புத் 64 இல. 43

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 05

SUNDAY OCTOBER 21 2012

இறை கட்டளைக்கு சிரம்பணிந்த ஒரு குடும்பத்தின்

இறை கட்டளைக்கு சிரம்பணிந்த ஒரு குடும்பத்தின்

தியாக வரலாறே 'புனித ஹஜ் '

,ஸ்லாத்தின் அடிப்படை கடமைகளுள் ஹஜ் இறுதியானதாகும். ஏனைய அனைத்து கடமைகளின் செயற்பாடுகளையும் நோக்கங்களையும் ஒன்று சேரப்பெற்ற இறை வழிபாடாக ஹஜ் கிரியைகள் விளங்குகின்றன.

ஹஜ்’ என்ற அரபுச் சொல்லின் நேரடிக் கருத்து ‘நாடிச் செல்லல்’ அல்லது ‘தரிசிக்க நாடுதல்’ என்பதாகும். முஸ்லிம் சமூகத்தின் வசதி படைத்த, உடல் ஆரோக்கியம் பெற்ற மக்கள் உலகில் முதன் முதலாக எழுப்பப்பட்ட இறை இல்லமான கஃபதுல்லாஹ்வை தரிசிக்க நாடிச் செல்வதையே இஸ்லாமிய பரிபாஷையில் ஹஜ் என்ற பதம் உணர்த்துகின்றது. அல்லாஹ்வின் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் முன்மாதிரியாகச் செய்து காண்பித்த சில கிரியைகளை கஃபாவை சூழ்ந்த குறிப்பிட்ட சில இடங்களில் நிறைவேற்றுவது ஹஜ்ஜின் விரிவான கருத்துக்கு வரைவிலக்கணமாகும்.

இஸ்மாயில் (அலை) அவர்களின் ஏக வாரிசாகத் தோன்றிய இறுதித் தூதர் (ஸல்) அவர்கள் இப்றாஹீம் நபியின் குடும்பம் இறை வழிபாட்டில் மேற்கொண்ட தியாகங்கள் ‘ஹஜ்’ என்ற பெயரில் நிலைப்படுத்தினார்கள்.

இப்றாஹீம் நபி (அலை) அவர்களின் ஆளுமைக் குணங்களில் மிக உன்னதமான பண்பு ஏன், எதற்காக என்ற காரணத்தை தேடாமலே அல்லாஹ்வின் கட்டளைக்கு அவர்கள் பணிந்ததாகும். ‘தக்வா’ என்ற பதம் மூலம் அல் குர்ஆன் இவ்வுண்மையை உணர்த்துகின்றது.

இதற்கு உதாரணமாக தன் மைந்தன் இஸ்மாயிலை பலியிடத் துணிந்த இப்றாஹீம் நபியின் இறையச்சத்தைப் பாராட்டிய அல்லாஹ் உழ்ஹிய்யா எனும் குர்பானியை முஹம்மத் நபியின் உம்மத்துக்கு விதித்தான். இது பற்றி அல் குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது. “(இவ்வாறு குர்பானி செய்யப்பட்ட) கால்நடைகளின் மாமிசங்களோ அல்லது அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை ஒருபோதும் அடைந்து விடுவதில்லை. எனினும் உங்களிலுள்ள ‘தக்வா’ எனும் பயபக்திதான் அவனை அடையும்” (22:37)

தக்வாவின் வெளிப்பாடு பொறுமையிலும் தியாகத்திலும் தங்கியுள்ளது. உலகாய எதிர்பார்ப்பு எதுவுமற்ற மறுமையின் சுபீட்சத்துக்கான இறை வழிபாடுகள் பொறுமை, தியாகம் இரண்டையும் இழக்கும்போதும் உயிரோட்டத்தையே இழந்துவிடுகின்றன.

உண்மையான இறையடியானுக்குரிய பண்பை இப்றாஹிம் நபியின் மனைவி அன்னை ஹாஜராவிடமும் அவதானிக்கலாம். இறை கட்டளைக்கு செவிசாய்த்து மனைவி ஹாஜரா மகன் இஸ்மாயிலையும் நபி இப்றாஹிம் (அலை) அவர்கள் அறபுப் பாலைவனத்திலே குடியமர்த்திவிட்டு வரும்போது ‘மனித சஞ்சாரமற்ற வாழ்க்கைக்குப் பொருத்தமில்லாத ஓர் இடத்திலே எம்மை விட்டுச் செல்கிaர்கள்.

