புத் 64 இல. 45

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 18

SUNDAY NOVEMBER 04 2012

 
xxxxxxxxxxx

குடும்ப உறவ௧ளுக்கு . . .

தென்னிந்திய தமிழ் சினிமாக்களினதும், தொலைக்காட்சி மெகா தொடர்களினதும் வளர்ச்சி விண்ணைத் தொட்டு அதற் கும் அப்பால் சென்று விட்டது என்றே கூறவேண்டும். தமிழையும், கலையையும் இலக்கியச் சுவையுடன் அதேவேளை நாசூக்காக நாலு விடயங்களையும் புகுத்தி தமிழர் பண்பாடு, கலாசார விழுமியங்களுக்கும் அப்பாற்சென்றுவிடாது பாதுகாத்து வளர்த்தது அந்தகாலம். தமிழை டமிலாகவும் கலைகளை காமமாகவும், இலக்கியத்தை, இல்லறங்களை பிரிப்பதாகவும், இரட்டை அர்த்தம் வசனங்களில் இளைய சமுதாயத்தைச் சீரழிப்பதாகவும் பெருமையுடன் வளர்ப்பதாக நினைப்பது இந்தக்காலம்.

இலங்கைத் தொலைக்காட்சிகளில் இந்திய தமிழ் மெகா தொடர் நாடகங்களைப் பார்த்து முகம்சுளிக்காத எவரும் இலங்கையில் இருக்க மாட்டார்கள். அந்தளவிற்கு இந்த நாடகத் தொடர்களில் காட்சியாக வடிவமைக்கப்பட்டுள்ள விடயங்கள் அமைந்துள்ளன. இலங்கையைப் பொறுத்தவரை இங்குவாழும் தமிழ்பேசும் சமூகங்களான தமிழர்களும் முஸ்லிம்களும் தென்னிந்திய கலாசாரத்திலிருந்து பெரிதும் வேறுபட்டே காணப்படுகின்றனர். இந்த நாடகத் தொடர்களில் காண்பிக்கப்படும். குடும்பச் சண்டைகள், சீதனக்கொடுமைகள், தவறான உறவுகள், தகாத வார்த்தைப் பிரயோகங்கள் எவை யுமே இலங்கை தமிழ்பேசும் சமூகத்திற்குப் பொருத்தமற்றைவையாகவே காணப்படுகின்றன.

நாமறிந்தவரை சமய நெறிமுறைகளுக்கும், கலசார விழுமியங்களுக்கும் மதிப்பளிக்கும் தமிழகத்திலிருந்து இதுபோன்ற வக்கிரமான, குடும்பங்களைக் கூறுபோடும், மதங்களை இழிவுபடுத்தும் சினிமாக்களும், தொலைக்காட்சி மெகா தொடர்களும் உருவாக்கப்படுகின்றன என்றால் நம்பமுடியாதுள்ளது. ஏன் இத்தகைய தொரு நிலைக்கு இப்படியானதொரு உயர் நிலையிலிருந்து தமிழகம் மாறியது என்பதை ஆராய்வது தமிழகத்திலுள்ள அறிஞர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் தலையாய கடமையாகும்.

இந்தக் குறிப்பிட்ட துறையினரின் ஈனச்செயல் தமிழகத்தை மட்டுமல்லாது தமிழ்பேசும் மக்கள் வாழும் ஏனைய உலக நாடுகளையும் கலாசார ரீதியாக அழிக்கும் ஒரு கொடிய கிருமியாக உருவெடுத்துவருகிறது. வெளியே தெரியாது எமது தமிழினத்தின் கலாசார, பண்பாட்டு, ஒழுக்க நெறியை இவை மெல்ல மெல்ல சீரழித்துவருகிறது. காலத்திற்கேற்ற மாற்றம், தொழில் நுட்ப வளர்ச்சி, மேலைத்தேய நாகரிக இறக்குமதி என எக்காரணத் தைக் கூறினாலும் அவற்றை ஏற்றக்கொள்ள முடியாது. தென்னிந்தியாவில் இந்த நவநாகரிக தொலைக்காட்சி மற்றும் சினிமாக்கள் ஊடான கலாசார சீரழிவுக்கு எதிராக அவ்வப்போது சில அமைப்புக்கள் குரல் எழுப்பியுள்ள போதிலும் அவை பின்னர் அடங்கிப் போனதே வரலாறு. தற்போது மலேசியாவிலுள்ள சில அமைப்புகள் தமது நாட்டில் தென்னிந்திய தொலைக்காட்சி மெகா தொடர்களைத் தடைசெய்ய வேண்டுமெனப் போர்க்கொடி தூக்கியுள்ளன. மலேசியத் தமிழ் அமைப்புகள் வெறுமனே பத்திரிகைகளுக்கு அறிக்கை அனுப்புவதுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. தமது நாட்டு அரசாங்கத்திடம் இந்த தொடர்களை உள்ளூரில் ஒளிபரப்புவதை மட்டுமல்லாது சற்றலைட் மூலமாக இவை தமது நாட்டிற்குள் உள்வருவதையும் தடை செய்யுமாறு கோரியுள்ளது. அந்தளவிற்கு மலேசியத் தமிழர்கள் இந்தத் தொடர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். வக்கிரம், பழிவாங்கு எண்ணம், குடும்பங்களைப் பிரித்தல், மாமி மருமகள் சண்டை, சிறுவர் நடத்தைகளை சீரழித்தல், தகாத வார்த்தைப் பிரயோகங்கள் காரணமாக இளம் தமிழ்ச் சமுதாயம் கலாசார ரீதியாக பாதிக்கப்படுவதாக மலேசிய அமைப்புக்கள் வெளிப் படையாகவே குற்றம் சாட்டியுள்ளன.

