புத் 64 இல. 45

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 18

SUNDAY NOVEMBER 04 2012

 
இலக்கிய வரலாற்று பார்வையில் காமன்கூத்து

இலக்கிய வரலாற்று பார்வையில் காமன்கூத்து

சில அறிமுகக்குறிப்புகள்

(கடந்தவாரத் தொடர்ச்சி)

சிவபெருமான் தவம் புரியும் இடத்தை அடைந்த காமன் அவரை வணங்கினான். சிவபெருமான் மெளனமாக இருக்கக் கண்டு, அவர் மேல் மலரன்புகளை தொடுத்தான். அதனால் நிலை தடுமாறிய சிவனார் பெருங்கோபங் கொண்டார். தனது நெற்றிக் கண்ணை தீப்பொறி பறக்கத் திறந்தார். காமனை எரித்து சாம்பலாக்கினார். இந்த அவலச் செய்திக் கேட்டு இரதி தன் தந்தை யான சிவபெருமானிடம் வந்து புலம்பினாள். பின்னர் இரதியின் வேண்டுகோளுக்கிணங்க அவளுக்கு மட்டும் காமனின் உருவம் தெரியும் படி சிவபெருமான் உயிர்ப்பித்துக் கொடுத்தார். இதனாலேயே காமன் ‘உருவிலான்’ எனவும் ‘அனங்கன்’ எனவும் சிறப்பிக்கப்படுகின்றான்.

“நுண்ணிய உணர்வின் மிக்கீர்! நுமக்கு புதல்வன்: எங்கோன்”

கண்ணுதல் உமிழ்ந்த செந்தீ காமனைப் பொடித்தது அன்றால்

அண்ணலை எய்வன் என்னா அனையவன் துணிவிற் கூறித்

துண்ணென ஈண்டுவந்த செயற்கையே சுட்டபோலும் - (க .பு)

கந்தபுராணத்தில் கூறப்படும் கிளைக் கதையாக ‘காமதகனம்’ கொள்ளப்படு கிறது. சிவபெருமானின் வலிமை பற்றி அதிகமாக உணர்த்துவதற்காக பயன்படுத் தப்படும் கிளைக்கதைகளில் ஒன்றாகிய காம தகனத்தின் மேற்குறிப்பிட்ட பாடல் மன்மதனை எரித்து சிவனின் நெற்றிக் கண் நெருப்பு அல்ல என்றும் அது சிவபெருமான் மீது அம்பு எய்ய அவன் கொண்ட துணிச்சலே அவனைச்சுட்டது என்கிறது. இவ்வாறு கந்தபுராணத்தை ஒட்டிய வேறு ஆதாரங்களை ஒட்டியும் காமன் கதை பலவாறாகக் கூறப்படுவதை அவதானிக்கத் தக்கதாகவுள்ளது.

தக்கனது யாகத்தை அழிக்க வேண்டும் என்பதற்காக சிவபெருமான் கடும் தவம் செய்கிறார். சிவன் கடும் தவத்தில் ஆழ்ந்து விட்டால் வாரிசு இல்லாமல் போய்விடும் என்பதற்காக தேவர்கள் இணைந்து சிவனது தவத்தை கலைப்பதற்காக மன்மதனை அனுப்புகின்றனர். மன்மதன் தவத்தை கலைப்பதற்கு செல்ல ஆயத்தமாவதற்கு முன்பதாக மன்மதனின் கனவுகளில் பல சகுனங்கள் தென்படுகின்றன. அதேபோல் ரதிக்கும் பல சகுனங்கள் தென்படுகின்றன. இதனால் மன்தமனை மனைவி ரதி போகவேண்டாமென்று தடுக்கின்றார். ஆனால் ரதியின் பேச்சை மீறி மன்மதன் பயணிக்கின்றார்.

சிவபெருமான் ஆழ்ந்த தவத்தில் இருப்பதை அவதானித்த மன்மதன், அவரை நோக்கி மலர் அம்பு தொடுக்கிறான். தவம் கலைந்து போய் கோபத்தில் சிவபெருமான் கண்ணை திறந்து பார்க்க, மன்மதன் அந்த இடத்திலே சாம்பலாகி போகிறார். இதை அறிந்த ரதி - சிவபெருமானின் கால்களில் வீழ்ந்து கதறுகிறார். மன்மதனை மன்னித்து விட்டுவிடும்படி மன்றாடுகிறார். ரதியின் கதறலை கேட்ட சிவபெருமான் ரதியின் கண்களுக்கு மட்டும் மன்மதன் தெரியும் படி வரம் கொடுத்து அவரை மீண்டும் உயிர்த்தெழுப்புகிறார்.