 இது உங்கள் விருப்பமா? அல்லது அல்லாஹ்வின் கட்டளையா? என அன்னை ஹாஜரா கேட்டபோது’ இது அல்லாஹ்வின் கட்டளை என ஓரே வார்த்தையில் இப்றாஹிம் (அலை) பதில் அளித்தார்கள். அப்போது மனைவி ஹாஜரா ‘அவ்வாறாயின் நீங்கள் சென்று வாருங்கள். எமக்கு அல்லாஹ் போதுமானவன் என முழுமையான ஈமானோடு கூறினார்கள்.

கொண்டுவந்திருந்த ஆகாரம் சில நாட்களில் முற்றுப்பெற்றது. குழந்தை இஸ்மாயில் பசியாலும் தாகத்தினாலும் அலறியது. பசிக்கு உண்ணக் கிடைக்காத அன்னையிடம் பால் ஊறவில்லை. இந்நிலையில் ‘அல்லாஹ் போதுமானவன்’ என்ற எதிர்பார்ப்புக்கு அர்த்தம் கொடுக்கும் வகையில் தாய் செயற்பட்டாள்’. ஸபா - மர்வா மலைத் தொடர்களிடைய கானல் நீரைக் கண்டு தண்ணீர் என நினைத்து ஓடினார்.

நம்பிக்கை வீண் போகவில்லை. முயற்சி பலித்தது. “ஸம்ஸம்” என்ற அதிசய நீரூற்றை குழந்தையின் இருப்பிடமிருந்து அல்லாஹ் உற்பத்தி செய்தான். பொறுமையும் தியாகமும் கலந்த இறையச்சத்துக்கு கிடைத்த இப்பேற்றை நினைவுபடுத்தும் வகையில் ஹாஜிகள் ஸபா - மர்வாவுக்கிடையே தொங்கோட்டம் ஓடுகின்றனர். இது ஸஃயு எனப்படுகிறது. இதற்கு முயற்சித்தல் என்ற பொருளும் உண்டு.

இதை அல்லாஹ் அல்-குர்ஆனில் இவ்வாறு குறிப்பிடுகின்றான். “நிச்சயமாக ஸபா மர்வா (எனும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் நின்றும் உள்ளன. எனவே எவர் (கஃபா என்னும்)”அவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ரா செய்கிறார்களோ, அவர்கள் அவ்விரு மலைகளையும் சுற்றி வருதல் குற்றமல்ல” (2:158)

பாலைவனத்தில் உருவான வற்றாத நீருற்று அங்கு மனித குடியிருப்புக்கு வழிகோலியது. பின்னர் அவ்விடம் சென்று கஃபாவை அதன் அடித்தளத்தில் இருந்து நிர்மாணிக்குமாறு இப்றாஹிம் நபிக்கு அல்லாஹ் கட்டளையிட்டான். இப்றாஹீம் நபி தன் மகன் இஸ்மாயீலுடன் சேர்ந்து கஃபாவை நிர்மாணித்து அதை தவாப் செய்ய வருமாறு மக்களுக்கு ஏவினார்கள்.

“நபியே! இப்றாஹீமுக்கு (நமது) வீட்டின் இடத்தை நிர்ணயித்து நீர் எனக்கு எவரையும் இணையாக்காதீர்.

