புத் 64 இல. 45

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 18

SUNDAY NOVEMBER 04 2012

 
மகாத்மா காந்தியை கௌரவிக்கும் சர்வதேச வன்செயலற்ற தினம்

மகாத்மா காந்தியை கௌரவிக்கும் சர்வதேச வன்செயலற்ற தினம்

அக்டோபர் மாதம் ஆரம்பித்தாலே ஏகப்பட்ட சர்வதேச தினங்கள். முதலாம் திகதி சர்வதேச சிறுவர்தினம், முதியோர்தினம் என ஆரம்பித்து, ஆசிரியதினம், வெள்ளைப் பிரம்பு தினம் என்று தொடர்ச்சியாக சர்வதேச தினங்கள்தான் அந்தவகையில் ஒக்டோபர் மாதம் 2ம் திகதி, சர்வதேச வன்செயல் ஒழிப்பு தினமாக 2007ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது. அவ்வாறு அன்றைய தினத்தை சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தியமைக்குக் காரணம் அன்றைய தினம் அகிம்சாமூர்த்தியான அண்ணல் காந்தி பிறந்த தினமாக அமைந்திருப்பதுதான் அண்ணல்காந்திக்கு கெளரவம் அளிக்கும் முகமாகவே அன்றைய தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அக்டோபர் 2ம் திகதியான மகாத்மா காந்தியின் 143வது பிறந்த நாள் நிகழ்வையும் , சர்வதேச வன்செயலற்ற தினத்தையும் செளமிய இளைஞர் நிதியம் ஆன்மீக நிகழ்வாக எட்டியாந்தோட்டை பனாவத்தை தோட்டம் 2ம் டிவிசனில் நடாத்தியதுடன் மகாத்மா காந்தியின் உருவச்சிலையை நிறுவுவதற்கும் நடவடிக்கை எடுத்தது. ஆன்மீக நிகழ்வுடன் நின்றுவிடாமல் நிதியம் அக்டோபர் 20ம் திகதி கொழும்பில் இலங்கை இந்திய வம்சாவளி முன்னணியுடன் இணைந்து வெகு சிறப்பாக அதனைக் கொண்டாடியது.

இந்நிழ்வுக்கு இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தாவின் சார்பில் கல்வி விளையாட்டிற்கு பொறுப்பான இரண்டாவது செயலாளர் ஜீ. தினேஸ் உதேனியா பிரதம அதிதியாகக் கலந்துக்கொண்டார். இந்நிகழ்வில் இ.இ.வ முன்னணியின் தலைவர் தேசபந்து முத்தப்ப செட்டியார், முன்னாள் இந்து சமய கலாசார இராஜாங்க அமைச்சர் பி.பி. தேவராஜ், பேராசிரியர் சோ. சந்திரசேகரன், நவகமுவ ஸ்ரீ பத்தினி தேவாலயத்தின் முதல்வர் மாரலந்த பண்டார, சட்டத்தரணி சேனாதிராஜா ஆகியோர் மகாத்மா காந்தியைப்பற்றி ஆற்றிய உரையில் அவர் செய்த சேவை - தியாகம் போன்வற்றை எடுத்தியம்பினர், இந்நிகழ்வின் முன்னோடியான சமூக நேசன் எஸ்.பி. அந்தோனி முத்து இந்நிகழ்வினை ஏன், எந்த இலக்கினை கருவாகக் கொண்டு ஒழுங்குபடுத்தப்பட்டது என்ற விளக்கத்தை தமிழ் மொழியிலும் ஆங்கில மொழியிலும் விரிவாக விளங்கப் படுத்தியது மட்டுமன்றி இன்றைய காலகட்டத்தில் நாம் காந்தியின் வன்செயலற்ற கொள்கையையும் கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தையும் குறிப்பிட்டார்.

