புத் 64 இல. 45

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 18

SUNDAY NOVEMBER 04 2012

 
பன்மைத்துவ சிந்தனாவாதி பேராசிரியர் மகேஸ்வரன்

பன்மைத்துவ சிந்தனாவாதி பேராசிரியர் மகேஸ்வரன்

தமிழ்த்துறைத் தலைவராகப் பதவிவகிக்கும் பேராசிரியர் மகேஸ்வரனின் கல்வித்தகைமை, கல்விசார் செயற்பாடுகள், ஆய்வு வேலைகள், தேசிய ரீதியில் கல்வி மற்றும் கல்விசாராத் துறைகளின் விருத்திக்குச் செய்த சேவைகள் என்பவற்றினைக் கருத்திக்கொண்டே பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை முதுநிலை விரிவுரையாளர் வல்லிபுரம் மகேஸ்வரன் பேராசிரியராக பதவி நிலை உயர்த்தப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கவின்கலைகளிலும் கல்வியிலும் சிறந்து விளங்கும் இணுவிலில் வல்லிபுரம் - ஞானமணி தம்பதிகளுக்கு இரண்டாவது மகனாகப் பிறந்து வளர்ந்த மகேஸ்வரன் தமது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை இணுவில் மத்திய கல்லூரியிலும் உயர்தரக் கல்வியை யாழ். இந்துக் கல்லூரியிலும் பெற்றுக் கொண்டார். கலைப்பிரிவுப் பரீட்சையில் சிறப்பாகச் சித்தியடைந்து பல்கலைக்கழகத் துக்குத் தெரிவானார். மாணவப் பருவத்தில் கல்விசாராச் செயற்பாடுகளிலும் ஈடுபாடு காட்டிய மகேஸ்வரன் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம் மற்றும் இந்து மாணவர் சங்கம் ஆகியவற்றின் முக்கிய செயற்பாட்டாளரானார். 1979 - 1980 கல்வியாண்டில் தமிழ்ச் சங்கத் தலைவராகவும் பதவிவகித்துத் தமிழ்ச் சங்க நடவடிக்கைகளைத் திறம்பட முன்னெடுத்தார்.

சிறப்புக் கலைப் பட்டதாரியாகிய இவர், 1983 இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இணைந்துகொண்டார். தமிழ்ச்சேவையின் செய்திப்பிரிவில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த இவர், கண்டதும் கேட்டதும் நிகழ்ச்சிக்குப் பொறுப்பாக இருந்து திறம்பட அளிக்கை செய்துவந்துள்ளார்.

இயல்பாகவே கற்பித்தல் கலை கைவரப்பெற்ற இவர், 1984 இல் இலங்கை ஆசிரியர் சேவையில் இணைந்துகொண்டார். கொழும்பு விவேகானந்தாக் கல்லூரிக்கு முதல் நியமனம் பெற்றுச் சென்று நான்கு வருடங்கள் அங்கு தமிழ்ப் பாடத்தைக் கற்பித்துவந்தார். இதே காலப்பகுதியில் வெளிவாரிப் பட்டப் பரீட்சை மாணவர்களுக்கென கொழும்பில் தனியார் வகுப்புகளையும் நடத்திப் பல மாணவர்களைப் பட்டதாரிகளாக உருவாக்கினார்.

கல்வி அமைச்சின் தமிழ்ப்பிரிவில் காணப்பட்ட சேவைக்கால ஆலோசகர் வெற்றிடத்திற்குத் தெரிவான மகேஸ்வரன் அப்போது பணிப்பாளராக இருந்த மதிப்புக்குரிய அமரர் சபாநாயகத்துடன் இணைந்து தமிழ்க்கல்வி வளர்ச்சிக்குப் பல்வேறு பங்களிப்புக்களைச் செய்துள்ளார். குறிப்பாக, தடைப்பட்டுக்கிடந்த தமிழ் மொழித்தினப் போட்டிகளைப் பொறுப்பெடுத்து, மீளுருக் கொடுத்தார். போட்டிகள் நாடளாவிய ரீதியில் பல்வேறு மட்டங்களிலும் நடைபெறுவதற்கு வழியமைத்துக் கொடுத்த பெருமை இவரையும் சாரும்.

