நந்தன வருடம் புரட்டாதி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 27
SUNDAY OCTOBER 14, 2012

Print

 
அரசியல் கட்சிகளில் உயர் பதவி வகிப்பவர்கள் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகிகளாக தெரிவாவதை தடுக்க பிரேரணை

அரசியல் கட்சிகளில் உயர் பதவி வகிப்பவர்கள் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகிகளாக தெரிவாவதை தடுக்க பிரேரணை

இருபதுக்கும் அதிகமான உறுப்பினர்கள் கையொப்பமிட்டனர்

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் உயர் பதவிகளில் அரசியல் கட்சிகளில் மேல்மட்ட பதவி வகிப்பவர்கள் போட்டியிடுவதை தடுக்குமாறு கோரி பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரேரணையில் 20க்கும் அதிகமான உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

யாப்பு விதிகளில் காலத்துக்கு ஏற்ற மாற்றங்களை செய்யுமாறு வலியுறுத்தியும் பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சங்க உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 க்கு தமிழ்ச்சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் தலைவர் மு.கதிர்காமநாதன்

தலைமையில் நடைபெறவுள்ளது. புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் பொதுச் சபைக் கூட்டத்தில் சங்கத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளன.

சங்கத்தின் யாப்பு விதிகளுக்கு இணங்க தேர்தல் நடைபெறுவதற்கு 21 நாட்களுக்கு முன்னர் உறுப்பினர்கள் சீர்திருத்த பிரேர ணைகளை சமர்ப்பிக்க முடியும். அதன் பிரகாரம் மேற்படி பிரேரணைகள் சமர்ப் பிக்கப்பட்டுள்ளன. அரசியல் தவிர்ந்த தமிழ் இலக்கியங்கள், கலைநிகழ்ச்சிகள் தமிழ்ச்சங்கத்தில் காலம் காலமாக இடம்பெற்று வரும் நிலையில் சங்கத்தின் உயர் பதவிகளில் உள்ள சில உறுப்பினர்கள் சமீபகாலமாக அரசியல் கட்சிகளில் பொருளாளர், உப தலைவர், துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள் போன்ற மேல்மட்ட பதவிகளை வகிக்கின்றனர்.

தமிழ்ச்சங்கத்தின் செயலாளர், உபதலைவர், துணைத்தலைவர் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் பதவிகளில் இருந்துகொண்டே அரசியல் கட்சி ஒன்றில் மேற்படி பதவிகளை அவர்கள் வகிப்பதாக சங்க உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதனால் பிரேரணையை பொதுச் சபையின் அங்கீகாரத்துடன் யாப்புக்குழு அதனை சங்கத்தின் யாப்பில் இணைத்து அவ்வாறானவர்கள் போட்டியிடுவதை தடுப்பதற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

சில உறுப்பினர்களின் இவ்வாறான செயற்பாடுகளை பின்பற்றி வேறு பல அரசியல் கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகள் உறுப்புரிமையை பெற்று கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் முக்கிய பதவிகளுக்கு போட்டியிட்டு தெரிவு செய்யப்படுவதை தடுக்கும் நோக்கிலேயே இந்த பிரேரணையை சமர்ப்பித்ததாக சங்க உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.

அதேவேளை சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கையை 40இல் இருந்து 60 ஆக உயர்த்துவதற்கும் துணைத் தலைவர்கள் எண்ணிக்கையை 15ஆக உயர்த்துவதற்கும் ஆட்சிக்குழுவி னால் ஆண்டுப் பொதுக்கூட்ட தெரிவுக்கு செய்யப்படும் விதப்புரையை நீக்கு வதற்கும் பிரேரணைகள் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன.

சங்கத்தின் மொத்த உறுப்பினர் தொகையை ஒரு வருடத்துக்கு 10 வீதத்துக்கு மேல் அதிகரிப்பதை தடுப்பதற்கும் பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. கடந்த வருட பொதுக் கூட்டத்தை விட இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுக்கூட்டம் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]