ஐ.நா சபை அண்ணல் காந்திக்கு கெளரவம் செலுத்துமுகமாக 2007 ஜூன் மாதம் சர்வதேச வன்செயலற்ற தினமாக பிரகடனப்படுத்தியதுடன் அனைத்து அமைப்புகளுக்கும் இந்நாளை ஏதோ ஒரு வகையில் நினைவு கூற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது. இலங்கையில் இத்தினத்தை வேறுயாரும் எந்த அமைப்பும் நினைவு கூர்ந்ததாக தெரிய வில்லை என்ற அந்தோனி முத்து நாமே இந்த நிகழ்விற்குவித்திட்ட பெருமையை அடை கின்றோம் என்றார்.

காந்தி மகான் இந்திய தென்னாபிரிக்கா நாடுகளில் உள்ள இந்தியர்களுக்காக மட்டுமின்றி இலங்கை வாழ் இந்தியர்களுக்காகவும் செயற்பட்டார். அதன் பிரதிபலனாகவே ஸ்ரீ ஜவர்கலால் நேரு 1949ல் இலங்கை வந்து உங்கள் பிரச்சினையை தீர்ப்பதற்கு அனைவரும் ஒரு அமைப்பின் கீழ் ஒன்றிணைய வேண்டும் என்று இலங்கை - இந்திய காங்கிரசை உருவாக்கினார். அந்த அமைப்பே பின்பு இலங்கை தொழிலாளர் காங்கிரசாக மாறியது. இந்த அமைப்பை முன்னெடுத்து சென்ற அமரர் செளமிய மூர்த்தி தொண்டமான் மகாத்மாகாந்தியின் வழியில் பிரார்த்தனை இயக்கத்தை தோற்றுவித்து மலையக மக்கள் இழந்த பிரஜா உரிமை வாக்குரிமைகளை பெற்றுக் கொடுத்தார். அவரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த செளமிய இளைஞர் நிதியம் நாட்டின் அமைதி சமாதானத்திற்காக 2000ம் ஆண்டு முதல் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்திலும் கூட வடக்கு கிழக்கு மட்டுமின்றி தென்பகுதியிலும் பல்வேறு வேலைத்திட்டங்களை அமுல்படுத்தியது. இவற்றில் தியான நிகழ்வுகள், மெளன விரதங்கள், ஆன்மீக வழிபாடுகள் இலங்கை, இந்திய, தாய்லாந்து போன்ற நாடுகளிலும் நடாத்தப்பட்டன. இன்றைய இந்நிகழ்வை நடாத்துவதற்கு நாம் சரியான தகுதிகளை கொண்டுள்ளோம் என்பதற்கு இவையே சான்றுகளாகும்.

எதிர் காலத்திலும் எமது செயற்பாடுகள் நல்லதை செய்ய நல்லதை பெற்றுத்தர நல்லதை உருவாக்க செயற்படும் என்ற அந்தோனிமுத்து பனாவத்தை தோட்டத்தில் அக்டோபர் 2ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட காந்தியின் சிலை நிர்மாணப்பணிகள் முடிவடைந்ததும் அவர் சுட்டுக்கொல்லப்பட்ட ஜனவரி 30ம் திகதி அதாவது 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ம் திகதி சிலை திறப்புவிழா இடம்பெறும் என்றார். இந்த நேரம் இந்நிகழ்வுக்கு முன் கூட்டியே அழைப்பையும் எஸ்.பி. அந்தோனிமுத்து முத்தப்பன் செட்டியா ருடன் இணைந்து இந்நிகழ்வினை ஒருங்கிணைப்பு செய்த எழுத்தாளர் அந்தனிஜீவா, புரவலர் ஹாசிம் உமர், கேகாலை மாவட்டத்தின் காந்தி சேவா சங்க தலைவர் ஏ. துரைசிங்கம், மக்காரின், கோபி அமைப்பின் எச்.விக்ரமசிங்க உள்ளிட்ட கலைஞர்கள் எழுத்தாளர்கள் புத்திஜீவிகள் மற்றும் வர்த்தக பிரமுகர்களுடன் இந் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் அழைப்பை விடுத்தனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.