நந்தன வருடம் புரட்டாதி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 27
SUNDAY OCTOBER 14, 2012

Print

 
வரலாற்றுத் தொன்மை மிக்க முருக்கன் தீவு

வரலாற்றுத் தொன்மை மிக்க முருக்கன் தீவு

மனித வரலாற்றைக் கட்டியெழுப்ப உதவும் சாதனங்களில் வரலாறு தொல்லியல் போன்ற துறைகள் முக்கியத்துவம் பெறுகின்றன். சில சந்தர்ப்பங்களில் வரலாற்று நூல்கள் எழுதிய ஆசிரியரின் மனோபாவத்திற்கேற்ப திரித்தும் மாறுபட்டும் எழுதப்படலாம். ஆனால் தொல்லியற் சான்றுகள் அவ்வாறன்று.

 அவை உண்மையை உள்ளபடி கண்டறிய உதவும். இதன் மூலம் ஏனையவற்றை விட மனித வரலாற்றை அறியும் ஆய்வில் தனித்துவமான இடத்தை வகிக்கின்றது எனலாம். இத்தகைய ஆய்வுகள் இலங்கையில் தமிழர் வாழும் பிரதேசங்களைப் பொறுத்தவரை மிகக்குறைவாகவே நடைபெறுகின்றமை கவலைக்குரியது. தமிழர் வரலாறுகள் மறுக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் வரும் இன்றைய சூழலில் ஈழத்தமிழரின் வரலாறுகளும் அவர்களது பூர்வீகப் பிரதேசங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டியது இன்றியமையாதவொன்றாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கே கோரளைப்பற்று தெற்குப் பிரதேசத்திற் குட்பட்ட கிராமமே முருக்கன் தீவு, பிரதான வீதியிலிருந்து ஏறத்தாழ 1.5கி.மீ தூரத்தில் அமைந்திருக்கும் கிண்ணையடி எனும் பழம்பெரும் ஊரினூடகச் சென்று, கிண்ணையடி அற்றைக் கடந்து சென்றால் முருக்கன் தீவு அமைந்துள்ளது. பழமைவாய்ந்த இவ்வூரின் தொல்லியற் தடயங்களைக் கண்டறியும் ஆய்வு முயற்சியொன்று கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களாகிய அ.சதானந்தன், க. சந்திரமேகன், க. சிவதர்ஷன் ஆகியோரின்

உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது. அம்முயற்சியின் பயனாக அவ்வூரின் தொன்மையை வெளிப்படுத்தும் வகையிலான சான்றுகள் கிடைத்தமை மகிழ்ச்சிக்குரியது.

முருக்கன் தீவுப் பிரதேசத்தில் ஏறத்தாழ 50 குடும்பங்கள் வசிக்கின்றன. அவர்கள் சேனைப் பயிர்செய்கை, மாடுமேய்ப்பு, விவசாயம், மீன்பிடி போன்றவற்றை தமது வாழ்வாதாரத் தொழில்களாக மேற்கொள்கின்றனர். இம்மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணலின்படி 1950ஆம் ஆண்டுக்கு முன்னர் இவ்வூரில் ஐந்தாறு குடும்பங்கள் வாழ்ந்ததாகவும், பின்னர் பல குடும்பங்கள் கிண்ணையடி முதலான ஊர்களிலிருந்து வந்து வாழத் தொடங்கியதாகவும் கூறப்படுகின்றது. இங்கு முருகனாலயம் ஒன்று அமைந்துள்ளது. மக்கள் நீண்டகாலத்திற்கு முன்னரே இவ்விடத்தில் வேல் வைத்து முருகனை வழிபடத்தொடங்கியுள்ளனர். ஆயினும் கோயிற் கட்டடம் 1986ஆம் ஆண்டளவிலேதான் கட்டப்பட்டுள்ளது.

இந்த முருகன் கோயிலின் முன்றலில் படிக்கற்களாக இரு கற்துண்டுகள் போடப்பட்டுள்ளன. ஏறத்தாழ 6அடி நீளமானவையாக இவை காணப்படுகின்றன. செம்மையாக வெட்டப்பட்ட இக்கற்களை தற்செயலாக நோக்கியபோது மேலிருந்த கல்லில் சில எழுத்துக்களை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே அதனைச் சுத்தம் செய்து பார்த்தபோது அவை தமிழ் எழுத்துக்களின் ஆரம்பவரிவடிவமாகிய தமிழ் பிராமிய எழுத்துக்கள் என்பதை அறியமுடிந்தது. தமிழ் பிராமிச் சாசனங்கள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.பி ஐந்தாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டவை.

