நந்தன வருடம் மார்கழி மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை

ஹிஜ்ரி வருடம் 1433 சபர் பிறை 02

SUNDAY DECEMBER 30, 2012

Print

 
மு.காவின் கெளரவமான பயணமும், சாணக்கியமும்

மு.காவின் கெளரவமான பயணமும், சாணக்கியமும்

பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் கெளரவமான நீண்டதோர் அரசியல் பயணத்தை முன்னெடுத்துவரும் முஸ்லிம் காங்கிரஸை குறைத்து மதிப்பிட்டு பலவீனமாகக் கருதி கருத்துக்களை வெளியிடுவோர் குறித்துத் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ள மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீம், அத்தகைய அனைவரும் விரைவில் எமது சாணக்கியத்தைப் புரிந்துகொள்வர் என்றும் தெரிவித்திருக்கிறார். தூரநோக்கிய சிந்தனையுடன் சமூகத்தை வழிநடத்தும் தமது கட்சியின் எதிர்கால நிலைப்பாட்டை அறிந்துகொள்ள முடியாத கட்சியிலிருக்கும் சிலரால் அண்மைக்காலமாக எழுப்பப்பட்டுவரும் மெளனமான வினாக்களுக்கு கடந்த வாரம் நடைபெற்ற கட்சியின் பேராளர் மாநாட்டில் வைத்து அவர் தெளிவாகப் பதிலளித்துள்ளார்.

மு.கா அரசாங்கத்திலிருந்து விலக வேண்டும் எனச் சிலர் அழுத்தம் கொடுத்துவரும் நிலையில் அதற்கான ஒருவித அவசியமும் தற்போது எழவில்லை எனவும், இப்போதைக்கு அத்தகையதொரு முடிவினை மு.கா எடுக்காது எனவும் அமைச்சர் ஹக்கீம் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார். கட்சியின் சகல உயர்மட்ட உறுப்பினர்களும் ஒன்றுகூடியிருந்த சந்தர்ப்பத்தில் அவர் இக்கருத்தினை முன்வைத்து அதற்கான காரணத்தையும் தெளிவாகக் கூறியுள்ளார். நடந்த எந்தவொரு தேர்தலிலும் அரசிலிருந்து விலகி அரசியல் நடத்துங்கள் என்று மக்கள் தனது கட்சிக்கு ஒருபோதும் ஆணையை வழங்கவில்லை என்று தெரிவித்துள்ள ஹக்கீம் அவர்கள், அவ்வாறு ஒரு வேளை மக்கள் தமது அழுத்தத்தை ஆணையாக வழங்கியிருந்தால் அதுபற் றிச் சிந்தித்திருக்கலாம் எனவும் மறைமுகமாகத் தெரிவித்திருக்கிறார். ஒரு சமூகம் சார்ந்த கட்சியின் தலைவர் என்பவர் வெறுமனே எண்ணிக்கைக்காக கட்சிக் கூட்டங்களை நடத்திவிட்டுப் போகும் ஒருவராக மட்டுமே இருக்க முடியாது. தனது கட்சிக்குப் பலம் இருந்தாலும் கண்மூடித்தனமாக எதிர்காலச் சிந்தனை இல்லாது முடிவுகளை எடுத்துவிட முடியாது. பல்லின மக்கள் வாழும் எமது நாட்டில் சிறுபான்மையினமாக வாழும் ஒரு இனம் சார்ந்த கட்சியின் தீர்மானங்கள் பெரும்பான்மையினக் கட்சிகளைப் பலமாகக் கொண்ட அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு குந்தகத்தை ஏற்படுத்தினால் அதனால் நாமே பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என்பதைப் புரிந்து செயற்படுவதற்கு சாணக்கியம் நிறைந்த தலைமை மிக மிக அவசியம். அதனை மு.கா வின் ஸ்தாபகத் தலைவருக்கு இணையாக இன்றைய தலைவரும் கொண்டிருக்கிறார் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.

