நந்தன வருடம் மார்கழி மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை

ஹிஜ்ரி வருடம் 1433 சபர் பிறை 02

SUNDAY DECEMBER 30, 2012

Print

 
மீண்டுமொரு போராட்டத்திற்கு வித்திடுவது ஆரோக்கியமானதல்ல

மீண்டுமொரு போராட்டத்திற்கு வித்திடுவது ஆரோக்கியமானதல்ல

முப்பது வருட காலமாக நடைபெற்ற போர் முடிவிற்கு வந்து மூன்றரை வருடங்களாகியும் பழைய நிலைக்கு மீண்டெழ முடியாது தடுக்கி விழுந்து கொண்டி ருக்கும் தமிழினத்திற்கு மீண்டுமொரு போர் தேவைதானா எனும் கேள்வி மேலெழுந்துள்ள நிலையில் சிறிது சிறிதாகப் போராட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான இரகசிய முஸ்தீபுகளில் புலம்பெயர் சமூகத்திலுள்ள சில குழுக்களின் உந்துதலுடன் ஒருசில உள்ளூர் அரசியல்வாதிகள் ஈடுபட்டுவருவது கவலையளிப்பதாகவே உள்ளது. இதற்காக இவர்கள் பல்கலைக்கழக மாணவர் சமூகத்தைப் பாவித்து வருவதுடன் இலங்கையில் பிரிவினையைத் தோற்றுவிக்கக் காத்திருக்கும் சில நாடுகளையும் துணைக்கு அழைத்துள்ளமை தெரியவந்துள்ளது.

இது ஆரோக்கியமான விடயமல்ல. தமிழினத்தை மீண்டுமொரு தடவை அழிவுப் பாதைக்குள் இட்டுச் செல்வதாகவே நிச்சயம் இது அமையும். போர் நிறைவடைந்த பின்னரும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாமல் காலம் தாழ்ந்து கொண்டு செல்கிறது என்பது உண்மையே. அதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும். கண்டறிந்து அதற்கான தீர்வினைப் பெற வேண்டுமே தவிர இதற்காக எதுவுமே அறியாத அப்பாவி மாணவ சமூகத்திற்கு உருவேற்றி அவர்களைப் போராட வைத்து அதன் மூலமாகத் தீர்வு காண முயல்வது முறையான அணுகுமுறையாக ஒருபோதும் இருக்காது. வன்னியில் இறுதி யுத்தத்திற்கு நேரடியாக முகங்கொடுத்த எவரும் அல்லது அந்த உறவுகள் தெரிவித்த தமக்கேற்பட்ட சோகங்களைக் கேட்ட எவரும் மீண்டுமொரு யுத்தம் ஏற்பட ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள்.

தமிழ் ஊடகங்களையும், சர்வதேசம் எனும் நிஜமில்லாத நிழலையும் நம்பி அரசியல் நடத்திவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, யுத்தம் முடிவடைந்து மூன்றரை வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் அரசியல் தீர்வில், தமது உண்மையான நிலைப்பாடு என்னவென்று இதுவரை வெளிப்படையாகத் தெரிவிக்காது அரசாங்கத்தை வசைபாடி வருவதிலேயே தனது முழுக் கவனத்தையும் செலுத்தி வருகின்றது.

தமிழ் மக்களின் இன்றைய உண்மையான மன உணர்வு என்ன என்பதை கூட்டமைப்பால் புரிந்து கொள்ளமுடியாதுள்ளது. அதனால்தான் அவர்களால் ஒரு தீர்க்கமான முடிவிற்கு இன்னமும் வரமுடியாதுள்ளது. மாறுபட்ட கருத்துக்களை தமிழ் ஊடகங்களிலும், முகவரியற்ற இணையத்தளங்களிலும் தெரிவித்து உள்நாட்டிலுள்ள மக்களை ஒரு விதமாகவும், புலம்பெயர் சமூகத்தை இன்னொரு விதமாகவும் கூட்டமைப்பின் தலைவர்கள் குழப்பி வருகின்றனர். மக்கள் தம்மைப் புறக்கணித்து விடுவார்களோ எனும் பயம் கூட்டமைப்பு மத்தியில் இப்போது மிக வலுப்பெற்றுள்ளது.

அரசாங்கத்தை கடுமையான தொனியில் விமர்சித்துவரும் கூட்டமைப்பால் இனிவரும் காலங்களில் எவ்வாறு அரசுடன் உண்மையான பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள முடியும் என்பதில் பலருக்கும் சந்தேகம் உள்ளது. தமிழ் மக்களது பிரச்சினைகளில் அக்கறையுடன் செயற்படும் அனைத்துக் கட்சிகளினதும் கருத்துக்களை உள்வாங்கியே தீர்வு காணப்படவேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாகத் தெரிவித்துள்ளது. வடக்கில் மீள்குடியேற்றம், குடியேறியுள்ள மக்களுக்குள்ள குறைபாடுகள், சரணடைந்தும் விடுவிக்கப்படாத தமிழ் இளைஞர்களின் நிலை, சிறையில் வாடும் அப்பாவித் தமிழ் இளைஞர், யுவதிகளின் நிலை தொடர்பாக எவ்விதமான அக்கறையும் தமிழ்க் கூட்டமைப்பிற்கு இல்லை போலவே தெரிகிறது.

