புத் 64 இல. 45

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 18

SUNDAY NOVEMBER 04 2012

 
மல்லிகையின் 400வது

மல்லிகையின் 400வது

மல்லிகையின் ஒக்டோபர் இதழ் 400வது இதழாக வெளிவந்துள்ளது. வழமை போலான வடிவமைப்பிலிருந்து வித்தியாசமான முறையில் வெளிவந்துள்ளது. வழமையாக மல்லிகை அட்டைப் படத்தில் எழுத்தாளர் ஒருவரின் படம் இடம்பெறும். ஆனால், மல்லிகையின் இவ்விதழ் 400வது சிறப்பு இதழுக்கான அட்டைப் படம் எழுத்தாளர் ஒருவரின் படம் இல்லாத 400வது இதழை அலங்கரிக்கும் அலங்காரத்துடனான படத்துடன் வெளிவந்திருப்பது சிறப்பாக இருக்கிறது.

சிறப்பான ஒரு தலையங்கத்துடன் வெளிவந்திருக்கும் இவ்விதழில் இரா. சடகோபன், ஸ்ரீரஞ்சனி, காத்தநகர் முகைதீன் சாலி ஆகியோரின் சிறுகதைகள் வெளிவந்துள்ளன.

கவிதைகளாக வதிரி சி.ரவீந்திரன், ஈழவாணி, எம்கே.முருகானந்தன், நீலாபாலன் ஆகியோரின் கவிதைகளும் இடம்பிடித்துள்ளன.

மொழிபெயர்ப்பு சிறுகதையாக சிங்கள எழுத்தாளர் கலாநிதி கே. ஜயதிலகவின் சிறுகதையை மாவனல்லை எம்.எம்.மன்சூர் மொழிபெயர்த்துள்ளார். தமிழ் மக்களுடனும் தமிழ் கலை இலக்கியவாதிகளுடனும் நெருக்கமாக பழகிய அத்தனகலைக்கு அருகே உள்ள ஒரு கிராமமான கொரஸ்ஸ எனும் கிராமத்தில் வாழ்ந்து மறைந்த வணக்கத்துக்குரிய பண்டிதர் ரத்ன வண்ஸ தேரோவைப் பற்றி அவுஸ்திரேலியாவில் வாழும் லெ.முருகபூபதி “சொல்ல மறந்த கதை” எனும் பகுதியில் “காவி உடையில் ஒரு காவியம்” எனும் தலைப்பில் அருமையாக எழுதியுள்ளார்.

இன்றைய தலைமுறையைச் சார்ந்தவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு விடயமாக இது இருக்கிறது. அத்தோடு மறைந்த தேரோ தமிழைக் கற்று பல ஈழத்து தமிழ் இலக்கியங்களை சிங்களத்தில் மொழிபெயர்த்து வைத்திருந்தார் என்பது ஆச்சரியம் தரும் தகவலாகவும் இருக்கிறது.

ஈழத்து கலை இலக்கிய உலகுக்கு குறிப்பாக சிறுவர் இலக்கியத்திற்கு பணியாற்றி மறைந்த அநு.வை. நாகராஜனைப் பற்றி அன்பு ஜவஹர்ஷா ஞாபகக் குறிப்பினை எழுதியுள்ளார்.

2011 ஆம் ஆண்டுக்கான சிறுகதைக்கான சாகித்திய மண்டல பரிசைப் பெற்றுக் கொண்ட நந்தினி சேவியரின் ‘நெல்லிமரப் பள்ளிக்கூடம்’ சிறுகதைத் தொகுப்பு விமர்சனத்தை இதயராசன் எழுதி இருக்கிறார். பிரான்ஸில் வாழும் நம்மவரான வி.ரி.இளங்கோவனின் “மண் மறவா மனிதர்கள்” நூலைப் பற்றிய இரசனைக் குறிப்பினை மா. பாலசிங்கம் தந்திருக்கிறார்.

ஒப்பியல் குறிப்பாக ஒரே தலைப்பில் ஜெயகாந்தனும் ஈழத்து எழுத்தாளர் ராஜகோபாலனும் எழுதிய இரு சிறுகதைகளை ஒப்பிட்டு மேமன்கவி தந்திருக்கும் குறிப்பு கவனத்தைக் கவர்கிறது.

இவ்விதழில் சிறப்பு அம்சமாக கிழக்கு பல்கலைக்கழகத்தில் தமிழ் பி.ஏ.சிறப்பு பாடநெறிக்காக 2001 முதல் 2010 வரையிலான மல்லிகை சிறுகதைகளை பற்றி அப்பல்கலைக்கழக மாணவி பிரியதர்ஷினி மேற்கொண்ட ஆய்வின் சுருக்கம் தரப்பட்டுள்ளது. மற்றும் வழமையான அம்சங்களான நிகழ்வின் அவதானங்கள், தூண்டில், எதிர்வினை, கிடைக்கப்பெற்றவை ஆகிய அம்சங்களும் மல்லிகை 400வது இதழை அலங்கரிக்கின்றன.

மொத்தத்தில், 50 வருடத்தை நோக்கி பயணிக்கும் மல்லிகை பல்வேறு மாற்றங்களுடன் வெளிவரத் தொடங்கி இருப்பது வரவேற்கத்தக்க அம்சம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.