புத் 64 இல. 45

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 18

SUNDAY NOVEMBER 04 2012

 
தொழில் வழியே தடையாக விதி இருந்தாலும் மொழி ஆளுமையால் வெற்றிகண்டேன்

தொழில் வழியே தடையாக விதி இருந்தாலும் மொழி ஆளுமையால் வெற்றிகண்டேன்

தமிழறிஞர் கலாபூசணம் ஸ்ரீதயாளன்

கல்வி பின்புலத்தோடு சமயாசரங்களுடன் வளர்ந்து ஆசிரியனாக காலடி வைத்து கல்வி அதிகாரியாக, உதவிப் பணிப்பாளராக தரம் உயர்ந்து அமைச்சின் உயர் பதவிகளிலும் கால் பதித்த கலைஞான கேசரி, கான தமிழ் மணி, செஞ்சொற்கொண்டல் கலாபூஷணம் ஸ்ரீ தயாளனின் அருமையான கடந்த கால வாழ்வை இவ்வாரம் திரும்பிப் பார்க்கின்றேன்.

பேசுகிறார் கேட்போம்..........

நான் கடந்து வந்த பாதையை, தடங்களை நினைத்துப் பார்க்கையிலே...... என்ற தலைப்பில் உங்களுக்கு என் அனுபவங்களை ஒவ்வொன்றாகச் சொல்வதற்குப் புறப்பட்டால் வேதனைகள், சோதனைகள், சவால்கள் வெற்றிகள் என்ற வரிசையில் எத்தனையைச் சொல்லலாம்.

என் எண்ணமெல்லாவற்றையும் கவ்விக்கொண்டு என் பெற்றோர்கள் என்னை மனுசனாக்கப் பட்ட பாட்டினை முதலில் நினைத்துப் பார்க்கின்றேன்.

என் வாழ்க்கைக்கு முதல் “மொடல்” என் அப்பாதான். அவர் விரும்பியபடியே நான் ஓர் ஆங்கில மாணவராக பரீட்சை மூலம் கல்விப் புலத்துள் நுழைந்து நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக, கல்வி, தமிழ், அபிவிருத்தி, சமய கலாசார மேம்பாடு குறித்த துறையிலே பணியாற்றி வருகிறேன். அரச துறைகளில் தேசிய மட்ட அமைச்சுகளில் ஓரளவு உயர்வான பதவி நிலைகளில் இருந்து, தமிழ் மக்கள் மத்தியில் என் பணியை ஆற்றியிருக்கிறேன்.

எனது தந்தையாரை இப்போதும் நினைத்துப் பெருமைப்படுவேன். அன்பினைச் சொரிந்து என்னை ஆளாக்கிய பெற்றோர்கள் இருவருமே என் பேரில் பட்டபாடுகளை நினைப்பேன். ஏழு பேரில் கடைக்குட்டியாகப் பிறந்த என்னை தனது மொடலாக ஆக்க அப்பா விரும்பியிருக்க வேண்டும். ஒல்லித்தடி போல உருவத்தில் இருந்த என்னை அடித்துத் தீற்றி வளர்த்த தாயன்பை, அவனியிலே பெயர் தெரிய வாழத்தூண்டிய “பாக்கியம்” என் தாய். ஊரில் “பாக்கியக்கா” என எல்லோராலும் நேசிக்கப்பட்ட பிறவி. ஆறாம் வகுப்புவரைதான் படித்தார். ஆனாலும் பெரிய ஆளுமையோடு வாழ்ந்தவர். மகாத்மாகாந்தி அண்ணல் 1926 இல் யாழ்ப்பாணம் வந்தபோது வரவேற்புப் பாடல் பாடினவ. எனது சிறிய தாயார் சுகிர்தம், காந்தி மகானுக்கு ஆங்கில மொழியில் வரவேற்புரை செய்தவர். அப்பா இலங்கையின் முதுபெரும் கல்விமானாக, காந்தியவாதியாக விளங்கிய ஹென்டி பேரின்பநாயகம் அவர்கள் காலத்தில் கொக்குவில் ஆங்கிலப் பாடசாலையாக இருந்த இந்துக்கல்லூரியின் புகழ்பூத்த லண்டன் சிறப்புப் பட்டதாரி, தமிழ்ப்பண்டிதர் சின்னத்தம்பி மாஸ்டர். எம்.எஸ்.என்ற அளவில் அன்றும் இன்றும் பெயர் விளங்கியவர். ஆகையால்தான் வாரிசுகள் பெயரோடு “எம்.எஸ்.” என்பதை தவறாது இட்டு அடையாளப்படுத்துவோம். கொக்குவிற் புலவர் மு.சின்னத்தம்பி என்றால் மாணவர்கள் நடுங்குவர்.