அப்படியே யாராவது ஞாபகப்படுத்தினால் ஓர் அறிக்கையை அல்லது கடிதத்தை எழுதி இவர்களது துதிபாடும் தமிழ் ஊடகங்களுக்கு வழமைபோல அனுப்பி வைத்துவிடுவர். அவர்களும் தலைப்புச் செய்தியாகப் பிரசுரித்து விடுவர். அந்தக் கடிதம் ஜனாதிபதிக்கோ அல்லது சம்பந்தப்பட்ட அமைச்ச ருக்கோ கிடைக்குதோ இல்லையோ பத்திரிகைகளுக்கு சரியான நேரத்திற்கு அனுப்பி வைக் கப்பட்டு அது கிடைத்ததா என உறுதியும் செய்யப்பட்டு முக்கியத்துவம் அளித்துப் பிரசுரிக்குமாறு கேட்டு விட்டுதான் மற்ற வேலை. இதுவா தமிழ் மக்களுக்கான அரசியல்? இதற்காகவா தமிழ் மக்கள் இவ்வளவு வேதனைகளுக்கு மத்தியிலும் இவர்களைத் தெரிவு செய்தனர்?

தமிழர் விடுதலைக் கூட்டணியில் 1977ஆம் ஆண்டு முதல் இளைஞர் பேரவையில் உறுப்பினர்களாக இருந்து இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களாக வளர்ந்துள்ள பலர் எந்தவொரு போராட்டத்திலும் நேரடியாகப் பங்குபற்றவில்லை. மாறாக தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்திப் போராடும் அளவிற்கு தூண்டும் செயற்பாடுகளில் மட்டுமே இவர்கள் ஈடுபட்டார்கள்.

வட்டுக்கோட்டை தீர்மானம் எடுத்த காலம் முதல் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் முக்கிய புள்ளிகளாக உள்ளவர்கள் பலர் அன்று தமிழ் இளைஞர்களுக்குத் தவறான பாதையைக் காட்டி அவர்களை ஆயுதம் ஏந்திப் போராட வைத்தனர். இதன் மூலம் தாம் இன்றுவரை தமது அரசியல் பயணத்தைத் தொடர்ந்து வருகின்றனர். இது வேதனை தரும் விடயமாகும்.

இளைஞர் அணியில் இருந்தால்தான் எதிர்காலத்தில் ஆயுதப் போராட்டத்திற்குச் சென்று அழிவைத் தேடாது தொண்ணூறு வயதானாலும் அரசியல்வாதியாக இருந்து காலத்தைக் கடத்தலாம் என்பதை இன்று கூட்டமைப்பிலுள்ள பலர் முப்பது வருடங்களுக்கு முன்னரேயே உணர்ந்து தந்திரமாகச் செயற்பட்டுள்ளனர். தமிழ் இளைஞர் குழுக்களை அரசாங்கத்திற்கு எதிராகக் கிளர்ச்சிகளை நடத்தவிட்டு அதில் இவர்கள் இவ்வளவு காலமும் குளிர் காய்ந்துள்ளனர். இவர்களது தவறான வழிநடத்தலில் படித்த மற்றும் கிராமத்து தமிழ் இளைஞர்கள் பலரும் இரையாகினர். அத்துடன், இந்தக் கொடிய யுத்தம் காரணமாகப் பல தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன.

இன்று மீண்டும் ஒரு யுத்தத்திற்கு இவர்கள் வித்திடுகின்றனர். அதற்காக மீண்டுமொரு தடவை பல்கலைக்கழக மாணவர்களைப் பாவிக்க முயல்கின்றனர். இதற்கு இனி தமிழ்ச் சமூகம் ஒருபோதும் அனுமதி வழங்கக் கூடாது. இனிமேல் போராடுவதாயின் இதுவரை காலமும் கொழும்பிலும், வெளிநாடுகளிலும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த அரசியல்வாதிகளும், அவர்களது பிள்ளைகளும் வந்து போராடட்டும். போராட்டத்தினதும், அதன் இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிப்பதும் எவ்வளவு கடினமானது என்பதை அவர்கள் நேரில் உணரட்டும்.

உள்ளூரில் அமைதியாக வாழ்ந்துவரும் தமிழினத்தை தமது தேவைக்காக மீண்டும் படுகுழியில் தள்ளிவிட இவர்கள் முனையக்கூடாது. தம்மையும் தமது உறவுகளையும் ஐரோப்பிய நாடுகள் திருப்பியனுப்பிவிடும் எனும் பயத்தில் வடக்கில் சுமுக நிலை ஏற்படவில்லை என்பதைக் காட்ட இவர்கள் நடத்தும் நாடகமே ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் ஆகும். இதனை வடக்கு மக்களும், மாணவ சமூகமும் நன்கு விளங்கி நடந்தால் சரி.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]