புத் 64 இல. 43

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 05

SUNDAY OCTOBER 21 2012

 
முகில்வண்ணனின் “முருகனருள்” கவிதைத் தொகுதி

முகில்வண்ணனின் “முருகனருள்” கவிதைத் தொகுதி

ஒரு நோக்கு

ஆக்க இலக்கியகாரரான கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த முகில்வண்ணன் ஒரு குறுகியகால இடைவெளியில் பல நூல்களை வெளியிட்டுள்ளார். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்த இவர் ஓர் ஓய்வுபெற்ற பொறியியலாளர் ஆவார்.

இலங்கையர்கோன் காலம் முதல் பல உயர் அதிகாரிகள் ஆக்க இலக்கியத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் ஒரு பொறியியலாளர் ஆக்க இலக்கியத்துறையில் ஈடுபடுவது அபூர்வமே! முகில்வண்ணன் ஏற்கனவே பல நூல்களை வெளியிட்டுள்ளார். அண்மையில் இவரது மூன்று நூல்கள் கல்முனை தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில், கல்முனை நால்வர் கோட்டத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. அவற்றில் “முருகனருள்” என்ற நூலும் ஒன்று. முருகன் அருள் பற்றிக் கூறும் இந்நூல், கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளையின் கவிதைகளை நினைவூட்டும் வகையில் எளிய சொற்களைக் கொண்டு மிக அற்புதமாகப் படைக்கப்பட்டுள்ளது. கவிதைகளின் உட்பொருள் நூலாசிரியரின் சொந்த உணர்வுகள் என்பது நன்கு தெரிகின்றது. “முருகனருள்” என்னும் இந்நூலில் 39 கவிதைகள் அடங்கியுள்ளன. அவை ஒவ்வொன்றும் கவிதை முத்துக்கள் எனலாம்.

நூலாசிரியர் தனது முன்னுரையில் பின்வருமாறு கூறுகின்றார்.

“நான் ஒரு முருக பக்தன். ஆரம்ப காலத்தில் இருந்து முருகப் பெருமானைத் தவிர வேறு எவரையும் (தெய்வ மூர்த்தங்களையும்) வணங்காதவன். இதனால்தானோ என்னவோ முருகனின் காட்சிகள் எனக் குக் கிடைத்தன” என்கிறார்.

இந்த அனுபவம் அவரது ஒவ்வொரு கவிதையிலும் அடிநாதமாக ஒலிப்பதைக் காண்கிறோம். அவர் மேலும் கூறுகிறார்,

முருகப் பெருமான் என்னோடு பேசினார். அவரருள் என்னை ஆட்கொண்டிருக்கிறது. வருமுன் அனைத்தையும் எனக்குக் காட்டி அருளி இருக்கிறார். அவன் அருளால் எத்தனையோ பிரச்சினைகள், ஆபத்துக்கள், எல்லாம் பரிதி முன் பனிபோல் மறைந்து போய் இருக்கின்றன.

இனி அவரது கவிதைகளைப் பார்ப்போம்.

பாண்டவர்கள் வாழும் முயர்

பாண்டிருப்பில் வாழ்ந்த

பாண்டவரில் ஒருவ ரெனும்

பார்த்திபனார் என்ற

ஆண்டவர்கள் பரம்பரை யோன்

அருச்சுனராம் வேலன்

மாண்டாலும் இப்புவியில்

மங்காத புகழோன்

இது நூலாசிரியர் தன் தந்தைக்கு இந்நூலை “சமர்ப்பணம்” செய்த அன்புக் கவிதையாகும். இவரது தந்தையார் வேலுப்பிள்ளை (வேலன்), பாண்டிருப்பு திரெளபதை அம்மன் கோவிலின் அருச்சகராக இருந்தவர். அதுவே இக் கவிதையில் “அருச்சுனராம் வேலன்” எனக் குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறு மூன்று கவிதைகள் சமர்ப்பணம் கவிதையில் அடங்குகின்றன. அவை ஒவ்வொன்றும் அர்த்தம் நிறைந்த முத்தான கவிதைகள் ஆகும்.

இதைப்பற்றி அணிந்துரை வழங்கிய கலாநிதி பரதன் கந்தசாமி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

“அந்தமிலா முருகனருள் கூறும வனிதனில்

செந்தமிழ் சொல் சிறந்தோங்கும் முகில்வண்ணன்

புகல்ஞான மலர்த் தொடையல் பாடும் தகவுடையோர்

அகல் ஒளியைக் கண்டு குகனருளில் திழைப்பர்”

பக்திக் கவிதைகள் இதற்கு முன்னர் ஏராளமாக வெளிவந்துள்ளன. ஆனால் இக்கவிதைகள் வித்தியாயசமாக, எளிமையாக நூலாசிரியரின் உணர்வுகள் நம்மில் தொற்றிக்கொள்ளும் வகையில் அமைந்திருப்பதைப் பார்க்கிறோம்.

மீண்டும் நூலாசிரியரின் கூற்றையே நாம் மேற்கோளாகக் காட்ட வேண்டியுள்ளது. “முருகப் பெருமான் மீது நான் நிறையவே கவிதைகள் எழுதியிருக்கிறேன். எல்லாம் அவனை அனுபவித்து எழுதியவை. எழுதிய மூன்று தொகுதிகளில் முதலாவது இது. எழுதச் சொன்னவன் அவன். அதனால் நான் எழுதினேன். அவனருளை நான் எழுதினேன். அவனருளை நான் அனுபவித்ததனால் தான் இத்தொகுப்புக்கு “முருகனருள்” என்று தலைப்பிட்டேன்.

இக்கவிதைகள் 1968ஆம் ஆண்டு முதல் எழுதப்பட்டவை. இவை வீரகேசரி, தினகரன், தினபதி, மித்திரன், தினத்தந்தி, நவமணி, முதலிய பத்திரிகைகளில் வெளிவந்ததாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார். சில பாடல்கள் இலங்கை வானொலியிலும் ஒலிபரப்பாகியுள்ளன. இவற்றுள் “பாட்டால் முருகன் நாமம் பாடவேண்டும்” “திருக்கோலம் காண ஆசைப்பட்டேன்” என்பவை குறிப்பிடத்தக்கவை.

இத் தொகுதியில் அடங்கியுள்ள 39 பாடல்களில் எதை விடுவது எதைக் குறிப்பிடுவது என்று சொல்ல முடியாதபடி ஒவ்வொன்று சிறப்பாக அமைந்துள்ளன.

இத் தொகுதியில் உள்ள கவிதைகள் அனைத்தும் இந்த வரைவிலக்கணத்துக்கு ஏற்ப அமைந்திருப்பது கண்கூடு. புற்aசல்கள் போல் மலிந்து எரிச்சல் ஊட்டும் புதுக்கவிதைகளுக்கு மத்தியில் மனதுக்கு இதம் சேர்க்கும் இந்த மரபுக்கவிதைகள் ஆறுதல் அளிக்கின்றன. இக்கவிதை நூலில் பின்வரும் அணிந்துரைகள் சேர்ந்துள்ளன. அமரர் கவிஞர் பாண்டியூரன், கு. கணபதிப்பிள்ளை (கவிதையில்) அமரர் எஸ். செல்லத்துரை (கவிதையில்), கலாநிதி பரதன் கந்தசாமி. இந்த உரைகளும் இக்கவிதைகளின் சிறப்பை எடுத்துக் கூறுகின்றன.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.