புத் 64 இல. 43

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 05

SUNDAY OCTOBER 21 2012

தியாகத் திருநாள்

தியாகத் திருநாள்

ஊர்ப்பள்ளி வாசலிலும், வானொலி தொலைக்காட்சிகளிலும் ஹஜ் பெருநாள் என்று ஊர்ஜிதம் செய்து அறிவித்ததுமே அந்தச் சிறிய நகரமே கலகலக்கத் தொடங்கிவிட்டது...

மத்திய மாகாணத்தில் உள்ள ஒரு முக்கிய நகரமான நாவலப்பிட்டியும் பல இன மக்களும் ஒன்றித்து வாழும் நகரம்தான். அங்கே ஒவ்வொரு மதத்தினரும் தத்தமது தனித்துவத்தோடு வாழ்ந்து வந்தனர்.

பெருநாள் பற்றிய அறிவித்தல் வந்ததுமே பட்டாசுகள் சரமாரியாக கொழுத்தப்பட்டன... சிறுவர்களது உற்சாகத்துக்கு அளவில்லை. நோன்புப் பெருநாள் அளவு இதனைக் கொண்டாடாவிட்டாலும் கொண்டாட்டத்துக்குக் குறைவு இல்லை.

“ஏய்... ரூமுக்குள்ள என்னச் செய்யிற பெருநாள் என்டு சொன்னது கேக்கல்லயா...” kனியாவின் தாய்தான் கோபமாக பேசிக்கொண்டே அவளது அறைக்கு வந்தாள்.

“சீ... என்னா இது.... மஹ்ரிபு நேரத்துல போத்திப் படுத்துக்கிட்டு... எழும்பு... எழும்பு...” kனியாவின் போர்வையை இழுத்துவிட்டாள் தாய்...

“ஏய்... என்னா இது...நல்லநாளுள இப்படி கண்ணீரோட” kனியாவின் கண்ணீரைக் கண்டதும் அவள் துடித்துத்தான் போனாள்...

“நீங்க போங்கம்மா ... நான் வர்ரேன்...” மீண்டும் kனியா போர்வைக்குள் புகுந்து கொண்டாள்.

தாய் கரீமாவுக்கு விளங்கியது... மேலும் பேசாமல் சமையலறைக்குச் சென்று விட்டாள். கரீமாவுக்கு மட்டும் கவலையில்லாமலா? ஆனால் கரீமாவின் வாழ்க்கை அனுபவங்களும் மனப்பக்குவமும் kனியாவுக்கு வரமுடியாதே. இதனால் தான் கரீமா கதையை வளர்க்காமல் மெளனமானாள்...

“இங்கே பாருங்க... kனியாட உம்மா... நான் பள்ளிவாசலுக்குப் போறன்... ஏதும் சாமான்க கொறபாடா இரிந்தா சொல்லிடுங்க... வர்ரநேரம் வாங்கிட்டு வர்ரேன்....”

கரீமாவின் கணவன் ஸ¥ஹைப் தான் அவர் கரீமாவை “kனியாட உம்மா” என்று அழைப்பதும் தான் வழக்கம்,

கரீமா பதிலே பேசவில்லை. சமையலறைக்கே வந்தார் ஸ¥ஹைப் “இங்கே பாருங்க... ஒங்களுக்கு, மகளுக்கு மகன்மாருக்கு எல்லாம் என்னோட மனவருத்தம்... எனக்குத் தெரியும்...இதுக்காக நல்ல நாளும் அதுவுமா... புள்ளைகளுக்கு கொறவைக்கலாமா! நாலுபேரு ஊட்டுக்கு வந்துட்டா கவனிக்காம இரிக்க ஏலுமா?”

கரீமா இப்பொழுது வாய்திறந்தாள். “ஒங்களுக்கு எது வேணுமோ அதவாங்கிட்டு வாங்க...” இப்படிச் சொன்னவள் மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்...