1991 இல் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் விரிவுரையாளராகச் சேர்ந்துகொண்டார். விரிவுரையாளராகக் கடமையாற்றிய காலப்பகுதியில் விஜயநகர கல்வெட்டுக்களில் சமய கலாசாரம் எனும் தலைப்பில் ஆய்வினை மேற்கொண்டு அதே பல்கலைக்கழகத்தில் முதுதத்துவமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். 1997 இல் முதுநிலை விரிவுரையாளராகப் பதவியுயர்வும் பெற்றார்.

கலாநிதிப் பட்டஆய்வுக்காக இந்தியாவுக்குச் சென்ற மகேஸ்வரன் தமிழ்நாடு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் துறையில் சோழர்காலத்துக் கோயிலும் சமூகமும் எனும் தலைப்பில் புகழ்பெற்ற கல்வெட்டியல் பேராசிரியர் சுப்பராஜுலு, மற்றும் தொல்லியல் பேராசிரியர் ராஜன் ஆகியோர் மேற்பார்வையில் ஆய்வுசெய்து தமது கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். தமிழ்நாட்டில் இருந்த காலப்பகுதியில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் கோவிற்கலையில் பட்டப்பின் படிப்பு டிப்ளோமாவையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. இக்காலப்பகுதியில் தஞ்சாவூர்ப் பல்கலைக்கழக அயலகத் தமிழியல் துறை முதுகலை மாணவர்களுக்கு விரிவுரைகளாற்றியுள்ளார். இந்திய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் தஞ்சாவூர்ப் பல்கலைக்கழகத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட பல்கலைக்கழகக் கல்லூரி ஆசிரியர்களுக்கான சேவைக்காலப் பயிற்சிகளிலும் விரிவுரையாளராகக் கடமையாற்றியுள்ளார்.

கலாநிதிப்பட்டத்தை நிறைவுசெய்து தாயகம் திரும்பிய கலாநிதி மகேஸ்வரன், தாம்பெற்றுக்கொண்ட கல்வி மற்றும் கல்விசாரா அனுபவங்களைக் கொண்டு பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையைப் பேராசிரியர்களான நுஃமான், அருணாசலம், கனகரத்தினம் மற்றும் கலாநிதி துறை மனோகரன் ஆகியோருடன் சேர்ந்து மேலும் விருத்திசெய்யலானார். தமிழ்ச் சிறப்புக்கலை மாணவர்களுக்குக் கற்பித்தல் அவர்களை ஆய்வுகளில் நெறிப்படுத்தல் ஆகிய தருணங்களில் மாணவர்களின் சுயசிந்தனைகளுக்கு இடங்கொடுத்து அவர்களைப் பல்வேறு தளங்களில் தேடவைத்து தமது அனுபவங்களைப் பகிர்ந்து சிறந்த மாணவர்களை உருவாக்கிவருகின்றார். மீண்டும் தமிழ்த்துறையில் கல்வெட்டியலை ஒரு பாடவலகாக அறிமுகப்படுத்தினார்.

தமிழ்த்துறையின் பட்டப்பின் டிப்ளோமா, முதுமாணி, முதுதத்துவமாணி மற்றும் கலாநிதி பட்ட கல்விச் செயற்பாடுகளிலும் பட்டப்பின் ஆய்வுக்கட்டுரைகளை நெறிப்படுத்துவதிலும் முழுமையான தமது பங்களிப்பை நல்கிவருகின்றார். அத்துடன் கலைப்பீட உயர் மட்டக் குழுவின் உறுப்பினராகவும் சிறப்பாகச் செயலாற்றிவருகிறார். இவற்றுடன், மொழிபெயர்ப்புக் கற்கைப் பிரிவின் கல்விக்குழு உறுப்பினராகவும், தொலைத்தொடர்புக் கற்கை நிலைய மானுடவியல் கல்விக்குழு உறுப்பினராகவும் சேவையாற்றிவருகிறார். அரச மொழிக் கொள்கைக்கு இணங்க தமிழ்மொழி கற்க விரும்பிய சிங்கள மொழிபேசும் கல்விசார் உத்தியோகத்தர்களுக்கு இரண்டாம் மொழிப் பயிற்று னராகவும் பணியாற்றியுள்ளார்.

