நந்தன வருடம் புரட்டாதி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 27
SUNDAY OCTOBER 14, 2012

Print

 
முன்பள்ளி கற்கை நெறிகள் நுவரெலியா, பதுளை, கேகாலை மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்படுவது அவசியம்

முன்பள்ளி கற்கை நெறிகள் நுவரெலியா, பதுளை, கேகாலை மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்படுவது அவசியம்

திறந்த பல்கலைக்கழகத்தின் முன்பள்ளி கற்கை நெறிகளை நுவரெலியா, பதுளை, கேகாலை மாவட்டங்களி லும் ஆரம்பிக்கப்பட வேண்டுமென பிரிடோ நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

திறந்த பல்கலைக்கழக முன்பள்ளிக் கற்கைநெறி தற்போது கண்டியிலும், ஹட்டனிலும் தமிழ் மொழியில் நடைபெற்று வருகிறது. இவ்விரு நிலையங்களிலும் எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கைக்கு அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர். இப்பயிற்சி நெறியை பின்பற்றி சான்றிதழ் பெற்ற ஆசிரியர்களால் பெருந்தோட்ட பகுதி முன்பள்ளிக் கல்வியின் தரம் அதிகரிக்கப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இக்கற்கை நெறியை மலையகத்தின் ஏனைய பகுதிகளிலும் ஆரம்பிப்பதன் அவசியத்தை சுட்டிக்காட்டி பிரிடோ நிறுவனம் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியிருந்தது. அதற்குப் பதிலளித்த பல்கலைக்கழக நிர்வாகம், எதிர்காலத்தில் மலையகத்தின் ஏனைய பகுதிகளிலும் விசேடமாக பதுளை, பண்டாரவளை பகுதிகளிலும் இந்த கற்கை நெறியைத் தமிழ் மொழியில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தது.

இந்த பின்னணியில் நுவரெலியா, பதுளை, பண்டாரவளை, கேகாலை மற்றும் பெருந்தோட்டங்களிலுள்ள முன்பள்ளி ஆசிரியைகள் பயிற்சி பெற வேண்டிய தேவை இருப்பதால் திறந்த பல்கலைக்கழக கற்கை நிலையங்களிலும் இந்தப் பயிற்சி நெறியை தமிழ் மொழியில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு திறந்த பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு பிரிடோ நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

நமக்கு கிடைக்க வேண்டிய அரச வளங்கள், வசதிகள் கிடைக்காதபோது அதனைக் கொள்கை வகுப்பாளர்கள் அல்லது தீர்மானம் எடுப்போரின் கவனத்திற்கு கொண்டு வந்து அதன் உரிமைகளையும், வளங்களையும் பெற்றுக்கொள்ள முயற்சி செய்யாதவரை அவை நமக்கு கிடைக்கப்போவதில்லை.

எனவே இக்கோரிக்கையை நுவரெலியா, பதுளை, கேகாலை ஆகிய பகுதிகளில் உள்ள அரசியல் வாதிகள், கல்வித்துறையில் தொடர்புள்ளோர், அரசு சார்பற்ற நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு வலியுறுத்த வேண்டும். குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து அழுத்தமான கோரிக்கைகள் எழுமானால் பிரிடோ நிறுவனத்தால் இந்த பரிந்துரையை வெற்றிகரமான முறையில் முன்னெடுக்க முடியும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புவதாக பிரிடோ நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]