நந்தன வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 18
SUNDAY NOVEMBER 04, 2012

Print

 
ஏ-9 பயணிகளின் உயிர் சாரதிகளின் கைகளில்

ஏ-9 பயணிகளின் உயிர் சாரதிகளின் கைகளில்

கொழும்பு- கண்டி வீதியான ஏ-9 வீதியில் வவுனியா முதல் யாழ்ப்பாணம் வரையிலான பாதையில் பயணிப்போர் பெரும் அச்சத்துடனேயே தமது பயணத்தைத் தொடரும் மன நிலையிலுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் உண்மைத்தன்மைப் பற்றி ஆராய்ந்தால் அதில் நிச்சயம் உண்மை இல்லாமலில்லை என்பதுவும் தெரிகிறது. இவ்வீதியால் பயணத்தை மேற்கொள்ளும் பயணிகள் தெரிவிக்கும் மயிர்க்கூச்செறிய வைக்கும் கதைகளைக் கேட்டால் வடபகுதிக்கு ஏ-9 வீதியால் புதிதாக செல்ல முனையும் மக்கள் நிச்சயம் தயக்கம் காட்டவே செய்வர். அந்தளவிற்கு எமது சாரதிகளின் சாகங்கள் நிறைந்த வாகனச் செலுத்தல்கள் இடம்பெறுகின்றன. முப்பது வருட கால யுத்தம் முடிவடைந்த நிலையில் யாழ்ப்பாணத்தையும் கொழும்பையும் இணைக்கும் பிரதான வீதியான ஏ-9 வீதி கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்பாகத் திறக்கப்பட்டு இப்போது அப்பாதையால் இருபத்துநான்கு மணிநேரமும் பயணம் செய்ய மக்களுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்தை இணைக்கும் இந்தப் பிரதான வீதி வழியாக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கும் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர்.

விடுதலைப் புலிகள் தமது கட்டுபாட்டில் வன்னியை வைத்திருந்தபோது இப்பாதையைப் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை காணப்பட்டது. பின்னர் 2002ஆம் ஆண்டு சமாதான காலத்தில் அரசாங்கத்தினதும், புலிக ளினதும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வடபகுதி மக்கள் இப்பாதையைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர். அதற்கு முன்னர் யாழ். - கொழும்பு போக்குவரத்து நிலைமை எப்படி இருந்தது என்று அப்பகுதி மக்களுக்குத்தான் தெரியும்.

ஆகாய விமானத்தில் ஒரு வழிப்பயணத்திற்கு பதினையாயிரம் ரூபாவைச் செலவு செய்த காலமும் இருந்தது. அதற்கும் மேலாக எவ்வளவு காசு கொடுத்தாலும் இங்கிருந்து அங்கோ அல்லது அங்கிருந்து இங்கோ செல்லவே முடியாத நிலையிலும் ஒரு காலமும் இருந்தது. அதனைவிட கிளாலி ஏரியூடாக உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இடுப்பளவு தண்ணீரில் நடந்து அவரசத் தேவைகளுக்காக குடாநாட்டிலிருந்து கொழும்பு வந்த மக்களது சோக உணர்வுகளும் நிறையவே உள்ளன.

இன்று அரசாங்கம் மக்களைச் சுதந்திரமாக அப்பாதையால் செல்ல அனுமதித்துள்ளது. யாரும் செல்லலாம். எவ்விதமான கட்டுப்பாடும் கிடையாது. சோதனைக் கெடுபிடி என்று எதுவுமே கிடையாது இறங்கி ஏறி பொதிகளைத் திறந்து காட்டி செல்ல வேண்டியதில்லை. நடுநிசியானாலும் பாதுகாப்பான பயணத்தை இந்த ஏ-9 வீதியூடாக மக்கள் மேற்கொள்ளக் கூடியதாக உள்ளது. இந்தச் சந்தோசமான செய்திக்குள்ளும் ஏ-9வீதியில் பயணம் செல்ல மக்கள் அச்சம் தெரிவிக்கின்றார்கள் என்று சொன்னால் எவரும் அதனை நம்பவே மாட்டார்கள். ஆனால் நம்பக் கூடியதாக அங்கு தினமும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. அதுதான் கட்டுக்கடங்காத வாகன விபத்துகள். இரவு வேளைகளில் மட்டுமல்லாது பகலிலும் மிகமோசமாக தமதிஷ்டப்படி வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளால் இந்த கோரமான பல விபத்துக்கள் நடைபெறுவதுடன் உயிரிழப்புக்கள், அங்கவீனங்கள் பலவற்றுக்கும் பயணிகள் முகங்கொடுக்க நேரிடுகிறது. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும். போட்டிபோட்டுச் கொண்டு ஓடும் வாகனச் சாரதிகளின் கட்டுப்பாட்டை இழந்து பல விபத்துகள் இடம்பெகின்றன. அத்துடன் பணத்தைக் குறியாகக் கொண்டு போதிய ஓய்வெடுக்காமல் தொடர்ச்சியாக நித்திரைத் துக்கத்துடன் ஓடும் சாரதிகளாலும் பல விபத்துக்கள் ஏற்படுகின்றன.

வவுனியா முதல் யாழ்ப்பாணம் வரையிலான பாதையில் முக்கால் வாசிப்பகுதி காட்டுப்பகுதி. அங்கு போதிய வீதி விளக்குகளோ, பாதை சமிக்கைகளோ கிடையாது. சனநடாமாட்டமில்லாத பகுதி என்பதால் போக்குவரத்துப் பொலிஸாரையும் அங்கு எதிர்பார்க்க முடியாது. இவற்றைவிட பாதைகளில் ஆங்காங்கே குண்டும் குழியும் காணப்படுகிறது. பாதைகளின் இருமருங்கிலும் குழிகள் உள்ளன. இவற்றையெல்லாம் கருத்திற் கொண்டுதான் சாரதிகள் வாகனத்தைச் செலுத்த வேண்டும். ஆனால் இவை எதனையும் பயணிகள் சேவைகளை நடத்துவோர் கவனிப்பதாகத் தெரியவில்லை. கவனித்திருந்தால் இத்தனை விபத்துக்கள் இக் குறுகிய காலத்தில் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை. எனவே பயணிகள் சேவை நடத்துவோர் தமது சாரதிகளுக்கு முறையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். பொலிஸாரும் இவ்விடயத்தில் தமது பங்களிப்பு என்ன என்பது குறித்துச் சிந்திக்க வேண்டும். அதேபோன்று வீதி அபிவிருத்தி அதிகார சபையினரும் சில தற்காலிக சமிக்கை முறைகளைச் சாரதிகளின் கவனத்திற்குக் கொண்டுவரும் வகையில் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

இந்த மூன்று பிரிவினையும் நம்பியே பொதுமக்கள் தூரப் பிரதேசங்களுக்கு இரவு வேளைகளிலும் தமது குழந்தை குஞ்சுகளுடன் பயணம் செய்கிறார்கள். எனவே நம்பி வரும் மக்களை நட்டாற்றில் விட்ட கதையாக ஏனோதானோ என்று நடந்து கொள்ள வேண்டாம். பொறுப்புடன் நடந்து உங்களது உயிர்களையும், உங்களை நம்பிவரும் பயணிகளது உயிர்களையும் காப்பாற்றிக் கொள்ள உதவிபுரியுங்கள்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]