நந்தன வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 18
SUNDAY NOVEMBER 04, 2012

Print

 
படிக்க வேண்டிய வரலாற்று கடிதங்களில் இதுவும் ஒன்று

படிக்க வேண்டிய வரலாற்று கடிதங்களில் இதுவும் ஒன்று

ஓளரங்க சீப் மன்னன் 1658 ஆம் ஆண்டு தில்லி சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாக முடி சூட்டப்பெற்றார். ஒளரங்க சீப்பிற்கு இளம் வயதில் ஆசிரியராக இருந்த முல்லா சாஹேப் என்பவருக்கு ஒளரங்கசீப் மன்னன் எழுதிய கடிதம் இது. உலக சரித்திரத்தில் இடம்பெற்றுவிட்ட பிரசித்தி பெற்ற கடிதங்களில் இதுவும் ஒன்று.

ஒளரங்கசீப் சக்கரவர்த்தியாக முடிசூட் டப்பட்ட பிறகு முல்லா சாஹேப் தனக்கு ஒளரங்க சீப்பின் அரச சபையில் கெளரவப் பதவியும், சன்மானமும் தர வேண்டுமென்று கோரியிருந்தார். அதற்குப் பதில்தான் ஒளரங்கசீப்பின் இந்தக் கடிதம்.

கற்றவரே!

நீர் என்னிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன? நான் உங்களை என்னுடைய அரச வையில் ஒரு முக்கிய பதவியில் அமர்த்த வேண்டுமென்று உங்களால் நியாயமாக எதிர்பார்க்க முடியுமா? ஒன்று சொல் லுகின்றேன் நீங்கள் எனக்கு எப்படிக்கல்வி போதித்திருக்க வேண்டுமோ, அப்படிச் செய்திருந்தால், உங்களுக்கு நான் பதவியை அதருவது போன்ற நியாயமான காரியம் வேறு எதுவுமே இருக்க முடியாது. ஆனால் நீங்கள் எனக்கு போதித்த முறை யான கல்வி என்பது எங்கே இருக்கிறது?

ஐரோப்பாவை ஒன்றுமே இல்லாத ஒரு சூன்யப்பிரதேசம் என்று போதித்தீர்கள். போர்த்துக்கீசிய நாட்டு மாபெரும் மன்னரைப்பற்றியோ, அவருக்கடுத்த ஹாலாந்து மன்னரைப்பற்றியோ, இங்கிலாந்து மன்னரைப் பற்றியோ நீர் எனக்கு ஒரு விவரமும் கூறவில்லை. பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாட்டு மன்னர்களையெல்லாம் நமக்கு அடங்கிய மிகச் சிறிய குறுநில மன்னர்களென்று கூறுனீர்கள். ஹிந்துஸ்தான் மன்னர்களின் பெயரைக் கேட்டாலே உலகத்தில் எந்த நாட்டு மன்னனும் நடுங் கினான் என்று கதை கட்டினீர்கள். எங்கள் பரம்பரையைப் புகழ வேண்டுமென்பதற்காக உலகத்திலுள்ள மற்ற நாடுகளெல்லாம் நமக்கு அடங்கியவையே என்று கூறினீர்கள். ஆஹா.... வியந்து பாராட்டப்பட வெண்டிய சரித்திர அறிவு. எனக்கு நீங்கள் என்ன கற்றுக் கொடுத்திருக்க வேண்டும்? உலக நாடுகளிலெல்லாம் என்ன நடக்கிறது. அந்த நாடுகளின் பலம் என்ன? அவர்களின் போர்முறை என்ன? மதக்கோட்பாடுகள் என்ன? ராஜதந்திரங்கள் என்ன? இவற்றையெல்லாம் எனக்கு நீங்கள் கற்றுக்கொடுத்திருக்க வேண்டாமா? உண்மையான சரித்திரத்தை எனக்கு கற்றுக்கொடுத்து, பல நாட்டு மன்னர்களின் வாழ்வையும், தாழ்வையும், அவர்களது எழுச்சியையும், வீழ்ச்சியையும் நான் உணரும்படி செய்திருக்க வேண்டாமா? எந்த விதமான தவறுகளால் அல்லது எதிர்பாராத நிகழ்ச்சிகளால் அங்கே புரட்சிகள் தோன்றின. அந்த சாம்ராஜ்யங்கள் அழிந்தன என்றெல்லாம் நீங்கள் எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டாமா?

உங்களிடமிருந்து என்னுடைய முப்பாட்டனார்களின் பெயர்களைக் கூட நான் அறிந்துகொள்ளவில்லை. ஹிந்துஸ்தான் சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த புகழ்பெற்ற என்னுடைய முன்னோர்களைப் பற்றிக்கூட உங்களிடமிருந்து நான் ஒன்றும் தெரிந்து கொள்ளவில்லை. இந்த மாபெரும் சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த அவர்களுடைய சரித்திரத்திற்கும், நீங்கள் எனக்கு கற்பித்ததற்கும் எவ்வளவு பெரிய இடைவெளி இருந்தி ருக்கிறது.