மலேசியத் தமிழருக்கு எழுந்த கலாசார ரீதியான இன உணர்வு இலங்கைத் தமிழருக்கு இதுவரை எழாமலிருப்பது வருந்தத்தக்க விடயம். பொழுது போக்கிற்காக தானே என நினைத்து அலட்சியமாக இருப்பது எதிர்கால தமிழ் கலாசார சீரழிவுக்குக் காரணமான வரலாற்றுத் தவறு.

நாட்டில் இன்று மூலை முடுக்குகளிலெல்லாம் தொலைக்காட்சியின் மோகம் உள்ளது. அதனைவிட வும் இன்டர்நெட் மூலமாக தவறவிட்ட தொடர்களைப் பார்க்கும் வசதிகள் உள்ளன. அதனை விடவும் சற்றலைட் மூலமாக, டிஸ்க் அன்டனா மூலமாக என்று வீடுகளைத் தேடி வந்தே வக்கிரத்தை விதைத்து குடும்பங்களில் பிளவுகளை இந்த மெகா தொடர்கள் ஏற்படுத்துகின்றன. இதுதவிர இந்தத் தொடர்களில் பெரும்பாலானவற்றை வீடுகளில் கணவனுடன் மனைவி, பெற்றோருடன் பிள்ளைகள், மாமியுடன் மருமகள், அண்ணனுடன் தந்தை, மருமகனுடன் மாமியார், மாமனாருடன் மருகள் ஒன்றாக அமர்ந்து பார்க்கவே முடியாது.

கொலை செய்வது எப்படி? கள்ள உறவிற்கு வழிகாட்டல், கூட்டுக்குடும்பத்தைப் பிரித்து சின்னாபின்னமாக்குவது எப்படி? தாயிடமிருந்து மகளை மருமகளால் எவ்வாறெல்லாம் பிரிக்க முடியும்? இரட்டை அர்த்தத்தில் பேசி இளம் சமுதாயத்தின் எதிர்காலத்தை சிதைப்பது எப்படி? எனப் பற்பல விடயங்களை விலாவாரியாக, தொடரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக சிறிது சிறிதாக நஞ் சூட்டிக்கொல்வது போன்று இத்தொடர்கள் எமது சமூகத்தை சீரழித்துவருதைப் பலர் புரிந்து கொள்ளவில்லை. படிக்கும் பிள்ளைகள் உள்ள பல வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டிகளை மூடிக்கட்டி வைத்துள்ள பெற்றோரும் உள்ளனர். இதைத் தவிர அவர்களால் வேறெதுவும் செய்ய முடியாது. நல்ல விடயங்களையோ, செய்திகளையோ கூடப்பார்க்க முடியாதவாறு இந்த தமிழ் மெகா தொடர்கள் அரக்கனாக உள்ளது. நாம் எந்தவொரு தொலைக்காட்சி நிறுவனத்தையோ அல்லது தமது பிழைப் பிற்காக தாம் சார்ந்த சமூகத்தை விற்று இவ்வாறு மெகா தொடர்களைத் தயாரிப்பவர்களையோ அல்லது அவற்றைத் தவறு எனத் தெரிந்தும் கூட இறக்குமதி செய்து ஒளிபரப்பும் நிறுவனங்களையோ சிறிதளவேனும் குறைகூறவில்லை. தொடர்கள் சமூக சிந்தனையுடன் சமூகத்தை நல்லவழிப்படுத்துவனவாக அமைய வேண்டும் என்பதே எமது கருத்தாகும். வர்ததக சந்தையில் போட்டி என்பதற்காக எமது தமிழர் மற்றும் தமிழ் பேசும் இஸ்லாமிய கலாசாரத்தைச் சீரழிக்கும் வகையில் சித்தரிப்பது மாபெரும் தவறு. அது பெற்ற தாயை அவமரியாதைக்குள்ளா வதற்குச் சமனானதாகும். இத்தகைய செயற்பாடுகளில் ஈனத் தனமாக செயற்படுவோர் தமக்கும் குடும்பம் உள்ளது, ஒரு தாயின் வயிற்றிலேதான் நானும் பிறந்தேன், நான் ஒரு தமிழ் மகன், எனக்கு பிள்ளைகள், மருமக்கள் உள்ளனர் என்பதை ஒருகணம் நினைத்துப் பார்த்தால் இவ்வாறான செயல்களில் ஒருபோதும் ஈடுபடமாட்டார்கள் என்பது மட்டும் உண்மை. ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் என ஏனைய மொழி கலாசார மரபுகளை தமிழில் திணிக்க முயலக்கூடாது.