‘காமதகன மூர்த்தி’ அவதாரத்தில் பார்வதிதேவியார் பர்வத மன்னனின் மகளாகி இமயமலையில் சிவபெருமானையே கனவாக எண்ணி தவத்தில் இருந்தார். சிவபெருமான் சனகாதி முனிவர்களுக்கு யோக முறையை விளக்கும் நிலையிலேயே இருந்தார். அவரால் உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுமே யோக நிலையில் இருந்தன. எனவே உலக இயக்கம் நின்றது. நான்முகனின் படைப்புத் தொழிலும் நின்றது. கலக்கமுற்ற தேவர்கள் சிவபெருமானை பார்க்க அனுமதிக்குமாறு நந்திதேவனை வேண்டினர். நந்திதேவன் மறுக்கவே அனைவரும் சிவ தியானத்தில் ஈடுபட்டனர். உடன் இந்திரன் கனவில் சிவபெருமான் தோன்றி பார்வதியை திருமணம் செய்வோம். எங்கள் மகனால் இத்துயரம் தீரும் என்றுரைத்தார். பின்னர் இந்திரன் அனைத்து தேவர் குழாமுடன் சென்று நான்முகனிடம் ஆலோசனை கேட்க நான்முகனோ மன்மதன் சிவபெருமான் மீது பாணம் விட்டால் அவரது யோகம் கலையும், உலகம் முன்பு போல இயங்கும் என்று ஆலோசனை கூறினார். ஆரம்பத்தில் மன்மதன் பாணம் விட மறுத்தார்.

இறுதியில் உலக நன்மைக்காக அக்காரியத்திற்கு ஒத்துக்கொண்டார். யோக நிலையிலுள்ள சிவபெருமானிடம் சென்றார். அவரை மேற்கு வாசல் வழியே நந்திதேவர் உள்ளனுப்பினார்.

(தொடரும்)

சென்றவுடன் அவர் மீது பாணம் விட, சிவபெருமானின் யோகம் கலைந்தது. அதனால் கோபங்கொண்டு நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்தார். பின்னர் பார்வதி மலைக்கு சென்று பார்வதிதேவியை மணம் புரிந்தார். இந்த நிலையில் ரதி தன் கணவனைத் திரும்ப தரும்படி வேண்டினார். அதன் படி மன்மதன் மீண்டும் உயிர்த்தெழுந்தார். உடனே ஒரு நிபந்தனை விதித்தார். ரதியின் கண்களுக்கு உருவமாகவும், மற்றோர் கண்களுக்கு அரூபமாகவும் இருக்கும்படி நிர்ப்பந்தித்தார். மன்மதனை எரித்ததால் சிவனின் மூர்த்தமே ‘காமதகன மூர்த்தி’ என்ற பெயர் ஏற்பட்டது. சங்க இலக்கியமான பரிபாடலில்

‘இரதி காமன் இவன் இவள் எனாஅ

விரகியர் வினவ விடையிறுப்போரும்...’ (பரிபாடல் 19: 48: 49)

என்ற அடிகள் மூலமாக பங்குனித் திங்கள் பொருந்திய பின்பனிக்காலத்திலே காமனுக்கு விழா எடுக்கப்பட்டுள்ள செய்தியை அறிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது.

கலித்தொகையில் பெண்டிர், பால், கொண்டு சென்று காமன் கோயிலில் வழிபட்ட செய்தியினையும்

‘குழவி வேனில் விழவு எதிர்கொள்ளும்

சீராவு செவ்வாயும், சந்தன்று...’

‘காமற்கு விருந்து எதிர்கொண்டு....’

காமனுக்கு நிகழ்த்தும் விழாவை எதிர்கொள்ளும் இளவேனிற்காலம் என்பதும் விருந்தளிக்கும் காலம் வேனிற்காலம் என்பதும் புலனாகிறது. கலித்தொகையில் பாணன் கூற்றாக அமையும் செய்யுள் ஒன்றில்

‘கூறல் யாவும் ஒளி வாட.....’ (கலி - 30)

‘விறள் இழையவரோடு விளையாடுவதன் மன்றோ!’

