நந்தன வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 18
SUNDAY NOVEMBER 04, 2012

Print

 
‘KAVITHAIMANJAREY’

இறை பயணம்

ஆயிரம் உறவுகளும்
கலங்கி நிற்க
இறை உறவை மட்டுமே
நம்பிய பயணமல்லவா இது!

பகல் போன்று
பரபரப்பாக போனீர்கள்
இரவைப் போன்று
அமைதியாக வந்திருக்கிaர்கள்!

சைத்தானை துரத்த
கற்களை சுமந்தவர்கள்,
வலிமையுடைய பாறைகளைப்போல்
அமல்களுடன் வந்திருக்கிaர்கள்!

காயத்தோடு பயணித்தீர்கள்
ஆகாயம் போன்று,
வெண்மையாக உயர்ந்திருக்கிaர்கள்
வெண்மை-
ஒரு ரகசிய அழகல்லவா அது!

புனித மண்ணின் ஆழத்தை
கண்களால் அளந்தவர்கள்,
கஃபாவின் புன்னகையை
மொழிபெயர்த்தவர்கள்,
நபிபாதம் எங்கெல்லாம் வேர்விட்டதோ
அங்கெல்லாம் -
உங்கள் விழிப்பாதங்கள் நடந்திருக்கிறதே!

நீங்கள்-
கல்பு எனும் கற்புடையவர்கள்
மரண உறக்கம் மணந்தவர்கள்,
அழுது புலம்பிய போதெல்லாம்
கண்களுக்குத் தெரியாத கைகளால்
கண்ணீர்-
துடைக்கப்பட்டவர்கள்!

ஹஜ்ஜாஜிகளே,
தூய பிரசவங்களே
வாருங்கள்,
புனித மண்ணை முத்தமிட்ட
உங்களை, எங்கள் -
புன்னகை மகுடங்களால்
முத்தமிட வாருங்கள் ஹஜ்ஜாஜிகளே!


கண்ணீர்

கண்ணீர் ஒரு மந்திரம்!
கண்ணீர் ஒரு வரம்!
கண்ணீர் இதய ஊற்று!
கண்ணீர் இன்ப ஸ்பரிசம்!

ஆத்திரம் பெருகும் போதும்
ஆனந்தத்தில் உருகும் போதும்
கண்ணீர் ஒரு வரம்!

துரோகத்தை தாங்கி
துளித்துளியாய் மறந்துபோக
கண்ணீர் ஒரு மந்திரம்!

தாளாநி உணர்வுளை
தள்ளி விட்டு சுவாசிக்க
கண்ணீர் ஒரு இதய ஊற்று!

தோல்விகளின் ஈரத்தை
துடைத்துவிட்டு எழுந்திட
கண்ணீர் ஒரு இதய ஊற்று!

இதய பார்த்தின் இறுக்கத்தை உறிஞ்சு
இன்ப உறக்கந் தழுவிட
கண்ணீர் ஒரு மந்திரம்!

துணையும் தேவையில்லை
தோழனும் தேவையில்லை - தனிமை
கண்ணீர் ஒரு வரம்!!


வரவேற்பு

விலங்குகளை
வீசி எறியுங்கள்....
கணையாளிகளுக்காகவே காத்திருக்கின்றன
சமூக விரல்கள்!

காலம்
ஒரு சரித்திர தூண்
சமூகம்
என்னை சந்தோஷத்தோடு வரவேற்கும்!

எதற்கும் காரணம்
சொல்வதற்கு இல்லை
மரணம் வழியில் வந்துகொண்டிருக்கும்!

எப்போதும்
நிழல் என்னை துரத்தட்டும்
உற்சாகமாகவே ஓடிக்கொண்டிருக்க முடியும்
என்னால்...!

வேகம்
என் தேகத்திற்கு
சூடு ஏற்றட்டும்!
காலம் ஒரு சரித்திர தூண்...
சமூகம்
என்னை சந்தோஷத்தோடு வரவேற்கும்


கோழிமுட்டை விளம்பரம்

கோழி ஓர் முட்டையிட்டு
கொக்கரித்துப் பறக்கிறது
ஆழியில் ஓர் ஆமை
அமைதியாக மறைகிறது

திண்ணையிலே கழிக்கிறது கோழி
வேலியிலே குதிக்கிறது
மண்கிழறிச் சிரிக்கிறது
மறுபடியும் “கொக்கரக்கோ”

முட்டையிட்ட சேதியை
ஊருக்கு அறிவித்துவிட்டு
கோழி பொழுதுபட்டால்
கூட்டுக்குள் அடங்கிவிடும்

ஊர் அமைதியான பின்
உசுப்பாமல் ஓர் ஆமை
கடல்விட்டுக் கரையேறி
திடல் வந்து தோண்டி...

