புத் 64 இல. 45

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 18

SUNDAY NOVEMBER 04 2012

 
உமையை சிவனில் பாதியாக்கிய கேதார கௌரி விரத மகத்துவம்

உமையை சிவனில் பாதியாக்கிய கேதார கௌரி விரத மகத்துவம்

கடந்த மாதம் 24 ஆம் திகதி புதன் கிழமை கேதார கெளரி விரதம் ஆரம்பமாகியது அதனை முன்னிட்டு இக்கட்டுரை வெளிவருகிறது.

கேதாரம் என்பது இமயமலை சாரலைக் குறிப்பதாகும் மலையைக் சார்ந்த வயற்பகுதியை கேதாரம் என்பர். இந்த இமய மலைக் கேதாரப் பகுதியில் சுயம்பு லிங்கமாக கேதாரரேஸ்சுவரர் தோன்றினார். சக்தி ரூபமான பார்வதி தேவியார் சிவனை நினைந்து வழிபட்டு அதன் பலானாக அர்த்தநாரியாகவும் அர்த்த நாரீசுவரராகவும் ஒன்றுபட்ட புனிததினமே கேதார கெளரி விரதமாகும். வயலில் ஆலமரத்தடியில் இருந்து இவ்விரதம் அனுஷ்டிக்கப்பட்டதால் கேதார கெளரி விரதம் எனவும் ஈசனை வழிபடுகின்றமையால் கேதாரேஸ்வரி விரதம் எனவும் பெயர் பெறுகின்றது.

முன்னொரு காலத்தில் கைலை மலையிலே தேவாதி தேவர்கள், முனிவர்கள் சித்தர்கள், காந்தவர்கள் புடைசூழ சிவன், பார்வதி தேவியோடு வீற்றிருக்கின்றார். பிருங்கி முனிவரின் விகடான நடனத்தை கண்டுகளித்த சிவனும் ஏனையோரும் முனிவரைப் பாராட்டினார்கள்.

இதனால் மகிழ்ச்சியடைந்த பிருங்கிமுனிவர் அம்பிகையைத் தவிர்ந்து சிவனை மாத்திரம் வலம் வந்து நமஸ்கரிக்கலானார். கோபமடைந்த அம்பிகை உடன் கைலைமலையிலிருந்து கெளத முனிவரின் ஆச்சிரமத்திற்கு தவம் இயற்றச் சென்றார்.

அம்பிகையின் வரவினால் ஆச்சரியமும் அதன் சூழலும் புதுப்பொலிவும் பேரொளியும் பெற்று விளங்கியது. ஓமத்துக்குத் தேவையான பொருட்களைச்சேகரித்து கொண்டு திரும்பிவந்த மாபெரும் தவஸ்தியரான கெளதம முனிவர் தமது ஆச்சிரமத்தின் புதுப்பொலிவுடனான நிலைகண்டு மகிழ்வுகொண்டார்.

அம்பிகையின் வரவே இதற்கு காரணமென அறிந்து அவரை அர்ச்சித்து பூஜைகளை நடத்தியபின் தாங்கள் இங்கு வர காரணம் யாதோ” என அம்பிகையிடம் வினவினார் சிவபெருமானின் பாதி மேனியைப்பெற வேண்டுமென தேவி கூறினார்.

முனிவரோ புராணங்கள் சாஸ்திரங்கள் யாவற்றையும் அலசி ஆராயந்து கேதாரேஸ்வர விரதத்தை அனுஷ்டிக்கும் முறையை அம்பிகை 21 தினங்கள் சிவனைப் பூஜித்து சிவனின் பாதி மேனியைப்பெற்றுக்கொண்டார். அத்தோடு அர்த்த நாரீஸ்வரன் என அனைவரும் போற்றும்வண்ணம் சிவனின் இடப்பக்கத்தில் அமர்ந்து எமக்கெல்லாம் அருள் பாளித்துவருகிறாள்.

இந்நாட்களில் அம்பிகை சிவனை நோக்கி “எம்பெருமானே இவ்விரதத்தை உலகில் மேற்கொள்வோர் யாராக இருந்தாலும் விரும்பியவற்றை பெற்றிட அருள் புரியவேண்டும்” என்று கேட்டு கொண்டார். அம்பிகையின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட சிவனும் அவ்வாறே ஆகட்டும் என அருள் புரியலானார்.

இவ்விரதத்தையார் அனுஷ்டிக்கலாம்? ஐந்து மாதங்களுக்கு மேல் கர்ப்பிணியாக இல்லாத பெண்களும், மாதவிலக்கு நீக்கப் பெற்ற பெண்களும், 21 தினங்கள் விரதமிருக்கலாம். ஏனையோர் 9 தினங்களோ 7 தினங்களோ 3 தினங்களோ அல்லது அன்றைய தினமோ இவ் விரதத்தை அனுஷ்டித்து 21 முடிச்சிட்டகயிற்றை இடது புஜத்திலோ அல்லது மணிக்கட்டிலோ கட்டிக் கொள்ளலாம். கேதார கெளரி தினத்தில் பார்வதி சமேதரான சிவபெருமானை வழிபடவேண்டும்.

தம்பதிகள் சேமமாக இருக்கலாம், வறுமை, பிணி நீங்கி செல்வம் வெறலாம். கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறலாம்.

சிவனருளைப் பரிபூரணமாகப் பெறலாம். இவற்றுக்கு உகந்த விரதமாகும். கணவனும் மனைவியும் கருத்தொருமித்து ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே இவ்விரத்தின் அடிப்படைத்த தத்துவமாகும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.