புத் 64 இல. 43

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 05

SUNDAY OCTOBER 21 2012

கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டு சாரதி கொலை

கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டு சாரதி கொலை

வாடகைக்கு என எடுத்துச் செல்லப்படும் வாகனங் கள் அவற்றின் சாரதிகள் கடத்தப்பட்டோ, கொல்லப்பட்டோ அபகரிக்கப்படுவது அண்மைக்காலங்க ளில் மிக அதிகளவில் இடம்பெற்று வருகின்றது. மீரிகம பிரதேசத்தில் அண்மையில் இதுபோன்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

வாடகைக்காகப் பெறப்பட்ட முச்சக்கரவண்டி சாரதியொருவர் கூரிய ஆயுதத்தினால் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது சடலம் 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதினோறாம் திகதி சனிக்கிழமை இரவு மீரிகம பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டது.

இறந்தவரின் முச்சக்கர வண்டியை சந்தேக நபர்கள் அபகரித்துச் கென்றபோது வந்துருபிட்டி பிரதேசத்தில் விபத்தில் சிக்கியதால் அவ்விடத்தில் கைவிடப்பட்ட வண்டியை பொலிஸார் கைப்பற்றினர். குருநாகல் பிரதேசத்தை சேர்ந்தவரது முச்சக்கர வண்டியென தகவல் கிடைத்ததையடுத்து குருநாகல் பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்தனர். இச்செய்தி உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து சடலம் அடையாளம் காணப்பட்டது. கொலை செய்யப்பட்டவர் குருநாகல் கெட்டுவான வீதியைச் சேர்ந்த ஐம்பத்து மூன்று வயதுடைய ஏ. ஆர். ரத்நாயக்க என்ற ஐந்து பிள்ளைகளின் தகப்பனென்றும் தெரிய வந்தது.

மீரிகமை, வெயாங்கொடை ஆகிய இடங்களுக்கு செல்ல வேண்டுமெனக் கூறிய இரு ஆடவர்களும் ஒரு பெண்ணும் வாடகைக்கு இச் சக்கர வண்டியை எடுத்துச் செல்லும் போது ஓரிடத்தில் வைத்து இக்கொலை இடம்பெற்றுள்ளதென விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

சடலம் காணப்பட்ட இடத்துக்கு சற்றப்பாலுள்ள விவசாய நிலத்திலுள்ள பயிர்கள் சேதமடைந்து காணப்பட்டன. அங்கு இரத்தக்கறை படிந்த துணியொன்றையும் பொலிசார் கண்டெடுத்தனர். விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டியின் முன்பக்கம் சேதமடைந்தும் அதற்கப்பாலுள்ள ஓடையிலிருந்து பெண்கள் அணியும் ஒரு சோடி பாதணியும் சிறிய கைகுட்டையொன்றும் கண்டெடுக்கப்பட்டன. பொலிஸ் நாய் கொண்டுவரப்பட்டது. ஓடையின் முடிவுவரை சென்ற நாய் நின்றுவிட்டது.

அங்கு சாரதியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

அத்தனகல்லை பதில் மஜிஸ்திரேட் பூர்ண சேனரத்ன ஸ்தலத்துக்கு வந்து சடலத்தை பார்வையிட்டு, சடலத்தை கம்பஹா வைத்தியசாலையின் சவச்சாலைக்கு அனுப்பி மரண விசாரணை நடத்துமாறு மீரிகமை பொலிசாருக்கு உத்தரவிட்டார்.

கொலைக்கான காரணம் பிரதான சந்தேக நபர் கைதானதும் தெரிய வருமென பொலிஸார் தெரிவித்தனர். அத்தனகல்லை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த புஷ்பகுமாரவின் மேற்பார்வையில் மீரிகமை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி வல்பொலவின் பணிப்புரையின்படி குற்ற விசாரணை பிரிவின் சாமர, பி. எ. மஹிந்த, பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் பிரதீபா ஆகியோர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இக்கொலை சம்பந்தமாக 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருபத்தெட்டாம் திகதி ஞாயிற்றுக்கிழமை சந்தேகத்தின் பேரில் இளம் காதலர்கள் வலஸ்முல்லையில் கைது செய்யப்பட்டனர். காதலி உடவலவை பிரதேசத்தைச் சேர்ந்தவர். காதலர்கள் முச்சக்கரவண்டியை நிறுத்தி கடையில் கத்தியொன்றை வாங்கியதாகவும் தெரிய வருகிறது. இக்கத்தியினால் சாரதியின் கழுத்து வெட்டப்பட்டுள்ளது. இவர்கள் சென்ற முச்சக்கரவண்டி மண் லொறியுடன் மோதுண்டதால் சந்தேக நபரின் கையில் காயமேற்பட்டு எட்டு தையல்கள் போடப்பட்டன. மறுநாள் இவர் ஆஸ்பத்திரியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார். பின்னர் காதலர்கள் கைதாகினர். இக் கொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் கைதாகவில்லை. இவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களான இளம் காதலர்கள் அத்தனகல்லை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப் பட்டதையடுத்து விளக்க மறியலில் வைக்கப்பட்டனர்.

எம்.எப். ஜெய்னுலாப்தீன்...

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.