புத் 64 இல. 45

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 18

SUNDAY NOVEMBER 04 2012

 
ஆரோக்கிய வாழ்வுக்கு மூலிகை உணவுகள்

ஆரோக்கிய வாழ்வுக்கு மூலிகை உணவுகள்

(சென்றவார தொடர்)

முடக்கொத்தான் ரசம்

தேவையான பொருட்கள்

1. முடக்கொத்தான் இலை - 1 கைப்பிடியளவு

2. நற்சீரகம் - சிறிதளவு

3. மிளகு - சிறிதளவு

4. உள்ளி - 1,2 பல்லு

5. கொத்தமல்லி - சிறிதளவு

6. பழப்புளி - தேவையான அளவு (கொட்டைப்பாக்களவு)

7. உப்பு - தேவையான அளவு

8. பெருங்காயம் - சிறிதளவு

9. கறிவேப்பிலை - 1நெட்டு

செய்முறை

மிளகு, சீரகம், கொத்தமல்லி என்பவற்றை அரைத்து அல்லது பொடித்து எடுத்துக் கொள்ளவும், பழப்புளியை நீரில் நன்கு கரைத்து வடித்து அந்த நீரில் இவற்றையும் கலந்து, முடக்கொத்தான் இலையையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் உப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை என்பவற்றையும், உள்ளிப் பூண்டையும் தட்டிப் போடவும். மீண்டும் ஒரு கொதிகொதிக்க விட்டு இறக்கிக் கொள்ளவும்.

இந்தரசத்தைத் தனித்தாவது, உணவுடன் சேர்த்தாவது உட்கொண்டுவர வயிற்றுப் பொருமல், மலச்சிக்கல், நாரிப்பிடிப்பு, முதுகுவலி, மூட்டுக்களில் ஏற்படும். வாய்வுப் பிடிப்பு என்பன குணமாகும்.

முடக்கொத்தான் இலைத் துவையல்

முடக்கொத்தான் இலையை முற்கூறிய பிரண்டைத் துவையல் போல (பிரண்டைக்குப் பதிலாக முடக்கொத்தான் இலையைச் சேர்க்கவும்) செய்தும் உணவில் சேர்த்து வரலாம்.

அல்லது முடக்கொத்தான் இலையைச் சேர்த்து இலைக்கஞ்சியாகத் தயாரித்தும் உணவாக உட்கொள்ளலாம்.

வேம்பு

வேறுபெயர் - பாரி பத்திரம், பிசுமந்தம், வாதாரி

தாவரவியற் பெயர் - Azadirachta indica  (அசடிரக்ரா

இண்டிக்கா)

குடும்பம்: Meliaceae (மிலியேசியே)

சிங்களப் பெயர் - கொஹொம்ப

சமஸ்கிருதப் பெயர் - நிம்ப

ஆங்கிலப் பெயர் - Margosa Tree

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து பெற்ற அமிர்தத்தை மகா விஷ்ணு மோகினி வடிவங்கொண்டு அசுரர்களை ஏமாற்றித் தேவர்களுக்கு வழங்கியபோது, ஓர் அசுரன் மட்டும் விஷ்ணுவின் கபடநாடகத்தைப் புரிந்து கொண்டு, தேவர்போல் வடிவங் கொண்டு அமிர்தத்தைப் பெற்றுப் பருகினானாம். அதனைக் கண்டு கொண்ட சூரிய, சந்திரர்கள் அதனை மோகினியாகவிருந்த விஷ்ணுவுக்குக் குறிப்பாலுணர்த்த, விஷ்ணு உடனடியாக அந்த அசுரனின் சிரத்தைத் துண்டித்தார். அப்போது, அவ்வசுரன் வாயில் எஞ்சியிருந்த அமிர்தத்தை வெளியே கக்கினான். அதுவே பூமியில் விழுந்து வேப்பமரமாயிற்று. அவ்வசுரனின் வாயிலிருந்த நஞ்சும் (அவ்வசுரனே ராகு என்னும் பாம்பு) அமிர்தத்துடன் கலந்துவிட்டதாலேயே வேப்பமரத்துக்குக் கசப்புச் சுவை உண்டாகி விட்டது.

