புத் 64 இல. 43

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 05

SUNDAY OCTOBER 21 2012

 

செய்கை பண்ணப்படாத காணிகள் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்

செய்கை பண்ணப்படாத காணிகள் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்

- ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கம்

பெருந்தோட்டப் பகுதிகளில் பயிர்ச்செய்கை பண்ணப்படாத காணிகளை காணி இல்லாமல் இருக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக் கப்பட வேண்டுமென ஐக்கிய தோட்டத் தொழிற்சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தோட்டங்களில் 37 ஆயிரம் ஏக்கர் காணி பயிரிடப்படாமல் இருப்பதாக தெரிவித்துள்ளதோடு இக் காணிகளை நிலமற்ற மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென பணித்திருந்தார்.

அண்மையில், பதுளை மாவட்ட அபிவிருத்திச் சபைக் கூட்டத்திற்கு ஜனாதிபதி வருதை தந்தபோது இம்மாவட்டத்தில் அரசிற்கு உரித்தான 9 ஆயிரம் ஏக்கர் காணிகளை தோட்ட நிர்வாகங்கள் நிர்வகிப்பதாக பதுளை அரசாங்க அதிபரால் முன்வைக்கப்பட்டது. இக் காணிகளை இனங்கண்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டுமென ஜனாதிபதி பணித்துள்ளார். இது ஓர் முற்போக்கான விடயம் என நாம் கருதுகின்றோம்.

கடந்த 175 வருடங்களுக்கு மேலாக இலங்கையின் தேசிய வருமானத்தில் பெரும் பகுதியைத் தேடித்தரும் பெருந்தோட்டத்துறை மக்களால் நமது நாடு வளம் கொழிக்கும் அதே வேளையில் தோட்ட மக்கள் பல வழிகளில் புறக்கணிக்கப்பட்டவர்களாகவே உள்ளனர்.

இவர்களுக்கென ஒரு அங்குல காணி இல்லை. குடியிருக்கும் வீடுகளுக்கும் எவ்வித உறுதிப்பத்திரமும் இல்லை.

நிர்வாகங்களின் அசமந்தப் போக்கினாலும் ஊழல்களாலும் பயிர்ச்செய்கை நாளுக்கு நாள் அருகி வருவதினால் இத்துறையின் எதிர்காலம் சூன்யமயமாகி விடக்கூடிய அபாயமுள்ளது. இதனால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் பெருந்தோட்ட மக்களே.

இவ் விடயம் சம்பந்தமாக தொழிற்சங்கங்கள், புத்திஜீவிகள், தோட்டத் தொழிலாளர்கள், பதுளையில் ஒன்றுகூடி ஆராய்ந்து, இக் காணிகளை தொழிலாளர் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிப்பதன் மூலம் தொழிலாளர்களின் வாழ் வாதாரம் முன்னேற்றமடைவதோடு, காணிகளும் பாதுகாக்கப்பட்டு நாட்டின் வருமானத்திலும் அபிவிருத்தியேற்படும் ஆகையால், தோட்டங்களிலுள்ள பயிரிடப்படாத 37 ஆயிரம் ஏக்கர் காணிகள் தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கக்கோரி ஜனாதிபதிக்கு தொழிலாளர்களால் கையொப்பமிட்ட மகஜரின் நகல் ஒன்றை ஊவா மாகாண ஆளுநர் நந்த மெத்தியூவிடம் கடந்த செப்டம்பர் 10ஆம் திகதி கையளிக் கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்பு மற்றும் காணி போன்ற விடயங்கள் ஊடகங்களில் வெளிவந்த வண்ணமுள்ள அதே வேளையில் கடந்தகால வரலாற்றில் அடிப்படை கோரிக்கைகளான பிரஜாவுரிமை, மலையகப் பிள்ளைகளின் கல்வி போன்றவைகளை வென்றெடுத்ததைப்போல் காணி கோரிக்கையிலும் சகல தொழிலாளர்களும் தொழிற் சங்கங்களும் மலையக மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற, மாகாண சபைகள், மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் புத்திஜீவிகள் ஒன்றுபட வேண்டுமென ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.