புத் 64 இல. 43

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 05

SUNDAY OCTOBER 21 2012

 
நீச்சல் சாதனையாளனின் கரங்களால் மாலை சூட்டப்பட்டேன்

நீச்சல் சாதனையாளனின் கரங்களால் மாலை சூட்டப்பட்டேன்

“உங்களில் ஒருவன்’ லோகேஷ்

வானொலி அறிவிப்பாளர், மேடை நிகழ்ச்சித் தொகுப்பாளர், நடிகர், கர்நாடக பாடகர், நடன, மிருதங்கக் கலைஞர், மேடையலங்காரம், கையெழுத்துக்கலை, வர்ணம் தீட்டுதல் என்று சகல கலாவல்லியின் கடாட்சம் பெற்ற கலைஞர்தான் ‘உங்களில் ஒருவன், லோகேஷ். தற்போது பிரித்தானியாவில் வானலைகளில் பிரகாசித்துக்கொண்டிருக்கும் அவரை எமது காரியாலயத்தில் சந்திக்கும் வாய்ப்புக்கிட்டியது. கடந்த காலங்களைத் திரும்பிப் பார்த்தபோது கிடைத்த தகவல்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினேன்.

1979ல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச் சேவையில் அறிவிப்பாளராக இணைந்த இவரிடம் பிறந்தகத்தைப்பற்றிக் கேட்டேன்.

யாழ் மண்ணில் அரியாலையில் 1940ல் பிறந்தேன். தந்தையார் சுப்பையா தாயார் சரஸ்வதி. குடும்ப பின்னணியில் சங்கீத பூஷணங்கள் அண்ணாவியார் இணைப்பு இருந்தது.

பள்ளி பருவம் எப்படி இருந்தது? இசை ஆர்வத்திற்கு உந்து கோலாக அமைந்தது எது?

பரமேஸ்வரா கல்லூரியில் வித்தியாரம்பம். பயிலும் காலத்திலேயே இசை ஆசிரியர் இசைப்புலவர் எஸ். சண்முகரத்தினத்திடம் இசை பயின்றேன். என்னுள் இருந்த இசை ஆர்வத்தையும் குரல் வளத்தையும் கண்ட என் ஒன்றுவிட்ட சகோதரர் சங்கீதபூஷணம் பாலசிங்கம் அச்சுவேலியிலிருந்த சங்கீத வித்துவான் எஸ்.எஸ். இரத்தினப்பிள்ளையிடம் மேலதிகப் பயிற்சிக்காக சேர்த்துவிட்டார்.

என் இசைப் பயிற்சியை மென்மேலும் பட்டைதீட்டி வித்வானாக்க ‘வேண்டுமென்ற பேரவாவில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற்று, அங்கே செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த வேளை, எதிர்பாராவிதமாக விபத்தொன்றில் சிக்கி, தொண்டை நாரம்பு பாதிக்கப்பட்டதால் பாடும் திறனை இழந்துவிட்டேன்.

மதுரக்குரலோன் பி.எச். அப்துல் ஹமீதுடன்...

என்னுடைய ஒன்பது வயதில், அப்போதைய பிரதமர் சேர். ஜோன் கொத்தலாவல யாழ் சனசமூக நிலையங்களின் சமாஜம் நடாத்திய நிகழ்வில் கலந்து கொண்ட போது கர்நாடக இசையில் வரவேற்பு பா பாடினேன். என் திறமையையும் ஆர்வத்தையும் பாராட்டி பிரதமரின் கையால் பதக்கம் சூட்டி ஆசிர்வதிக்கப்பட்டேன். துரதிஷ்டமாக அந்த சங்கீதக் கனவு சாத்தியமற்றுப் போயிற்று.

பாடும் திறனை இழந்த நீங்கள் அடுத்து என்ன முயற்சி செய்தீர்கள்?