எனக்கு அரேபிய மொழியை எழுதவும், படிக்கவும் கற்றுக்கொடுக்க முனைந்தீர்கள். அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் பேசும் மொழியை விடுத்து இப்படி ஒரு கடினமான மொழியில் புலமை அடைவதுதான் ஒரு அரசனுக்கு பெருமையா? ராஜ பரிபாலனத்துக்கு அவசியமான - முக்கியமான விசயங்களைத் தெரிந்து கொண்டிருக்க வேண்டிய நான் அரேபிய மொழியைக் கற்பதில் காலம் கழித்தேன்.

ஒரு மனிதன் தன்னுடைய இளம் வயதில் நல்ல விடயங்களைக் கற்றுக்கொண்டால், அந்த நினைவு, வாழ்நாள் முழுவதும் நிலைத்து, அவனைப் பெரும் சாதனைகளைச் செய்யத் தூண்டும் என்பது உங்களுக்குத் தெரியாது போலும், சட்டம், மதவழிபாட்டு முறைகள், விஞ்ஞானம் இவற்றையெல்லாம் என் தாய் மொழியில் நான் கற்றிருக்க முடியாதா? அரேபிய மொழியை ஏன் என் தலையில் கட்டினீர்கள். என் தந்தை சாஜஹானிடம் எனக்கு மதத்துவங்களைப் போதிக்கப் போவதாக நீங்கள் சொன்னது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.

அர்த்தமே இல்லாத இருந்தாலும் புரிந்துகொள்ள முடியாத புரிந்து கொண்டாலும் மனத்திருப்தி அளிக்காத மனத்திருப்தி அளித்தாலும் கூட, இன்றைய சமுதாயத்தில் எந்தவிதப் பயனுமே இல்லாத புதிர்களையெல்லாம் என்னிடம் போட்டுக் காட்டிக்கொண்டிருந்தீர்கள், நீங்கள் கற்றுக்கொடுத்த தத்துவங்களைப் பற்றி இப்படித்தான் புகழ முடியும். அவையெல்லாம் புரிந்துகொள்ள மிகக் கடினமானவை, மறப்பதற்கு மிக எழியவை.

நீங்கள் போதித்த மதத்துவங்களைப் பற்றி என் நினைவில் மீதம் இருப்பதெல்லாம் காட்டுமிராண்டித்தனமான இருளடைந்த பெரிய பெரிய வார்த்தைகள்தான். உங்களைப் போன்றவர்களின் அறியாமை யையும், இறுமாப்பையும் மறைக்க உங்களைப் போன்றவர்களாலேயே கண்டுபிடிக்கப்பட்ட வார்த்தைகள், உங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் எங்களைப் போன்ற மகா மேதாவிக ளுக்குத்தான் இந்தப் பயங்கர வார்த்தைகளில் அடங்கியிருக்கிற அரிய தத்துவ ரகசியங்கள் புரியும் என்று மற்றவர்கள் நினைத்து ஏமாந்து போவதற்காக, உங்களைப் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட வெறும் வார்த்தைகள்.

காரண காரியங்களை மட்டுமே பார்க்கும் மனப்பக்குவத்தை ஏற்படுத்தக்கூடிய மதத்தத்துவங்களை நீங்கள் எனக்குப் போதித்திருந்தால் மனதை ஒரு நிதானத்தில் அடக்கி வைக்கப் பயன்படும். அரிய தத்து வங்களை எனக்கு நீங்கள் போதித்திருந்தால் அதிர்ஸ்டத்தினால் தாக்கப்பட்டு, செல்வத்தில் திளைத்தாலும் சரி துரதிஸ்டத்தினால் தாக்கப்பட்டு தோல்வியைத் தழுவினாலும் சரி, இரண்டுக்குமே மயங்காத மனோ தைரியத்தை அளிக்கக்கூடிய தத்துவங்களை நீங்கள் எனக்கு போதித்திருந்தால் நாம் யார்? உலகத்தின் மேன்மை என்ன? எப்படி இந்தப் பூமி இயங்குகிறது? என்பதையெல்லாம் நான் உணர்ந்துகொள்ள உதவி செய்யும் வகையில் நீங்கள் எனக்குக் கல்வி போதித்திருந்தால் இப்போதும் சொல்லுகிறேன், இந்த மாதிரி விசயங்களையும் தத்துவங்களையும் நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்திருந்தால் நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டவனாக இருந்திருப்பேன். அலக்சாண்டர் அவனுடைய குரு அரிஸ்டாட்டிலுக்கு செய்ததற்கும் மேலாக உங்களுக்குச் செய்திருப்பேன். நன்றி காட்டியிருப்பேன்.

சதா என்னை முகஸ்துதி செய்து கொண்டே இருந்ததற்குப் பதிலாக, ராஜ பரிபாலனத்துக்குத் தேவையான விசயங்களை எனக்கு நீங்கள் கற்றுக்கொடுத்திருக்க வேண்டாமா? குடிமக்களுக்கு அரசன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? அரசனுக்கு குடிமக்கள் செய்ய வேண்டிய கடமை என்ன? என்பதையெல்லாம் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டாமா?


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]