புத் 64 இல. 43

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 05

SUNDAY OCTOBER 21 2012

 
சிவகுருநாதன் நினைவுப் பரவல்

சிவகுருநாதன் நினைவுப் பரவல்

தினகரன் முன்னாள் பிரதம ஆசிரியரும், கொழும்புத் தமிழ்ச் சங்க முன்னாள் தலைவரும் உயர் நீதிமன்ற சட்டத்தரணியுமான “கலாசூரி” இ. சிவகுருநாதன் அவர்களின் 81 வது பிறந்த தினத்தை முன்னிட்டு கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நினைவுப்பரவல் நிகழ்வு சங்கத் தலைவர் மு. கதிர்காமநாதன் தலைமையில் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது.

“கலாசூரி” இ. சிவகுருநாதன் அவர்களின் உருவப்படத்திற்கு பேராசிரியர் சோ. சந்திரசேகரன், தலைவர் மு. கதிர்காமநாதன் ஆகியோர் மலர் மாலையிட, வரவேற்புரையை கே. பொன்னுத்துரை நிகழ்த்தினார். அமரர் “கலாசூரி இ. சிவகுருநாதன் அவர்களைப் பற்றி பேராசிரியர் சோ. சந்திரசேகரன், கொழும்புத் தமிழ்ச் சங்க பொது செயலாளர் ஆ. இரகுபதிபாலஸ்ரீதரன் ஆகியோர் உரையாற்றினார்கள்.

சமய கலாசார அமைச்சின் ஓய்வு பெற்ற மேலதிக செயலாளர் எஸ்.எசி.எம். ஜெமில் ஆற்றில் உரையில், 1932ல் டி.ஆர். விஜயவர்த்தனவால் ஆரம்பிக்கப்பட்ட தினகரனின் பணிபற்றியும், அதன் தாக்கத்தால் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வசித்த பிரதேசங்களிலும் வாழ்ந்த தமிழ் மொழி பேசும் முஸ்லிம் மக்கள் தினரகன் பத்திரிகை மூலம் அன்றாடம் நாட்டில் நடக்கும் செய்திகளை அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டதுடன்., 1956க்கு பின்னரான காலத்தில் இலங்கை யில் ஏற்பட்ட கலாசார மாற்றத்தின் ஊடாகவும், தினகரனில் பிரதம ஆசிரியராக க. கைலாசபதி பதவி ஏற்றத்தின் காரணமாகவும் இலங்கையர்களின் எழுத்துபணி புதிய பரிணாமத்தை அடைந்தது.

அவரின் தொடராக கொழும்பு சாகிரா கல்லூரியின் புகழ் பூத்த மாணவ செல்வங்ளில் ஒருவரான இ. சிவகுருநாதன், 1961ம் ஆண்டு தினகரனில் பிரதம ஆசிரியராக பொறுப்பேற்றதன் பின்னர் இலங்கை இலக்கிய வளர்ச்சியிலும் குறிப்பாக இலங்கையர்களின் எழுத்துப்பணிக்கும் உரமாக இருந்து செயல்பட்டார். அவரோடு தினகரன் ஆசிரியர் பீடத்தில் பணியாற்றிய எஸ். தில்லைநாதன், (பேராசிரியர்) மனேகரி சபாரெத்தினம், ஸெய்னுல் ஹ¥ஸைன், எஸ். பாலசிங்கம், மள்வானை கியாஸ் ஆனந்தி பாலசிங்கம் என்போர் ஆசிரியபீடத்தில் பணியாற்றத் தொடங்கியதிலிருந்து தேசிய இலக்கிய கோட்பாடு வலுவடைந்தது. இலங்கையரின் ஆக்கங்கள் முன்னுரிமை பெற்றன.

1960ம் ஆண்டு தினகரன் நடத்திய ‘தமிழ் விழா இன்றுவரை நினைவில் நிற்கின்றது. அத்தோடு சிவாஜி கணேசனுக்கு ‘கலைக்குரிசில்’ பட்டம் அளித்து கெளரவம் செய்தது. இவை போன்ற முக்கிய விடயங்களை முன்னிறுத்தி விசேட உரையாற்றியனார். பேராசிரியர் சோ. சந்திசேகரன், ஆ. இரகுபதிபாலஸ்ரீதரன் ஆகியோர் அமரர் சிவகுருநாதன் இலங்கையின் கலை, இலக்கிய வளர்ச்சிக்கும் கொழும்புத் தமிழ்ச் சங்க தலைவராக இருந்த காலத்தில் நூலக வளர்ச்சிக்கும் அவர் ஆற்றிய பணி பற்றி நினைவு கூர்ந்ததுடன், அன்றைய இந்திய தூதுவராக இருந்த காந்திஜீயின் பேரன் காந்தியின் துணையோடு பெருந்தொகை புத்தகங்களை கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்திற்கு (2001) பெற்றுக் கொடுத்து நூலக அபிவிருத்திக்கு செய்த பணியினையும் நினைவிற்கு கொண்டு வந்தனர்.

“கலாசூரி” இ. சிவகுருநாதன் ஞபகார்த்தக்குழு நடத்திய கட்டுரைப் போட்டியின் பரிசளிப்பு விழாவின் போது (09.09.2012) பேராசிரியர் சோ. சந்திரசேகரன் நிகழ்த்திய, “உலகளாவிய உயர்கல்வி முறையின் தற்கால செல்நெறிகளும், இலங்கையின் உயர்கல்வி முறையும்” என்ற தலைப்பிலான சொற்பொழிவு நூலும் “கலாசூரி” இ. சிவகுருநாதன் ஞாபகார்த்தக்குழுவினால் வெளியிட்டு வைக்கப்பட்டன.

“கலாசூரி” இ. சிவகுருநாதன் ஞாபகார்த்தக்குழு நடத்திய கட்டுரைப் போட்டியில் “இலங்கை பத்திரிகை வரலாற்றில் தினகரனின் பங்களிப்பு” என்றதலைப்பில் கட்டுரை எழுதி வெற்றி பெற்ற மாத்தளை செல்வி எம்.ஜீ. பாத்திமா அஸ்னாவிற்கு இலக்கிய புரவலர் ஹாசிம் உமர், தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர் ஆகியோர் பரிசு வழங்கினர். இதில் கொழும்பு மாநகர உறுப்பினர் சி. பாஸ்க்கரா, தினக்குரல் பிரதம ஆசிரியர் வீ. தனபாலசிங்கம் ஆகியோரும் உடன் இருந்தனர்.

பத்திரிகையாளர்கள், கலைஞர்கள் அமரரின் அபிமானிகள் போன்ற பல தரப்பினரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

கொழும்புத் தமிழ்ச் சங்க துணைச்செயலாளர் தம்பு சிவசுப்பிரமணியம் நிகழ்வை தொகுத்து வழங்கியதோடு நன்றியுரையையும் நிகழ்த்தினார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.