ஆயிரம் முட்டைகளை
அடுக்கடுக்காய் விட்டபின்னர்
அமைதியாக மூடிவிட்டு
ஆரவாரமின்றி ஆழிபோகும்.

கோழியின் ஓர் முட்டை
கொழும்புவரை தெரிகிறது
ஆமையின் ஆயிரம்
அயலவர்க்கே தெரியவில்லை.


நேசத்தில் வாழும் நெஞ்சத்தின் ஓரம்
நிம்மதி பூக்கள் பூத்திருக்கும் - அந்த
வாசத்தில் நாளும் வசந்தத்தின் ஈரம்
வரப்பிர சாதமாய் கலந்திருக்கும் - உண்மை
பாசத்தில் சூழும் பந்தத்தை ஆளும்
பரிணாம வளர்ச்சி கண்டிருக்கும் - அன்பு
வேசங்கள் பூணா விசுவாகம் என்னும்
வீதியில் நடந்து கொண்டிருக்கும்

இளவேனில் காலம் இதயத்தில் தோன்றும்
இயற்கை அதிசயம் நடந்திருக்கும் - அதன்
உளமெங்கும் வீசும் உன்னததேன் வாசம்
உயிர்வரை சென்று படர்ந்திருக்கும் - இது
வளமுள்ள வாழ்வின் வனப்புள்ள வயலின்,
வரம்புகள் தாண்டி அடர்ந்திருக்கும் - ஒரு
குளமுள்ள நிலத்தில் குடிகொண்ட மக்கள்
குலமுறை போலே தொடர்ந்திருக்கும்

அன்புக்கும் மட்டும் அயராமல் கொட்டும்
அடைமழை கூட பணிந்திருக்கும் - புது
இன்பத்தேன் சொட்டும் இல்வாழ்க்கைக் காட்டில்
இதமாக நனைய மணியடிக்கும் - வரும்
துன்பத்தை எல்லாம் “தூ” வென்று துப்பி
தூரமாய் ஒட்ட துணிந்திருக்கும் - மனம்
மன்னிக்கும் குணத்தில் மலைபோல உயர்ந்தால்
மாக்களும் மகுடம் அணிவிக்கும்


ஏறணும் விமானத்தில் நான்...!

தொழிலிழந் துள்ளம் நொந்து
தொடர்கதை சோகம் என்று
அழுது பாத் தீட்டும் நேசா!
கவிமணி, கெளரி தாசா!
எழில் தொழில்! என்ன செய்வோம்?
எனக்குமிக் கதிதா னிப்போ!
விழிகளில் கண்ணீர்ப் பூக்கள்....!
விரக்தியில் கழியும் நாட்கள்!

ஐவரோ டல்ல லுற்ற
அவலத்தை நீயு ரைத்தாய்!
“சைபரோ” வாழ்க்கை? இல்லை!
சரிவரும்! பூச்சி யங்கள்
தைரிய மாயு ழைத்தால்
சீக்கிரம் நமக்கு(ம்) முன்னால்
வைத்திடும் இலக்கம் நூறு!
முயன்றுமுன் னேறப் பாரு!

இல்லாளும் நானும் சேர்ந்து
இரண்டுஆண்! இரண்டு பெண்கள்!
எல்லாமாய் ஆறு பேர்தான்!
எமக்கில்லை ஆணி வேர்தான்!
“எல்லோரும் வளமாய் உள்ளார்!
எங்களைத் தவிர!” ஏதோ -
அல்லாஹ்வின் ஏற்பா டென்றால்
அதைவெறுத் தொதுக்க வோ நாம்?

அரசாங்க உத்தி யோகம்!
உரைகுறைச் சந்நி யாசம்!
பரிதாப மான வாழ்க்கை!
பட்டுமாய்ந் திட்ட வன்நான்!
எரிதழற் புழுபோ லானேன்!
எல்லோரும் எஜமா னானார்!
சிறகுகள் விரித்து விட்டேன்!
சிறையெனக் கிப்போ தில்லை!