தன் பிள்ளைகள் எல்லோருடைய பெயருக்கு முன்னாலும் “ஸ்ரீ” என்ற அட்சரத்தை சேர்த்து வைத்தவர். இன்றும் அதை ஏழுபேரும் எங்கள் வம்ஷத்தில் தொடர்கிறோம்.

என் பிறந்த திகதி இலங்கை சுதந்திரமடைந்த அந்த வருடத்தில் அதே மாதம் கடைசிநாள். படிப்பு கொக்குவில் இந்துக் கல்லூரி மற்றும் கொட்டில் பாடசாலையில் கனகசபை வாத்தியார், சதாசிவ வாத்தியாரிடம் படித்த நாட்கள் மறக்க முடியாதவை.

மூன்றாம் வகுப்பில் முப்பது பேர், திருநீற்றுப் பொலிவோடு வெள்ளை வெZரென்ற உடையோடு கட்டைக்கனக சபை

 வாத்தியார் வகுப்பில் நுழைந்ததும் தேவாரத்துடன் வகுப்பு ஆரம்பிக்கும். அதுவும் நான்தான் படிக்க வேண்டும்.

வகுப்புக்கு வெளியிலுள்ள பெரிய பூவரசுக்குக் கீழேதான் வகுப்பு நடக்கும். என்னடா, உண்மை பேச வேண்டும். காலையிலை என்ன சாப்பிட்டிட்டு வந்தனீ! “நெத்தலியும் இடியப்பமும்” என்றேன். வாத்தியார் சற்றும் எதிர்பார்க்காத நிலை. திடீரென்று என் வயிற்றைக் கிள்ளியவர், இந்தச் சுடலை எத்தினை சவங்களைப் புதைத்திருக்கும்? என்றாரே பார்க்கலாம்! பிற பிராணிகளின் புண் சுமந்த, இறந்த உடல்களை வாயினாற் சாப்பிடுகிaர்களே என்று கூறிவிட்டு ஒரு திருக்குறளையும் பதம் பிரித்துச் சொல்லி, மேலும் பல கதை சொன்னார். அடுத்த அடுத்த நாள் பிள்ளைகளின் பெற்றோர்கள் படையெடுத்து வந்ததும். பிள்ளை எதுவுமே சாப்பிடுவதில்லை என முறையிட்டதும். மாணவர்களில் பலர் அன்றிலிருந்தே மச்சம், மாமிசம் சாப்பிடுவதை நிறுத்திக்கொண்டதும் மறக்காத நினைவுகள்.

போதனையுடன் கூடிய அற்புதமான கற்பித்தல் முறைமையை எண்ணி இன்றும் வியப்பேன். இன்றும் வாழ்ந்துவரும் புல்லாங்குழல் ஏ. நமசிவாயம் எனது பிரதம பிரிவு சங்கீத ஆசிரியர். பிரபலமான சரஸ்வதி பாக்கியராஜா ஓதுவார் தாலடி. இராசையா இவர்களிடம் பண்ணும், இசையும் பயின்றேன்.

