புத் 64 இல. 45

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 18

SUNDAY NOVEMBER 04 2012

 
சாணக்கியனிடம் கேளுங்கள்

மு.கதிர்காமநாதன், குருமண்காடு

காணாமற்போனோரைக் கண்டுபிடிக்க வவுனியா காளி கோவிலில் தமிழ்க் கூட்டமைப்பு தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தியதே. ஏதாவது முன்னேற்றம் காணப்பட்டதா?

காளியம்பாளை நம்பினோர் ஒருநாளும் கைவிடப்படமாட்டார்கள் என்பது உண்மை. அதற்கு நாமும் ஏதாவது முயற்சி எடுக்க வேண்டும். ஒருபக்கம் காணாமற்போனோரையும், சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளையும் வைத்து அரசியல் பிழைப்பு நடத்திக் கொண்டு அவர்களை கண்டுபிடி, விடுவி என்று அம்பாளிடம் வேண்டினால் அம்பாள் எதற்கு அருள் செய்வார்? அதனால் இதய சுத்தியுடன் வழிபட இவர்கள் முன்வர வேண்டும். அதுவரை சிதறு தேங்காயை கொந்துராத்து எடுத்து எண்ணெய்யாக்கும் கூட்டமைப்பின் வவுனியா வர்த்தகப் பிரமுகருக்குத்தான் வாசி. போன தடவை அடித்த தேங்காய் கொப்பறாவாகி எண்ணெயாகி சந்தைக்கும் சென்றுவிட்டதாகக் கேள்வி.

இஸட். எம்.முஹம்மத் பாயிஸ், மாளிகாவத்தை.

13 ஆவது திருத்தச் சட்டத்தை ஒழிக்க இனவாத சக்திகள் மீண்டும் தலைவிரித்தாடுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அவசர பிரேரணை ஒன்றை மாகாண சபையில் கொண்டு வந்துள்ளாரே. அவரது நோக்கம் என்ன?

யார் யாரை இனவாத சக்திகள் என்று சொல்லுவது வேடிக்கையாக உள்ளது. சிறிது காலத்திற்கு முன்னர் இவர் விட்ட அறிக்கைகளும், தொலைக்காட்சி பேட்டி களும் மக்களால் மறக்கப்பட முடியாதவை. அவற்றை இவர் ஒரு கணம் நினைத்துப் பார்த்துவிட்டு பிறரைப் பற்றிக் கதைக்க வேண்டும். இவர் தானாகச் சொன்னாரோ அல்லது இவர் இப்போது இணைந்திருக்கும் கட்சியிலுள்ள எவராவது கூறி இதனைத் தெரிவித்தாரோ என்பது சந்தேகமாகவுள்ளது.

எஸ்.நாகேஸ்வரன், கண்டி

நாட்டில் முப்பதாயிரம் போலி டாக்டர்கள் உள்ளதாக மத்திய மாகாண சுகாதார அமைச்சர் சுனில் அமரதுங்க தெரிவித்திருக்கிறார். டாக்டர்களை நம்பும் மக்களின் கதி என்னவாகும்?

முப்பதாயிரத்து ஒன்று எனக் கணக்கிட வேண்டும். எங்கட ஊரில் எலும்பு முறிவுக்கு எண்ணெய் போட்டு பத்துக் கட்டி பரிகாரம் செய்த கைவைத்தியர் இப்போது கொழும்பில் ஏசி அறையிலிருந்து ஆங்கில மருந்துகளை எழுதிக் கொடுக்கிறாராம். அவரையும் இந்தப் போலி லிஸ்ட்டில் சேர்க்க வேண்டும். சட்டத்தை கடுமையாக இறுக்குவதைத் தவிர இதற்கு வேறு வழியில்லை. அத்துடன் உண்மையான டாக்டர்கள் சிலரும் பணத்துக்காக போலி வைத்தியம் செய்யினம். அவர்களையும் இந்த லிஸ்ட்டில் சேர்த்தால் லிஸ்ட் நிச்சயம் ஒரு லட்சத்தையும் தாண்டிவிடும்.

பி. வேலுச்சாமி, கிளிநொச்சி

அரசாங்கத்திற்கு அதிகாரப் பகிர்வை வழங்கும் எண்ணம் இல்லை என்று சுரேஸ் பிரேமச்சந்திரன் எம்.பி கவலைப்பட்டிருக்கிறாரே. அது உண்மையா?

அவரைப் போலத்தான் தமிழ்க் கூட்டமைப்பும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு வரவேண்டும், அதன் மூலமாக இனப்பிரச்சினைக்கு விரைவான தீர்வு காணப்பட வேண்டும் எனும் கவலை அரசாங்கத்திற்கும் உள்ளது. அதனை ஏன் தமிழ்க் கூட்டமைப்பு விளங்கிக் கொள்ளாமல் இதுபோன்ற விதண்டாவாதமாக அறிக்கைகளை விடுகின்றதோ தெரியாது. தமிழ் மக்களை ஏமாற்றத்தான் இதுபோன்ற நடிப்பு அறிக்கைகள் என நினைக்கிறேன். ஆனால் இது நீண்ட காலத்திற்கு நீடிக்காது.