சவால்களைக் கூடச் சாணக்கியமாக விட்டு ஒரே நேரத்தில் மக்களையும் அரசாங்கத்தையும் திருப்திப்படுத்தி வெற்றி காண்பது என்பது இலகுவான காரியமல்ல. அதற்கு ஒரு திறமை வேண்டும். இதனைக் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களால் மட்டுமல்ல அதியுயர்பீட உறுப்பினர்களால்கூட ஒன்று சேர்ந்து ஒருபோதும் செய்துவிட முடியாது. அதனால்தான் பல சந்தர்ப் பங்களில் பலரிடம் கருத்துக்கள் பெறப்பட்டாலும் இறுதி முடிவை எடுக்கும் பணியைத் தலைவரிடம் விட்டுவிடுவதுண்டு. தலைவரின் ஒருசில தீர்மா னங்கள் சறுக்கினாலும் பல வெற்றிகளையே தந்துள்ளதை மு.கா போராளிகள் அனைவரும் நன்கறிவர்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் மு.கா தலைமை மீது கட்சிக் குள் உள்ள ஒருசிறு பிரிவினரும், வாக்களித்த மக்களில் ஒரு பிரிவினரும் அதிருப்தி கொண்டிருந்தமை உண்மையே. இதற்குக் காரணம் எதிரணியினரின் கூப்பாடும், தமிழ் ஊடகங்கள் சிலவற்றின் பொய்ப்பிரசாரமுமே பிரதானமாக இருந்தது. ஆனால் அதற்கான தெளிவான காரணத்தை தலைமை எடுத்துரைத்ததும் இப்போது அந்த மாற்றுக் கருத்துக் கொண்டோர் இல்லாமல் போயுள்ளனர். அன்று நடைபெற்ற பேராளர் மாநாட்டில் தலைவர் ஹக்கீம், கிழக்கு முதலமைச்சர் பதவி இரண்டு வருடங்களுக்குப் பின்னர் தமது கட்சிக்குக் கிடைக்கும் என்பதை நாசூக்காக வெளியிட்டார். இதில் எவ்வளவு தூரம் உண்மையுள்ளதோ தெரியாது ஆனால் இது மு.காவிற்கு வாக்களித்த பலருக்கும் மகிழ்வைத் தந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

அத்துடன் கிழக்குத் தேர்தலில் கொழும்பிலிருந்து ஒருவரைக் கொண்டுசென்று தமது பட்டியலில் இணைத்துத் தேவையில்லாத ஒரு தலையிடியைக் கட்சிக்குத் தேடிக் கொடுத்தமை குறித்தும் அவர் அம்மாநாட்டில் வருத்தம் தெரிவித்திருந்தார். உண்மையில் இவ்விடயமானது ஹக்கீம் அவர்களது தொடரான சாணக்கியத்தில் ஏற்பட்ட ஒரு சிறு சறுக்கல் என்றே கூறவேண்டும். அன்று கட்சியிலுள்ள பலரும் இவ்விடயத்தில் எதிர்ப்புத் தெரிவித்த போதும் ஏதோவொரு எதிர்பார்ப்பில் தனது தனிப்பட்ட தைரியத்தில் எடுத்த முடிவு தவறாக அமைந்து விட்டதை அவர் பேராளர் முன்பாக ஏற்றுக்கொண்டார். ஆனாலும் கொழும்பைச் சேர்ந்த அவர் தோல்வியைச் சந்தித்தமையினால் மு.காவின் அரசியல் பயணம் நேர்கோட்டில் செல்கிறது. இவரும் கட்சிக்குள் உள்வாங்கப்பட்டிருந்தால் கட்சி இன்று இன்னு மொரு பிளவைச் சந்தித்திருக்கும் என்பதே உண்மை.

கொழும்பிலிருந்து வந்து தோற்றவரும், மு.காவின் உயர்மட்ட அங்கத்த வர்கள் சிலரும் இன்றும்கூட மு.கா அரசாங்கத்திலிருந்து விலக வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருப்பது அவர்களது அறியாமையையே எடுத்துக் காட்டுகிறது. சோரம் போய்விட்டோம், பலிக்கடாவாகிவிட்டோம் என்று இவர்கள் கூறுவதன் அர்த்தம் என்னவென்று அவர்களில் பலருக்கே தெரியாது. யாராவது தொடக்கிவிட இவர்களும் சேர்ந்து குரல்கொடுப் பதிலேயே குறியாக உள்ளனர். அரசாங்கத்திலிருந்து விலகி எதிரணியிலிருந்துகொண்டு சமூகத் திற்காக எதனைச் சாதிக்க முடியும் என்பதை இவர்கள் சிந்தித்துப் பார்ப்பதே கிடையாது. சோரம் போகுமளவிற்கு அரசாங்கம் எதனையும் செய்துவிட வில்லை, அதேபோன்று பலிக்கடாவாக மு.கா அரசிடம் தன்னை அடகு வைக்கவுமில்லை என்பதே உண்மை.

மு.கா தலைவர் ஹக்கீம் அவர்கள் தெரிவித்தது போன்று கெளரமான பயணத்திலேயே காங்கிரஸ் பயணித்துக் கொண்டிருக்கிறது. அந்தக் கெளரவமான பயணத்தை எவருமே பலவீனமாகக் கருதக் கூடாது. குறிப்பாக மு.காவில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகளும், முஸ்லிம் சமூகமும் ஒருபோதும் பலவீனமாகக் கருதக் கூடாது. அது மன்னிக்க முடியாத குற்றம். பிற கட்சிகள் அவ்வாறு கருதினால் அது அவர்களது பலவீனமாகவோ, அறியாமையாக வோதான் கொள்ள வேண்டும். சமூக ஒற்றுமை மூலமாக அவர்களுக்கு பதிலடி கொடுக்கவேண்டுமே தவிர உள்ளிருந்து கொண்டே குழிபறிக்க முனையக் கூடாது. கட்சியைப் பலவீனப்படுத்தக் கூடிய கருத்துக்களை கட்சிக் காரரே வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இது மு.காவிற்கு மட் டுமல்ல சகல கட்சிகளுக்குமே பொதுவான ஒன்றாகும்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]