என் இசை ஆர்வத்திற்கு பக்கபலமாக இருந்த என் ஒன்றுவிட்ட சகோதரர் பாலசிங்கம், என்னுடைய இசை ஞானத்தினை இன்னுமொரு பாதையில் வெளிக்கொணர்ந்தார். அப்போது யாழ் திருநெல்வேலியில் தங்கியிருந்த நல்லூர் அண்ணாமலை இசைத் தமிழ் மன்றத்தின் ஆசிரியராக விருந்த அகில இந்திய வானொலிக் கலைஞர் மிருதங்க வித்துவான் எஸ். இராமநாதனிடம் முறையாக மிருதங்கத்தைப் பயில வைத்தார்.

இதே காலகட்டத்தில் நல்லூரிலிருந்த நடன ஆசிரியர் வி. கைலாசம் அவர்களிடம் நடனக் கலையையும் கற்றேன். நடனக் கலைக்கு என் உடல்வாகு வசீகரமாகத் தோற்றமளிப்பதாக எல்லோரும் சொல்வார்கள். அத்தோடு சிறுவனாக இருந்த போதே நடாகங்களில் நடித்து ஆற்றலையும் வெளிப்படுத்தியுள்ளேன்.

நகைச்சுவை மன்னர் மரிக்கார் ராமதாஸ¤டன்...

நடனக் கலை பயின்றபோது அரியாலை சுதேசிய விழாவில் சிவத்தாண்டவம் அரங்கேற்றம் செய்து ஏகோபித்த பாராட்டுதல்களைப் பெற்றேன். இத்தாண்டவ நடனம் பின்னர் அரியாலையூர் சதானந்தன் போஸ் நடாத்திய களியாட்டு விழாக்களில் எல்லாம் அரங்கேற்றப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பும் இருந்தது.

நாடக உலகில் எப்படி கால்பதித்தீர்கள்?

அரியாலை சனசமூக நிலையத்தின் இரண்டாவது ஆண்டு விழாவில் மேடையேற்றிய ‘நளன் தமயந்தி’ நாடகத்தில் மகனாக நடித்ததன் மூலம் நாடக உலகில் காலடி வைத்தேன். ‘உண்மையின் வெற்றி’ என்ற நாடகம் ஸ்ரான்லிக் கல்லூரியில் மேடையேற்றியபோது எனது தனித்திறமையைக் கண்ட, விழாவிற்கு தலைமை வகித்த பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த சாதனைவீரர் மு. நவரத்தினசாமி மேடைக்கு வந்து தான் அணிந்திருந்த மாலையைக் கழற்றி எனக்கு அணிவித்தார். அந்நிழ்வு என் வாழ்நாளில் கிடைத்த பெரும் கெளரவமாக இன்றும் நினைக்கின்றேன்.

இதற்கெல்லாம் ஊன்றுகோலாக இருந்த எனது பெரியப்பா முறையான அண்ணாவியார் சபாபதிப்பிள்ளை, ஈ.கே. குமரைய்யா, சாண்டோ மாஸ்டர் , ஐயாத்துரை மாஸ்டர், தோழர் ஸ்ரீ உதயணன், ரி. செல்வரத்தினம், விதானை சண்முகராஜா, பரமேஸ்வராக் கல்லூரி ஆசிரியர் ஸ்ரீ சுப்பிரமணியம் ஐயா, எஸ்.ரி. அரசு ஆகியோரை நாடக ஆசான்களாக நினைவு கூருகின்றேன். அரியாலை சனசமூக நிலையமே எனது கலையார்வ சிந்தைக்கு விருந்தளித்த விசால பூமியாகும்.

 பொன்விழாக் கண்ட தம்பதிகள், தமிழகத்தில் அரங்கேற்றம் கண்ட பேர்த்திகளான பிரவீனா. கவினாவுடன்...

உங்களின் தயாரிப்பில் உருவான நாடகங்கள் எவை?