“யார் எதைச் சொன்னாலும் இவர் நெனச்சதத்தானே செய்வார்... பிறகென்னத்துக்கு கேக்குறார்”

kனியா இன்னும் அறையை விட்டு வெளியே வரவில்லை. “சே.... இந்த வாப்பாட பிடிவாதம்.... வாப்பாவும் ஹஜ்ஜூக்குப் போயிருந்தாரெண்டா இப்ப நாங்க எவ்வளவு சந்தோசமா இரிக்கலாம்....

kனியாலின் சிந்தனை நீண்டது. கடந்த வருடம் அவளது வகுப்புத் தோழி முஸம்மிலாவின் வாப்பா, உம்மா இரண்டுபேரும் ஹஜ் செய்யப் போனது... அதற்கு முந்திய வருடம் அடுத்த வகுப்பு சிராஸாலின் நானா ஹஜ் செய்யப் போனது... அந்த காலங்களில் அவர்கள் கதைகதையாகச் சொன்னவை... அதற்கான ஏற்பாடுகள்... அவர்களுக்காகக் கொடுக்கப்பட்ட சாப்பாடுகள்... அவர்கள் கொடுத்த சாப்பாடுகள்... ஸலாம் சொல்லப் போன பயணங்கள்... இரவு பகலாய் வீடு நிறைய உறவுகள்...

இவையெல்லாம் தனது வீட்டிலும் இடம்பெறுமா என்று எவ்வளவு ஆவலாக இருந்தாள் kனியா.

ஸ¥ஹைப் நாவலப்பிட்டி அம்பகமுவ வீதியில் சாதாரன சில்லறைக் கடையொன்றை வைத்திருப்பவர். அந்தக் கடை பல வருடங்களாக வளர்ச்சியும் அடையாது தேய்வும் அடையாது ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. ஆனால் என்றுமே அவருக்குள்ள வாடிக்கையாளர்கள் வேறு எங்கேயுமே சென்றதில்லை. நம்பிக்கையும் நாணயமுமே அவரது இயல்பாயிற்று. இவையே ஸ¥ஹைபுடைய நற்பெயருக்கு சான்றுமாயிற்று.

ஹஜ்ஜூ செய்து கொள்ள வேண்டுமென்ற அவரது நீண்ட நாள் ஆசை... சில வருடங்களுக்கு முன்பே போயிருக்கலாம் என்று கைச்சேதப்படுவார்...

இப்போது வரவரக் கட்டுப்பாடுகளும் அதிகம்... செலவும் அதிகம்... மறுபுறம் வீட்டுச் செலவுகளும் அதிகம்...

வியாபாரங்களும் குறைவு.... எப்படியோ குடும்பமே சேர்ந்து ஆலோசித்து-சேமித்து- இந்த முறை போவதற்கான பணத்தை ஆயத்தப்படுத்திவிட்டபோதே குடும்பமே குதூகலித்தது...

kனியா, அவனது இரண்டு தம்பியர், கடைக்குட்டித் தங்கை, கரீமா எல்லோருமே இந்த விடயத்தை தமக்கு வேண்டியவர்களுக்கெல்லாம் சொல்லியும் விட்டார்கள்.

செய்தி எப்படிப் பரவியதோ...

காற்றைவிட வேகம்தான் இச்செய்திக்கு... பாதையில், பள்ளிவாசலில் காண்பவர்கள் எல்லோரும் கட்டித்தழுவிக் கொண்டனர்.

வாழ்த்துகளும் - ஆலோசனைகளும் குவிந்தன. பாஸ்போர்ட் முதல் எல்லா ஏற்பாடுகளும் தடங்கலின்றி நடந்தன.

தூர உறவினர் வீடுகளுக்குச் சென்று பயணம் சொல்லி...

பல இடங்களில் சாப்பாடுகளுக்குப் போய்... இஹ்ராம் முதல் பல பொருட்களை வாங்கி... பயானுக்கும் போய்... வீடேசகலகலத்தது...