‘காமர் கழல் அடி சேரா...’

‘உயர்ந்தவன் விழவினுள்...’

‘வில்லவன் விழவினுள்...’ (கலி - 35)

தன்னைத் தீண்டுவதற்குரிய யாம், ஒளி கெடும்படியாக, இரவி நின்றோம்: தான் காமனுக்கு எடுத்த விழாவில் வெற்றியை உடைய இழையணிந்த பரத்தையருடனே விளையாடுவதை நினைந்து நம்மை மறந்திப்பன் இளவேனிற் காலம் மன்மதனுக்கு உரிய காலமாகும். இக்காலத்தே மன்மதனுக்கு விழாவெடுக்கும் பழக்கம் இருந்தது என்பதும் காமன் விழாவில் தலைவர் பரத்தைரோடு விளையாடி மகிழ்வதும் உண்டு என்பதும் காமன் பற்றிய சங்க இலக்கியங்களிலிருந்து புலனாகிறது. சங்கமருவிய கால இலக்கியமான சிலப்பதிகாரத்தில் கண்ணகி காமவேள்கோட்டம் சென்று வழிபடுமாறு கூறியதாக கதை உண்டு. ஊர்காண் கதையில் காமவேள் விழாவைப் பற்றி

“வெங்கண் நெடுவேள் வில் விழாக்காணும்

பங்குனி மயக்கத்துப் பனி அரசு யாண்டுளன்” - (ஊ.கா : 111,112)

தேவந்தியின் தேறுதல் மொழியில் காவிரி கடலோடு சென்று கலக்கும் புகார் நகருக்குச் சற்றுத் தூரத்தில், நெய்தல் நிலக்காணலில் ‘சோமகுண்டம்’, ‘சூரியகுண்டம்’ என்ற இரண்டு பொய்கைகள் உள்ளன. அவற்றின் நீர்த்துறைகளில் மூழ்கி கரையிலுள்ள காமவேளின் கோயிலைத் தொழுது மகளிர் தன் கணவரோடு பிரியாது கூடி இன்புற்றிருப்பர். மறுமையிலும் போக பூமியில் பிறந்து போக வழியில் இன்புறுவர். யாமும் ஒரு நாள் அங்கு சென்று நீராடுவோம். என்ற குறிப்பு காணப்படுகிறது.

கோவலன் கூறும் கூறியாக் கட்டுரையில் போர்முகம் செல்லும் வீரர்களுக்கு படைக்கலம் வழங்குதல் மரபாகும். அதனை எண்ணி உருவிலானாகிய மன்மதன் தன் ஒப்பற்ற கரும்பு வில்லை ‘நின் இரு புருவங்கள் ஆகி என்னை வெல்க’ என்று உனக்கு இருபுருவங்களாக இருக்குமாறு தந்தானோ? என்பதிலிருந்தும்

‘கரும்பே தேனே அரும்பெறல் யாவாய்

ஆயிருந் மருந்தே’

காமனும் இரதியும் போலவும் இடையறாது இன்பதை ஒன்று கூடி அனுபவித்து வந்தனர். மலர் ஆகிய அம்புகளுடன் கரும்பாகிய வில்லையும் ஏந்தியவனாக மீன் கொடியுடைய மன்மதன் இரவு பகலெல்லாம் ஓய்வின்றி திரிகின்ற போது அவர் தாம் அவனுக்குத் தோற்று அடிமையாகாது துயில்கிறார். நகரம் முழுவதுமே இவ்வாறு அவனது ஆட்சியே மிகவும் ஓங்கிச் சிறந்து விளங்குகிறது. இக்கால இலக்கியங்களிலிருந்து காமவேளுக்கெனத் தனிக்கோயில், காமவேள் கோட்டம் இருந்ததை அறிந்துக்கொள்ளக் கூடியதாகவுள்ளது.

குமாரசம்வத்தில் மன்மத தகனமும் ரதியின் வேண்டுதலால் சிவன் மன்தனை மீள உயிர்ப்பித்தலுமாகும். அகலிகை கதையைச் சுவரில் தீட்டும் போது அதில் இரதி மன்மதன் உருவம் பொறிக்கப்பெற்றிருந்தமையும் சுட்டப்பெறுதல் அவதானிக்கத்தக்கது. பல்லவ கால இலக்கியமான நாச்சியார் திருமொழியில் காமன் பண்டிகை பற்றிய செய்தியையும் அவ்விழா கொண்டாடப்படும் முறை பற்றிய செய்தியையும் விரிவாகக் காண்கின்றோம்.