இவை தமிழ் மொழியில் எழுதப் பட்டவை. அளவிற் சிறிய இச்சாசனங்கள் பெரும்பாலும் தானசாசனங்களாகவே அமைகின்றன. இலங்கையில் ஏறத்தாழ 2000இற்கு மேலான பிராமியசாசனங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் பிராகிருதச் சொற்கள், தமிழ் மொழிச் சொற்கள் என்பன காணப்படுகின்றன. கி.மு. முதல் மூன்று நூற்றாண்டுகளில் இலங்கையில் தமிழ் ஒரு பேச்சுமொழியாக விளங்கியமைக்கு ஆதாரமாய் பிராமிச் சாசனங்கள் அமைகின்றன என பேராசிரியர் சி. பத்மநாதன் தமது இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

முருக்கன் தீவில் கிடைத்த சாசனத்தை வாசிக்கமுற்பட்ட போது அதனை முழுவதுமாக எம்மால் வாசிக்கமுடியவில்லை. மேல்வருமாறு அவற்றை அடையாளம் காணமுடிந்தது. இவ்வெழுத்துக்கள் ஓரளவு தெளிவாகத் தெரிந்தது. அதிலும் குறிப்பாக (மருதம்) எனும் சொல்லை மற்றைய எழுத்துக்களை விடத் தெளிவாக வாசிக்கமுடிந்தது.

கற்சாசனங்களில் மெய்யெழுத் துக்களின் பயன்பாடு அரிதா கையால் இச்சொல்லை மருதம் எனக் கொள்ள முடியும். என்பது வயலும் வயல் சார்ந்த பிரதேசத்தையும் குறிக்க பழந்தமிழ் இலக்கிய காலம் முதல் பயன்படுத்தப் பட்டு வந்த சொல்லாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு நோக்குகின்றபோது வயல்கள் நிறைந்த பகுதியில் கிடைத்துள்ள இச்சாசனம் வயலுடன் தொடர்புடைய ஏதோவொரு நிகழ்ச்சியை குறிப்பிடுகின்றது என நாம் கொள்ளமுடியும். எனினும் சாசனத்தின் ஏனைய எழுத் துக்கள் தெளிவாகத் தெரியாத நிலையில் அந்நிகழ்ச்சி யாதென்பது பற்றிய விவரங் களை அறியமுடியவில்லை.

இக்கற்பாறைகள் சில வருடங்களின் முன்பு காயிலிற் குப் பின்னே ஏறத்தாழ 15 மீற்றர் தொலைவில் குழிகளை வெட்டியோது கிடைத்தவை யாகும். அக் கற்பலகை நீண்ட காலமாக படிக்கற்களாக பயன் படுத்தப்பட்டமையால் வாசகத் தின் பிற்பகுதி பெருமளவில் சிதைவடைந்துள்ளது. பிராமிச் சாசனம் மட்டுமின்றி மேலும் சில தொல்பொருட் தடயங்கள் எமக்குக் கிடைத்தன. அவ்வூர வர் ஒருவருக்கு கிணறு வெட்டும்போது ஏறத்தாழ 5 அடி ஆழத்தில் சிதைவுறாத நிலையில் மட்குடமொன்று கிடைத்துள்ளது. மிகக்கனமான தாகவும் சிவப்பு நிற மட்பாண்ட மாகவும் இது காணப்படுகின்றது.

