புத் 64 இல. 45

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 18

SUNDAY NOVEMBER 04 2012

 
முற்றத்து மல்லிகைகளையும் கலைஞர்களாக மதிப்போமா?

முற்றத்து மல்லிகைகளையும் கலைஞர்களாக மதிப்போமா?

நம் வீட்டு முற்றத்தில் மல்லிகை மலர்கள் கொட்டிக் கிடக்கும். தினமும் நாம் அவற்றை பார்ப்பதால், அவை மீது நமது ஈர்ப்பு எதுவும் ஏற்படுவதில்லை. அதற்காக அம்மல்லிகைகளுக்கு மணமில்லை என்றாகி விடுமா? மணம் இருக்கவே செய்யும். எனினும், அவற்றை நாம் தொடுவதேயில்லை. ஆனால் அடுத்த வீட்டுத் தோட்டத்து மல்லிகையை தொடவும், பறிக்கவும், நுகரவும் விரும்புவோம். இது இயல்பான மனித குணமேயாகும்.

இந்தக் குணம் கலை - இலக்கியத்துறை சார்ந்த கலைஞர்கள் விடயத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அணுகுமுறையா என்றால், இல்லை என்பதே பதிலாகும். நம்மில் பலர் நம் நாட்டுக் கலை - இலக்கியவாதிகளை கவனத்தில் எடுப்பதேயில்லை. பக்கத்து நாட்டுக் கலை - இலக்கியவாதிகளையே தலைக்கு மேல் தூக்கி வைத்து கொண்டாடுவர். இது நடைமுறை வாழ்வில் நாம் காணும் காட்சியே!

இது சரியா? நியாயமா? என்றால், இல்லை என்றே கூற வேண்டும். நம் நாட்டில் கலைஞர்கள் இல்லையா? அவர்களிடம் திறமைகள் இல்லையா? சாதிக்கும் அசாதாரண தகுதி இல்லையா? இருக்கவே செய்கின்றன. நாம் ஒரு முரளிதரனை உருவாக்கவில்லையா? நாம்தான் அவர்களை மதிப்பதில்லை. அவர்களிடம் இருக்கின்ற தகுதி - திறமைகளை நாம் பொருட்படுத்துவதில்லை. இச் செயல் நம் குழந்தையை நாமே கொஞ்சாமல், அன்பு செலுத்தாமல் விடுவது போலாகும்.

நாம் குழந் தைகள் மீது உண்மையான அன்பு செலுத்து வது போல, நம் நாட்டுத் திறமைகளையும், திறமைசாலிகளையும் மதிக்க வேண்டும். அவர்களை கலைஞர்களாக ஏற்று கெளரவம் தர வேண்டும்.

நம் நாட்டில், நம்மிடையே வாழும் கலைஞர்கள் எத்தனை வகையினர், எத்தனை துறையினர் இருக்கின்றனர் என்பதை எண்ணிப்பாருங்கள். நாம் வழமையாக நாடகம் நடிப்போரையும், சினிமாவில் முகம் காட்டுவோரையும் மட்டுமே “கலைஞர்கள்” என நினைக்கின்றோம். உண்மையில் இவர்கள் மட்டுமா கலைஞர்கள்? வாழ்க்கையில் எந்தத் துறையில் எதை செய்தாலும், அதனை அழகாக, சிறப்பாக, கலையம்சமாகச் செய்தால், அதுவுமொரு கலைதான். அதைச் செய்பவர்களும் கலைஞர்கள்தாம்.

மண்ணைக் குழைத்து மட்பாண்டம் செய்பவர்களும் கலைஞர்களே! மரவேலை செய்வோரும் தச்சுக் கலைஞர்களே! தாஜ்மஹால் போல அழகான கட்டடங்களை கட்டுவோரும் கட்டடக் கலைஞர்களே! ஏன் ருசியாக சமைப்பவர்கள் கூட சமையற் கலைஞர்கள் என்றே அழைக்கப்படுகின்றனர். சமையற் கலையையும், சமையற் கலைஞர்களையும் வளர்க்கவென தனிப் பாடசாலைகளும் அதற்கென பாடநெறிகளும், போட்டிப் பரீட்சைகளும், பரிசில்களும் இருப்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அதுபோன்று ஓவியம் தீட்டுவோர்; சிலை செதுக்குவோர்; புகைப்படம் பிடிப்போர், கைவினை செய்வோர், ஆக்கம் எழுதுவோர், கவிதை படைப்போர், நடிப்போர், பேசுவோர், ஆடுவோர் என்று பல்துறை சார்ந்த பலதரப்பட்ட கலைஞர்கள் நம்மிடையே திறமையாளர்களாக இருக்கவே செய்கின்றனர். இவர்களை எல்லாம் நாம் வெறுமனே அவர்தம் பெயர்களை மட்டும் கூறி அழைக்காமல், “கலைஞர்” என்ற அடைமொழியை கூறி அழைப்போமானால், அவர்களை நாம் அன்புடன் மதிப்பது போலாகும். நமக்கு என்றோ, எப்போதோ படிப்பித்த மனிதர்களை நாம் காணும் போதெல்லாம் ஸேர், டீச்சர், ஆசிரியர் என்று அழைக்கிறோமே! இது ஏன்? இப்படி அ¨ழ்பது அவர்களை நாம் என்றும் மதிக்கிறோம் என்பதுதானே அதன் அர்த்தம்.

மேலும் ஆய கலைகள் 64 உண்டு என்பர். ஒருவரின் பெயர் முன்னால் வெறுமனே “கலைஞன்” எனக் குறிப்பிட்டால், அவர் ஆய கலைகள் 64 லிலும் வல்லவர் என்ற பொதுக் கருத்தைத் தரும். நாமெல்லாம் மறைந்த நிலையில், வருங்கால ஆய்வாளர்களுக்கு இந்த மயக்கம் நிச்சயம் தடுமாற்றத்தைத் தரும் எனவே, அத்தகைய எதிர்கால மயக்கத்திற்கும் தடுமாற்றத்திற்கும் இடம் தராமல் “இவர் ஓவியக் கலைஞர் - இவர் சிற்பக் கலைஞர் - இவர் புகைப்படக் கலைஞர்” எனத் துறையைக் குறிப்பிட்டு எழுதுவதே சிறப்பாகும்.

இந்த மதிக்கும் கெளரவத்தை நாம் ஏன் மற்ற துறைசார் கலைஞர்களுக்குத் தர மறுக்கின்றோம். இனிமேல் இத்தவறை நாம் செய்யாதிருப்போமாக. நாம் நம் நாட்டுக் கலைஞர்களை, அவர்கள் எந்த மொழி - எந்த சாதி - எந்தத் துறை சார்ந்தோராக இருந்த போதும், அவர்களை கலைஞர்களாக எண்ணி மகிழ்வோமாக! மதிப்போமாக!

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.