கற்பித்தல் நடவடிக்கைகளுக்குச் சமாந்தரமாகத் தமிழியல் ஆய்வுகளிலும் மும்முரமாக ஈடுபட்டுவருகின்ற பேராசிரியர் மகேஸ்வரன், தேசிய ரீதியில், பல்கலைக்கழகங்கள், இந்து கலாசாரத் திணைக்களம், கொழும்புத் தமிழ்ச் சங்கம், வடக்கு கிழக்கு மாகாணங்கள், மன்னார்த் தமிழ்ச் சங்கம் ஒழுங்குசெய்த ஆய்வு மாநாடுகளில் பங்குபற்றி ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளதுடன் ஆய்வு அமர்வுகளுக்குத் தலைமைதாங்கி நெறிப்படுத்தியுமுள்ளார். இவரின் ஆய்வுப் புலமையைக் கெளரவிக்கும் வகையில் கடந்த ஆடி மாதம் நடத்தப்பட்ட சர்வதேச ஆய்வு மாநாட்டுத் தொடக்க விழாவின் ஆதாரசுருதியுரை வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவரை அழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் நடைபெற்ற பல ஆய்வு மாநாடுகளில் பங்குபற்றி ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார். அவற்றுள் தென்னிந்திய தொல்லியல் மாநாடு (சென்னை -2002) 34ஆவது அனைத்திந்தியப் பல்கலைக்கழகத் தமிழ் ஆசிரியர் ஆய்வு மாநாடு (தஞ்சாவூர் 2003) புதுவை இலக்கிய ஆய்வு மாநாடு (2003), உலகத்தமிழ்ச் செம்மொழி ஆய்வு மாநாடு (கோவை 2012), இஸ்லாமிய இலக்கிய ஆய்வு மாநாடு (மலேசியா 2011), முருக வழிபாடு ஆய்வு மாநாடு (மலேசியா 2012) ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
கொழும்பு கைலாசபதி ஆய்வு வட்டத்தின் அழைப்பில் கைலாசபதி நினைவுப் பேருரை ஆற்றியுள்ள இவர் (2006), பாண்டிச்சேரி மொழிகள் மற்றும் பண்பாட்டு ஆய்வு நிறுவனம் (2003), தஞ்சாவூர் பல்கலைக்கழகம் (2008) ஆகியவற்றில் விசேட விருந்தினர் ஆய்வுரைகளும் நிகழ்த்தியுள்ளார்.
இவரது ஆய்வுக்கட்டுரைகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வெளியிடப்பட்ட ஆய்வேடுகள், தொகுப்புகள், விழாமலர்கள் மற்றும் சஞ்சிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளின் ஆசிரியரான இவர், தவில்மேதை தட்சணாமூர்த்தி, தமிழ்நாட்டில் வைணவம், சோழர்காலத்துக் கோயிலும் சமூகமும் ஆகிய நூல்களின் ஆசிரியரும் ஆவார். சோழர்காலத்துக் கோயிலும் சமூகமும் எனும் நூலிற்குத் தமிழ்நாடு சேக்கிழார் ஆய்வு மையம் 2008 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல் என்னும் விருது வழங்கியமை குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான இது முதல்முதலில் ஈழத்தவருக்கு கிடைக்கப்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
தேசிய கல்வி நிறுவனத்தின் அழைப்பின்பேரில் தமிழ்ப் பாடப் புத்தகங்கள் எழுதுவதிலும் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டிகள் தயாரிப்பதிலும் ஆலோசகராகக் கடந்த இருபதாண்டுகளுக்குமேல் சேவையாற்றியுள்ளார்.
தேசிய மொழிகள் மற்றும் பயிற்சிகள் நிறுவகத்தின் கல்விக்குழு உறுப்பினராக இருக்கும் பேராசிரியர் மகேஸ்வரன், இந் நிறுவனத்தினால் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் இரண்டாம் மொழி கற்றல், கற்பித்தல் மற்றும் மொழிபெயர்ப்புப் பயிற்சிகள் என்பவை உரிய முறையில் நடைபெற, உரியவர்களுக்குச் சென்றடைய ஆலோசனைகளை வழங்கி வருகின்றார்.
இணுவிலின் இயல்பான இறைபக்தியைத் தன்னகத்தே கொண்ட பேராசிரியர் மகேஸ்வரன், வேறுபட்ட சமூகவிடுதலைச் சிந்தனைகளை, அரசியற் கோட்பாடுகளை உள்வாங்கிப் பன்மைத்துவாதத்தில் இயங்கிவரும் ஒருவராவார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.