மொழியோடு போட்ட கூத்து
வாழ்க்கைக்குப் பேரா பத்து!
அலி, வெளி நாடு போக
ஆயத்த மாகி விட்டேன்!
“பலியாடு” போலாய் பாழாய்ப்
போன நாட் போக.... நானும்
வெளிநாடு போகும் நாளை
விரைவினில் எதிர்பார்க்கின்றேன்!

எனதிரு மகள்மா ரையும்
எப்படிக் கரைசேர்ப் பேன்நான்?
மனை, நகை சேர்க்க வேண்டும்!
“மகள்மாரை வெறுங்கை யோடு
அனுப்புதல் பாவம்...! தப்பு!
அதுதந்தைக் கழகே யல்ல!”
இனிப்புதல் விகள்...சி ரிப்பர்!
ஏறணும் விமானத்தில்... நான்!

கடந்த 21.10.2012 கவிதை மஞ்சரியில் கவிமணி அ.கெளரிதாசன் எழுதிய “வாழ்வினில் பசுமை காட்டு!” கவிதைக்குப் பதில் கவிதை.


இவனே ஆசிரியன்

தந்தைக்கு முருகனே குருவான கதை மூலம்
தரணியில் மக்களெல்லாம்
சிந்தையாம் கோயிலில் வைத்துமே போற்றிடும்
தெய்வமும் ஆசிரியனே

மண்ணீன்ற தங்கத்தைப் பல்வேறு நகையாக்கி
மங்கையர்க் கீவதைப் போல்
பெண்ணீன்ற பாலரை புடம் போட்டு உருவாக்கும்
பொற்கொல்லன் ஆசிரியனே

ஒழுங்கற்ற கல்லினை உளிகொண்டு செதுக்கியே
உருவங்கள் ஆக்குதல் போல்
தெளிவற்ற பாலரை அறிவாளி ஆக்கிடும்
சிற்பியாம் ஆசிரியனே

களியினால் குடஞ்சட்டி பானைகள் செய்துமே
பயன்படத் தருவதைப் போல்
குருவாகிப் பலதொழில் பெறுதற்கு வழிகாட்டும்
குயவனாம் ஆசிரியனே

பண்படா நிலம் போன்ற பாலரைப் பண்பாக்கி
பயிர் நடச் செய்யுமாப் போல்
பலதுறை அறிவூட்டும் விவசாயி யேயிந்த
பண்பான ஆசிரியனே

பரந்ததோர் கடலிலே படகேறி ஊர்செல்லும்
பயணியாம் பாலகர்களையே
மிகுந்த புயல் சுழிபாறை தாக்காமல் கரை சேர்க்கும்
மீகாமன் ஆசிரியனே

ஒழுங்கற்ற உணர்வோடு வருகின்ற பாலர்க்கு
உயர் வாழ்வுக் கேற்ற அறிவை
வழங்கியே உலகினில் வாழ்வாங்கு வாழ்ந்திட
வழிகாட்டி ஆசிரியனே

ஆதலா லேயிந்த ஆசிரிய நற்பணி
அவனியில் சிறந்த தென்று
முதுமொழி சாத்திரம் வேதங்கள் சொன்னது
முற்றிலும் உண்மைம்மா
- பதியத்தளாவ பாறூக் -
புலவர் மணியெனும் பெருந் தகையின்
புத்திரன் ஜின்னாஹ் வெனும் பெருமகனார்
புலவர்மணி யெனும் தந்தை புகழ்
பொருத்தமாய் கிடைத்ததை எண்ணும் போது
புலனது ஒரு கணம் கைகள் கொட்டிப்
பூரித்து மகிழ்கிறது எந்தன் நெஞ்சு
புலருகின்ற பொழுதுகளில் பூக்கும் பூவாய்
புதுவாசம் தருவதிலே இன்பங் கோடி

வாழுகின்ற கலைகளுக்குள் வடிவந் தேடி
வழுவிலா பட்டறைக்குள் நீ எழுந்து
மாழுகின்ற சமுதாயத்தை மனதிற்கண்டு
மருத்துவம் மாந்தியதில் மருத்துவன் நீ
ஆளுகின்ற ஆய கலை வல்லமைக்குள்
அரசனாய் நின்று ஆண்டவைகள்
நீழுகின்ற பணிமண்ணில் நிலவாய் எழுந்து
நின்று கதை சொன்னதை என்ன வென்பேன்!