கல்லூரி எந்த நிகழ்ச்சியென்றாலும் இறைவணக்கம், கல்லூரி கீதம், இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் ஒரு ஆண்மாணவன் நான்தான். தமிழ்ப் பேச்சுப் போட்டிகளில் ஆறாம் வகுப்பு தொடக்கம் பாடசாலை விடுகைக்காலம் வரையும் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு முதலிடங்கள் கிடைப்பதற்கு காரணமாக இருக்கும் என்மேல் சி.கே. கந்தசாமி அதிபர், குணபாலசிங்க மாஸ்டர், சிவ சோதி மாஸ்டர் ஆகியோர் அன்பு பாரா ட்டி நடத்தினார்கள். தமிழ் மன்றம், இந்து மன்றம், பண்ணிசை மன்றங்களில் எனது ஆற்றல்களை, தலைமைத்துவத்தை பயிற் சியால் வளர்த்துக்கொண்டதன் விளைவா கவே ஒரு சாதாரண ஆசிரியராக இருந்த நான், கல்வி அதிகாரி, உதவிப் பணிப் பாளர் பதவிகளையும் அமைச்சில் உயர்ப தவிகளிலும் கால்பதிக்கும் நிலையும் ஏற்பட்டதையும் மிகப் பணிவோடு இளம் தலைமுறைக்குச் சொல்ல விரும்புவேன். சிறியவனாயிருக்கும்போது இசைத்து றையில் கொண்ட ஆட்சி, இன்று முதிர் நிலையிலும், இனங்காட்டும் கலாபூஷ ணம் அருட்கலை அரசு, கலைஞானகேசரி, கானதமிழ்மணி, செஞ்சொற் கொண்டல் போன்ற 16 உயர்விருதுகளைப் பெற்றுத் தந்தது. இன்றும் தேசிய வானொலி, தனியார் தேசிய தொலைக்காட்சிகளில் என்னால் கலைப்படைப்புகளை வெற்றிக ரமாகச் செய்ய முடிகிறது.

அண்மையில் நான் பங்கேற்கத் தொடங்கிய “கதம்பம்” றேடியோ நிகழ்ச்சி, குறுநாடகம், கதாப்பிரசங்கமென்பன என் சிந்தனையை ஓரளவு இனங்காட்டும். அர்த்தமுள்ள தமிழர் சம்பிரதாயங்கள், மதிக்கப்பட வேண்டிய தமிழர் கலைகள், தமிழ், இலக்கியம் கற்கும் மாணவர்களுக்கான நூல்களைத் தாராளமாக எழுதுகிறேன்.

கடமையாற்றிய இடங்களிலெல்லாம், எப்படியோ பெயர் பதிக்க வேண்டுமென்ற நினைப்புடனேயே செயல்படுவது என் இயல்பு. அதுவே சில நேரங்களில் சிலரின் காழ்ப்புணர்வுகளினால் தொழில் உயர்வுக்கு இடையூறாக அமைந்தது. சமய கலை மன்றங்களைத், சமூக அபிவிருத்தி மன்றங்களை தொடக்கி முடுக்கி விடுவது என் பாதையில் அதிகம். கண்டியில் டொக்டர் வித்தியானந்தனுடன் சைவமகா சபைச் செயலாளராக இருந்தும், கம்பளையில் தமிழர் ஆசிரியர் சங்கத்தையும், தமிழ்க் கலைகலாசார ஒன்றியத்தையும் ஸ்தாபித்தும் புத்தளத்தில் இந்து இளைஞர் மன்றத்தை ஸ்தாபித்தும் நம்பியாண்டார் பணி மன்றத்தை நடத்திக் கொண்டும் சமூகப்பணி ஆற்றுகிறேன்.

புத்தளத்தில் 1970களில் ஆசிரியராகிவிட்ட நான் (ணிதிஞிறிரிஹியினிமி) விற்பனை நிலையமொன்றில் மாமைற் வாங்குவதற்காகப் போய் எனக்குத் தெரிந்த அளவில் சிங்களம் பேசுகிறேன் என்ற நினைப்பில் “மாமைற் இன்னுவத” எனக் கேட்டதும் அங்கு நின்றவர்கள் “கொல்” என்று சிரித்ததும் அதன் பின் ஏற்பட்ட அவமரியாதையையும் நினைத்துப் பார்க்கிறேன். வாலிபத்திலே சமயப் பற்றின் காரணமாக புத்தளம் கொன்வென்ற் ஒன்றிலே கற்பித்துக் கொண்டிருக்கையில் வெள்ளிக்கிழமைகளில் வெறும் மேலோடு கடமைக்குச் சென்று நிர்வாகத்திடம் ஏச்சும் கண்டிப்பும் வாங்கியதையும் மறக்க முடியாது.