தமிழ்கலாசாரம் அதுவாக, அதன் தனித்துவத்துடன் இருக்க வேண்டும். பிறமொழி திணிப்புக்களே இந்தத் தொடர்கள் மூலம் தமிழ் கலாசாரத்தை கேள்விக் குறியாக்கிவருகிறது. சிங்கள சினிமா, சிங்கள தொலைக்காட்சி நாடகத் தொடர்களைப் பாருங்கள்.

தமது கலாசார விழுமியங்களுக்கு அப்பால் ஒருபோதும் ஒருதுளியேனும் அவர்கள் செல்வது கிடையாது. காட்சிகள் சிங்கள மக்களது கலாசாரத்தை மையப்படுத்தி தத்ரூபமாக படமாக்கப்படும்.

வார்த்தைப் பிரயோகங்கள் ஒருபோதும் தடம்புரளாத் தன்மையைக் கொண்டதாக இருக்கும். அநேகமான நாடகத் தொடர்கள் கிராமிய பண்பாட்டை, கலாசார உடைகளைக் கொண்டதாகவே காணப்படும். பார்க்கவும், கேட்கவும் இனிமையாக இருக்கும்.

இலங்கையில் தமிழ் நாடகத்துறை மற்றும் சினிமாத்துறை தேவைக்கேற்ப இல்லாமையே தென்னிந்தியத் துறையின் ஆதிக்கம் இங்கு வலுப்பெற இதுவரை காலமும் காரணமாக இருந்தது. இப்போது யுத்தம் நிறைவு பெற்றுள்ளதால் நாமே எமது தமிழ்ப் பண்பாட்டு, கலாசார விழுமியங்களுக்கு அமைய உள்ளூரில் நாடகங்களைத் தயாரித்து எமது நாட்டுத் தமிழ் பேசும் இனங்களின் எதிர்காலத்தைக் காப்பாற்ற வேண்டும்.

எமது நாட்டின் புகழ்பூத்த கலைஞர்களான கலைஞர் உதயகுமார், கலைச்செல்வன், ஜோபு நiர், ரஞ்சனி ராஜ்மோகன், ஆர். இராஜசேகரன், பிரபா கணேசன், ஹெலன்குமாரி, மோகன்குமார். இராஜபுத்திரன் யோகராஜன், ஏ.எம்.ஸி. ஜெயதேவி, ஜெ. சுகுமார், உதயா கணேசன், ஞெய் ரஹிம் சஹீட், தர்ஷன், நித்தியவாணி, காயத்திரி, மகேஸ்வரிரட்ணம் போன்றவர்களின் நடிப்பாற்றலை, தெளிவத்தை ஜோசப், மொழிவாணன், மாத்தளை கார்த்திகேசு, மாத்தளை வடிவேலன், ஆமீனா பேகம், சுதாராஜ் அந்தனி ஜீவா, அஷ்ரப்கான், ஏ.ஏ. ஜூனைதீன் போன்ற கதை எழுத்தாளர்களின் ஆக்கங்கள் ஊடாக நேத்ரா, வசந்தம், சக்தி, வெற்றி போன்ற உள்ளூர் தொலைக்காட்சிகளின் பங்களிப்புடன் எமது நாட்டுப் படைப்புக்களாக வெளிக்கொணர வேண்டும். இதற்காக சிங்கள நாடக விற்பன்னர்களின் உதவிகளைத் தயங்காது பெற்றுக்கொள்ள வேண்டும்.

மாமி - மருமகள், அண்ணன்-தம்பி, அக்கா- தங்கை, பெற்றோர்- பிள்ளைகள், கணவன்- மனைவி என குடும்பச் சண்டைகளை மட்டுமே கொண்ட தொலைக்காட்சித் தொடர்களை பார்ப்பதைத் தவிர்த்து கூட்டுக்குடும்பம், குடும்ப ஒற்றுமை என்பவற்றை எடுத்துக்கூறி சமூகத்தை நல்வழிப்படுத்தும் நாடகங்களைப் பார்க்கப் பழகிக் கொள்வோம்.

நித்திரை விட்டெழும் போது கூட மடிப்புக் கலையாத பட்டுச்சேலை, புதிதாக வைத்த கொண்டைப்பூ, விட்டமளவு குலையாத நெற்றிபொட்டுடன் வந்து நடித்து ஏமாற்றும் நடிப்பை புறந்தள்ளி கிராமத்து வீட்டில் இயற்கை அழகுடன் மேக்அப் இல்லாத பெண்ணின் உண்மையான நடிப்பை உள்ளூரில் தயாரித்து இலங்கையின் தமிழ்க் கலாசாரத்தைப் பாதுகாப்போம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.