கடையின் பொறுப்பை ஒரு மாதத்துக்கு கரீமாவின் தம்பி ஏற்றுக் கொண்டார். பயணத்துக்கு இன்னும் பத்தே நாட்கள்....

ஸ¥ஹைப் இரண்டொரு நாட்களாக பலமாக யோசித்துக் கொண்டிருந்தார்...

கலகலப்பே இல்லை... ஒழுங்காகச் சாப்பிடுவதில்லை... நித்திரையில்லை.... யாருடனும் கலகலப்பாக கதைப்பதில்லை... தூண்டித் தூண்டிக் கேட்டபோது அவர் கூறிய பதில் அனைவரையுமே பேரதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது.

“இந்தத்தடவை நா ஹஜ்ஜூக்குப் போகல்ல”

ஏன்? ஏன்? ஏன்? எல்லோருமே ஒரே கேள்வியை அதிர்ச்சியுடன் கேட்டனர். “இங்க பாருங்க... நீங்க எல்லோருமே என்னை வற்புறுத்தாதீங்க... அல்லாஹ்ட பேரால கேக்குறன் ஏன்ட விருப்பத்துக்கு இத உட்டுடுங்க... எல்லாம் அல்லாட ஏற்பாடுதான்...”

அவரைப் பேசவிட்டு குடும்பமே வாய்திறந்து கேட்டுக்கொண்டிருந்தது...

“ஊருக்கே தெரிய பொறப்புட்டு... எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு நிண்டா நல்லா இரிக்காதுதான்...ஒங்க எல்லோருக்கும் வெக்கமா, அவமானமா இரிக்கும்... எனக்கும்தான்...எத்தனை ஊடுகள்ள சாப்பாடு போட்டாங்க... அவங்கல்லாம் என்ன நெனைப்பாங்க... ஆனா...”

அவர் நிறுத்தியபோது பெரிய நிசப்தம் நிலவியது. அவரே தொடர்ந்தார்... “மூணு மாசத்துக்கு முந்தி இம்புல்பிட்டிய பகுதியில பெரிய மண்சரிவு ஏற்பட்டிச்சி இல்லயா! அது முழுசா இடிச்சி விழுந்தது நாட்டாம சரீபின் வீடும்தான். போன கெழம சரீப் ஏன் கடப்பக்கமே வாரதில்ல என்டு பாத்துட்டு வரலாம் எண்டு போனேன்... யா அல்லாஹ்...

முகத்தை மூடிக் கொண்டார். இரண்டுகைகாளலும் அவர் விம்முகிறாரா? மீண்டும் தொடர்ந்தார். குரல் கம்மியிருந்தது. ஆனால் திடமான உறுதி நிறைந்திருந்தது.

“சரீபின் மண்வீடுதானே.... முழுசும் இடிஞ்சிரிச்சி... நல்ல நேரம் ஆள்களுக்கு சேதம் இல்ல... ஆனா... அந்த நேரமே சரீபுக்கு ஒரு கையும் காலும் வெளப்பம் இல்லாமலாயிடிச்சு... அவரு இப்ப நாவலப்பிட்டி ஹொஸ்பிட்டல்ல மனுஷியும் மூணு புள்ளைகளும் தகரத்தாலயும் பொலித்தீனாலேயும் குடிசையடிச்சி அதுலதான் இரிக்கிறாங்க... சாப்பாட்டுக்கும் வழியில்ல...”