‘லோகேஷ் ஆர்ட்ஸ்’ மூலம் எனது படைப்புகளை அவ்வப்போது மேடையேற்றி வந்தேன். பெரும்பாலும் நகைச்சுவைப் பாணியில் அந்தக் கால கட்டத்தில் நிகழ்ந்த சமுதாயச் சீர் கேடுகளையே மேடையில் கொண்டு வந்தேன். அதிலை வேலையில்லை, அவள் பறந்து போனாளே, சீமைத்தம்பி, சோக்கான சோடி, மெஷின் என்று மக்களின் மகோன்தை வரவேற்பைப் பெற்ற நாடகங்களைத் தயாரித்தளித்துள்ளேன்.

1995ல் லண்டன் பிரென்ற் நகர மண்டபத்தில், பிழைச்சல்லோபோச்சு என்ற நசைக்சுவை நாடகத்தை மேடையேற்றிய பெருமையும் உண்டு.

நாடகக் கலையோடு ஒட்டிய வேறென்ன அம்சங்கள் உங்களிடம் காணப்படுகிறது. என்று வினவிய போது...

நாடக நடிப்புத்துறை மட்டுமல்ல நாடகக் காட்சி அமைப்பதிலும் என் கைவண்ணம் ஓங்கியிருந்தது என்றே கூறலாம். சிலோன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோவில் கலை நெறியாளர் வின்சனிடம் பணிபுரிந்ததினால் அதன் நுட்பங்களை அறிந்து கொள்ளக்கூடிய தாகவிருந்தது. காசிப்பிள்ளை அரங்கில் மேடையேறிய சகுந்தலை நாடகத்தில் துஷியந்தனும் சகுந்தலையும் கடலில் வள்ளத்தில் செல்லும் தத்ரூபமான காட்சியும், கண்ணகி நாடகத்தின் இறுதிக் காட்சியில் மண்டபம் இடிந்து தீப்பற்றி எரியும் காட்சியும் தத்ரூபமாக அமைந்திருந்தது. காட்சிக்குள்ளேயே ரசிகர்கள் சங்கமமாகிவிட்டனர். அது எனக்குக் கிடைத்த பெருமை.

காட்சி அமைப்புகள் அமைப்பது போலவே கை எழுத்தும் முத்து முத்தாகவே இருக்கின்றது. வியப்பான விளம்பரப்பலகையொன்றைக் கீறினேன். பிரபல புத்தகசாலையொன்றுக்கு வரையப்பட்ட விளம்பர பலகையில், பத்திரிகைச் செய்திகளை வெட்டி ஒட்டியதுபோல கைவண்ணத்திலேயே தீட்டியிருந்தேன். அச்சொட்டாக அமைந்திருந்த அந்த விளம்பரப் பலகை மிகவும் பிரசித்தமாயிற்று.

இசை, நடனம், நாடகம், ஓவியம் என்ற கலைத் தடாகத்தில் மிதந்த உங்களை பிரபல்யமாக்கியதுறை எது?

கலையின் பல பரிமாணங்களைத் தொட்ட எனக்கு பேரும் புகழும் சேர்த்தது அறிவிப்புக் கலைதான். அறுபதுகளில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற கொழும்பு ஜெட்லைனர்ஸ் குழுவின் இசை நிகழ்ச்சியின் அறிவிப்பாளரின் திறமையைக் கண்டு நானும் இதேபோல் வரவெண்டுமென்று ஆவல் கொண்டேன்.

அதன் வெளிப்பாடுதான் முதல் கட்டமாக நல்லூர் மண்டலேஸ்வரன் இசைக் குழவில் அறிவிப்பாளராக அறிமுகமானேன். பின்னர் யாழ். நவீன சந்தையில் மக்கள் குரல் புனிதலிங்கத்தின் விளம்பர சேவை, சம்பத்தரிசியார் கல்லூரி களியாட்ட விழா, புகையிலைக் கூட்டுத்தாபன அறிவிப்புகள், இலங்கை லொத்தர் சபைக்காக, ‘சியாக்’ இசைக் குழவினருடன் இணைந்து அறிவிப்புகள் என்று பல திசைகளில் பயணிக்கத் தொடங்கினேன்.

