்ளிகளைக் கொடுக்க இவ்வினாத்தாளை தயாரித்த கல்வியியலாளர்கள், கல்விப்பீட சபையின் அங்கத்தவர் குழாம் தீர்மானித்தது. நாம் அவற்றை செய்வோம். அதை தவிர குற்றமிழைத்தோருக்கு ஆகக் கூடிய தண்டனை வழங்க தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருகின்றோம்.

புள்ளிகள் கொடுக்காமல் மீண்டும் அந்த பாடத்துக்கு பரீட்சை நடத்தினால் நல்லது என்றும் ஒரு சிலர் கூறுகின்றனர். அந்தத் தீர்மானத்தையெடுக்க நான் கல்வி அமைச்சராகவிருந்தபோதும் எனக்கு அதற்கு அதிகாரமில்லை.

எமது நாட்டில் பரீட்சை விடயங்களை மேற்கொள்வது முழுமையாகவே சுதந்திரமாகச் செயல்படும் பரீட்சைத் திணைக்களத் தினூடாகவாகும். இவர்கள் இது பற்றி பேசினார்கள். பாடங்களுக்குரிய வினாத் தாள்களைத் தயாரிப்பது நாங்களல்ல. அந்தந்த பாடங்களுக்குரிய படித்த கல்விமான்களைக் கொண்ட கல்விப் பீட குழுவொன்றுள்ளது. அவர்கள் தான் இத்தகைய பிரச்சினைகள், சிக்கல்கள் வரும் போது அப்பாவி ஒன்றுமறியா பிள்ளைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் தீர்வுகளை பிரேரிப்பது இவர்கள் தான். பரீட்சை ஆணையாளர் நாயகம் உட்பட முக்கிய குழு இது தொடர்பாக நீண்ட நேரம் எல்லா பிரிவுகள் பற்றியும் தேடிப்பார்த்து தான் தீர்வுகளை எடுத்தார்கள்.

கேள்வி: பரீட்சை வினாத்தாள்கள் இதற்கு முன்பும் வெளியாகி இருக்கின்றன எனக்கூறி அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியுமா?

பதில்: நாம் மக்களுக்கு முகங் கொடுக்க வேண்டிய பிரச்சினைகளிலிருந்து தப்பிச் செல்ல மாட்டோம். இதற்கு முன் பரீட்சை வினாத்தாள்கள் வெளியாகியுள்ள சந்தர்ப்பங் களைக் கண்டிருக்கிறோம். முன்னர் ஐ. எம். ஆர். ஏ. ஈரியகொல்ல கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் பரீட்சை தாள்கள் சாக்கு கணக்கில் கடத்தப்பட்டன.

பரீட்சை தாள்களை மட்டுமன்றி சாக்குகளையும் எடுத்துச் சென்றார்கள். ஆனால் இன்று அவ்வாறில்லை. இந்த வினாத்தாள்களை தொகையாக கடத்தினாலும் ஒரு பகுதியைக் கடத்தினாலும் அவற்றை நாம் குற்றங்களாகவே கருதுகிறோம். இக்குற்றங்களை இழைப்போருக்கு ஆகக் கூடிய தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். பரீட்சை தொடர்பான திருட்டுக்கும்பலை பாதுகாக்க எங்களுக்கு எந்த அவசியமுமில்லை.

கேள்வி: இத்தகைய தேசிய அநியாயங்கள் ஏதுவாக இருப்பது டியுஷன் வகுப்புகள் தான் என்று யாராவது கூறினால் அதை ஏற்றுக் கொள்வீர்களா?

பதில்: அவ்வாறு நடக்க அது மட்டும் காரணமில்லை. ஒழுக்க முறை, நேர்மை இல்லாத ஒரு குழு செய்யும் குற்றங்களுக்கு சகல டியூஷன் வகுப்பு நடத்துவோரையும் உள்ளடக்குவது உசிதமல்ல.

கேள்வி: டியூஷன் வகுப்புகள் தொடர்பாக ஓர் ஒழுங்கு முறை வகுக்க வேண்டுமல்லவா?

பதில்: நாம் டியூஷன் வகுப்புகள் மட்டுமன்றி எமது நாட்டில் இப்போது நடைமுறையிலிருக்கும் சர்வதேச பாடசாலைகள், உப பாடசாலைகள் தொடர்பாகவும் எதிர்காலத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

(தொடர் பக். 18)


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]