ஆர்.ரி.எஸ்.பரீட், கிண்ணியா

ஜனாதிபதியின் திருநாமத்தை தினமும் உச்சரித்தால் அடுத்த பிறப்பில் நல்ல பிறவியாகப் பிறக்கலாம் என்று பாராளுமன்றத்தில் அஸ்வர் எம்.பி கூறியது ஏதாவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதா?

ஒரு சர்ச்சையையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில் அவர் உண்மையைத்தானே கூறியிருக்கிறார். அதனை அரைகுறையாக விளங்கிக்கொண்ட ஒரு தனிமனித அரசியல் கட்சியின் அறிக்கை மன்னரும், அரசியல்வாதி என்று தன் னைத்தானே கூறித் திரிபவருமான ஒருவர் அவசரப்பட்டு அறிக்கை விட்டு இப் போது மூக்குடைபட்டுள்ளார். அதேபோன்று அந்த அரைகுறையின் அரைகுறை அறிக்கையை வெளியிட்ட அரைகுறை ஒளிப்பத்திரிகையும் வெட்கித் தலைகுனிந்துள்ளது. சபையில் அஸ்வர் எம்.பி தெரிவித்தது எதிரணியிலுள்ள மறுபிறப்பில் நம்பிக்கையுள்ள முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களைப் பார்த்து விழித்தே தெளிவாகக் கூறினார். பாராளுமன்ற உரையை பதிப்புச் செய்யும் ஹன்சாட் எனும் அறிக்கையில் அவரது உரை தெளிவாகப் பதிவாகியுள்ளது.

ச.பார்த்தீபன், வட்டவளை

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வந்தமையினாலேயே ரி-20 கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி தோற்றதாக ஸ்ரீரங்கா எம்.பி பாராளுமன்றத்தில் உரையாற்றியதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளதே. அது உண்மையா?

அதில் எவ்விதமான உண்மையும் இல்லை. அப்பட்டமான சித்திரிப்பு. அவ்வாறு சிறுபிள்ளைத் தனமாக உரையாற்ற ஸ்ரீரங்கா எம்.பி ஒன்றும் விபரம் அறியாத சிறுபிள்ளையல்லவே. அதற்கென்று சிலர் இருக்கிறார்கள். இது அந்தப் பத்திரிகையினதும் சில இணையங்களினதும் திரிபு படுத்திய வேலை. 29 தடவைகள் தோல்வியை மட்டுமே சந்தித்த ஐ.தே.க வின் தொடர் தோல்விக்கான காரணத்தை அறிய விசாரணை நடத்த வேண்டும் என்றே அவர் குறிப்பிட்டிருந்தார். அந்தத் தொடர் தோல்வியின் பின்னணியில் ஏதாவது சதித்திட்டம் இருக்கின்றதா என்பதை விசாரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். அதைப்போய் எப்படிச் சித்திரித்திரிக்கிறார்கள்?

உசைக் ரஹமத்துல்லாஹ், வெலிகம

மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க அரசாங்கம் சந்தர்ப்பத்தைக் கொடுப்பதாக ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சாட்டியிருக்கிறார். அவர் எந்தப் பயங்கரவாதத்தைச் சொல்கிறார்.

நிச்சயமாகப் புலிகளை அவர் கூறவில்லை. ஏனெனில் அது முடிந்து போன கதை. அநேகமாக தமது பழைய செயற்பாடுகளையே அவர் குறிப்பிடுகிறார். ஆனால் அவர்கள் இப்போதும் பயங்கரவாதிகள் போலத்தானே செயற்படுகிறார்கள். அதனால் ஏன் மீண்டும் என்று சொல்ல விழைகிறாரோ தெரியவில்லை. அரசியல் பிழைப்பிற்காக அறிக்கை விட்டுச் சீவியம் நடத்துகிறார்கள். நடத்தட்டும்.

ஜெஸ்மின் பாரூக், பாலமுனை

முஸ்லிம் காங்கிரஸை விமர்சிப்பதில் அஸாத் சாலி ஐயாவுக்கு ஒரு அலாதிப் பிரியம். பள்ளியில் ஏதாவது சம்பவம் நடந்துவிட்டால் உடனே அரசை வசைபாடி மு.காவை அதனுடன் முடிச்சுப் போட்டு விலகுமாறு கேட்பார். அதை ஒரேயொரு பத்திரிகை மட்டும் பிரசுரிக்கும். ஏன் இந்த சமூகவிரோதச் செயலில் இவர்கள் ஈடுபடுகிறார்கள்?

நீங்களே கூறிவிட்டீர்கள். இதுவொரு சமூகவிரோதச் செயல் என்று. அதுதான் உண்மை. இரு தரப்புமே வேலையில்லாத ஜடங்கள். மக்களைக் குழப்பிக் குளிர் காயும் ஒரே நோக்கம் கொண்ட இயல்புக்கு ஆட்பட்டவர்கள். அதனால் இதனைப் பெரிதாக அலட்டிக் கொள்ளக்கூடாது. அந்தப் பத்திரிகையை எவரும் பார்ப்பதில்லை என்பதால் அது குறித்தும் நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

சாணக்கியனிடம் கேளுங்கள்

வாரமஞ்சரி தினகரன்

லேக்ஹவுஸ்

கொழும்பு-10

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.