பெரும்பாலான மூலிகை மரங்கள் ஆதியில் எவ்வாறு தோன்றின என்பதற்கு இதுபோன்ற புராணக் கதைகளுண்டு. வேப்பமரம் எவ்விதம் உண்டானது என்பதற்கு இப்படி ஒரு புராணக்கதை!

இக்கதையின் உண்மையான தத்துவார்த்தம் என்னவென்றால் கசப்பான வேப்பமரம் அமிர்தத்துக்கு ஒப்பானது என்பதாகும். மனித இனத்தைக் காப்பதில் வேப்பமரம் கடவுளுக்கு நிகரானது. அதனால்தான். வேப்பமரத்தைச் சக்தியின் வடிவமாக சக்திக்குரிய விருட்சமாக போற்றிவந்தனர் எமது முன்னோர்.

சுற்றாடலில் உள்ள தூசுகள், வளிமண்டலத்தில் பரவும் நஞ்சுகள் என்பவற்றைத் தனது இலைகள் மூலம் உறிஞ்சி அகற்றிச் சுற்றுச் சூழலைத் தூய்மையாக வைத்திருப்பதில் வேப்பமரம் பெரும் பங்காற்றுகிறது. அது மட்டுமன்றி வேப்பிலைகளில் இருந்து கசியும் ஒருவித இரசாயனப் பொருள் (ஜிrohobitis) அதன் சுற்றுச்சூழலில் உள்ள, மனிதருக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய (பக்ரீரியாக்கள், வைரசுக்கள் போன்ற) நுண்ணங்கிகளுடன் இணைந்து, அவற்றைச் செயற்பட விடாமல் செய்து, பல நோய்களிலிருந்தும் மனிதனைப் பாதுகாக்கின்றது.

அம்மைநோய் கண்ட வீடுகளிலும், பிரசவித்த வீடுகளிலும் வேப்பிலைக் கொத்துகளைக் கட்டிவிடும் எமது முன்னோரின் வழக்கம் இவ்விதம் கிருமிகள் பரவுவதைத் தடுக்கும் நோக்கத்தினால் உருவான ஒன்றாகும்.

வேம்பில் சாதாரண வேம்பு, கருவேம்பு (கறிவேப்பிலையல்ல), மலைவேம்பு, சர்க்கரை வேம்பு என்ற பேதங்களுண்டு. சாதாரண வேம்பு போன்று ஆனால் கிளைகள், இலைகள் யாவும் கருமை மிகுந்து காணப்படுவதே கருவேம்பாகும். ஆயினும் இது மிக அரிதாகவே காணப்படும்.

சாதாரண வேம்பைப் போன்றுஆனால் இலை, காய், கனி முதலிய அனைத்தும் இனிப்புச் சுவையுடன் காணப்படுவது சர்க்கரை வேம்பு எனப்படும். இதுவும் சில காடுகள், மலைகளில் மிக அபூர்வமாகக் காணப்படும் ஒன்றாகும்.

ஐரோப்பியரால் இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட மலைவேம்பு வேப்பமரத்தின் குணங்களை மிகக் குறைவாகவே கொண்டுள்ளது. சித்த மருத்துவ நூல்களில் வேம்பின் மருத்துவ குணங்கள் பற்றி மிகவும் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

வேப்பிலையானது குடற்புழு, குட்டம், மாந்தம், நச்சுச்சுரம், அம்மைப்புண்கள், சொறி, சிரங்கு முதலியவற்றைப் போக்கவல்லது என்கிறது பின்வரும் அகத்தியர் குணவாகடப் பாடல்.

“கிருமி குட்டமாந்தங் கெடு விடஞ்சுரங்கள்

பொருமிய மசூரிகையின் புண்கள் - ஒரு மிக்க

நிம்பத் திலையிருக்க நீடுலகில் நீங்காமல்

கம்பத் திலையிருக்கக் காண்”

இந்த வேப்பிலைக் கொழுந்தில் சிறிதளவு இடைக்கிடை சாப்பிட்டு வந்தாலே போதும். நோய்கள் பல அணுகமாட்டாது.

(தொடரும்...)

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.