நந்தன வருடம் மார்கழி மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை

ஹிஜ்ரி வருடம் 1433 சபர் பிறை 02

SUNDAY DECEMBER 30, 2012

Print

 
உண்மையான தரகு வியாபாரி யாரென்பது யாவரும் அறிவர்

உண்மையான தரகு வியாபாரி யாரென்பது யாவரும் அறிவர்

பன்னூலாசிரியர், எழுத்தாளர், கலைஞர் என்றெல்லாம் புகழப்படும் அன்புக்கும், மரியாதைக்குமுரிய மானா மக்கீன் ஐயா கடந்த வாரம் கலைக்கமலுக்காக வாதாடி எழுதிய ஒரு மடலில் என்னைத் தரகு வியாபாரி என்று தேவையற்ற வகையில் விமர்சித்திருப்பது கண்டு என்னை விடவும் அவருக்காக மிகவும் வேதனைப்பட்டேன். அவரில் நான் வைத்திருந்த சகலவிதமான மரியாதையையும் முற்றாக இழந்துவிட்டேன். தானொரு கலைஞனாக, எழுத்தாளனாக, இலக்கியவாதியாக இருந்து என்னை விமர்சித்திருந்தால் அதனை நான் ஏற்றுக் கொள்வேன். ஆனால் இத்தனை கீழான வார்த்தைப்பிரயோகம் உண்மையில் அவரால் பிரயோகிக்கப்பட்டிருப்பின் (அதில் எனக்கு சந்தேகமும் உள்ளது) அவர் தன்னை ஒரு பன்னூலாசிரியர், இலக்கியவாதி, எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியை இன்றுமுதல் முற்றாக இழந்துவிடுகிறார் என்பதே உண்மை.

இலங்கையிலிருந்து வந்து ரி.நகரில் மலிவு விலையில் பொன்னாடைகளை வாங்கி அவற்றைக் கொண்டுசென்று தமிழகப் பிரமுகர்களிடமும், எழுத்தாளர்களிடமும் கெஞ்சிக் கூத்தாடி தமக்குப் போர்த்துமாறு கூறி படங்களை எடுத்து இலங்கைப் பத்திரிகைகளில் பிரசுரித்துவரும் பலர் இருக்கிறார்கள் என்ற உண்மை எத்தனைபேருக்குத் தெரியும். என்னைத் தரகு வியாபாரி என விழித்திருக்கும் மக்கீன் ஐயா அவர்கள், எத்தகைய வியாபாரி என்பது சிலரைக் கேட்டால் கதை கதையாகக் கூறுவார்கள். நான் அவற்றை அவரைப் போன்று நாகரிகமில்லாது சிறுபிள்ளைத் தனமாகக் கிளற விரும்பவில்லை. மக்கீன் அவர்கள் என்னைப் பற்றிய தனது தரகு வியாபாரி எனும் கருத்தை பகிரங்கமாக வாபஸ் பெறாவிட்டால் தமிழகத்தில் எவரும் இனியும் அவரை ஒரு சிறு எழுத்தாளனாகக் கூடக் கருத முடியாத அளவிற்கு அவரது உண்மையான சுயரூபப் புகழை நான் தமிழகத்தில் பரப்புவதுடன் அவருக்கு இதுவரை தமிழகத்தில் கிடைத்த விருதுகளையும், பட்டங்களையும் வழங்கியவர்கள் மூலமாகவே மீளப்பெற நடவடிக்கை எடுக்கவும் தீர்மானித்துள்ளேன் என்பதை மட்டும் அவருக்குக் கூறி வைக்க விரும்புகிறேன். அவரது பதிலிலேயே இது தங்கியுள்ளது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]