நந்தன வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 18
SUNDAY NOVEMBER 04, 2012

Print

 
அனைத்து நோய்களுக்கும் நிவாரணமாய் ‘வர்மம்’

அனைத்து நோய்களுக்கும் நிவாரணமாய் ‘வர்மம்’

வர்மக்கலை ஆய்வாளர் பாசுகண்ணா

ஆதி தமிழன் படைத்த அற்புதமான கலைகளில் ஒன்றுதான் வர்மம். எண்சாண் உடம்பு சீராக இயங்குவதற்காக கரம்கொண்ட கை விரல்களால் இயங்கும் உயிர் நிலைகளே வர்மங்கள். இவ் வர்மக் கலையை உலகிற்கு ஈந்தவர் சித்தர்களில் தலைசிறந்தவரான அகத்தியர். வர்மக் கலையில் தொடர் வர்மம், படுவர்மம், தட்டுவர்மம், நோக்குவர்மம் எனப் பல்வகை உண்டு. இக் கலைகளை அழியவிடாமல் பேணிப்பாதுகாப்பது இன்றைய தலைமுறையினரின் கட்டாயம் என்கிறார் வர்மக்கலை ஆராய்ச்சி மற்றும் மருத்துவ ஆலோசகரும் கண்ணா அறக்கட்டளை ஸ்தாபகருமான கோவை இரா. பாசுக்கண்ணா.

கல்வி, வைத்தியம், விவசாயம் என்பவை தமிழர்களின் பாரம்பரிய சொத்துக்கள் தமிழ் வைத்திய சித்தாந்தங்கள் அழிந்துக் கொண்டு வருகின்றன. இவற்றுக்கு புத்துயிரளிக்கும் வகையில் வர்மத்தில் ஓர் அங்கமாக முத்திரை விஞ்ஞானத்தை இலகு வழியில் முன்னெடுத்துச் செல்கிறார் இவர். சுயசார்பு மருத்துவ முறையான முத்திரை விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி நிவாரணம் பெறும் வழிவகைகளை விளக்கப்படங்களுடன் நூலாகவும் வெளியிட்டுள்ளார்.

எமது உடற்பாகத்திற்குள் இயங்கும் தசை, நாடி, நரம்பு மற்றும் உடற்கூறு என அனைத்திலுமாக 4448 வகையான நோய்க் குணங்கள் காணப்படுகின்றன. இவற்றுக்கெல்லாம் நிவாரணம் தரக்கூடியதுதான் நமது கரங்களிலே அடங்கியிருக்கும் பத்து விரல்கள். சரியான பயிற்சிகள் மூலம் விரல்களை முத்திரைகளாப் பிடிப்பதன் மூலம் வாதம், பித்தம், கபம் என்று இன்னோரன்ன நோய்களுக்கு நிவாரணம் பெறமுடியும் என்றும் கூறுகிறார் பாசுக்கண்ணா.

தமிழகத்தில் கோயம்புத்தூரைச் சேர்ந்த இவர் ஒரு கணனித்துறை பொறியியலாளராவார். இருப்பினும் வர்மக்கலையில் ஆர்வம் கொண்டு ஒன்பது வருட பயிற்சியை சித்தர்களிடம் பெற்றார். தான் கற்ற கலையால் மற்றோரும் உய்ய வேண்டுமென்ற நன்நோக்கோடு சேவையாக இக்கலையை வெளிக்கொணர்ந்தார். தமிழக அரசின் கோடை பண்பலை வானொலியில் ‘வாரம் ஒரு கலை முத்திரை’ மூலமாக வர்மக் கலையின் மகிமையை எடுத்து இயம்பினார். பல இலட்சக் கணக்கான நேயர்கள் இவரின் சுய சார்பு மருத்துவ முறையால் பயனடைந்துள்ளனர். மேலும் ஜெயா தொலைக்காட்சி வாயிலாகவும் விரிவாக இக்கலையின் மகிமையை விளக்கி வந்துள்ளார். உலகளாவிய ரீதியில் பிரசித்தமாகி வந்தது இந்நிகழ்ச்சி. இதைத் தொடர்ந்து மலேஷியா, சீனா, தாய்வான், ஹொங்கொங், கட்டார், சிங்கப்பூர், இந்தோனேசியா என பல நாடுகளுக்கும் அழைப்பின் பேரில் சென்று சுயசார்பு மருத்துவ முறையான முத்திரை விஞ்ஞானத்தைப் பற்றிய விளக்கத்தை அளித்து வந்துள்ளார்.

இலட்சக் கணக்கானோர் பயிற்சியின் மூலம் பயன்பெற்றுள்ளதை சான்றாக பகிர்கின்றார்.

இலங்கையிலும் இச் சுய சார்பு முத்திரை விஞ்ஞான பயிற்சியை அளித்து விளக்கமளிப்பதற்காக வருகை தந்த இவர் அண்மையில் கொழும்பு தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்த அறிமுக வைபவமொன்றில் கலந்து கொண்டார்.

வர்மக்கலைக்கென்றே அறக்கட்டளையொன்றை அமைத்துள்ளதோடு சுய சார்பு பயிற்சியை அனைவரும் கற்றுத் தேர்ந்து நோயற்ற வாழ்வு வாழ வேண்டும் என்பதே இவரின் நோக்கம்.

இலங்கை வாழ் மக்களுக்கு இக்கலையை அறிமுகம் செய்ய முன்னோடியாக இருந்த இந்து கலாசாரத் திணைக்களத்திற்கும், கொழும்பு தமிழ்ச் சங்கத்திற்கும் நன்றி தெரிவிக்கும் இவர் இன, மத, பேதமற்ற முறையில் யாவரும் இக்கலையைக் கற்று நோயற்ற வாழ்வு வாழ வேண்டுகிறேன் என்கிறார்.

www.kannafoundation.org இணையத்தளம் மூலம் நோய் குறிகளுக்கான பயிற்சியையும் விளக்கத்தையும் தெளிவாக விளக்கி வருகிறார். இயற்கை மகா ரகசியங்களையும் தன்னகத்தே பதிந்துள்ள மாயக்கலையான வர்மக்கலை மருத்துவம் மற்றும் முத்திரை மருத்துவம் பற்றிய அறிவைப்பெற்று ஒவ்வொருவரும் சுயமாக நிவாரணம் பெற இலவசமாக நல்லதொரு வாய்ப்பை வழங்கி வருகிறார் பாசு கண்ணா.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]