அமைதியாகத் தொடர்ந்தார். “ஹஜ்ஜூக்குப் போற காசியில அரவாசிக்கு அவங்களுக்கு ரெணடு காம்பராக்கள கட்டிக் குடுக்க நெனைச்சேன்... ஏஜன்ஸியோட பேசினேன்.... நான் எட்வான்ஸா கொடுத்திருந்தத அவங்களிடமே வச்சிக்கச் சொன்னேன்.... ஹஜ்ஜூ சீஸன் முடிஞ்சி உம்றத சீஸன் தொடங்குறபோது அந்த காசியில நானும் kனியாட உம்மாவும் உம்றாவச் செய்யலாம். எல்லாம் அல்லாஹ்ட நாட்டம்தான்.... இண்டைக்கு அஸருக்குப் பொறகு நாங்க எல்லோருமே போய் இந்தக் காச அவங்கக்கிட்ட குடுத்துட்டு வருவோம்... எங்களுக்காக அந்தக் குடும்பம் கேக்குற து ஆவை நிச்சயமாக அல்லாஹ¥தாலா ஏத்துக் கொள்வான்...”

பெரியதொரு திருப்தியுடன் எழுந்தார் ஸ¥ஹைப்

kனியாவின் உச்சந்தலையில் முத்தமிட்டு “ஏன்ட செல்ல மகள்... கோவிச்சுக்காதேடா” என்று கேட்டுக் கொண்டார். கரீமாவை அவர் பார்த்த பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன...

ஆயிற்று.. இதோ நாளை விடிந்தால் பெருநாள் வாப்பா ஹஜ்ஜூக்குப் போயிருந்தால் எப்படி இருந்திருக்கும்? kனியாவால் நினைத்துப்பார்க்காமல் இருக்கவே முடியவில்லை.

வானம் இருண்டு கொண்டு வந்தது... வீட்டு வாசலில் பலகுரல் ஓசைகள் தன் அறையிலிருந்து kனியா வெளியே வந்தாள்...

சரீபின் மனைவியும் பிள்ளைகளும்... கரீமாவின் இரண்டு கைகளையும் தனது கண்களில் ஒற்றிக் கொண்டு சொன்னாள்...

“உம்மா... நீங்களும் ஒங்கட தொரயும் புள்ளைகளும் நல்லா இரிக்கனும்... அல்லா மொதக்கொண்டு நீங்க தந்த காசால... மொதலாளி பேசித்தந்த பாஸ்மாரக் கொண்டு ரெண்டு காமராக்களைக் கட்டிட்டோம்.... இந்தப் புள்ளைகள் வச்சிக்கிட்டு எப்படி இரிப்பேன் என்டு அல்லாடிக்கிட்டிருந்த போது ஆண்டவனைப் பார்த்து மொதலாளியை அனுப்பினான்... பொறவுதான் தெரிஞ்சிச்சி....இது அவரு ஹஜ்ஜூக்குப் போக வச்சிரிந்த காசு எண்டு... யா அல்லாஹ்...

ஒங்க எல்லாருக்குமே நா எப்படித்தான் நன்றி சொல்றது..

அவள் உண்மையிலேயே கதறி அழத் தொடங்கிவிட்டாள்.

kனியாவுக்கும் ஏன் கரீமாவுக்கும் தான் ஸ¥ஹைப்பின் செயல் இப்போது திருப்தியாகவே இருந்தது.

“சரி... சரி... எல்லாம் அல்லாஹ்ட வேலதான். நீங்க இதையெல்லாம் பெரிசா நெனைக்காதீங்க... தொழுத பொறகு இங்கேயே பகல் சாப்பாட்டுக்கு வந்துடுங்க. ஆஸ்பத்திரியில அவருக்கும் இங்கிருந்தே சாப்பாட்டக் கொண்டு போகலாம்...”

கரீமா சொல்லிக் கொண்டிருக்கும்போதே இரண்டு கைகள் கொள்ளாத பொருட்களுடன் ஸ¥ஹைபட வந்து கொண்டிருந்தார்.

ஓடிச்சென்று பொருட்களை வாங்கிக் கொண்டாள் kனியா. எல்லாமே அல்லாஹ்வின் செயல்தான்!

அல்ஹமீதுலில்லாஹ்

யாவும் கற்பனையோ!

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.