அதில் ஒரே மாதிரியான அலங்கார வேலைப்பாடுகள் வரையப்பட்டுள்ளன. ஆயினும், அதில் எவ்வித எழுத்துக்களோ குறியீடுகளோ காணப்படவில்லை. முருக்கன் தீவின் பல பகுதி களிலும் ஏறத்தாழ 8, 9 அடி கள் தோண்டினால் சிவப்பு நிற மட்பாண்ட ஓடுகளை அவதானிக்க முடியும் என அவ்வூர் மக்கள் தெரிவித்தனர். மட்பாண்டங்கள் தொல்லிய லின் உயிர்நடி போன்றவை. பண்டைக் காலமக்கள் வாழ்ந்த வாழ்க்கையை, மேனிலையை, அடைந்த மாறுதல்களை அளக்கும் அளவுகோலாகவும் அவை விளங்குகின்றன. சாதாரண மக்கள் தமது அன்றாட வாழ்வில் பயன்படுத்திய பொருட்களில் மட்கலங்களே அதிகமானவை என்பதனால் மட்பாண்டம் பற்றிய ஆய்வுகள் முக்கியமானவை. இவற்றை பண்பாட்டுக்குறிகாட்டி என்று தொல்லியலாளர் கூறுவர். முருக்கன் தீவில் மட்டுமன்றி அதனை அடுத்துள்ள சாராவெளி முதலான ஊர்களிலும் கிணறு முதலிய தேவைகளுக்காக குழிகளைத் தோண்டியபோது இத்தகைய மட்பாண்டத் துண்டுகள் கிடைத்துள்ளதாக மக்கள் குறிப்பிட்டனர். சாராவெளியில் உள்ள பிள்ளையார் கோவிலிற்கான தீர்த்தக் கிணறு கட்டப்பட்டபோது கிடைத்த சில மட்பாண்டத் துண்டுகளை எம்மால் காணமுடிந்தது.

இப்பகுதிகளில் பொதுவாக இரண்டு அடிகளுக்குமேல் தோண்டினால் கடற்சிப்பிகள் ஏராளமாகக் கிடைக்கின்றன. தாம் பல்வேறு தேவைகளின் நிமித்தம் மடுக்களைத் தோண்டியபோது கிடைத்த சில கடற்சிப்பிகளையும் எமக்குக் காட்டினர். இங்கு நிலத்திலிருந்து 5 முதல் 8 அடிக்கு கீழே பல கற்துண்டுகள் மாளிகை போன்ற அமைப்பிலே காணப்பட்டதாக அங்குள்ள ஒருவர் தெரிவித்தார். ஆயினும், தற்போது அவ்விடம் மண்ணால் மூடப்பட்டுள்ளது. அவற்றினை ஆராய்வதற்கு எவ்வித அனுமதியும் எமக்கு இல்லையாதலால் அவர்கள் கூறியவற்றை எம்மால் உறுதி செய்யமுடியவில்லை.

பெருங்கற்படைக் காலப் பண்பாடும் தமிழ் பிராமிச் சாசனங்களின் மொழிவழக்கும், அது அடையாளப்படுத்தும் பண்பாட்டு மரபுகளும் நெருங்கிய தொடர்புடையவை. அத்துடன் பெருங்கற்படைக் காலப் பண்பாட்டின் சிறப்பம்சங்களுள் கறுப்பு, சிவப்பு நிறமட்பாண்டங்கள் சிப்பிகள், சங்குகள் போன்றன குறிப்பிடத்தக்கவை. இவை யாவும் முருக்கன் தீவில் கிடைத்தமை இப்பகுதி பெருங்கற்படைக்காலப் பண்பாடு நிலவிய பிரதேசம் என்பதை எம்மால் உணர்ந்து கொள்ளமுடிகின்றது. ஆயினும் அதனை உறுதி செய்வதற்கு மேலும் பல ஆதாரங்கள் எமக்குத் தேவைப்படுகின்றன. அதற்கு சட்ட ரீதியான அனுமதியுடன் கூடிய ஆதரவு தேவை. தொன்மைவாய்ந்த இவ்விடம் பற்றிய விவரங்களை அறியும் முயற்சியில் இதுவரையிலும் யாரும் ஈடுபட்டிருப்பதாகத் தெரியவில்லை. எமது மூதாதையரின் வாழ்க்கை முறை, அவர்களது பண்பாடு, அவர்களது மொழி போன்றவற்றை அறிவதற்கு இத்தகைய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய தொல்லியல் ஆய்வுகளே முக்கியமானவை. அதன் மூலமே எமது பிரதேசத்தின் வரலாற்றை தெளிவாக எம்மால் வெளிப்படுத்த முடியும். எனவே இப்பகுதியில் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை சம்மந்தப்பட்ட அனைவரும் விளங்கிக் கொள்வதன் மூலம், எமது வரலாற்றை மற்றவர்களின் உதவியின்றி நாமே அறிந்து கொள்வதுடன், அவற்றை சான்றுகள் மூலம் நிரூபிக்கவும் முடியும் என்பது திண்ணம்.

கிழக்குப் பல்கலைக்கழகம்


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]