என்னுடைய வீட்டைச் சுற்றி வருவோருக்கும் அதில் தொழுகைகளை நிறைவேற்ற நிற்போருக்கும் அதில் குனிந்து சிரம்பணிந்து தொழுவோருக்கும் அதனை பரிசுத்தப்படுத்தி வைப்பீராக என்று நாம் கூறியதை நீர் நினைவுகூருவீராக” (22:26)

இவ்வாறு மக்களை ஹஜ்ஜுக்காக அழைக்குமாறு இப்றாஹீம் நபியை அல்லாஹ் பணித்ததை தன் இறுதித் தூதருக்கு அவன் நினைவுபடுத்துகிறான். இப்றாஹீம் நபி அவர்கள் எதிர்கொண்ட அடுத்த சோதனை, தமக்கு முதுமையில் வாய்த்த மகனை அறுத்துப் பலியிடுமாறு அல்லாஹ் அவர்களுக்கு இட்ட கட்டளையாகும். இறை கட்டளைக்கு பணிய முன் இது பற்றி மகனிடம் கூறினார்கள். அதற்கு மகனளித்த பதில் தகப்பன், அன்னை இருவரின் தியாகத்தையும் மிகைப்பதில் மகனின் ஆர்வம் காணப்பட்டதை அல்-குர் ஆன் பின்வருமாறு சுட்டிக் காட்டுகின்றது.

“என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்ட பிரகாரம் செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்று முள்ளவனாகவே காண்பீர்கள்” (37:102) என் மகன் இஸ்மாயிலின் பதில் “உபூதிய்யத்” என்னும் இறை வழிபாட்டில் அடியாருக்கு அல்லாஹ் வழங்கும் உயிரோட்ட முள்ள போதனையாகும். இப்றாஹீம் நபி மகனை அறுப்பதற்காக அழைத்துச் செல்லும்போது, ஷைத்தான் குறுக்கிட்டு இறையாணைக்கு பணிவதில் இருந்து இருவரையும் வழிகெடுக்க முற்பட்டான். அப்போது இஸ்மாயில் நபி சிறு கற்களைப் பொறுக்கி ஷைத்தானை நோக்கி எறிந்தார்கள். இந்நிகழ்வு ஹஜ்ஜின்போது ஹாஜிகள் ஜம்ராக்களில் சைத்தானுக்கு எறியும் கற்கள் மூலம் நினைவுகூரப்படுகின்றது. நம்ரூத் மூட்டிய நெருப்பு இப்றாஹீம் நபியின் ஈமானிய பலத்துக்கு முன்னால் வெப்பத்தை இழந்து குளிர்ச்சியை வழங்கியதுபோல், பாலைவன கட்டாந்தரை அன்னை ஹாஜரா நாயகியின் ஈமானிய வலிமை கண்டு பிளந்து நீரை பீறிட்டுப் பாய்த்தது போல், மகன் இஸ்மாயிலின் ஈமானின் நெஞ்சுரம் கூரிய கத்தியை மொட்டையாக்கியது.

மகனை அறுக்க குரல் வளையில் கத்தியை வைத்து அழுத்திய இப்றாஹீம் நபிக்கு கிடைத்த பதில்....... “ஓ.... இப்றாஹீமே நீர் கண்ட கனவை உண்மைப்படுத்திவிட்டீர்” (37:105) என்ற அல்லாஹ்வின் அங்கீகாரமாகும். மகத்தான இத்தியாகத்தை இறுதி நபியின் உம்மத்தினருக்கு இறை வழிபாடாக இறைவன் ஹஜ்ஜுப் பெருநாள் தினங்களில் அடையாளப்படுத்தித் தந்துள்ளான்.

ஆகவே கூட்டு மொத்தமாக ஹஜ் கிரியைகளை ஒரே பார்வையில் நோக்குகின்றபோது, இறைகட்டளைக்கு பணிவதில் ஒரு குடும்பத்தின் தியாக வரலாற்றை நினைவுகூரும் நிகழ்வுகளாக அமைந்துள்ளதை எம்மால் காண முடிகின்றது.

இறுதியாக நபியவர்கள் கூறினார்கள், ஆசைகளில் நின்று விலகி, பாவம் புரியாமல் ஹஜ்ஜை சீராக நிறைவேற்றுபவன் அன்று பிறந்த பாலகனைப் போல் வீடு திரும்புகிறான்.

இவ்வாறான, சிறப்புகளினால் தான் அனைத்து இறைவழிபாடுகளிலும் ஹஜ் கடமையை நான் மேலானதாக கருதுவதாக இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம் : புகாரி)

அஷ்ஷெய்க்

எம்.எப்.எம்.அஜ்வாத் பாஸி (நZமி)

சீனன்கோட்டை

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.