யாழ். கண்ணன் இசைக் குழுவில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக வலம் வந்த போது தயாரித்தளித்த ‘அமுதும் தேனும்’ ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ நிகழ்ச்சித் தொகுப்பு பிரபல்யம் பெற்றிருந்தது.

இலங்கை வானொலிக்கு எப்படி அறிமுகமானீர்கள்?

மறைந்த வானொலிக்குயில் ராஜேஸ்வரி சண்முகத்துடன்...

1979 இல் இலங்கை வானொலிக்கு தமிழ்ச் சேவைக்கு அறிவிப்பாளர் தேவையென்ற விளம்பரத்தைக் கண்டேன். அதற்கான என்னுடைய விண்ணப்பத்தை அனுப்பியிருந்தேன். தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். திருமதி பொன்மணி குலசிங்கம் அப்போதைய பணிப்பாளர் சபையில் இருந்தார். நேர்முகத் தேர்வில் தேறிய எனக்கு தமிழ்ச்சேவை இரண்டின் அறிவிப்பாளராகக் கடமையாற்ற பணித்தார்கள்.

நான் அங்கு முதன்முதல் ஒலிபரப்பியது “வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்” என்ற பாடல். அதேபோல் என் வாழ்க்கையில் வசந்தம் வீசியது. பணிப்பாளர் பொன்மணி குலசிங்கத்தின் உதவியால் ரூபவாகினித் தொலைக் காட்சியிலும் கலைப்பிரிவில் சிறிது காலம் கடமையாற்ற சந்தர்ப்பம் கிடைத்தது. வாழ்வில் வீசிய வசந்தம் 1983 கறுப்பு ஜுலையில் புயலாக மாறி வாழ்க்கையை புரட்டிப் போட்டது.

புலம்பெயர்ந்து மேற்குலக நாடுகளில் வாழத் தொடங்கினேன். அங்கும் அறிவிப்புக் கலையே கைகொடுத்தது. பிரித்தானிய ஐ.பி.சி.அலைவரிசையில் என் பணி தொடர்ந்தது. பல்லாயிரக்கணக்கான அபிமானிகளைப் பெற்றுள்ளேன்.

 குடும்ப உறுப்பினர்களுடன்...

நீண்ட கலைத்துறைப் பயணத்தில் தங்களுக்குக் கிடைத்த கெளரவங்கள், விருதுகள் பற்றி........?

எனது கலைச் சேவையைப் பாராட்டி லண்டன் ஐ.பி.சியின் 10ஆவது ஆண்டு விழாவில் கெளரவிக்கப்பட்டேன். பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட தமிழக பிரமுகர் ஒருவரினால் விருது வழங்கப்பட்டது. 2005ல் கனடா தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினராலும், கோணேஷின் வானொலி நிலையத்தினாலும், கனடா வாழ் அரியாலை மக்களாலும் கெளரவிக்கப்பட்டுள்ளேன்.

வாழ்க்கை துணைபற்றி கூறுங்கள்....

சத்தியபாமா என்பவரை திருமணம் செய்து கொண்டேன். இரண்டு ஆண் பிள்ளைகளும், நான்கு பெண் பிள்ளைகளும் உள்ளனர். பிள்ளைகள் அனைவரும் திருமணமாகி வெளிநாடுகளில் வாழ்கின்றனர். என்னுடைய திருமண பந்தத்தின் ஐம்பதாண்டுகள் நிறைவையொட்டி பொன்விழாக் கொண்டாடிய பிள்ளைகள் பேரப்பிள்ளைகள், மிகப் பிரமாண்டமான முறையில் தமிழகத்தில் பேத்திகள் பிரவீனா - கவினாவின் பரத நாட்டிய அரங்கேற்றத்தையும் செய்து அந்நாளை பொன்னான நாளாக்கினர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.