காவியங்கள் பத்துக்குள் காலைப் பதித்து
களமதில் நின்று காட்டிய கைகளால்
ஓவியமாய் போரையடா ஒவ்வோர் நெஞ்சில்
உண்மையின் குரலிதை ஒடிக்க லாமோ?
நாவிரம் பூணாத மொழி வளத்தால்
நல்ல தமிழ் அன்னைக்குப் புள்ளையாரைப்
பாவரசாய் என்றுமிங்கு பதவி கண்டு
பூவரசாய் என்றும் பூத்து நிற்பாய்!


உயர்வு

படிப்பு உயர வாசிப்பு உயரும்
வாசிப்பு உயர புத்தகம் உயரும்
புத்தகம் உயர அறிவு உயரும்
அறிவு உயர ஞானம் உயரும்

ஞானம் உயர புத்தி உயரும்
புத்தி உயர ஆக்கம் உயரும்
ஆக்கம் உயர கலை உயரும்
கலை உயர சுவைத்தல் உயரும்

சுவைத்தல் உயர அடக்கம் உயரும்
அடக்கம் உயர நிம்மதி உயரும்
நிம்மதி உயர வெற்றி உயரும்
வெற்றி உயர சமூகம் உயரும்

சமூகம் உயர தேசம் உயரும்
தேசம் உயர அரசு உயரும்
அரசு உயர ஞாலம் உயரும்
ஞாலம் உயர எல்லாம் உயரும்


நீ வருவாய் என...!

சிதறிய பூவிதழ்களாய் - அன்று
காற்றின் பாதையிலே:
பாடசாலைக் கருவறையில்
விழி பதித்துக் கொண்டோம்...
இதயம் சொன்ன
வார்த்தைகள் எல்லாம்;
நண்பியே...!!! உன்னில்
புதைத்து நின்றேன்...
வானமும் வியக்கும் - பரந்த
இன்பங்கள்...
கடலும் சிலிர்த்துப் போகும்;
அலைகளையும் முட்டி மோதிவிடும்
சின்னச் சண்டைகள்...
கூடும் நேரங்களில் - செல்ல
வேடிக்கைகள்...
உனக்கும் எனக்கும்
என்ன உறவு???!!
கேள்விக்கு அவசியமே
இருக்கவில்லை...
நட்பின் ஆழத்தில் - மீள மனமில்லா
சிறை கிடந்தோம்...
மின்னல் கீற்றுக்களால்
இமைகள் படபடக்கவே...

துடைக்க கரம் தேடினேன்...
எங்கே என் நண்பி???
ஆயிரமாயிரம் பேசிக் கொண்டோம்
காலத்தின் முடிவை - மட்டும்
பேசவே மறந்தோம்...
விடை அறிந்திடா - புதிரிது...
இன்னும் புரிந்திடா - பிரிவிது...
கால மழையினிலே - குடையின்றி நானும்...
தோழியே!!! நீ வருவாய் என...



அண்டப்புளுகன்

முன்பொருநாள் கண்ட அதேபோலிவுடன் ஊர்.
மேடை, தோரணம், கொடியென
இம்முறையும் தெருத்தெருவாய்
மலிந்துகிடந்தது அவனது பெயர்
வான் பிளக்கும் பட்டாசு வெடிகள்,
அண்ணாவியர்களின் பொல்லடி,
பாவாக்களின் ரப்பான்மேளம்,
பொண்டுகள் குலவையென
நாட்டின் பெரும் தியாகியைப்போல்
வரவழைக்கப்பட்டான்.
விளம்பரப்பலகைபோல் முன்வரிசையில்,
ஊரின் முதிர்ந்த முகங்கள்
களைகட்டியிருந்தது மேடை,
பேச ஆரம்பித்தசிலர்.....
ஏழேட்டுப்பேரை கழுவி குடித்தனர்.
அந்தப் பகுதியில் அடித்த காற்றில் ஒரு சாதி செடிநாத்தம்,
சுவாசிக்க முடியாமலிருந்தது.
இப்போது அவன் முறை
கரகோசத்தோடு பேசஎழுந்தான்
சூனியக்காரர்களின் வித்தைகள் சில தெரியுமவனுக்கு
உலகமகா பொய்களை சாக்கு, சாக்காய் அவிழ்த்து விட்டான்
மேடையிலிருந்து இறங்கி
தொண்டர்களின் காதுகளிலேறி உட்காரும்படி ஏவி.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]