பத்து வயதில் முதல்முதல் கொழும்புக்குப் பயணம் செய்தேன். அந்தக் காலத்தில் கோச்சியில் கொழும்புப் பயணம் என்றாலே ஒரு பெருமை. அப்பா கோட் சூட் எனக்கும் ‘ரை’ கட்டிவிடுவார். அம்மா குதிரைவால் மடிப்பில் சாறி. றங்குப் பெட்டி தோல் பாக்குகள், ஒவ்வொருவருக்கும் புதிய உறைபோட்ட தலையணைகள் இருக்கையில் படுத்துக்கொள்ள, புகைவண்டியில் சாப்பிட விஷேஷமான சாப்பாட்டுப் பொதிகள்..... இப்படி இப்படி பல சாமான்களோடு வீட்டுக்கு அரைமைல் தூரமிருக்கும் ரயில்வே ஸ்ரேசனுக்குச் செல்லுதல். வழியனுப்ப வந்தவர்கள் அழுதபடி வழி அனுப்பல்.... என்று எத்தனை..... அது பெரிய திருவிழாத்தான்.

வெளிநாட்டு அனுபவங்கள் பற்றி..........

பாரதநாட்டுப் பயணம் 2009இல் ஓதுவார் ஒருவருக்கும் தீட்சதர்களுக்கும் பெரிய பிரச்சினை. சிதம்பர நடராஜர் சந்நிதியில் பஞ்சபுராணம், திருமுறைகள் ஓதுவது கூட தடைப்படுத்தப்பட்டது. சமாசாரம் பெரிதாகி பலநாட்கள் வழக்கு. அப்போதைய முதல்வர் தலையீட்டுடன் தீட்சதர்கள் நல்ல முடிவுக்கு உடன்பட்டனர். அந்த இடையீட்டுக்குப் பின் முதல் முதல் மீண்டும் திருமுறை ஒலிக்க,

சிதம்பர நடராஜனையும், சிவகாமியையும் உள்ளமுருகி வழிபட்டுக்கொண்டிருந்த என்னை சுந்தரம் தீட்சிதர் அடையாளம் கண்டு இலங்கை ஓதுவாரே வாருங்கள் நீங்களே பாடுங்கள் என்றதுதான் தாமதம் எனக்கு அந்த சிவனே அருளியது போன்றிருந்தது.

ஸ்காபிரோ வரசித்தி விநாயகர் கோவில் அழைப்பில் கனடாவுக்கு சென்ற யான், அங்கு நின்ற காலத்தில் 30 தலைப்புகளில் எல்லாக் கோவில்களிலும் சங்கீத கதாப்பிரசங்கம் செய்தேன். ரொறென்ரோ துர்க்கையம்மன் கோவில் சிவஸ்ரீ தியாகராஜக் குருக்கள் 26 நாள் தொடர் விரிவுரைக்காக புராண இதிகாச இசைமணி பட்டம் சூட்டி பெரிய கெளரவம் செய்ததும் சித்தி விநாயகர், திருச்செந்தூர் முருகன், நல்லூர்க் கந்தசாமி கோயில், ஐயப்ப சுவாமி கோவில் முதலாம் 16 கோவில்களிலும் ஆதியருள் நெறி மன்றத்திலும் பெரிய இன்னிசை விரிவுரைகள் நிகழ்த்தியதும் மறக்க முடியாதவை. இவ்வாறே இலண்டனிலும் பொதுவாக எல்லாக் கோயில்களிலும் நிகழ்ச்சி செய்தலும் தீபம் தொலைக்காட்சியில் என் பேட்டிகளும் மக்களிடமிருந்து வந்த தொலைபேசி வரவேற்புகளும் நீங்காத நினைவுகளே.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.