‘தையொரு திங்களும் தரைவிளக்கித்

தண்மண்டலமிட்டுமாசி முன்னாள்

ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து

அழகினுக் கலங்கரித் தனங்க தேவா

உய்யவு மாங்கொலோ வென்று

சொல்லி உன்னையு மும்பியையும்

தொழுதேன் வெய்யதோர் தழலுழிழ்

சக்கரக்கை வேங்கட வற்கென்னை

விதிக்கிற்றியே.......’

வீட்டிலே தரை மெழுகி புது மணல் பரப்பி கோலமிட்டு தையொரு திங்கள் நோன்பு நோற்றமை பற்றிய செய்திகள் மிக விரிவாக கூறப்பட்டுள்ளது. காமன் தம்பி சாமன் என்பதும் இடம்பெற்றிருக்கிறது. பெருங்கதை என்னும் நூலில் ‘இராசகிரியம்’ என்னும் நகரிலே காமனுக்கு விழா நடந்த செய்தியையும் காணமுடிகிறது.

சோழர் கால இலக்கியமான சீவகசிந்தாமணியில் சுரமஞ்சரி என்பவள் சீவகனே கணவனாக வரவேண்டுமெனக் காமனை வழிபட்டாள் என்ற செய்தியையும் தான் சீவகனை மணந்தால் காமனுக்கு மீன் கொடியும் கரும்பு வில்லும் தேரும் கொடுத்து வணங்குவதாக நோன்பிருந்தாள் என்ற இலக்கிச் செய்தியின் ஊடாக

‘கடுந்தொடைக் கவர்கணைக் காமன்.....’ - சீவகசிந்தாமணியிலும்

‘காமவேள் கவர்கணை.......’ - சூளாமணியிலும்

காமன் பற்றிய இலக்கிய குறிப்புகளைக் காண்கின்றோம். வில்லி பாரத்தில் உள்ள அருச்சுனன் தவநிலைச் சருக்கத்தில் அருச்சுனனது தவ வலிமையை அறிய எண்ணிய இந்திரன் தேவ மாதர்களையும் அவர்களுக்கு உதவியாக மன்மதனையும் அருச்சுனன் தவம் புரியும் இடத்திற்கு அனுப்பி வைத்தார் என்ற இலக்கிய செய்தியைக் காண்கிறோம்.

இந்து மத இலக்கியங்களில் மரபு வழி தெய்வமாகக் கருதி வழிபடும் காமனை புத்த ஜைன மதங்களில் பற்றற்ற வாழ்விற்கு காமம் ஒரு பெருந்தடையாகக் கருதப்பட்ட நிலையையும் பெளத்த மதத்தில் தீய கடவுளாகக் கருதும் கொள்கையையும் கிரேக்கர்கள் வணங்கும் ஈரோஸ் என்ற தெய்வத்துக்கும் உரோமரின் தெய்வமாக கூப்பிட் என்பதற்கும் ஒப்பானவன் என மன்மதன் போற்றிச் சிறப்பிக்கப்படுவதையும் காணலாம்.

மன்மதனை ஒரு கருவள சிறுதெய்வமாக காரை சுந்தரம்பிள்ளை சுட்டிக்காட்டுவதையும் காணலாம்.

எனவே மேற்குறிப்பிட்ட வரிகளிலிருந்து காமன் பற்றிய தொன்மங்களின் புனைவுகளின் உண்மைத்தன்மையை கண்டறிவதற்கான வழியை காட்டி நிற்பதோடு இலக்கிய குறிப்புகளின் ஊடாக காமன் பற்றிய தேடலை எம்மத்தியில் உருவாக்கி நிற்பதையும் அதன் முழுமைக்கு இட்டுச்செல்ல அறிமுகக்குறிப்புகளை இக்கட்டுரை வெளிக்காட்டி நிற்பதையும் அறிந்துக்கொள்ளலாம்.

சி.கிருஸ்ணகுமார் கிதி. ளிip.in ஹிலீa (சிinனீusiசீ) சாமிமலை

சி. கிருஸ்ணகுமார் BA.Dip.in.Tea (Hinduism)

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.